SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முடியாத பிரச்னைகளையும் முடித்துவைப்பார் முத்துவீரன்

2022-09-13@ 16:55:57

நம்ப ஊரு சாமிகள்

தோணுகால், கோவில்பட்டி


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள தோணுகால் கிராமத்தில் அருள்பாலிக்கிறார் முத்துவீரன் சுவாமி. தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பையன், தனது மனைவி ஆறுமுகத்தாளோடு திருச்செந்தூர் சென்று செந்தில்வேலவனை வணங்கினர். கோயிலை விட்டு வரும்போது வடக்குப் பிராகாரத்தில் வெளியே நின்றிருந்த குறி சொல்லும் பெண் சுப்பையனை அழைத்தாள்.

‘‘உம்ம பொஞ்சாதிய கைய நீட்டச் சொல்லுங்க’’ சுப்பையன் ஆறுமுகத்தாளை பார்க்க, கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு குறிசொல்லும் பெண்ணிடம் கையை நீட்டினாள். கையை பார்த்து விட்டு குறி சொல்ல தொடங்கினாள் வள்ளிக் குறத்தி.

பட்ட தீட்ட பல்லி தின்னதாலே
ஒட்ட உறவாடியும் உள்ளே
வெட்ட விழுந்து போச்சே
பல்லி தோஷத்தாலே
பிள்ள யில்லாம ஆச்சே
வள்ளி சந்நதி முன்னே நின்னு சொல்லுதேன்.
வெள்ளி நிறமாட்டம் வரும் மாசி மாதத்திலே
புள்ள வந்து பொறப்பான்.’’

என்றாள். மனம் மகிழ்வோடு வீடு வந்து சேர்ந்தனர் தம்பதியினர். மறுமாதமே கருவுற்றாள் ஆறுமுகத்தாள். மாசிமாதம் வந்தது. மகனும் பிறந்தான். மகனுக்கு முத்து என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அரசன்போல உடல் வாகுவைப் பெற்றிருந்தான். கணவனிடம், வாலிபவயதை அடைந்த முத்துவிற்கு ஏதாவது வேலை தேடுங்கள் என்றாள் ஆறுமுகத்தம்மாள்.

கடம்பூர் பண்ணையார் வீட்டில் வேலைக்கு முத்துவை சேர்த்துவிட்டார் சுப்பையன். ஆண்டுகள் இரண்டு ஆன பின்னே அந்த பகுதியில் முத்து நல்ல வேலைக்காரன் என்று பெயரோடும் ஒழுக்கமுள்ளவனாகவும் திகழ்ந்தான். ஒரு நாள் மாட்டு மந்தையில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளை கள்ளத்தனமாக ஓட்டிச்செல்ல 7 பேர் கொண்ட கள்வர் கூட்டம் வந்தது, மாடுகள் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தான் முத்து, ஏழு மாடுகளை காணவில்லை.

மாடுகள் கால் தடம் நோக்கி சென்று, கள்வர்களை கண்டு விட்டான். அவர்களோடு ஒற்றையாக நின்று சண்டையிட்டு போராடி மாடுகளை மீட்டு வந்தான். அவனது வீரத்தை பாராட்டிய பண்ணையார், இன்றுமுதல் நீ முத்துவீரன் என்று அழைக்கப்படுவாய் என கூறினார். ஒரு நாள் மாலைப் பொழுது அவ்வழியாக தோழியர்களோடு உலா வந்த ஜமீன்தார் வீட்டு கணக்குப் பிள்ளையின் மகள் கோமதியின் தங்கச் சங்கிலி கழிவு நீர் ஓடையை தாண்டும்போது உள்ளே விழுந்துவிடுகிறது.

