SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-10-29@ 10:51:39

29.10.2022 சனி மணவாளமாமுனிகள் அவதார திருநட்சத்திரம்

வைணவத்தின் தென்கலைப் பிரிவின் கடைசி ஆச்சாரியராகக் கருதப் படுபவர் மணவாளமாமுனிகள். இவருக்குச் சீடராக இறைவனான திருவரங்கநாதனே வந்து இவரைப் புகழ்ந்து, ஒரு சாற்றுக்கவி பாடிக் கொடுத்தார். (சைலேச தயா பாத்ரம் என்று தொடங்கும் ஸ்லோகம்) அந்த சாற்றுக்கவிதான் தென்கலை மரபின் தினசரி வழிபாட்டில் (திருஆராதனம், கோயிலாக இருந்தாலும் இல்லமாக இருந்தாலும்) ஓதப்படுகிறது என்பது இவருக்கான பெருமை.

ஐப்பசி மாதத்தில், மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். ராமானுஜரின் மறு அவதாரம் என்று சொல்வார்கள். இவர் அவதரித்தது திருநெல்வேலிக்கு அருகே சிக்கல் கடாரம் எனும் ஊரில். ஆழ்வார்கள் மற்றும் தனக்கு முன் இருந்த ஆசாரியர்களின் வரலாற்றை அழகான தமிழ்ப் பாடல்களால் பாடிய நூல் உபதேச ரத்தினமாலை. இந்த நூலின் பாடல்கள் தினசரி பூஜை முடிவில் ஓதப்படுகின்றன. அதைப்போலவே, நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களுக்கும், ஒவ்வொரு பத்துப் பாசுரங்களுக்கும் ஒரு பாசுரமாக அதன் சாரமான செய்தியைப் பாடியிருக்கிறார். அந்த நூலுக்கு திருவாய்மொழி நூற்றந்தாதி என்று பெயர்.

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பகுதிக்கு விளக்க உரைகள் சிதைந்து போயிருந்த நிலையில், முன்னோர்கள் வழி தப்பாமல், அதற்கு உரை வழங்கியவர் மணவாள மாமுனிகள். வடமொழியிலும் தமிழ் மொழியிலும் பல நூல்களை இயற்றி இருக்கிறார். பெருமாள்  இவருக்கு தனது ஆதிசேஷ பீடத்தையே தந்ததாகவும், எனவே பல இடங் களில் ஆதிசேஷ பீடத்தோடு மாமுனிகள் காட்சி தருவதையும் காணலாம். தென்கலை வைணவக் கோயில்களில், ஐப்பசி மூலத்தை ஒட்டி 10 நாட்கள் மணவாள மாமுனிகளின் அவதார உற்சவம் மிகச் சிறப்பாக
கொண்டாடப்பட்டுவருகிறது.

30.10.2022 ஞாயிறு  விஷ்வக்சேனர் திருநட்சத்திரம்

வைணவத்தில், பகவான் விஷ்ணுவோடு நெருங்கிய சம்பந்தம் என்று அவருடைய தொண்டர்கள் மூவரைச் சொல்வதுண்டு. அனந்தன், கருடன், விஸ்வக்சேனர் எனும்   இவர்களை முதன்மை நித்திய சூரிகள் என்று சொல்வார்கள். அனந்தன், பெருமாள் துயில்கின்ற ஆதிசேஷ பாம்பணை. கருடன், பெருமாள் ஏறிச் செல்லும் வாகனம். விஷ்வக்சேனர், பெருமாளின் முதன்மைத் தளகர்த்தர் என்று சொல்லலாம். பெருமாள் கோயில்களில், விஷ்வக்சேனர் சந்நதி நிச்சயமாக இருக்கும். தமிழில் அவரை சேனை முதலியார், சேனாதிபதி ஆழ்வான் என்று அழைப்பார்கள். அவருடைய அனு மதியின்றி பகவான் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை என்று சொல்வது வைணவ மரபு. பொதுவாக எந்த பூஜையோ, வழிபாடோ, உற்சவமோ செய்வதாக இருந்தாலும், முதலில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்துவிட்டுதான் மற்ற பூஜைகளைச்  செய்வார்கள்.

