SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-10-01@ 16:06:04

1-10-2022 - சனி  ஆதிவண் சடகோபன் திருநட்சத்திரம்

இன்று சஷ்டி விரதம் இருக்க வேண்டிய நாள். முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். முருகனை செவ்வரளிப் பூக்களால் அர்ச்சிக்க நல்லது. மாலையில், திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும்.

இன்று வைணவ ஆசாரியரான அஹோபில மட (வடகலை) நிறுவன ஜீயரின் திருநட்சத்திர நாள். வைணவத்தில் பிரசித்தி பெற்ற அஹோபிலமடத்தை நிறுவியவர், ஆதிவண் சடகோபன். 1379-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில், திருநாராயணபுரத்தில் கிடாம்பி ஸ்ரீகேசவாச்சார்யாரின் குமாரனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாசன்.

காஞ்சிபுரத்தில் நடாதூர் அம்மாளின் பேரனான கடிகாசதம் அம்மாளிடம் ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், பகவத் விஷயம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் முதலியவற்றை முறையாக பயின்றார். காஞ்சியில் அவர் கல்வி கற்ற போது, ஒரு நாள் கனவில் நரசிம்மமூர்த்தி வந்தார். நரசிம்மர், இவருடைய உணர்வையும் செயலையும் திசை திருப்பினார். அஹோபிலம் என்னும் திருத்தலத்தை நோக்கிச் சென்றார். அங்கே ஒரு பிலத்தில் (குகையில்) இவர் கனவில் அடிக்கடி பார்த்த நரசிம்ம மூர்த்தியின் காட்சியைக் கண்டார்.

மனம் சிலிர்த்தார். அப்பொழுது, அங்கு உள்ள ஒரு சிறிய நரசிம்ம விக்கிரகம் இவருடைய கையில் வந்தது. அங்கேயே ஒரு திருமடத்தை நிறுவி வைணவத்தை பரப்பிவந்தார். அந்த மடமே, அஹோபிலமடம் என்ற பெயரில் பின்னாளில் பிரசித்தி பெற்றது. அவர்,வழியில் வந்த ஜீயர்கள், அஹோபில ஜீயர்கள் என்று வழங்கப்பட்டார்கள். இன்று அஹோபில மடம், இந்தியாவின் பல பிரதேசங்களிலும் இருக்கிறது. பல வைணவத் திருத்தலங்களைப் பராமரித்து வருகிறார்கள்.

உலகெங்கிலும், ஏராளமான சீடர்களைக் கொண்ட மடம் அஹோபில மடம். பல்வேறு திருத்தலங்களில், ஆதிவண் சடகோப ஜீயர் பற்பல கைங்கரியங்கள் மேற்கொண்டார். குறிப்பாக, திருமலையில் ஏறுவதற்கு படிகளை அமைத்த பணியில் இவர் ஈடுபட்டார். திருப்பதியிலும், இருமடங்களை அமைத்தார். ஆதிவண் சடகோபன், மேல்கோட்டை செல்வநாராயணர் ஆலயத்தில் வேதாந்த தேசிகனுக்கு ஒரு சந்நதி கட்டுவித்தார்.

கோயிலின் முகப்புக் கோபுரத்தை புதுப்பித்துக் கட்டினார். ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் ஆதிவண் சடகோபன், ஒரு மடத்தை நிறுவினார். அவர் வழிவந்த அஹோபில ஜீயர்கள், பற்பல திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவரங்கம் கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்குக் ராஜகோபுரம், அஹோபில மடத்தின் 44வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால், கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி, 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

மேல்கோட்டை எனப்படும் திருநாராயண புரத்தில் கல்யாணி புஷ்கரணி என்னும் ஆற்றங்கரையில் பெரும்பாலும் வாழ்ந்த ஆதிவண் சடகோபன் 1459 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மறைந்தார். அவருடைய நினைவிடம் (திருவரசு) அங்கே அமைந்துள்ளது. அவருடைய அவதார நாள் இன்று.

2-10-2022 - ஞாயிறு  சரஸ்வதி சப்தமி


சப்தமி திதி இன்று. நவராத்திரியில்,சப்தமியில் கலைமகளை பிரதானமாகத் தொழும் நாள். ஒருவருக்கு, 5 ஆம் இடம் சகல கல்விக்கும் உரியது மட்டுமல்ல, பூர்வ புண்ணியத்தையும் குறிப்பது. அது சூரியனுக்கு உரிய ராசி. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருபவன். சர்வ வியாகரண பண்டிதன். அவரிடமிருந்துதான் அனுமன், சகல கலைகளையும் கற்றார். சப்தமி என்பது சூரியனுக்கு உரிய நாள். அவரும் கலைக்கு உரியவர் என்பதால், சப்தமி தினத்தில் சரஸ்வதியை ஆவாகணம் செய்கிறோம். இதனை சரஸ்வதி சப்தமி என்று சொல்வார்கள்.

