SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஸ்ரீமுஷ்ணம் (திருமுட்டம்) பூவராக பெருமாள் கோவில்

2022-09-28@ 17:24:36

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: பூவராக பெருமாள் கோவில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்.

காலம்: அச்சுதப்ப நாயக்கர் (பொ.ஆ. 1560-1600), தஞ்சை நாயக்க மன்னர்.

இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்க மகாவிஷ்ணு எடுத்த ‘வராக’ (காட்டுப்பன்றி) அவதாரமாக ‘பூவராக பெருமாள்’ என்னும் சாளக்கிரம மூர்த்தி வடிவில் மேற்கு நோக்கி இவ்வாலயத்தில் அருள்பாலிக்கிறார் (தாயார்: அம்புஜவல்லி). பதினாறாம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரால் (பொ.ஆ.1560-1600) பெருமளவு திருப்பணிகள் செய்யப்பட்டு இந்த திருக்கோயில், இன்று நாம் காணும் சிறப்பான கட்டிடக்கலையுடன் இருந்தாலும், இக்கோயிலின் தொன்மை குறித்து இவ்வூரின் மற்றொரு பழமையான சிவாலயத்தில் உள்ள கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

தற்போது, நித்தீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் ‘திருமுட்டமுடைய நாயனார்’ கோயிலில் உள்ள வீரராஜேந்திர சோழனின் (பொ.ஆ.1063-1070) ஆறாவது ஆட்சியாண்டு கல்வெட்டில் ‘திருமுட்டத்து ஆழ்வார்’ எனப்படும் இவ்வைணவ ஆலயம் குறித்த தகவல் காணப்படுகிறது. எனவே, இவ்வாலயத்தின் ஆரம்ப கட்டுமானங்கள் 11 ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கும் என்பது உறுதியாகிறது.

இன்று முக்கிய வைணவத் திருத்தலமாக விளங்கும் இவ்வாலயம் பற்றிய குறிப்புக்கள் வேறு பழமையான இலக்கியங்களிலோ, வைணவ பக்தி இலக்கியங்களான ஆழ்வார் திருமொழிகளிலோ இடம்பெறவில்லை.சிற்ப அழகு மிளிரும் பெரும் கருங்கல் தூண்களுடன் உள்ள பதினாறு கால் மண்டபம், நாயக்கர்களின் கோவில் கட்டிடக்கலையின் உயரிய இடம் பெற்ற ஒன்று என்றால், அது மிகையல்ல. குதிரை வீரர்களின் சிற்பங்களுடன் கூடிய பிரம்மாண்ட தூண்களும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பத்தொகுதிகளும், அண்ணாந்து பார்த்தால் அதிசயிக்க வைக்கும் மேற்கூரையிலுள்ள நுண்ணிய சிற்பங்களும் (குறிப்பாக கிளிகள் கொத்தும் விரிந்த வாழைப்பூ) காணத்திகட்டாது.

வாயிலில், கொடிப்பெண் சிற்பங்களாக மகரத்தின் மீது நின்று வரவேற்கும் நதிதேவியரின் சிற்பங்கள் கொள்ளை அழகு. பதினாறு கால் மண்டபத்தின் உட்பகுதியிலுள்ள தூண்களில் அச்சுதப்ப நாயக்கர், அரச குலப் பெண்களின் முழு உருவச் சிற்பங்கள் உள்ளன. அரச குலப் பெண்டிரின் கூந்தல் சடைப்பின்னல், குஞ்ச அலங்காரம், சூடாமணி, காதணி ஆபரணங்கள், புடவை ஆடை மடிப்புகள் என ஒவ்வொரு அம்சத்திலும் அழகுணர்ச்சியுடன் மிக நேர்த்தியாகச் செதுக்கியுள்ளனர்.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்