வைணவத்தில், விஷ்வக்சேன ஆராதனையை முடித்துவிட்டுத்தான் திருமஞ் சனம், திருக்கல்யாண உற்சவம், திருவீதி வலம் செய்வார்கள். வைணவர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில்கூட விஷ்வக்சேனரை, மஞ்சளில் அல்லது தர்ப்பைக் கூர்ச்சத்தில் ஆவாஹனம் செய்து, ஆராதித்துவிட்டுத்தான் மேலே பூஜையைத் தொடருவார்கள்.

யஸ்ய த்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஸ்ஸதம் விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

தடைகளைப் போக்கிகொடுக்கும் விஷ்வக்சேனரை வணங்குகிறேன் என்கிறது இந்த ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லாமல் பூஜையை ஆரம்பிக்க மாட்டார்கள். எம்பெருமான் வீதிஉலா வருவதற்கு முன். விஷ்வக்சேனர் வலம்வந்து, அனுமதி தந்த பிறகுதான் பெருமாள் வீதிகளில் எழுந்தருள்வார். விஷ்வக்சேனருடைய திருநட்சத்திரம் ஐப்பசியில் பூராடம். அவரைப் போற்றி வணங்க எம்பெருமானுடைய அருள் பூரணமாகக் கிடைக்கும். எந்தச் செயல்களிலும் தடையில்லாத வெற்றி கிடைக்கும்.

1.11.2022 செவ்வாய் துர்காஷ்டமி

மங்களகரமான செவ்வாய்கிழமையில், துர்க்கையை வணங்குவது தனிச்சிறப்பு. செவ்வாய்க்கிழமையும் அஷ்டமியும் கலந்து வந்தால், அதைவிட சிறப்பு. எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, சிவப்பு வஸ்திரத்தை சமர்ப்பித்து, துர்க்கையை வணங்கு வதன் மூலமாகக் கிரகதோஷங்கள் நீங்கும். திருமணத்தடைகள் அகலும். ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

துர்காஷ்டமி தினத்தில், துர்கையின் நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிர சக்தி தோன்றினாளாம். இவள் சண்டன் முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்களை இந்தத் தினத்தில் அழித்தாள். எனவே, அதீத சக்தியும், வல்லமையும் கொண்டதாகத் திகழ்கிறது துர்காஷ்டமி தினம்.

தேவிக்குப் புனிதப் பலியாக எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய் உடைத்து வழிபடுவார்கள். தீமையை அழிக்க வேண்டுவார்கள். அஷ்டமி நாள் பைரவருக்கும் உரியது என்பதால், சிவாலயத்தில் உள்ள பைரவருக்கு மாலை வேளையில் அபிஷேகம் நடக்கும். அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறந்த நன்மையை அளிக்கும். கல்வி, வியாபாரம், இல்லறம், நட்பு வட்டாரம், கூட்டுத்தொழில் என அனைத்திலும் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.

2.11.2022 புதன் அட்சய நவமி

அட்சய திருதியைப் போலவே, அட்சய நவமியும் சிறப்புடைய நாளாகும். அட்சய என்றால், குறையாதது என்று பொருள். ஐப்பசி மாதம் அமாவாசை முடிந்து வளர்பிறையில் வருகின்ற ஒன்பதாவது திதி அட்சய நவமி திதி. பெருமாளுக்குரிய புதன்கிழமையில், பூமி யோகம் தரக்கூடிய அவிட்ட நட்சத்திரத்தில் அட்சய நவமி திதி இந்த ஆண்டு வருவது சிறந்தது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாட்டின் மூலமாக, தொழில், வணிகம் மிகச் சிறப்பாக நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோக உயர்வும், வருமான உயர்வும் ஏற்படும். அன்று பூஜை அறையில் விளக்கு ஏற்றிவைத்து, உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குவதன் மூலமாக எல்லையில்லாத நன்மையைப் பெறலாம்.