நவராத்திரியின் ஏழாம் நாளாகிய சரஸ்வதி சப்தமி எனப்படும் மஹா சப்தமியில், சரஸ்வதி தேவிக்குரிய பூஜா மந்திரங்களில் மிக அற்புத சக்திமிக்கதாகவுள்ள வாக்வாஹினிக்குரிய ஸ்லோகங்களை பிலகரி இராகத்தில் பாடி, எலுமிச்சம்பழம் சாதம் பிரசாதமாக படைத்து, பழங்களில் பேரீச்சையும், புஷ்பங்களில் தாழம்பூவும், பத்திரங்களில் தும்பை இலைகளாலும் அர்சித்து வழிபட வாக்கு சித்தி உண்டாகும்.

2-10-2022 - ஞாயிறு  பத்ரகாளி ஜெயந்தி


பக்தர்களை காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் அன்னை பராசக்தி எடுத்த அவதாரங்களில் ஒன்று காளி அவதாரம். காளிக்கு கரியவள் என்று ஒரு பொருள் உண்டு. சாக்த பிரிவினர் வணங்கும் சக்திவாய்ந்த பெண்தெய்வம். சக்தியின் தச மகா வித்யாக்களில், ஒருவராகக் கருதப்படும் பத்ரகாளிக்கு தமிழகத்தில் பல கோயில்கள் உண்டு.

கண்களில் கோபம் தெறிக்க ஆக்ரோஷமாக கைகளில் சூலத்தை ஆவேசமாகப் பிடித்திருப்பாள். காலின் கீழே ஒரு அசுரனை மிதித்து வதம் செய்யும் ஆக்ரோஷமான கோலம் அச்சப்படுத்தும். அன்னையின் கழுத்தில் மண்டை ஓடு மாலை தொங்கும். பத்துக்கரங்களிலும் வரிசையாக ஆயுதங்களை ஏந்திஇருப்பாள் காளிதேவி. பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும், பக்தர்களுக்கு சாந்த சொரூபி. வரங்களை கிள்ளிக் கொடுக்காமல், அள்ளிக் கொடுப்பவள். துஷ்டர்களை அழிக்கத்தான் ஆயுதம் ஏந்தியிருக்கிறாள் காளிஅம்மன்.

திருமாலின் அவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரத்தை, பத்ரகாளிக்கு இணையாக சாக்த புராணங்கள் கூறும். நவகிரகங்களில், சனிபகவானின் தோஷங்களை போக்குபவள். இன்று (2.10.2022) நள்ளிரவு பல துர்க்கை மற்றும் காளி கோயில்களில் பத்ரகாளி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். வன பத்திரகாளி அம்மன் என்று ஒரு ஆலயம் மேட்டுப்பாளையம் அருகில் அமைந்துள்ள பழமையான கோயிலாகும். பத்திரகாளி அம்மனின் ஆலயமான இது கோயம்புத்தூரில் இருந்து 53 கி.மீ. தொலைவில் உள்ளது.

புராணப்படி இக்கோயிலின் மேற்கில் பகாசுரன் வசித்து வந்ததாகவும், இங்குள்ள மக்கள் மத்தியில் பீதி உண்டாகக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மக்கள், பாண்டவ சகோதரர்களில் வலிமையானவனான பீமனிடம்  இந்த அசுரனின் கொட்டத்தை அடக்குமாறு வேண்டினர். பீமன், காளியிடம் வழிபட்டு அந்த
அசுரனை அழிக்க வேண்டிய சக்தியைப் பெற்று, அவனுடன் சண்டையிட்டான். பல மணிநேரம் தொடர்ந்த அந்தச் சண்டையின் இறுதியில், பீமன் அந்த அசுரனை வதம் செய்தான்.

மரணப்படுக்கையில் கிடந்த அசுரன், தனது தவறை உணர்ந்து காளிதேவியிடம் தனது பாவங்களுக்கு மன்னிப்புக் கோரினான். தேவியும், அவனை ஒரு காவல் தெய்வமாக மாற்றினார். பக்தர்கள், தேவியை மட்டுமின்றி பீமனையும், பகாசுரனையும் வழிபடுகின்றனர்.

3-10-2022 - திங்கள்  துர்காஷ்டமி

நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை `துர்காஷ்டமி’ என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு. துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் பிராம்மி, மஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்திகளும் ஒன்றிணைத்து செயலாற்றும் நாள். சண்டன் - முண்டன், ரக்த பீஜன் ஆகிய அசுரர்கள் வர பலத்தால் உலகை பாழ்படுத்திக் கொண்டிருந்தனர்.

அவர்களை அழிக்க அன்னை துர்கை தனது நெற்றியிலிருந்து சாமுண்டா எனும் உக்கிரசக்தியை உண்டாக்கினாள். இந்த சக்தி உண்டான தினம் துர்காஷ்டமி தினம். வடநாட்டில் இந்த தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வண்ணவண்ண ஆடைகள் அணிந்து குதூகலமாக கர்பா நடனம் ஆடுவார்கள். துர்கா மாதாவுக்கு, கோலாகலமான வழிபாடுகள் நடைபெறும். எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்கள் உடைத்து வழிபடுவார்கள். இந்தத் தினத்தில், அம்பாள் தரிசனமும் வழிபாடும் பன்மடங்கு பலனை அள்ளித் தரும் என்பர்.

