SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையப்பர் ஆலயமும் சிற்பப் பொக்கிஷங்களும்!

2022-09-12@ 17:11:34

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தென்பாண்டி நாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் முக்கியத்துவம் பெற்ற திருவூர் திருநெல்வேலியாகும். வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரமவிருத்தபுரம், தாருகாவனம் எனப் பல பெயர்களில் இவ்வூர், புராணங்களிலும் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பெறுகின்றது. வேதப்பட்டர் என்பார் இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு உலரப் போட்டிருந்த நெல் மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டு காப்பாற்றியமையால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்ற பெயர் ஏற்பட்டதாக இத்தலத்துப் புராணம் கூறுகிறது.

வடிவுடைமங்கையோர் பங்கினர் மாதரை மையல் செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலியுறை செல்வர் தாமே
- என்பது திருஞானப்பிள்ளையாரின் திருவாக்கு.


நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர் என இலக்கியங்களிலும், நெல்வேலி பெருமானடிகள் எனக் கல்வெட்டுகளிலும் இத் தலத்து இறைவனார் குறிக்கப்பெறுகின்றார். இங்கு கோயில் கொண்டுள்ள அம்மையின் திருநாமம் காந்திமதி என்பதும் வடிவுடை அம்மை என்பதுமாகும்.பதினான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து எழிலார் கட்டடங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோயில் வளாகப் பகுதிக்குள் மூன்று திருக்குளங்கள் அமைந்துள்ளன.

சுவாமி கோயிலுக்கு நான்கு கோபுரங்களும், அம்பாள் கோயிலுக்கு ஒரு கோபுரமும் உள்ளன. அம்பாள் கோயில் சுவாமி சந்நதிக்கு இணையாகத் தென்பாரிசத்தில் அமைந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வேணுவனமாகிய மூங்கில் காட்டிலிருந்து சுவாமி வெளிப்பட்டபோது ஏற்பட்ட வெட்டுத் தழும்பு சுவாமியின் பாணத்தின்மேல் உள்ளதாகக் குறிப்பர். தேவி இரண்டு கரங்களுடன் திகழ்கின்றார்.

இங்குள்ள கோவிந்தராஜப் பெருமாளின் திருமார்பில் சிவலிங்கம் இருப்பதும், திருமால் பெருமானின் திருமணத்திற்காக நீர் கெண்டியுடன் நீர் வார்த்துத் தரும் கோலத்தில் திகழும் செப்புத் திருமேனியும் பேரழகு வாய்ந்தவையாகும். சைவ வைணவ பேதமில்லாத வழிபாடு இங்கு மேற்கொள்ளப்பெறுகின்றது. இவ்வாலயத்தில் நாள்வழிபாடுகளும், பெருந்திருவிழாக்களும் காமிக ஆகமம் அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறது.

அகத்தியர் பிரதிட்டை செய்ததாகக் கூறப் படும் சிவலிங்கம் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது. நடராஜப் பெருமானின் பஞ்ச சபைகளுள் இங்கு தாமிர சபை உள்ளது. முழுதும் செப்புத் தகடுகள் கொண்டு வேயப்பெற்ற கூரையுடன் கூத்தம்பலம் திகழ்கின்றது.இவ்வாலயத்திற்குள் செல்லும்போது முதற் திருச்சுற்றின் சுவர்களில் அமைந்த அற்புதமான ஐந்து சிற்பப் படைப்புகளைக் காண்பது முக்கியமானதாகும். தாழ்வாக உள்ள திருச்சுற்றிலிருந்து படிகள் மூலம் மகாமண்டபத்திற்குச் செல்லும்போது நமக்கு இடப்புறம் சுவரில் சுந்தரர் சேரமான் பெருமாளோடு முறையே யானை மீதும், குதிரை மீதும் அமர்ந்து செல்லும் காட்சி உள்ளது. இக்காட்சியை நாம் ஆழ்ந்து நோக்கும் முன் சேக்கிழார் பெருமான் கூறும் `வெள்ளானைச் சருக்கம்’ எனும் பெரியபுராண நிகழ்வுகளை அறிந்திருத்தல் வேண்டும்.

