SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வல்லமை தந்திடுவாள் நவராத்திரியில் பராசக்தி

2022-09-26@ 17:32:10

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நவராத்திரி - 26-9-2022 முதல் 5-10-2022 வரை

கோயில்களிலும், வீடுகளிலும் ஒரு சேரக்  கொண்டாடப்படும் பண்டிகை ஒன்று உண்டென்றால், அது “நவராத்திரி”. கோயில்களிலும் கொலு. வீடுகளிலும் கொலு.

பொதுவாக வீடுகளில் கொண்டாடும் எல்லாப் பண்டிகைகளும் ஓரிரு நாட்களில் முடியும். ஆனால், நவராத்திரி பத்து நாட்கள் வீட்டிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதில்தான் எத்தனை எத்தனைச் சிறப்புக்கள்.

நவராத்திரி என்ன பொருள்?

நவராத்திரி என்பதை நவ+ ராத்திரி என்று பிரிக்கலாம். நவம் என்பதற்கு புதுமை, நட்பு, பூமி, ஒன்பது, கார்காலம் என பல பொருள்கள் உண்டு. ஒன்பது ராத்திரிகள் செய்யவேண்டிய வழிபாடு அல்லது  ஒன்பது நாள்  இருக்க வேண்டிய விரதம் என்ற பொருளில் இந்தச்  சொல் அமைந்துள்ளது. இது நமக்கு புத்தம் புதிய உணர்வுகளைத்  தருவதால் இந்த நவ (ஒன்பது) ராத்திரிகள் ,  நமக்கு புதிய (நவ) ராத்திரிகளாக இருக்கின்றன.

புதிய கற்பனைகளைத்  தருகின்றன. புதிய உத்வேகத்தைத்  தருகின்றன. அந்த உற்சாகத்தைப்  பெறுவதற்காகவும், புதிய சக்தியைப் பெறுவதற்காகவும்  நவராத்திரி  பண்டிகையை நாம் கொண்டாடுகின்றோம். சக்தி இல்லாவிட்டால் செயல் இல்லை. அந்த சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக்காலம். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.

இந்த நவராத்திரி விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் துவங்குகின்றது. இதில் முதல் நாள் கும்பத்தில் மகாதேவியாகிய அம்பாளை  ஆவாகனம் செய்து, ஒன்பது ராத்திரிகள் கொலு வைத்து, விரதம் இருக்கின்றோம். இந்த விரதம் மூலமாக நமக்கு அடுத்த ஓராண்டுக்குத்  தேவையான உற்சாகமும் சக்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

நவராத்திரி ஒன்பதாம் நாள் ஆயுத பூஜை நாள் என்று கூறுவார்கள். ஒருவர் தன்   வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தக்கூடிய கருவிகளை வழிபடுவது தான் ஆயுத பூஜையின் சிறப்பு. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒருவரது வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, தான் பயன்படுத்தும் கருவிகளை வணங்கியே வேலையைத் தொடங்குவார்கள். இது இயல்பான வழக்கம்.

2 எப்படி விரதம் இருப்பது?

நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத் தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக்கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும். அடுத்து பிரதமையில் ஆரம்பித்து முதல் எட்டு நாட்கள் பகலில் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் எளிய உணவுகளை ஏற்கலாம். இந்துக்கள் விரதத்தில், முழுமையாக பட்டினி இருக்க வேண்டும் என்பதை நம்முடைய பெரியவர்கள் நிச்சயமாகச் சொல்லவில்லை. இருந்தால் நல்லது. முடியாவிட்டால், சில எளிய உணவுகளை உட்கொண்டு விரதத்தைத் தொடரலாம்.

3. நிவேதனங்கள்

நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம். நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.இருப்பினும் வாசகர்கள் வசதிக்காக ஒரு சிறு பட்டியலைத் தருகிறோம்.

1 ம் நாள். நைவேத்தியம். வெண் பொங்கல். சுண்டல் வெள்ளை கொண்டக்கடலை.
2 ம் நாள் நைவேத்தியம். புளியோதரை. பயத்தம் பருப்பு சுண்டல்.
3 ம் நாள் நைவேத்தியம். சக்கரைப் பொங்கல். மொச்சை கடலை சுண்டல்.
4 ம் நாள் நைவேத்தியம். கதம்பம் சாதம். பச்சைப் பட்டாணி சுண்டல்.
5 ம் நாள் நைவேத்தியம். தயிர் சாதம். வேர்க்கடலை சுண்டல்.
6 ம் நாள் நைவேத்தியம். தேங்காய் சாதம். கடலைப்பருப்பு சுண்டல்.
7 ம் நாள் நைவேத்தியம். எலுமிச்சை சாதம். வெள்ளை பட்டாணி சுண்டல்.
8 ம் நாள் நைவேத்தியம். பாயசம். காராமணி சுண்டல்.
9 ம் நாள் நைவேத்தியம் அக்கார அடிசல். சாதா கொண்டக் கடலை  சுண்டல்.
செவ்வாய் மற்றும் வெள்ளியன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.

