SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

2022-09-12@ 17:18:27

466. ஸ்வாபநாய நமஹ (Swaapanaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை - தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)பாற்கடலில் இருந்து அமுதம் வெளிவந்தவாறே, அது தேவர்களுக்கா அசுரர்களுக்கா என்ற பெரும் போட்டி நடைபெற்றுவந்தது. ஒப்பீட்டு அளவில் நல்லவர்களான தேவர்களுக்கு அமுதைச் சேர்க்க நினைத்த திருமால், மோகினி என்ற பெண் வடிவம் தரிப்பது என்று முடிவெடுத்தார். அற்புதமான, அழகு மிக்க தோற்றத்தோடு மோகினியாக வடிவம் பூண்டார் திருமால். மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்ற திருத்தலத்தில்தான், திருமால் இந்த மோகினி வடிவைத் தரித்தார் என்று அத்தலத்தின் தலவரலாறு சொல்கிறது.

அந்த மோகினியை பாகவத புராணத்தில் அழகாக வர்ணித்துள்ளார் சுகமுனிவர். மிகவும் அழகான காயாம்பூ வண்ணத் திருமேனியோடும், அழகு மிளிரும் அங்கங்களோடும், காதுகளில் இணையான குண்டலங்களோடும், அழகிய கன்னங்களோடும், உயர்ந்த முகத்தோடும், சிறுத்த இடையோடும், தாமரை போல் நறுமணம் வீசும் முகத்தோடும், மலர்ந்த மல்லிகைப் பூக்கள் சூட்டிய கூந்தலோடும், அழகிய ஆபரணங்களோடும், தூய ஆடையோடும், வெட்கத்தோடு கூடிய புன்னகையோடும், புருவ நெரிப்போடும் அசுரர்களை நோக்கி வந்தாள் மோகினி.

அவளைப் பார்த்த அசுரர்களின் உள்ளத்தில் காமம் ஏற்பட்டது. இதுவரை அமுதம் வேண்டும் என்று தேவர்களை எதிர்த்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் மோகினியிடம் ஓடி வந்தார்கள். “பெண்ணே! நாங்கள் இவ்வளவு நேரம் சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து எங்களை வெறுத்துவிடாதே. நாங்களும் தேவர்களும் பங்காளிகள்தான். நீயே பார்த்து எங்களுக்கு அமுதைப் பங்கு போட்டு அளித்து விடு!” என்று மோகினியிடம் அசுரர்கள் சொன்னார்கள்.

அதைக் கேட்ட மோகினி, “ஒரு பெண்ணின் புறத்தோற்றத்துக்கு மயங்கி இப்படியா பேசுவீர்கள்? நான்தான் அமுதைப் பங்கிட்டுத் தரவேண்டும் என்றால், நான் நியாயமாகவோ அநியாயமாகவோ எப்படிப் பிரித்துத் தந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டாள். அசுரர்கள், “உன்னைப் போன்ற ஒரு பெண்ணின் அன்பு எங்களுக்குக் கிடைக்குமானால், வேறென்ன வேண்டும் உலகத்திலே? உன் இஷ்டப்படி செய்!” என்றார்கள்.

மோகினி, “அப்படியானால் தேவ அசுரர்களே! நீங்கள் எல்லோரும் நீராடி ஆசமனம் செய்து, ஹோமம் செய்து, விரதம் இருந்து, தர்ப்பைப் புல்லைத் தரையில் பரப்பி, அதன் மீது கிழக்கு முகமாக அமர்வீர்களாக. நானே அமுதைச் சரியாகப் பிரித்துத் தருகிறேன்!” என்றார். தேவர்களும், அசுரர்களும் அப்படியே செய்தார்கள். ஹோமம், விரதம் போன்றவற்றைப் பெரிதாக அறியாத அசுரர்களும் கூட, மோகினி தங்கள் மீது கோபித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவள் சொன்னபடி அனைத்தையுமே செய்துவிட்டுக் காத்திருந்தார்கள்.