என் தங்கச்சங்கிலி போச்சே என்று கத்தினாள், உடனிருந்த செண்பகவல்லியும், கல்யாணியும் ‘‘யாராச்சும் வாங்களேன்’’ என்று சேர்ந்து குரல் கொடுத்தனர். அப்போது செண்பகவல்லியிடம் ஏன் சத்தம் போடுறீங்க? என்று முத்துவீரன் கேட்டான். நடந்ததை அவளும் கூறினாள். உடனே முத்துவீரன் சகதியாக இருந்த கழிவு நீர் ஓடையில் இறங்கினான். சிறிது நேர தேடலுக்கு பின் கிடைத்த தங்க சங்கிலியை நல்ல தண்ணீரில் கழுவி, தனது வேட்டியில் துடைத்துக் கொடுத்தான்.

வீட்டிற்கு சென்றதும் அவளது தாய் ‘‘ஏன் இவ்வளவு நேரம்?’’ என்று கேட்க, அப்போது குறுக்கிட்ட கல்யாணி, ‘‘அம்மா, கோமதி சங்கிலிய தொலைச்சுட்டா, அப்புறம் எடுத்திட்டோம்.’’ என்றதும் வீட்டிற்குள் நின்ற கோமதியின் மூத்த அண்ணன் ‘‘என்னமா சொல்ற,’’ என்று கேட்டதும், நடந்த சம்பவத்தை கூறினாள் செண்பகவல்லி. உடனே கத்தினான் கோமதியின் அண்ணன்.

சங்கிலியை கழற்றி தூரப் போடு. அது உன் கழுத்தில கிடக்கிறத பாக்கும்போது, ஏதோ அவனே உன் கழுத்த கட்டி நிக்கிறமாதிரி எனக்கு தெரியுது, என்றதும் அவனது அம்மா கத்தினாள். ‘‘சிதம்பரம் என்ன வார்த்தை பேசுற, கை நிமிந்த புள்ள கிட்ட போய் கண்ட பயல சேத்து வச்சு பேசுற,’’  இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே அழுத படி தனது படுக்கைக்கு சென்றாள் கோமதி. அன்று முழுக்க எதுவும் உண்ணாமல், உறங்காமல் இருந்தாள்.

அண்ணன் பேசியது போல, அந்த சங்கிலியை பார்க்கும்போது, முத்துவீரனை எண்ணலானாள். தன்னை மறந்து அவனை நினைக்கலானாள். சங்கிலியை கழற்றி பீரோவில் வைத்துவிட்டு தனது மூத்த அண்ணனிடம் சென்று கூறினாள். ‘‘அண்ணா செத்துப்போயிடலாமுன்னு தோணுது எனக்கு’’ என்றாள்.
‘‘ஏன், அப்படி சொல்லுக,’’ தங்கையின் கைகளை பற்றி ஆறுதல் கூறி கண்ணீரை துடைத்துவிட்டான். தப்ப நீ உணர்ந்திட்டியே அதுவே போதும், என்றான் அவளது அண்ணன்.

கோமதி முன்னர் போல் இல்லாமல், அமைதியாக இருக்கிறதை பார்த்த அவளது அண்ணன்கள் தங்கையை அழைத்து, உனக்கென்ன கவலை என்று ஆறுதல் கூறி, கோயிலு குளமுன்னு போயிட்டு வா, என்றனர். உடனே தோழிகளோடு வெளியே வந்த கோமதி ‘‘கொடுக்காபுளி சாப்பிடணும் போல இருக்கு’ என்று கூற, செண்பகவல்லி அவளைத் தோட்டக்காட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

கொடுக்காபுளி பறிக்க முயன்றும் முடியாத நிலையில் கோமதியும் அவளது தோழிகள் இருவரும் நிற்க, அவ்விடம் வந்த முத்துவீரனை செண்பகவல்லி அழைத்தாள். முத்துவீரன் கொடுக்காபுளி மரம் அருகே வந்ததும் கோமதி அழுதாள். ஏங்க அழுவுறீங்க? என்று கேட்டான் முத்துவீரன். அவன் கையை பிடித்த கோமதி ‘‘ஒத்த சங்கிலி எடுத்துக்கொடுத்து செத்து போற அளவுக்கு என்ன நினைக்க வச்சுப்புட்டீங்க’’ என்றாள்.