விரதம் என்பதே இறைவனை வழிபடுகின்ற மன உறுதியைச் சொல்கிறதே தவிர, இந்த  உணவை உண்ண வேண்டும்; இந்த உணவை உண்ணக்கூடாது என்கின்ற பட்டியலை எப்பொழுதும் தருவதில்லை. படையல் நிவேதனங்கள் அவரவர்கள் உணவுப் பழக்கம் மற்றும் வசதி வாய்ப்பு களைச்  சார்ந்தது. ஆனால் அம்பிகையின் மீது வைக்கக்கூடிய பக்தி என்பது  பொதுவானது. அதுதான் எந்த விரதத்திலும் பிரதானம்.

4. ஆயுள் தோஷங்கள் நீங்க

புரட்டாசி மாதத்தை பாத்ரபத மாதம் என்று சொல்லுவார்கள். சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம். புதனுடைய ராசி கன்னிராசி. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பல் என்று அக்கினி புராணம் கூறுகிறது. எமனின் கோரைப் பல்லிருந்து தப்ப, நிவாரணமாக, நவராத்திரிப் பண்டிகையை ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டும்; அல்லது கோயில்களுக்குச் சென்று பண்டிகைகளின் போது கலந்து கொண்டு வணங்கி, அவள் பேரருள் பெற வேண்டும். அதன் மூலமாக ஆயுள் தோஷங்கள் நீங்கி எமனின் பிடியிலிருந்து  தப்பி வாழ்வை நீட்டித்துக் கொள்ள முடியும். அதற்கு அம்பிகையின் பேரருள் துணை செய்யும்.

5. எப்போது பூஜை செய்ய வேண்டும்?

விரதம் இருப்பவர்கள் பொதுவாக பகலில் விரதம் இருந்து, இரவு அம்பிகைக்கு பூஜை நிவேதனம் செய்து அந்தப் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். ஒன்பதாம் நாள் நவமி அன்று முழுமையாக உபவாசம் இருப்பது நல்லது. அது கிட்டத்தட்ட ஏகாதசி விரதம் போல. ஏகாதசிக்கு எப்படி துவாதசி பாரணை முக்கியமோ அதைப்போல மகாநவமியில் விரதமிருந்து, அடுத்த நாள் விஜயதசமியில் காலை  9:00 மணிக்குள் பாரணை யை முடிக்க வேண்டும். தினசரி இரவு 7 மணி முதல் அதிகபட்சம் 9 மணி வரை நவராத்திரி பூஜையை நிறைவேற்றுவது சாலச் சிறந்தது. தினமும் இரவில் கொலு பொம்மை களுக்கு ஆரத்தி எடுத்தல் அவசியம்.

6. நவராத்திரியில் என்னென்ன படிக்கலாம்?

9 நாட்களும் அம்பாளுக்கான பிரத்தியேகமான நாட்கள் என்பதால் அம்பிகைக்குரிய ஸ்லோகங்களை, இசைப்  பாடல்களை வாசிக்கலாம். புராணங்கள் வாசிப்பவர்கள் தேவி பாகவதம் பெரும்பாலும் படிக்கிறார்கள். இது தவிர  ராமாயணம் மகாபாரதம் படிப்பதாலும் ஒன்றும் தவறு இல்லை. அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாமம், லஷ்மி  ஸஹஸ்ரநாமம், ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, துர்கா அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் போன்ற எண்ணற்ற அம்பாள் வழிபாட்டு மந்திரங்களையும், அம்பிகையின் மீது இயற்றப்பட்டஎளிமையான பாடல்களையும் பாடலாம்.