முதலில் தேவர்களுக்கு அமுதைத் தருவதாகச் சொன்ன மோகினி, வரிசையாகத் தேவர்களுக்கு அமுதை வழங்கி வந்தாள். அதை அசுரர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்கள். யாருமே மறுத்துப் பேசவில்லை. மொத்த அமுதமும் தேவர்களுக்கே சென்று சேர்ந்துவிட்டது. உறங்கியவர் செயல்படாது இருப்பது போலவே அசுரர்கள் அப்படியே இருந்துவிட்டார்கள்.இப்படி மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி உறங்க வைத்ததால், (இங்கே உறக்கம் என்பது செயல்படாதிருக்கும் நிலையைக் குறிக்கிறது) மோகினி அவதாரம் செய்த திருமால் ஸ்வாபன என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு நாட்டில் யாருமே செயல்படாமல் இருந்தால், நாடு உறங்குகிறதா என்று கேட்கிறோம் அல்லவா? அதுபோல் மோகினியின் அழகில் மயங்கிச் செயல்படாமலேயே அசுரர்கள் இருந்ததால், அவர்களின் நிலையை உறக்கத்தோடு பெரியோர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். ‘ஸ்வாபன:’ என்றால் உறங்கச்செய்பவர் என்று பொருள். தீயசக்திகளான அசுரர்களை மயக்கிச் செயல்பட முடியாமல் செய்த மோகினிக்கு ‘ஸ்வாபன:’ என்று பெயர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 466-வது திருநாமம்.

“ஸ்வாபனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் தெளிவு ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

467. ஸ்வவசாய நமஹ (Swavashaaya namaha)

`ஸ்ரீமகா பக்த விஜயம்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாறு. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கனின் சிறந்த பக்தர் நாமதேவர் என்பவர் நாமதேவரின் இளமைக் காலத்தில், அவரது தாயான குணாபாய், நாமதேவரிடம் ஒரு பாத்திரத்தில் பாயசத்தைக் கொடுத்து அதைப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்தாள்.
நாமதேவரும் கையில் பாத்திரத்தோடு சென்றார். அந்த வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் பந்து, மூடாமல் நாமதேவர் கொண்டு சென்ற பாயச பாத்திரத்தில் விழுந்து விட்டது. தெருமுனையில் நடந்த இந்த காட்சியை வீட்டுவாசலில் இருந்து பார்த்த குணாபாய், “நாமதேவா! இங்கே வா! பந்து விழுந்த பாயசத்தைப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம்
செய்யாதே!” என்று அழைத்தாள்.

விவரம் அறியாச் சிறுவனான நாமதேவர், “அதெல்லாம் ஒன்றும் பிரச்னை இல்லை அம்மா! நான் சென்று வருகிறேன்!” என்று வேகமாகச் சென்றுவிட்டார்.கோயிலுக்குள் நாமதேவர் சென்று பார்த்த போது, கோயிலில் யாரையுமே காணவில்லை. “யாராவது பெரியவர்கள் இருந்தால், அவர்களிடம் கொடுத்துப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்யச் சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் இங்கே யாரையுமே காணவில்லையே! என்ன செய்வது? என்று சிந்தித்தார் நாமதேவர்.

