SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி அபிஷேகமும் திருவாரூர் வாணவேடிக்கையும்

2022-10-22@ 15:00:33

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

திருவாரூர் கோயிலில் - தீபாவளி ஓவிய காட்சி

‘பவதி பிக்ஷாந்தேஹி’- எனக்கூறி துறவிகளும், ஞானிகளும், அருளாளர்களும் பிச்சை ஏற்றுள்ளனர். அவர்களுக்குப் பிச்சையிடுபவர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் கிடையாது. அதனைஉலகுக்கு எடுத்துக்காட்டவே பரமேஸ்வரன் கபாலத்தைக் கையில் ஏந்தி உலகவர் முன்பு பிட்சாடண மூர்த்தியாக கோயில்கள் தோறும் காட்சி நல்குகின்றான். பேதமின்றி அர்ப்பணிக்கப்படுகின்ற பிட்சையே அவனுக்கு உவப்பைத் தருவதாகும்.

மாமன்னன் இராஜராஜன் இதனை நன்குணர்ந்தவன். அதனால்தான் தான் எடுத்த தஞ்சை பெரிய கோயிலுக்கு அஸ்திவாரம் இடும்போது தன் நாட்டு மக்கள், படைவீரர்கள், படைத்தலைவர்கள் என அனைவரும் பிச்சையாகத் தந்த முண்டுக் கற்களைப் பரப்பியே அதன்மீது அப்பெருங்கோயிலை எடுத்துள்ளான். தன் பெயரில் ஸ்ரீராஜ ராஜீஸ்வரம் என ஸ்ரீவிமானத்தை எடுக்கச் செய்தவன் கோயிலின் திருச்சுற்று மாளிகையை தன் சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பானுக்கு ஆணையிட்டு அவனைக் கொண்டு அதனை எடுக்கச் செய்தான்.

ஏனென்றால், அவனது பெருவெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த அவன் போர் வீரர்கள் அனைவரின் பங்களிப்பாக அக்கட்டடம் இருக்க வேண்டும் என்ற நோக்கமே அந்த ஆணைக்குக் காரணம். அண்மையில் அந்த திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதியைத் திருப்பணி செய்வதற்காகத் தோண்டியபோது அஸ்திவார முண்டுகற்களில் அதனைக் கொடுத்த படையினர் பெயர், தனிநபர் பெயர் என அனைத்தும் அந்தந்த கற்களில் கல்வெட்டாக இருப்பதை ஆவணப்படுத்த முடிந்தது.

மேலும், அம்மன்னவனின் முதல் ஆணையைக் குறிப்பிடும் கல்வெட்டில் தான் கொடுத்தது, தன் சகோதரி குந்தவை கொடுத்தது, தன் தேவியர் கொடுத்தது ஆகியவற்றுடன் யார்யாரெல்லாம் அந்த பரமசாமிக்கு என்ன கொடுத்திருந்தாலும் அனைத்தையும் ஒன்றாகவே பட்டியலிட்டு அங்கு பொறிக்க ஆணையிட்டுள்ளமையைப் பார்க்கும் போது அந்த மாட்சிமை நமக்குப் புரியும். மேலும் ஒப்பற்ற அந்த கட்டடத்தை எடுத்த பெருந்தச்சனில் தொடங்கி அனைவர் பெயர்களையும் கல்லில் பொறித்ததோடு தன் பெயரினை அவர்களுக்குப் பட்டமாகவும் தந்து பெருமைப்படுத்தினான்.

அவரவர் சம்பாதிக்கும் கூலியிலிருந்து ஈசனுக்கு இயன்றதைக் கூலிப்பிச்சையாகக் கொடுக்கும் மரபு பண்டு தொட்டு இன்றளவும் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்வது நமது மரபுச் சுவடுகளுள் ஒன்றாகும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகிலுள்ள பெருக வாழ்ந்தான் எனும் ஊர் சோழர்காலத்தில் பெருவாழ்வு தந்தான் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் திகழ்ந்தது. அவ்வூரில் உள்ள ஐயனாருக்காக அறுவடை செய்யப்படும் களங்களில் விவசாயத் தொழிலாளர்கள் தாங்கள் பெறும் கூலியில் ஒருசேறை (இருகைகளையும் கூப்பி எடுக்கும் நெல் அளவு) நெல்லினை அந்தந்த களங்களில் ஓரிடத்தில் விட்டுச் செல்வர்.

ஐயனார்க்குரிய அப்பங்கினை யாரும் தொடமாட்டார்கள். பின்பு கோயிலுக்கு உரிமையுடைய, பூசாரியும் அவற்றை சேகரித்து ஆண்டுத் திருவிழாவான குதிரை எடுப்பு விழாவினை கோலாகலமாகக் கொண்டாடுவர். திருவாரூருக்கு அருகிலுள்ள சித்தாய்மூர் எனும் ஊரில் பொன்வைத்த நாதர் திருக்கோயில் என்ற சோழர்காலப் பழங்கோயில் ஒன்றுள்ளது. தஞ்சாவூரினை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிங் என்பவரின் ஆட்சிக்காலத்தில் அவ்வூரினைச் சுற்றியுள்ள பல கிராமமக்கள் ஒன்று சேர்ந்து பொன் வைத்தநாதர் கோயிலில் ஆண்டு விழாக்களை முறைவைத்து கொண்டாடுவது என்றும் அதற்கென அனைவரும் ஈசனுக்குக் கூலிப்பிச்சை அளிப்பது எனவும் முடிவு எடுத்து 1753 ஆம் ஆண்டில் ஒரு செப்பேட்டுச் சாசனத்தை அக்கோயிலுக்கு அவர்கள் வழங்கினர்.