7. நவராத்திரி கொலு

நவராத்திரியின் பிரத்தியேகமான சிறப்பு கொலு வைத்தல். இந்து சமயத்தில் ஆண்டு தோறும் நடக்கக் கூடிய பல்வேறு பண்டிகைகளில் அல்லது விரதங்களில் இந்த நவராத்திரியில் மட்டுமே கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைப்பது என்கின்ற  வழக்கம் இருக்கின்றது. பரம்பரையாக சிலர் வைக்கின்றனர். இந்த கொலு என்பது ஆன்மிகத்தையும் உளவியலையும் இணைக்கும் உன்னதமான விஷயம். இதில் முதல் தத்துவம். உலகம் முழுக்க சக்தி பரவியிருக்கிறது. அந்த சக்தியின் இருப்பு ஒவ்வொன்றிலும் இருக்கிறது என்பதை உணர்த்துவது கொலு.

8. மங்களப் பொருட்கள் தரவேண்டிய முறை

ஒவ்வொரு நாளும் பூஜை முடிந்தவுடன் எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்து, வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு தாம்பூலத்தோடு மங்கலப் பொருட்களைத் தருகின்ற வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். நீங்கள் தயவுசெய்து உங்களுக்கு யாரேனும் கொடுத்த ஒரு ரவிக்கைத் துண்டு அல்லது மஞ்சளை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். வேறு பரிசுப் பொருளாக இருந்தால் கொடுக்கலாம். பிரசாதத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மறந்துவிட வேண்டாம். இதில் இன்னொரு நுட்பமும் இருக்கிறது. மலிவான விஷயமாகவோ, உபயோகம் இல்லாத ஒரு பொருளாகவோ யாருக்காவது தரலாம் என்றெல்லாம் நினைத்து, நீங்கள் எந்தப் பரிசுப் பொருளையும் தரவேண்டாம். நீங்கள்  சுமங்கலிப்  பொருட்களை தருகின்ற பொழுது, இரண்டு விஷயங்கள் முக்கியம்.

1. நீங்கள் எத்தனை பேருக்கு தருகின்றீர்கள் என்பது முக்கியமல்ல. எந்த மனநிலையில் தருகின்றீர்கள் என்பது முக்கியம்.
2. அந்தப் பொருட்களை  பயன்படுத்தக்  கூடிய தரத்தில் தரவேண்டும் என்பது அதைவிட முக்கியம்.

இதை மறந்து விட்டால், கடமைக்கான பூஜையாகத்தான் இருக்குமே தவிர, கண்ணியமான பூஜையாக இருக்காது.

9. தாய் வழிபாடு

சக்தி வழிபாடுதான் தாய் வழிபாடு. அறு சமயங்களில் “சாக்தம்” என்கின்ற சமயம் சக்தி வழிபாட்டின் பெருமையைச் சொல்லுகின்றது. பழைய வேத காலத்திலேயே சக்தி வழிபாடு இருந்துள்ளது. ரிக் வேதத்தில் உஷஸ் தேவதையைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அவள்தான் இந்த உலகுக்கு ஒளி  தருகின்றாள். இருளை அகற்றுகின்றாள்.

இதில் இருள் என்பது அறிவு குறைபாட்டையும், ஒளி என்பது ஞானத்தையும் குறிக்கும் சொல். கோடி சூரிய பிரகாசமாய் அவள் உலா வருவதாக ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இவள் தான் “வேதமாதா” என்றும் குறிப்பிடப்படுகின்றாள். முப்பெரும் தேவியர் களாக, இவளே பிரிந்து, முறையாக இந்நிலத்தை காப்பவள் என்று சொல்லப்படுகின்றாள். ஆகையினாலே, இவளே கலைமகள், அலைமகள், மலைமகளாக  இருக்கின்றாள். இதிகாசங்களான ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் தேவி வழிபாடு குறித்து ஏராளமான தகவல்கள் உண்டு.

10. குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும்


இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள். முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்படவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞ்சள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

11. பொம்மைகளைஎப்படி வைக்க வேண்டும்?

படிகளில் பொம்மைகளை நீங்கள் வைக்கின்ற பொழுது, ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை படைத்த ஜீவராசிகளை கீழிருந்து முதல்  ஐந்து படிகளில் வைக்கலாம். ஆறாவது படியில் மனித உருவங்களை அமைத்து. ஏழாவது படியில் மகான்களின் உருவங்களை அமைத்து. அடுத்த படியில் பல்வேறு தேவதைகளின் திருவுருவங்களை அலங்கரித்து வைத்து எல்லாவற்றுக்கும் மேலாக ராஜராஜேஸ்வரி அல்லது அம்பிகையை அலங்கரித்து உயரமான ஒன்பதாம் படியில் வைக்க வேண்டும். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை இந்த படிநிலைகள் காட்டுகின்றன.

தொகுப்பு: கோகுலகிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்