கொடுங்கோளூரில் சேரமான் பெருமானொடு சுந்தரர் தங்கி இருந்தபோது சுந்தரர் மட்டும் திருவஞ்சைக்களம் கோயிலுக்குச் சென்றார். அந்நிலையில் சுந்தரருக்கு நிலவுலக பாசம் முழுதும் அகன்றது. “தலைக்கு தலைமாலை” எனத் தொடங்கும் பதிகத்தை ஈசன் முன்பு பாடினார். அப்பாடலில், “வெறுத்தேன் மனைவாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழைக்காது உடைய வேதியனே” எனக் குறிப்பிட்டுத் தன் நிலையினை உணர்த்தினார்.

உடன் கயிலைநாதன் வெள்ளானையை அஞ்சை களத்திற்கு அனுப்பி வைத்து வானநாடர்களை அழைத்து சுந்தரரைக் கயிலைக்கு அழைத்துவரப் பணித்தார். அதன்படி சுந்தரர் யானை மீதேறி அமர்ந்து கயிலை செல்ல முற்பட்டார். வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள் அச்செய்தி கேட்டு உடன் தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி அதன்மீது அமர, அக்குதிரை மிகுவேகமாகச் சென்று சுந்தரர் சென்ற வெள்ளானையை முந்திச் சென்று மறித்தது. பின்னர் இருவரும் கயிலை நோக்கிச் சென்றனர்.

அக்காட்சியைத்தான் இங்கு நாம் நெல்லையப்பர் சந்நதியை அடையும் முன்பு சுவரில் காண்கிறோம். யானை மீது அமர்ந்து செல்லும் நிலையில்தான், சுந்தரரின் கடைசிப் பதிகமான “தான் எனை முன் படைத்தான்” என்ற பதிகம் பாடப்பெற்றது. அப்போது, சுந்தரர் ஊண் உடல் நீங்கிப் பிரணவ சரீரம் பெற்றிருந்தார்.சிற்பக் காட்சியில் யானை வெகுவேகமாகச் செல்கின்றது. அதன் மீது சுந்தரர் அமர்ந்துள்ளார். பின்னர் பாகன் ஒருவனும், வீரன் ஒருவனும் அமர்ந்துள்ளனர்.

யானையின் பின்பு வருவோர் இருவர் குடைபிடித்துள்ளனர். யானைக்கு முன்பாகச் சேரமன்னர் சேரமான்பெருமாளின் குதிரை செல்கிறது. அதன் முதுகில், சேரமானார் அமர்ந்து குதிரையை வேகமாகச் செலுத்துகின்றார். முன்னே ஒருவன் கொடியொன்றினை ஏந்தி விரைவாக நடந்து செல்கிறான். வானத்தில் அப்சரஸ் பெண்கள் நடமாடி அவர்களை வரவேற்கின்றனர்.

தஞ்சைப் பெரிய கோயிலில் இராஜராஜ சோழன் இதே காட்சியை ஃபிரெஸ்கோ ஓவியமாகப் படைத்துள்ளான். அக்காட்சியின் கூறுகள் பல இங்கு சிற்பத்தில் உள்ளன. நெல்லையப்பர் சந்நதியே கயிலாசம் என்பதால் அங்கு செல்லும் பாதையில் படிக்கட்டுப் பகுதி அருகே இச்சிற்பக் காட்சியை இடம்பெறச் செய்திருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.

நெல்லையப்பரை வணங்கிய பின்பு, திருச்சுற்றில் வலம் வரும்போது தென்திசை சுவரில் கயிலாசபதி தன் தேவியோடு அமர்ந்திருக்கும் எழிலார் காட்சியுள்ளது. இதுவும் சுந்தரர் காட்சி போன்றே புடைப்புச் சிற்பமாகும். இது மிக அரிய காட்சியாகும். சிம்மாசனத்தில் ஈசன் பத்மாசனமிட்டு அமர்ந்துள்ளார். வலது தோளில் படமெடுக்கும் பாம்பு திகழ, வலமுன் கரத்தை ஆசனத்தின் மீது குத்துவாட்டில் நிறுத்தி வைத்துள்ள மழு (கோடாலி) ஆயுதத்தின்மேல் அமர்த்தியுள்ளார்.