1.11.2022 முதல் 3.11.2022 வரை  செவ்வாய், புதன், வியாழன் முதலாழ்வார்கள் திருஅவதார விழா


ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் முதல் மூன்று பேரை முதலாழ்வார்கள் என்று அழைப்பார்கள். நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்னும் நூலின் தொடக்கமாக இம்மூவரும் திருக்கோயிலூர் என்றும் திருத்தலத்தில் சந்தித்து, ஆளுக்கு நூறு பாசுரங்கள் வீதம் மூன்று அந்தாதிகள் இயற்றினார்கள். இவர்களுக்குப் பிறகுதான் மற்ற ஆழ்வார்களும் அவர்கள் பாடிய திருப் பாடல்களும். இவர்கள் ஐப்பசி மாதம், திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களில், அடுத்தடுத்து அவதரித்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி பாடல் ஒன்று உண்டு.

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்.


பொய்கையாழ்வார், திருவெஃகா (காஞ்சிபுரம்) என்ற தலத்திலும், பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) என்ற தலத்திலும் பேயாழ்வார் திருமயிலையிலும் (மயிலாப்பூர்) அவதரித்தார்கள். இவர்கள் அவதார வைபவம் எல்லா வைணவக் கோயில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக நடுநாட்டு திருப்பதியான திருக்கோயிலூரில் முதன்மை விழாவாக நடைபெறும்.

4.11.2022 வெள்ளி  பாசாங்குச ஏகாதசி

ஐப்பசி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசிக்கு பாசாங்குச ஏகாதசி என்று பெயர். பாவங்களுக்கு வஜ்ராயுதம் போன்றது என்று பொருள். அனைத்துப் பாவங்களையும் போக்க வல்லது. இந்த ஏகாதசியில், பத்மநாப மூர்த்தியை பூஜிக்க வேண்டும். இந்த ஏகாதசி விரதம் உலகத்தில் உள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் தரும். ஏகாதசி அன்று இரவு, ஹரி நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எம லோகத்தை மிதிக்க மாட்டார்கள். விரதம் இருந்து தங்கத்தால் செய்த பூமி, பசு, அன்னம், நீர், குடை, பாதரட்சை ஆகியவற்றை தானம் செய்வது சிறந்த பலனை அளிக்கும், ஏகாதசி முடிந்து துவாதசி பாரணை செய்ய வேண்டும். இந்தத் துவாதசிக்கும் ஒரு பெயர் உண்டு பிருந்தாவன துவாதசி என்று பெயர். அன்றைக்கு துளசிபூஜை செய்வது மிகச் சிறப்பு.

4.11.2022 வெள்ளி  பீஷ்ம பஞ்சக விரதம்


ஆத்ம சாதகன் ஆன்மீக விஷயத்தில் முன்னேறவும், மனம் சஞ்சலமின்றி இறைவனிடத்தில் ஈடுபடவும், ஐந்து நாட்கள் இருக்க வேண்டிய விரதம் பீஷ்ம பஞ்சக விரதம். பஞ்சகம் என்றால் ஐந்து. பீஷ்மர் ஐந்து நாட்கள் இந்த விரதத்தில் இருந்தார் என்பதால், பீஷ்ம பஞ்சக விரதம். இந்த விரதம் இருந்து ஆத்ம சாதனையில் முன்னேறினார் என்று சொல்லப்படுகிறது. ஏகாதசி நாள் முதல் பௌர்ணமி வரை ஐந்து நாட்கள் பகவான், மன் நாராயணனை சிந்தித்துக் கொண்டு, இந்த விரதத்தைக் கடைப்பிடிப் பதன் மூலமாக, மனஉறுதியும் தெளிவும் ஆன்மீக முன்னேற்றமும் பெறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்