“சரி! நாமே நிவேதனம் செய்வோம்!” என முடிவெடுத்த அவர், பாண்டுரங்கனுக்கு அருகில் சென்று, “பாண்டுரங்கா! என் தாய் உனக்காக இந்தப் பாயசத்தைக் கொடுத்து அனுப்பி யிருக்கிறாள். நீ இதைச் சாப்பிட வேண்டும்!” என்றார். பாண்டுரங்கன் அசையாமல் அப்படியே இடுப்பில் கைவைத்தபடி நின்றிருந்தான்.“ஏய் பாண்டுரங்கா! நீ மட்டும் உண்ணாமல் இருந்தால், பந்து விழுந்ததால்தான் நீ உண்ணவில்லை என்று என் தாய் என்னிடம் கோபித்துக் கொள்வாள். தயவுசெய்து சாப்பிடு!” என்றார் நாமதேவர். அப்போதும், பாண்டுரங்கன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

மீண்டும்மீண்டும் பாண்டுரங்கனிடம் வேண்டி அழுத நாமதேவர், “நீ இப்படி என்னைத் தண்டிக்க நினைக்கிறாய் என்றால், நானே என்னை மாய்த்துக்கொள்கிறேன்!” என்று சொல்லித் தன் தலையைப் பாண்டுரங்கனின் திருவடிவாரத்தில் உள்ள செங்கல்லில் மோதப் போனார். “நில்!” என்ற குரல். பாண்டுரங்கன் எதிரே நிற்கிறான். “நாமதேவா! வா! இருவருமாகப் பாயசத்தை உண்போம்!” என்றான் பாண்டுரங்கன்.

பாண்டுரங்கனும் நாமதேவருமாகச் சேர்ந்து பாயசத்தை உண்டார்கள். நாமதேவர் தன் கையால் சந்தனம் பூச, அதைத் தன் திருமார்பில் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டான் பாண்டுரங்கன். தனது மாலையை, நாமதேவருக்கு அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டுரங்கன். குதூகலத்துடன் வீடு திரும்பினார் நாமதேவர். பாத்திரத்தைப் பார்த்த குணாபாய், “என்ன நாமதேவா? பாத்திரத்தில் பாயசம் எங்கே?” என்றாள். “பாண்டுரங்கன் உண்டுவிட்டான்!” என்றார் நாமதேவர்.

வெளியே சென்றிருந்த நாமதேவரின் தந்தை தாம்சேட்டி வீட்டுக்கு வந்தார். மகன் சொல்வதை அவரிடமும் சொன்னாள் குணாபாய். நாமதேவரே சாப்பிட்டு விட்டுப் பாண்டுரங்கன் உண்டதாகப் பொய் சொல்கிறாரோ என்று பெற்றோர்கள் சந்தேகப்பட்டார்கள்.“நாமதேவா கோயிலுக்கு வா! இறைவன் உண்மையிலேயே உண்டானா என்று பார்ப்போம்!” என்றார்கள். பெற்றோருடன் கோயிலுக்குச் சென்றார் நாமதேவர். அப்போது, அசரீரியாகப் பேசிய பாண்டுரங்கன், “தாம்சேட்டி! உங்கள் மகன் தந்த பாயசத்தை நான் உண்டது உண்மை. என் பக்தர்களோடு ஆனந்தமாக என் இஷ்டப்படி நான் விளையாட விரும்புவேன். அதற்காக அதற்கு இடையூறாக இருக்கும் மற்றவர்களை எல்லாம் உறங்க வைத்துவிடுவேன்.

அப்படித்தான் இன்றும் கோயிலில் எல்லாரையும் உறங்க வைத்துவிட்டு, நாமதேவரோடு இஷ்டப்படி உறவாடினேன்!” என்றான். தங்கள் மகனுக்குக் கிடைத்த அருளை எண்ணித் தாம்சேட்டியும் குணாபாயும் பேரானந்தம் அடைந்தார்கள்.அதுபோலத்தான், தன் பக்தர்களான தேவர்களுக்கு அமுதம் தந்து அவர்களை வாழ்வித்து அவர்களோடு உறவாடிய திருமால், அதற்கு இடையூறான அசுரர்களை எல்லாம் மோகினியின் அழகால் மயக்கித் தூங்க வைத்துவிட்டார். இப்படி மற்றவர்களை உறங்கச் செய்துவிட்டு, தன் இஷ்டப்படி அடியார்களோடு உறவாடுவதால், ‘ஸ்வவச:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘ஸ்வவச:’ என்றால் தன் இஷ்டப்படி அடியாரோடு விளையாடுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 467-வது திருநாமம்.

