SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயேசுவுடன் உரையாடிய கானானியப் பெண்

2022-09-27@ 16:49:07

உரையாடல் நிகழ்த்துவதிலும், தகவல் சேகரிப்பதிலும் ஆண்களைவிடப் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள். புதிய நபர்களுடனும், புதிய சூழல்களிலும் பெண்களே உரையாடலைத் தொடங்கி நடத்துகின்றனர். இரயில் பயணங்களில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில், கடைவீதிகளில் அவர்கள் உரையாடல்களை மிகவும் இயல்பாக நடத்துகின்றனர். அவர்களின் குடும்பம் நெருக்கடிகளையும், இக்கட்டுகளையும் சந்திக்கும்போது பெண்கள் தங்களின் துரிதமான சமயோசித உரையாடல்கள் மூலம் தங்கள் குடும்பத்திற்கு நிவாரணத்தைப் பெற்றுத் தருகின்றனர்.

இப்பகுதியில் வரும் கானானியப் பெண்ணும் அத்தகையதொரு உரையாடலைத்தான் இயேசுவுடன் தொடர்ந்தார். கானானியப் பெண் என்பவர், யூதரல்லாத வேறு இனத்தைச் சேர்ந்தவர். அவர் தனது மகளின் உடன் நலன் சார்ந்த அவசர உதவி தேவைப்பட்டவராக இருந்தார். அது என்னவென்றால் அவரது பெண் பேய் பிடித்து கொடுமைக்கு ஆளாகி இருந்தார். அவரை அக்கொடுமையிலிருந்து விடுவித்துக் காக்க வேண்டும்.

அச்செயலைச் செய்யும் ஆற்றல் இயேசு கிறிஸ்துவுக்கு உள்ளது என்பதை அவர் அறிந்திருந்தார். நல்வாய்ப்பாக இயேசு தமது சீடர்களுடன் அவ்வழியேப் பயணப்பட்டு தீரு சீதோன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இச்சூழலை இப்பெண் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்? அவர் எவ்வாறு சிறந்த முறையில் இயேசுவுடன் உரையாடி தமது மகளின் பிணி நீங்கப் பெற்றார் என்பதுதான் நாம் இப்பகுதியில் காண்பது.

முதலாவதாக இப்பெண் தனக்கு முற்றிலும் புதியவர்கள் மற்றும் வேற்று இனத்தைச் சேர்ந்தவர்களாகிய இயேசு மற்றும் அவரது சீடர்களை நெருங்கிச் சென்று தமது தேவையைத் தயக்கமின்றி மிகத் தெளிவாக முன்வைக்கின்றார். அவர் இயேசுவிடம் “ஐயா, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” (மத்தேயு 15:22) என்றார்.

நாம் சற்றும் எதிர்பராதவாறு இயேசு, இப்பெண்ணின் பேச்சைக் கேட்டு அவருக்குப் பதில் ஏதும் கூறாமல் தமது பயணத்தைத் தொடர்கிறார். ஒரு வேளை இப்பெண்ணுக்கு எப்படி உதவுவது? அவரது பயணத்தை மாற்றி இப்பெண் இருக்கும் பகுதிக்குச் செல்வதா? அல்லது திரும்பி வரும்போது அவர் மகளைச் சென்று பார்ப்பதா? என்ற கேள்விகளோடு அவர் தமது நடையைத் தொடர்ந்திருக்கலாம்.

இந்த நிகழ்ச்சியில், இயேசுவின் சீடர்கள் தங்கள் வழக்கத்திற்கு மாறாக இப்பெண்ணுக்காக இயேசுவிடம் பரிந்து பேசுகின்றனர். இயேசு அதற்கு மறுமொழியாக, “இஸ்ரவேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்று தனது பணி முன்னுரிமையை எடுத்துரைக்கிறார். இதன் பொருள் இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலையடைந்து சொந்த நாட்டில் வாழ்ந்த போதும் பெருவாரியான மக்கள் ஏழ்மையிலும், நோயிலும், மன அழுத்தங்களிலும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சமூகரீதியான இழிவையும், பொருளாதார சுரண்டலையும், அரசியல் ஆதிக்கத்தையும் சந்தித்து வந்தனர்.