‘‘இந்தா பாரு, இந்த ஜென்மத்தில உன் கூடத்தான் என் வாழ்வோ, சாவோ. சீக்கிரம் என்னை கூட்டியிட்டு எங்காச்சும் போ.’’ என்ன கூட்டிட்டு போக சொல்லுகளே’’ என்று வெள்ளந்தியாய் கேட்டான் முத்துவீரன். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, கோமதியின் உறவினர் பூதலிங்கம் என்பவர் பார்த்துச் சென்றார்.

‘‘இனி வீட்டிற்கு சென்றால் நிம்மதியும் இருக்காது. உன் நினைவும் மறக்காது, அதனால.. வா.. இப்பவே போகலாம்’’. ‘‘உன்ன பெத்த அப்பன் ஆத்தா நிலம என்னவாகும். இப்படி திடுமுடுன்னு என்னை கூட்டிட்டு போக சொல்லிட்டீங்களே! எனக்கு உங்க மேல எந்த எண்ணமும் இல்லீங்க. உங்க மேல மருவாதிதான் இருக்கு.

ஏன் அப்படி?

‘‘புடிச்சா காரணம் சொல்லலாம், புடிக்காட்டி என்ன காரணம் சொல்றது’’

‘‘முத்து நான் உன்னை நம்பி இருக்கேன். ஒண்ணு என்ன கூட்டிட்டு போ, இல்லண்ணா இங்கேயே என்னை கொண்ணுப்போடு. வீட்டுல இவ்வளவு நாளும் செல்லமா வளர்த்திட்டு, இப்போ அந்த தங்க சங்கிலி விஷயத்தில என்னை அப்படி பேசிட்டானுங்க எங்க அண்ணமாருங்க, என்னால தாங்க முடியல, இதுல எங்க மாமா வேற ஏதாச்சும் தப்பா சொன்னா, என்ன கொல்லாம பேசியே கொல்லுவானுங்க’’ என்றாள்.

‘‘சரி, என்னை நம்பி வந்திட்டே வா போலாம்’’ என்ற படி அவளது கையைப் பிடித்து அழைத்துச்சென்றான் முத்துவீரன். செல்லும் முன் கோமதி தனது தோழிகளிடம் சொன்னாள், ‘‘பூதலிங்கம் மாமா எங்க வீட்ல போய் சொல்லுறதுக்கு முன்னாடி நீங்க போய் சொல்லி, உங்களுக்கு வர இருக்கும் கெட்டபெயரை மாத்திக்கங்கடி” என்று கூறினாள். தோழிகள் கோமதியின் மூத்த அண்ணனிடம் எடுத்துக்கூறினர்.

கோமதியின் அண்ணன்மார்கள் பூதலிங்கத்திடம் போய் கேட்க, அவரு.. நம்ம தங்கச்சிய நான் பார்க்கவே இல்லையப்பா, அவ எப்படிப்பா காட்டுக்கு போவா என்று கூற, கோமதி அவசரப்பட்டுட்டாளே என்று கலங்கினர் அவளது தோழிகள். தோணுகால் ஊரின் எல்லையில் எருக்கம்பூ செடிகளிடையே பதுங்கி இருந்தனர் முத்துவீரனும், கோமதியும். அந்த இடம் நோக்கி அவளது அண்ணன்மார்கள் அருவாளும், வேல் கம்போடும் வந்து கொண்டிருந்தனர்.

‘‘அவங்க கையில கிடைச்சா நம்மள கண்டதுண்டமா வெட்டிப் போடுவானுங்க, ஏங்க எப்படியும் நம்ம சாகத்தான் போறோமுன்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி நாமளே செத்துருவோம். வலிக்காம சாக வழியிருக்கா சொல்லுங்க’’ என்றாள் கோமதி. கண்ணீர் வழிந்தோடிய அவளது கன்னத்தை துடைத்து விட்டு முத்துவீரன் சிரித்தான்.