“ஸ்வவசாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மோடும் திருமால் விளையாடி நமக்கும் நல்லருள்புரிந்தருள்வார்.

468. வ்யாபினே நமஹ (Vyaapiney namaha)

வைணவக் குருவான ஆளவந்தார் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். காஞ்சியில் வரதராஜப் பெருமாளுக்கு விசிறி வீசித் தொண்டாற்றி வந்த திருக்கச்சி நம்பிகள் மூலம் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தம் பயிலும் ராமானுஜரைப் பற்றிய செய்திகளை அப்போது ஆளவந்தார் அறிந்தார். யாதவப் பிரகாசர் வேதங்களுக்குத் தவறான பொருள் சொல்வதையும், குருவை மிஞ்சிய சிஷ்யராக ராமானுஜர் அவரைத் திருத்திச் சரியான பொருளை உரைப்பதையும் திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரிடம் எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்ட ஆளவந்தாருக்கு ராமானு ஜரைக் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதைத் திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லிக் கொண்டே, வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்குள் சென்றார் ஆளவந்தார். அங்கே கரியமாணிக்க வரதர் சந்நதிக்கு அருகில் திருக்கச்சி நம்பிகளோடு ஆளவந்தார் நின்று கொண்டிருந்தபோது, யாதவப் பிரகாசர் தன்னுடைய சீடர்களோடு கோயிலுக்குள்ளே நுழைந்தார்.

உடனே திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரிடம், யாதவப் பிரகாசரின் கோஷ்டியைச் சுட்டிக்காட்டி, “சுவாமி! அதோ ஒரு கோஷ்டி வருகிறதே! அதில் நெடுகி சிவந்து ஆஜாநுபாகுவாகி வருகிறவர்தான் ராமானுஜர்!” என்றார். அதாவது எதிரே வரும் கோஷ்டியில், நல்ல உயரத்தோடும், சிவந்த வண்ணத்தோடும், முழங்கால் வரை நீண்ட கைகளோடும் கூடியவராக இருக்கும் அந்த இளைஞரே ராமானுஜர் என்று ஆளவந்தாருக்கு அடையாளம் காட்டினார் திருக்கச்சி நம்பிகள்.

முதன்முறையாக ராமானுஜரைப் பார்த்த ஆளவந்தார், “ஆம் முதல்வன் இவன்!” என்று சொல்லி ராமானுஜரை வாழ்த்தினார். ஆம் முதல்வன் இவன் என்ற தொடர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தில் இடம்பெற்ற தொடராகும். திருமால் தமக்குப் புரிந்த அருளை நம்மாழ்வார் பாடும்போது;

“ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என்
நாமுதல் வந்து புகுந்த நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய்முதல் அப்பனை என்றும் மறப்பனோ?”

என்று பாடுகிறார்.

“உலகில் உள்ள மக்களை எல்லாம் திருத்தி பக்தியில் ஈடுபடுவதற்குரிய தலைவன், முதல்வன் இவனே என்று அடியேனைத் தேர்ந்தெடுத்து, என் நாவிலே வந்து திருமால் அமர்ந்து கொண்டு, தன் பெருமையை அடியேன் மூலமாகப் பாடவைத்து, தமிழ்வேதமாகிய திருவாய்மொழியை உருவாக்கியுள்ளார்!” என்பது இப்பாடலின் கருத்து.அதன் அடிப்படையில், “நம்மாழ்வாரை முதல்வர் என்று தேர்ந்தெடுத்து, அவர் நாவில் அமர்ந்து அவரை இயக்கிப் பாடல்கள் பாட வைத்தார் அல்லவா திருமால், அதே திருமால்தான் இப்போது ராமானுஜரை முதல்வர் என்று தேர்ந்தெடுத்து, இவர் மூலமாக உலகம் உய்வடைய வேண்டும் எனக்கருதி ராமானுஜரின் உள்ளத்திலேயே குடிவந்து அவர்மூலம்தான் விரும்புவனவற்றை நடத்திக்கொள்ளப் போகிறான்!” என்று ஆளவந்தார் திருக்கச்சி நம்பிகளிடம் கூறியிருக்கிறார்.