அதன்படி கோயிலில் நடந்து வந்த விழாக்களில் ஒன்று தீபாவளி அபிஷேக விழாவாகும். அந்த விழாவினை அந்த கிராமங்கள் எல்லாம் ஒன்றிணைந்து மாகானத்து நோட்டக்காரன் என்ற அலுவலன் முன்னின்று நடத்த வேண்டும் என்று வரையறை செய்துள்ளனர். 268 வருடங்களுக்கு முன்பே தீபாவளி அன்று ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தும் மரபு திருவாரூர் பகுதியில் திகழ்ந்தது என்பதை இச்செப்பேடு காட்டி நிற்கின்றது. திருவாரூர் திருக்கோளிலி சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாகும். இங்கு சோமாஸ்கந்தர் தியாகசேப் பெருமானாக, வீதி விடங்கராக அருள் பாலிக்கின்றார். முசுகுந்த சோழன் இந்திரன் பூசித்த திருமேனியைப் பெற்று வந்து இங்கு ஸ்தாபித்ததாக முசுகுந்தபுராணம் விவரிக்கின்றது.

கச்சியப்ப சிவாச்சாரியார் தாம் யாத்த கந்தபுராணத்தில் முசுகுந்தன் தியாகரை கொணர்ந்த வரலாற்றினை அழகுத்தமிழில் கூறியுள்ளார். திருவாரூர் திருக்கோயிலில் உள்ள தேவாசிரிய மண்டபம் மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாம். நாவுக்கரசரும், சுந்தரரும் இங்கு பதிகம் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மண்டபத்தில்தான் வீதிவிடங்க பெருமான் விழாக் காலங்களில் கொலு வீற்றிருப்பார். வரலாற்றுச் சிறப்புடைய இம்மண்டபத்து உட்கூரையான விதானத்தில் கி.பி. 1700 காலகட்டத்தில் முசுகுந்தபுராணம் முழுவதையும் ஓவியக்காட்சிகளாக சிங்காதனம் என்ற ஓவியர் படைத்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்கும் கீழாகக் காட்சி விளக்கம் எழுதப்பெற்றுள்ளது.

புராண நிகழ்வுகள் முழுவதையும் காட்டி முடித்த பின்பு ஓவியன் சிங்காதனம் ஆரூரில் அன்று நிகழ்ந்த பெருந்திருவிழாக் காட்சிகள் அனைத்தையும் நேரில் நாம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் வண்ணக் காட்சிகளாகப் படைத்துள்ளான். வீதிகளில் இறைத் திருமேனிகள் ஆடல் பாடல்களுடன் பவனிவரும் காட்சிகள் அங்கு காணப் பெறுகின்றன. “குறிப்பாக முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரூர் ஆலய விழாவில் எத்தகைய வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பெற்றன என்பதை இங்குள்ள காட்சிகள் நம் கண்முன் நிறுத்துகின்றன.

ஊர்வலத்திற்கு முன்பு ஒரு மரம் போன்ற வாணம் ஒளி முத்துக்களை உதிர்த்த வண்ணம் எரிகின்றது. ஒருவன் ஏந்தியுள்ள நீளக்கோலின் உச்சியில் சக்கர வாணம் சுழல்கின்றது. சிலர் பிடித்துள்ள வாணங்கள் நெருப்புப் பொறிகளை உமிழ்கின்றன. தரையில் சுழல்கின்ற வாணம் ஒன்றில்’’நிலச்சக்கர வாணம்’’ என எழுதப் பெற்றுள்ளது. ஒருவன் தரையில் ஒருவாணத்தை நட்டு அதனை கொளுத்த அதிலிருந்து பல வாணங்கள் மேலே சென்று ஒளிர்கின்றன. விண்ணில் பல வாணங்கள் சீறிப் பாய்கின்றன.

தற்காலத்தில் தீபாவளிப் பண்டிகையின்போது எத்தகைய வெடிகளும் வாணங்களும் வெடிக்கப் பெறுகின்றனவோ அத்தனையையும் நாம் ஆரூர் ஓவியக் காட்சியில் காணமுடிகின்றது. திருக்கோயில் விழாக்களின்போது மக்கள் கண்டு ரசித்த வாணவேடிக்கைகளைத் தான் தீபாவளி விழாக்களில் கொண்டாடத் தொடங்கினர் போலும். எப்படி இருப்பினும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரூர் பகுதியில் வாணவேடிக்கைகளும், ஆலயங்களில் தீபாவளி நாள் அபிஷேகங்களும் நிகழ்ந்தன என்பது உறுதியாகின்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்