‘‘என்னை நம்பி வந்தவள் நீ, உன்னை காப்பாற்றி வாழ வைப்பது எனது கடமை, வருபவர்களின் தலையை கொய்து உனது கால்மாட்டில் வைக்கிறேன்’’ என்றான். அப்போது அவனது வாயை மூடிய கோமதி, ‘‘எனது அண்ணன் மார்களை எதிர்த்து சண்டை போடுங்க, ஆனா அவங்க உயிருக்கு உங்களால் எதுவும் ஆகக்கூடாது’’ என்றாள்.

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் நின்று கோமதியின் தலைமுடியைப் பிடித்து இழுத்தான் அவளது கடைசி அண்ணன். ‘‘ஓடுகாலி நாயே உனக்கு என் கையாலதான் சாவு’’ என்று அரிவாளை எடுத்து வீச, தனது வலது கை கொண்டு தடுத்து அவனை மார்பில் உதைத்தான் முத்துவீரன். அப்போது அவனது பின்னால் நின்ற கோமதியின் மூத்த அண்ணன், முத்துவீரனை அரிவாளால் வெட்டினான்.

கீழே சரிந்து விழுந்த முத்துவீரனை அஞ்சு பேரும் சேர்ந்து கண்ட துண்டமாக வெட்டினார்கள். கோமதியையும் அவர்கள் வெட்டிக்கொன்றனர். ‘‘இவர்களது மரணம் மற்றவர்களுக்கு பாடமாகட்டும்'' என்றபடி அவர்களது உடல்களை விட்டுச்சென்றனர். முத்துவீரன் கொலையுண்ட தகவலை கேட்டு ஓடோடி வந்தனர் அவனது பெற்றோர்கள். தலை வேறு முண்டம் வேறாக கிடந்த உடலை ஒருங்கே வைத்து அழுதாள் பெற்றவள்.

இறுதி சடங்குகள் முடிந்தது. எண்ணி எட்டு நாட்கள் நகர்ந்தது. முத்துவீரன் ஆவியாக வந்து அந்த அஞ்சு பேரையும் பலி எடுத்தான். அதன் பின்னர் முத்துவீரனின் ஆத்மா அங்கேயே அலைந்து திரிந்தது. இதனால் ஊர் மக்கள், ‘‘நடந்தது நடந்து போச்சு அவன் ஆத்மாவ சாந்தப்படுத்தணும். ராவு இருட்டுல யாரும் நடமாட முடியாம அஞ்சுறாங்க’’ என்றனர்.

‘‘அதுக்கு புள்ளய பறி கொடுத்து நிக்கிற நான் என்ன செய்யட்டும்’’ என்ற அவனது தந்தையிடம், ``நாங்க வழி பண்ணுறோம் பெத்தவங்கிற முறையில நீ.. வா.. என்று கூறினர். அதுக்கான முயற்சிகளை மலையாள மாந்திரீகவாதிகளை வரவைத்து செய்தனர். இறந்தவர்களுக்கு பீடம் அமைத்து 41 வகை பண்டங்களும், 9 வகை பழங்களும் வைத்து பூஜிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

உடனே கோயில் எழுப்பப்பட்டது. பூஜைகள் நடந்தது. முத்துவீரன் ஆத்மா சாந்தமானது. அவனை நம்பி கை தொழும் அடியவர்களுக்கு தெய்வமானான்.
முத்துவீரனுக்கு தோணுகால், தெற்கு கழுகுமலை, வானரமுட்டி, ஆத்திகுளம், நக்கலமுத்தம்பட்டி, ஆசூர் கிராமங்களில் கோயில்கள் உள்ளது. காவல் தெய்வமாக முத்துவீரன் அருள்பாலிக்கிறார். கோமதிக்கும் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு, பெண்கள் மட்டுமே வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆண்கள் யாரும் வருவதில்லை.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்