இதுபோலவே திருப்பாற்கடல் கடைந்த போதும், அமுதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்தாகச் சுழலும் மந்தர மலைக்குள்ளும், கயிறாகக் கட்டப்பட்ட வாசுகி பாம்புக்குள்ளும், கடைகின்ற தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும் திருமால் நுழைந்து, அவர்களுக்குள்ளே நிறைந்திருந்து அவர்கள் மூலம் அமுதம் கடைதல் என்னும் செயல் நடைபெறும்படிச் செய்தார்.இப்படி அனைவருக்குள்ளும் நுழைந்து உள்ளே நிறைந்திருந்து அவர்களைச் செயல்பட வைப்பதால் திருமால் ‘வ்யாபீ’ என்று அழைக்கப்படுகிறார். ‘வ்யாபீ’ என்றால் உள்ளே நுழைந்து நிறைந்திருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 468-வது திருநாமம்.“வ்யாபினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குள் எப்போதும் திருமால் எழுந்தருளியிருந்து அவர்களை வழிநடத்துவார்.

469. நைகாத்மனே நமஹ (Naikaathmaney namaha)

ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் அருளிய `அம்ருத சார்தூலம்’ என்ற துதியில் உள்ள ஒரு ஸ்லோகம்;

கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமுதம்
யோக்யம் புராரிம் வ்யதாத்
ஸர்வஜ்ஞம் த்ருதகங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத:
ஸ்வஸ்யாதோ பஹுபிஸ்ஸமை: கலயிதும் பூஜாம் ஸ சாலாபத:
ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ் த்வாம் கும்பகம் ஸேவதே


திருப்பாற்கடலைக் கடையும் போது, முதலில் தேவர்கள் ஒரு குடத்தில் திருமாலை ஆவாகனம் செய்து வழிபட நினைத்தார்களாம். எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, வேத மந்திரங்களால் இறைவனை வழிபட்டு விட்டுச் செய்தால் முழு வெற்றி கிட்டும் என்கிற அடிப்படையில் தேவர்கள் மேற்கொண்ட முயற்சி இது.கும்பத்தினுள்ளே திருமாலை எழுந்தருளச் செய்த பின், யார் மூலமாக இந்தப் பெருமாளுக்குப் பூஜைகளை நடத்தலாம் என்று சிந்தித்த தேவர்கள், சிவபெருமானைத் தேர்ந்தெடுத்தார்களாம். ஏனென்றால், சிவபெருமான் வேதங்களில் வல்லவர்.
மேலும், தலையில் கங்கையைச் சுமந்தபடி எப்போதும் தூய்மையாகவே இருப்பவர்.

இத்தகைய ஞான அனுஷ்டான சீலர் தானே ஆராதகராக இருக்க முடியும்? அந்தக் குடம்தான் கும்பகோணம் அல்லது குடமூக்கு என்று அழைக்கப்படும் திருத்தலம். அக்கும்பத்தில் உள்ள திருமாலைப் பூஜித்தபடியால் கும்பேஸ்வரர் என்று கும்பகோணத்தில் சிவபெருமான் பெயர்பெற்றார் என்று இங்கே குறிப்பிடுகிறார் நிதி சுவாமிகள். (கும்பகோணத்தின் சைவ ஸ்தல புராணங்களில் கூறப்பட்ட மற்றொரு கோணத்திலான கதையை நாம் இங்கே மறுக்கவில்லை. இந்தத் திருநாமத்தை விளக்கும் கோணத்திலும் அம்ருத சார்தூல சுலோகத்தின் அடிப்படையிலும் மட்டுமே இது விவரிக்கப் படுகிறது).