இத்தகையதொரு காட்சியை வேறு எங்கும் நாம் காண இயலாது. பெருமானாரின் சடை மிக அழகான கொண்டையாக முடியப்பெற்றுள்ளது. அவர்தம் இடப்பின்கரத்தில் மான் காணப் பெறுகின்றது. அமர்ந்துள்ள பெருமானின் தொடையை அணைத்த வண்ணம் குத்திட்ட நிலையில் உமாதேவி காணப்பெறுகின்றார். பின்புறம் கங்கை யமுனை என்ற இரு பெண்கள் சாமரம் வீசுகின்றனர்.

அரியாசனத்திற்கு வலப்புறம் கணபதியாரின் திருவுருவம் உள்ளது. இங்கு ஸ்கந்தர் இல்லை. பெருமான் அமர்ந்துள்ள மண்டபத்தில் வலப்புறம் இருகரம் கூப்பியவராக அதிகார நந்தி நிற்க, ஆசனத்திற்குக் கீழாக சேரமான் பெருமான் திரு உலாப்புரம் பாடி நிற்கிறார். கீழே விண்ணவர் சிலர் அமர்ந்திருக்க ஒருபுறம் திருவுலாப்புரத்தைக் கேட்டு பூமிக்கு பின்னர் கொண்டு வந்த ஐயனார் (சாத்தனார்) காணப்பெறுகின்றார். பக்கவாட்டில் மறுபுறம் ஓர் அடிய வரும், அவர் மனைவியும் பரிகலக்காலில் சோறிட்டு குழந்தையுடன் வணங்கி நிற்கின்றனர். மேலாகக் கண்ணப்பர் தன் கண்ணை அகழ்ந்து பெருமானுக்கு வைக்கும் காட்சியுள்ளது.

அடுத்து, அதே சுவரில் மேற்குப்புறம் அப்பரும் ஞானக்குழந்தையும் நிற்கும் காட்சி உள்ளது. மறுபுறம் சுந்தரர் பரவைநாச்சியார் தோளில் கையை இருத்தியவண்ணம் நிற்க சேடிப்பெண்கள் உடன் இருக்கின்றனர். ஒருத்தி கிளியொன்றைப் பிடித்துள்ளாள். அருகே ஆட்டுக்கிடாய் ஒன்று நிற்கின்றது. இது சுந்தரர் பரவை நாச்சி யாருடன் ஆரூர் வீதிதனில் ஆட்டுச்சண்டை, விளையாட்டு பார்த்ததைக் காட்டுவதாகும்.

இச்சிற்பக் காட்சிகளை அடுத்து அதே சுவரில் எட்டுக் கரங்களுடன் ஆடியவண்ணம் காலனைத் தன் காலால் உருட்டும் கடவூர் ஈசனின் கோலக் காட்சி அமைந்துள்ளது. மேலே மார்க்கண்டேயன் லிங்கத்தைத் தழுவி நிற்க, அருகே இயமன் நிற்கிறான். இச்சிற்பப் படைப்பில் சில சிதைவுகள் ஏற்பட்டுள்ளமை வருத்தமளிக்கிறது.

முதலாம் வரகுணபாண்டியன் எனும் மாறஞ் சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் (கி.பி.770) தொடங்கி பிற்காலம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுச் சாசனங்கள் இவ்வாலயத்தில் பதிவு பெற்றுள்ளன. பழம் கல்வெட்டுகளில் இவ்வாலயம் திருநெல்வேலி பெருமானடிகள் ஆலயம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. தலைக்கோலி விருது பெற்ற பல நாட்டிய நங்கைகள் இவ்வாலயத்திற்கென பல கொடைகளை அளித்துள்ளனர். பாண்டியர்களுக்கு திருநெல்வேலியில் ஓர் அரண்மனை இருந்தமையைப் பல கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. தேவாரம் பாடுவதை இவ்வாலயக் கல்வெட்டு திருஞானம் பாடுதல் என்று குறிக்கின்றது.

திருநெல்வேலி நெல்லையப்பரை வழிபடச் செல்வோர் அவ்வாலயத்தை வலம் வரும்போது மேற்குறித்த சிற்பப் படைப்பு களைச் சற்றுநேரம் நின்று ஊன்றி கவனித்து அவை தம் பின்புலம் அறிந்து மகிழுங்கள். பாண்டிய நாட்டுக் கலைப்பொக்கிசங்களில் சிலவற்றையாவது நாம் கண்ட பேறு பெறுவோம்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்