இந்த நாளில், சிறு பெண் குழந்தையை, துர்கையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அம்பாளுக்கு வெண் தாமரை, முல்லை, மல்லிகை போன்ற மலர்களைச் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக்கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைக்கலாம்.

4-10-2022 - செவ்வாய்  சரஸ்வதி பூஜை

மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில், ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு விழாதான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் கொண்டாடப்படும், மகாநவமிதினம்தான் சரஸ்வதி பூஜை தினமாகவும், ஆயுதபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

வீட்டையும், தொழில் கூடத்தையும் மாவிலைத் தோரணங்கள் மற்றும் வாழைமரம் போன்ற மங்கலப் பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யுங்கள்.
பூஜை அன்று மாலை நேரத்தில், வீட்டுக்கருவிகள், தொழில் கருவிகள் மற்றும் உபயோகப்படுத்தும் வாகனங்களை கழுவி, சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம் வைக்க வேண்டும்.

நல்ல மலர்களை கொண்டு பூஜை அறையை அலங்கரியுங்கள். சுவாமி படங்களுக்கு முன், அனைத்துக் கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் வைத்து வணங்குங்கள். தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை சொல்லுங்கள். பாடல்களைப் பாடுங்கள். இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்களையும் இதே வழிமுறையில் வணங்கலாம். ஆயுத பூஜை நாளில், இந்த கருவிகள், ஆயுதங்கள் அல்லது புத்தகங்களை ஒருபோதும் பூஜையில் இருந்து எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது. அடுத்த நாள் விஜயதசமியன்று சந்தனம் தெளித்து புனர் பூஜை செய்து பொருட்களை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

5-10-2022 - புதன்  விஜயதசமி

நவராத்திரியின் பத்தாவது நாள். ஒன்பது நாட்களின் பலன் பத்தாவது நாளில் கிடைக்கிறது. தவத்தின் வெற்றி, பூஜையின் வெற்றி, செயல்களில் வெற்றி என அனைத்து வெற்றிகளும் கிடைக்கும் நாள் என்பதால் வெற்றி தரும் பத்தாம் நாள் என்று பொருள்படும் படியாக விஜயதசமி நாள் என்று அழைத்தார்கள். அன்னை பராசக்தி, அனைத்து தீய சக்திகளையும் முற்றிலுமாக அழித்து வெற்றி கொண்ட நாள்.

இந்த நாளில், எந்த செயலைத் தொடங்கினாலும் அது பூரணமான வெற்றியைத் தரும். இன்றைய தினம் தொழில், புதுக்கணக்கு எனத் தொடங்குவதற்கு வேறு எந்த தோஷங்களையும் பார்க்க வேண்டியதில்லை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஏற்ற நாள். இந்த ஆண்டு விஜயதசமி புதன்கிழமையில் வருகிறது. கல்விக்கான கிரகம் புதன். புதன்கிழமை வித்தை தொடங்குவதற்கு ஏற்ற நாள் அல்லவா.

எனவே, இந்த நாளில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கிவைத்தல் (அட்சராப்பியாசம்) நல்லது. அனேக இடங்களில், கோயில்களில் குழந்தைகளை மடியில் அமர வைத்து அட்சராப்பியாசம் செய்ய வைப்பார்கள். இன்று திருவோண விரதம் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. வைணவ ஆலயங்களில், இன்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடந்து வன்னி மரத்துக்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

6-10-2022 - வியாழன்  பாபாங்குச ஏகாதசி

பாவம் என்னும் யானையை அங்குசம் போல அடக்கும் ஏகாதசி என்பது இதன் பொருள். `ஏகாதசி மஹாத்மியம்’ என்னும் நூல் இந்த ஏகாதசியின் சிறப்புகளை விளக்கிப் போற்றுகிறது. இந்த நாளில் உபவாசமிருந்து வழிபடுவது போலவே, தானங்கள் செய்வதும் சிறப்புவாய்ந்தது.

இந்த நாளில், அவரவர் வசதிக்கு ஏற்ப பொருட்களை ஏழைகளுக்குத் தானம் செய்யலாம். ஏகாதசி விரதம் இருக்க இயலாதவர்கள் மாலையில் தவறாது அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் வழிபடுவது சிறப்பு.விரதமிருப்பவர்கள், அடுத்த நாள் காலை துவாதசி பாரணை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

துவாதசி பாரணையில், 21 வகையான காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியனவற்றைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். மசாலா, வெங்காயம், பூண்டு கூடாது. துவாதசியன்று கன்றுடன் கூடிய பசுமாட்டை வணங்கி உணவு அளிப்பது சிறந்தது.

தொகுப்பு: சங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

 • newyork-blizzard

  நியூயார்க்கில் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்