மேலும், குடத்துக்குள் உள்ள அமுதம் போல் கும்பகோணத்தின் மத்தியில் எழுந்தருளிய திருமால், ஆராவமுதன் என்று பெயர் பெற்றார். கண்களால் பருகும் திகட்டாத அமுதமாய் இருக்கும் ஆராவமுதப் பெருமானின் அழகில் சிவபெருமான் ஈடுபட்டார். இவரைப் பூஜிக்க வேண்டும் என்றால் ஒரு வடிவம் எடுத்துக்கொண்டு பூஜித்தால் போதாது, பலப்பல வடிவங்கள் கொள்வோம் என்று முடிவெடுத்தார். அதன்படியாக, ஆராவமுதப் பிரானின் திருக்கோயிலைச் சுற்றிப் பற்பல சிவாலயங்களிலே கோயில்கொண்டு ஆராவமுதனைச் சுற்றிச்சுற்றி வந்து பூஜித்து மகிழ்ந்தாராம் சிவபெருமான். இன்றும் கும்பகோணத்தில் ஆராவமுதன் சந்நதியைச் சூழ்ந்து பல சிவாலயங்கள் இருப்பதைக் காணலாம்.

இதைக் கண்ட ஆராவமுதன், “சிவபெருமானே! நீங்கள் பல வடிவம்கொண்டு என்னை ஆராதித்தீர்கள். நானும் இப்போது பல வடிவங்களில் காட்சிதந்து உங்களுக்கும் தேவர்களுக்கும் அருள்புரியப்போகிறேன்!” என்று சொல்லி, சார்ங்கவில் ஏந்திய சாரங்கபாணி எனும் ஆராவமுதாழ்வானாகவும், சக்ராயுதம் ஏந்தியபடி சக்ரபாணியாகவும், கோதண்ட பாணியாகிய ராமனாகவும், செண்டு என்னும் மாடு மேய்க்கும் கோல் ஏந்தி யஷ்டிபாணியான ஸ்ரீ ராஜகோபாலனாகவும் காட்சி அளித்தார்.

பாணி என்றால் திருக்கரம். இப்படி நான்கு வித திவ்யாயுதம் தரித்த திருக்கரங்களோடு, நான்குவிதப் பாணிகளாகத் தேவர்களுக்குக் காட்சி தந்து அருள்புரிந்து திருப்பாற்கடல் கடைய அருள்புரிந்தாராம் திருமால்.அவ்வாறே திருப்பாற்கடல் கடையும்போதும், மந்தரமலையைச் சுமக்க ஆமை வடிவம் கொண்ட கூர்ம மூர்த்தியாகவும், பாற்கடலைக் கடைவதற்காக அஜிதன் என்ற மூர்த்தியாகவும், அமுதைக்கொண்டு வர தன்வந்திரியாகவும், அசுரர்களை மயக்குவதற்காக மோகினியாகவும் பலப்பல வடிவங்கள் எடுத்து அமுதத்தைத் தேவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார் திருமால்.

இப்படிப் பலப்பல வடிவங்கள் தரித்து அடியார்களுக்கு அருள்புரிவதால், `நைகாத்மா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ஆத்மா என்பது இவ்விடத்தில் உடலை (வடிவைக்) குறிக்கிறது. ஏக என்றால் ஒன்று, நைக என்றால் பல. நைக + ஆத்மா = நைகாத்மா என்றால் பலப்பல வடிவங்கள் தரிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 469-வது திருநாமம்.

நைகாத்மனே நமஹ:
என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை எல்லாத் திசைகளில் இருந்து வரும் ஆபத்துகளை நீக்கி திருமால் எப்போதும் காத்தருள்வார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்