SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்

2022-10-03@ 13:01:02

ஸ்ரீசரஸ்வதி தன் பக்தர்களின் விருப்பத்தின் படி பல்வேறு ரூபங்களில் காட்சி தருகிறார். அந்த ரூபங்கள் தியானிக்கும் முறைகளை கீழே காணலாம்.

வாக் தேவி

வெண்ணிலவின் ஒளியாய் திகழ்பவளும், மலர் முகத்தை உடையவளும், வெண்ணிற ஆடை அணிந்தவளும், வெண் பூமாலை சூடியவளும், முக்கண்ணியும், பிறைச்சந்திரனை சூடியவளும் மேலிரு கைகளில் தாமரையும், கீழ்கரங்களில் அபய வரத ஹஸ்தங்களைக் கொண்டவளும் ‘பாரதி’ எனப் பெயர் கொண்டவளை நமஸ்கரிக்கிறேன்.

வாகீஸ்வரி

மலர்கின்ற தாமரையில் அமர்ந்திருப்பவளும், திருக்கரங்களில், எழுதுகோல், புத்தகம், தாமரைகள் கொண்டவளும், மாலை சூடியவளும், தலை சடையில் பிறைச் சந்திரனை தரித்து மகிழ்பவளும் ஆன பாரதி நம் பிறவித்துயர் களையட்டும்.

வாகீஸ்வரி (மற்றொரு ரூபம்)

வெண் தாமரையின் மேல் அன்ன வாகனத்தில் இருப்பவளும், திருவெண்ணீற்றொளியால் பிரகாசிப்பவளும், புன்னகை தவழ்பவளும், சந்திர  ஒளியையொத்த நிறமுள்ளவளும், திருமுடியில் பிறைச் சந்திரனை சூடியவளும், வீணை, அமுதகலசம், ஜபமாலை, சுடர்  விளக்கு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கியவளுமான  பாரதி நம் எண்ணங்களை ஈடேற்றி வைப்பாள்.

ருத்ர வாகீஸ்வரி

வெண்ணிறமுடையவளும், கூர்மையான அறிவுடையவளும், பழம், புத்தகம், வரதம் அபயம் ஆகியவற்றைத் தாங்கியவளும், பல அணிகலன்கள் அணிந்தவளுமான வாகீஸ்வரியை நமஸ்கரிக்கிறேன்.

விஷ்ணு வாகீஸ்வரி

பொன்னிறமுடையவளும், பழம், புத்தகம், கலசம், அபயம் ஆகியவற்றைத் தாங்கியவளும் பலவகை அணிகளால் அலங்கரிக்கப்பட்டவளுமான விஷ்ணு வாகீஸ்வரியைப் பணிகிறேன்.

சிந்தாமணி சரஸ்வதி  வாணி சரஸ்வதி


வெண்தாமரை மலரில் அன்ன வாகனத்தில் விளங்குபவளும், திருவெண்ணீற்றொளியால் பிரகாசிப்பவளும் திருமுடியில் பிறைச் சந்திரனையும், வீணை, அமுத கலசம், ஜபமாலை, சுடர் விளக்கு ஆகியவைகளைக் கரங்களில் தாங்கி சந்திரனின் ஒளி போன்று பிரகாசிப்பவளுமான தேவியைப் பணிந்து நமது விருப்பங்களை அடைவோமாக.

வாக்தேவி  சரஸ்வதி


வெண்ணிறமுடையவள். வெண்ணிற ஆடையும் மாலையும் தரித்தவள். இளம் பிறை அணிந்தவள். புன்னகை தவழும் முகத்தினள். ஞான முத்திரை, ஜபமாலை, அமுத கலசம், வேதச்சுவடி இவற்றைக் கரங்களில் கொண்டவள். தாமரையில் வீற்றிருப்பவள். பெரிய ஸ்தனங்களையுடையவள். வாக்கிற்கு மேன்மையைத் தருபவள். மூன்று கண்களை உடையவள். பலவகைச் செல்வங்களையும் அருள்பவள். இத்தகு பெருமைமிகு வாக்தேவியை வணங்குகிறேன்.

நகுலி சரஸ்வதி

பல்வரிசைகளாலும், சற்றே மூடிய உதடுகளாலும் அழகுறும் வாயினை உடையவளும், வஜ்ரம் போல் கூரிய ஞானத்தை உடையவள். எவ்வுலகையும் என்றும் ஆள்பவளாகிய வாக்தேவி என் வாதத் திறமையை மேம்படச் செய்க. அவ்வாறாகில் எவ்வுலகிலும் எவரும் பின்பற்றும் தலைமை உடையவனாவேன்.
கருட வாகனம் உடையவள்.