எனவே இப்படிப்பட்டவர்களுக்குப் பணிசெய்வது தமது முன்னுரிமை என்ற அடிப்படையில் அவ்வாறு கூறினார். கானானியப் பெண் இயேசுவின் இந்த பதிலைக்கேட்டு ஏமாற்றமடையவில்லை, கோபப்படவில்லை, சோர்ந்து போகவுமில்லை. மாறாக தனது உரையாடலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி அவர் முன் வந்து பணிந்து “ஐயா எனக்கு உதவியருளும்” என்று இயேசுவிடம் மீண்டும் தமது கோரிக்கையை முன்வைத்தார்.

இப்பெண்ணின் செயல் இயேசுவை இக்கட்டில் நிறுத்தியிருக்க வேண்டும். இயேசு அவரது காலத்து கூற்றுகளில் ஒன்றான “பிள்ளைக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்று பதிலுரைத்தார். அப்பெண் சற்றும் யோசிக்காமல் “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேஜையிலிருந்து விழும் துண்டுகளை நாய்குட்டிகள் தின்னுமே” என்றார்.

அதாவது, நீர் இஸ்ரவேலரில் காணாமற்போன ஆடுகளைப் போல இருப்பவருக்கு முன்னுரிமை அளித்துப் பணிசெய்வதை தான் மறுக்கவில்லை. அவர்களுக்கு செய்தது போக, அதே நிலையில் இருக்கும் என்போன்றோர் மீதும் உங்கள் அக்கரை இருக்கட்டும் என்ற பொருளில் அவர் பேசினார்.

கானானியப் பெண்ணின் நுண்ணறிவு மிக்க, அதேசமயம் சமூகத்தைப்பற்றியும், தமது பணிகள் பற்றியும் அவருக்கு இருந்த பரந்துபட்டப் புரிதல் கொண்ட அப்பெண்ணின் பேச்சு, இயேசுவை மிகவும் கவர்ந்தது. அவரின் மனஉறுதி, விடாமுயற்சி அவரது மகள் மீது கொண்டிருந்த அன்பு எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தம் மீது கொண்டிருந்த நம்பிக்கை, இயேசு கிறிஸ்துவை வியக்கச்செய்தது. அவர் அப்பெண்ணிடம் மிகவும் கனிவாக “அம்மா உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறு உமக்கு நிகழட்டும்” என்று கூறினார். அந்நேரமே அவர் மகளின் பிணி நீங்கிற்று.(மத்தேயு 15:28).

கானானியப் பெண்ணின் திறம் மிக்க உரையாடல் இயேசு கிறிஸ்துவின் வழி இந்த நற்செயல் நடைபெறவும், இயேசு கிறிஸ்துவின் எல்லை கடந்த அன்பு வெளிப்படவும் உதவியது.

தனக்கு முற்றிலும் புதியவரானவரும், வேறு இனம் வேறு மதத்தைச் சேர்ந்தவரும் மற்றும் ஆணாக இருந்து தனக்கென இலக்கு வைத்து பணியைத் தொடர்ந்தவரான இயேசுவை அவரது பயணத்தில் வழிமறித்து தனது உரையாடல் ஆற்றலால் இயேசுவின் பாராட்டைப் பெற்றதோடு, தனது கோரிக்கையையும் நிறைவேற்றப் பெற்ற கானானியப் பெண் நமக்கு மாபெரும் உந்துதலாக இருக்கிறார். இப்பெண்ணுடன் இயல்பாக உரையாடிய இயேசு நமது வணக்கத்திற்குரியவராகிறார்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்