பேரழகு மிக்கவள். நாவில் உதிப்பவள், சந்தேகத்தை போக்குபவள். கொஞ்சும் வீணை இசையை விரும்புபவள். சக்ரம், சங்கு, குறுவாள், பெண்கிளி இவற்றை கையில் ஏந்தியவள். அரச போகம் தருபவள். பச்சை நிறம் உடையவள். இவ்வாறான நகுலீ என் மனதில் நின்று, என்னை முழுதும் காப்பாளாக.

மகா சரஸ்வதி

மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில், அம்பு ஆகிய எட்டு ஆயுதங்களைத் தரித்தவள். சரத் காலத்தில் ஒளிரும் சந்திரனை போன்ற சோபை உடையவள். கௌரியின் தேகத்திலிருந்து தோன்றியவள். மூவுலகுக்கும் ஆதாரமாக இருப்பவள். சும்பன் முதலான அரக்கர்களை வதைத்தவள். வெண்ணிறமுடையவள். இத்தகைய மஹாசரஸ்வதியை நமஸ்கரிப்போம்.

ஸௌபாக்ய வாகீஸ்வரி

பிரகாசமான சந்திரகலையைத் தரிப்பவள். வெண்ணிறமானவள். ஸ்தன பாரத்தினால் வணங்கிய அங்கங்களை உடையவள். வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள். எழுதுகோல், புத்தகங்களை தன் கரங்களில் தாங்கியிருப்பவள். இத்தகு வாக்தேவி நமக்கு நல்லருள் புரிந்து காப்பாற்றுவாளாக.

ப்ராஹ்மி

நான்கு முகங்களும் ஆறு கரங்களும் கொண்டவள். ஹம்ச வாகனத்தில் அமர்பவள். மஞ்சள் நிறமானவள். ஆபரணங்கள் பூண்டவள். மான் தோலாலான மேலாடை உடையவள். இடப்பக்கத்திலுள்ள மூன்று கரங்களில் வரதம், சூத்திரம், ஸ்வருவம் ஆகியவற்றையும் வலது 3 கரங்களில் புத்தகம், கிண்டி, அபயம் ஆகியவைகளைத் தாங்கியிருக்கும் தேவியை த்யானிப்போமாக.

சுத்த வித்யா


வெண்ணிறமானவள், ஜபமாலை, புத்தகம், சின்முத்ரை, அபயஹஸ்தம் இவைகளைக் கொண்டவளுமான சுத்த வித்யா தேவியை தியானிப்போம்.

சரஸ்வதி (வேறு ரூபம்)

நான்கு கைகளை உடையவள். ஒரு கையில் ஸ்படிக மணியாலான அட்சமாலையும், ஒரு கையில் வெண்தாமரை மலரையும், மற்றொரு கையில் கிளியும், மற்றொரு கையில் புத்தகத்தையும் கொண்டிருப்பவள். வெண்தாமரை மலர்,சந்திரன், சங்கு, ஸ்படிக கற்களான  மணிகள் போன்று வெண்மை நிறத்துடன் பிரகாசிக்கின்றவள். வாக்குக்கு ஒப்பற்ற அதிதேவதையாக விளங்கும் சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சியுடன் கூடியவளாய் எப்பொழுதும் என் வாக்கில் வசிக்கட்டும்.

சரஸ்வதி (வேறு ரூபம்)


நான்கு கரங்களை உடையவள், வெண்தாமரை மலரில் வீற்றிருப்பவள். ஜடா மகுடத்தை அணிந்திருப்பவள். வெண்மையான நிற முடையவள். வெண்ணிற ஆடை அணிந்திருப்பவள். முத்து மாலையால் அலங்கரிக்கப்பட்டவள். வலப்புறமுள்ள இரு கரங்களில் புத்தகத்தையும் ருத்ராக்ஷ மாலையையும் இடது கரங்களில் கிளியையும், தாமரை மலரையும் வைத்திருப்பவள். மிக்க அழகுடையவள். வீணை வாசிப்பதில் ப்ரியமுடையவளான சரஸ்வதியை
நமஸ்கரிக்கிறேன். பாலாபாலா தேவியின் கையில் ஜபமாலையும், புத்தகமும் விளங்கும், பாலாவும் சரஸ்வதியின் ஸ்ரூபமே.

தொகுப்பு - பரிமளா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்