SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-09-10@ 11:20:36

10-9-2022 - சனி  உமாமகேஸ்வர விரதம்

சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம். இதில், உமா மகேஸ்வர விரதம் மிக முக்கியமானது. இந்த விரதத்தை முறையாக இருந்துவிட்டால் மற்ற விரதங்கள்கூட இருக்க வேண்டிய அவசியமில்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். சிவசக்தி வடிவத்தை வழிபடும் உன்னதமான விரதம் உமாமகேஸ்வர விரதம். உலக இயக்கத்துக்கு சிவசக்தி தத்துவமே காரணம். அதுவே அடிப்படை.

இந்த உலகம் முழுக்கவே இந்த இரட்டைத் தத்துவங்களாகவே இருக்கிறது. ஆணும் பெண்ணும் இணைந்ததுதான் இவ்வுலக விருத்திக்கும், இயக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம். இதை உணராமல் இன்று எத்தனையோ குடும்பங்கள், சில உப்பு சப்பில்லாத கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருக்கின்றன.
 
அப்படிப்பட்ட தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை நீக்கி, அவர்களை ஒன்றிணைக்கும் விரதம்தான் உமாமகேஸ்வர விரதம். சிவனையும் சக்தியையும் ஒருசேர வழிபட்டு, அவர்கள் நல்லாசிகளைப் பெறுவதுதான் இந்த விரதத்தின் நோக்கம். இந்தப் பூஜையால் தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை நிலவும். பெரியவர்களிடத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அந்தக் குற்றம் நீங்கும்.
இந்த விரதத்தில், 16 முடிச்சு உள்ள சிவப்பு நோன்புக் கயிற்றை பூஜை செய்து கட்டிக் கொள்வார்கள். வேத விற்பன்னர்களைக் கொண்டு செய்யும் பொழுது இந்தப் பூஜையை மிக விரிவாகச் செய்யலாம். அதற்கான மந்திரங்களும் உண்டு.

ஆனால், மிக எளிதாக இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும் என்று சொன்னால், கணவனும் மனைவியும் இணைந்து வீட்டை தூய்மைப் படுத்தி பூஜை அறையில் பார்வதி பரமேஸ்வரர் படத்துக்கு அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி, தூப தீபங்கள் காண்பித்து, நிவேதனங்கள் செய்து, அதோடு சிவப்பு நிற 16 முடிச்சுள்ள நோன்புக் கயிற்றையும் வைத்து பூஜை முடிவில் அதை கட்டிக்கொள்ள வேண்டும். இதனால், உமாமகேஸ்வரர்களின் பேரருள் கிடைக்கும். இதைத் தொடர்ந்து 16 ஆண்டுகள் விடாமல் செய்தால், பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.

11-9-2022 - ஞாயிறு  மஹாளயம் ஆரம்பம்

வாக்கிய பஞ்சாங்கப்படி இன்றிலிருந்து மஹாளய பட்சம் துவங்குகிறது. தென்புலத்தார் என்று போற்றப்படும், நமது மறைந்த குல முன்னோர்கள், பித்ருக்கள் வாழும் உலகிலிருந்து, நம்மைப் பார்க்கவும், நமக்கு நல்லாசிகள் வழங்கவும், நாம் இருக்கும் இடம் தேடி வருகின்ற காலம்தான் மஹாளயபட்சம். இந்த மஹாளய பட்ச காலத்தில் நம்மைத் தேடிவரும் நம் முன்னோர்களுக்கு மிகுந்த அன்போடு வரவேற்பு தர வேண்டும். சாஸ்திரப்படி அவர்களது தாகத்தையும், பசியையும் போக்க வேண்டும். அவர்களை வணங்கி நல்லாசிகளைப் பெற வேண்டும். இவர்களைத் திருப்திபடுத்தாமல் தெய்வத்தைத் திருப்திபடுத்த முடியாது. பிதுரர்கள் பூஜையை விட்டுவிட்டு, தெய்வ பூஜை செய்தாலும் பலன் கிடைக்காது. இதை தங்கள் அனுபவத்தில் பல பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
 
ஒருவருடைய குடும்பத்தில் என்னதான் முயற்சி செய்தாலும், காரியத்தடை இருக்கும். சுப காரியங்களில் முன்னேற்றம் இருக்காது. அப்படியானால், அவர்கள் ஏதோ ஒரு காலத்தில் பிதுர்கள் பூஜையைச் சரியாகச் செய்யவில்லை என்று பொருள். அந்த தோஷத்தை நீக்கிக் கொள்ள வேண்டுமானால், மஹாளய பட்சத்தில் தென்புலத்தார் வழிபாட்டை முறையாகச் செய்ய வேண்டும். பொதுவாகவே, இறந்தவர்களுக்கு அமாவாசை தர்ப்பணம், வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் இறந்த திதியில், சிராத்தம் செய்ய வேண்டும்.
 
சில குடும்பங்களில் இவற்றையெல்லாம் மறந்துபோயிருப்பார்கள். இறந்த திதியும் ஞாபகம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மஹாளய பட்சம் என்பது மிக முக்கியமானது. “மறந்தவர்க்கு மஹாளயம்” என்று ஒரு பழமொழியே உண்டு.
 
மஹாளய பட்சத்தில் எல்லா நாட்களிலும் தர்ப்பணம் தருவது சிறப்பு என்றாலும்கூட, முடியாதவர்கள், ஏதேனும் ஒரு நாளில் தங்கள் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து நன்றிக்கடன் செலுத்த வேண்டும். அவர்கள் ஆசிகளைப் பெற வேண்டும். அதுவும் இந்த ஆண்டு பிதுர்காரகனாகிய சூரியனின் ஞாயிற்றுக் கிழமையில், மஹாளய பட்சம் துவங்குகிறது. அன்று சதய நட்சத்திரம். சதயம் என்பது ராகு பகவானுடைய நட்சத்திரம். ராகு பகவான் முன்னோர்களைக் குறிப்பவர். இப்படிப்பட்ட சிறப்பு இந்த ஆண்டுக்கே உரிய சிறப்பு என்பதை மறந்து விட வேண்டாம்.

12-9-2022 - திங்கள்-திருமண்டங்குடி பவித்ர உற்சவம் தொடக்கம்

‘‘திருமாலை அறியாதார் திருமாலை அறியாதாரே” என்று ஒரு பழமொழி உண்டு. திருமாலை என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த பிரபந்தம். பெருமாளுக்கு அவர்தான் திருப்பள்ளியெழுச்சி பாடியவர். தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்த ஊர் திருமண்டங்குடி. ரங்கநாயகி சமேத ரங்கநாதர் திருக்கோயிலில் 12 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி நான்கு நாட்கள் திருப்பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.
திருமஞ்சனம், வேதபாராயணம், ஹோமம், அருளிச்செயல் கோஷ்டி, திருவீதிப் புறப்பாடு, கருட சேவை புறப்பாடு, தீர்த்தவாரி, சாற்று முறை முதலிய நிகழ்ச்சிகள் இந்த 4 நாட்களிலும் உண்டு. திருமண்டங்குடி, கும்பகோணத்திற்கு அருகாமையில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும், பாபநாசத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

13-9-2022 - செவ்வாய் பௌமாஸ்வினி

இது ஒரு அபூர்வமான நாளாகும். அஸ்வினி நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் இணையும் நாள்தான் அந்த நாள். செவ்வாய்க்கு, பௌமன் என்று பெயர். அஸ்வினி நட்சத்திரம் பௌமன் நாளில் வந்தால், பௌமாஸ்வினி. ஆண்டிற்கு ஓரிரு முறை மட்டுமே இப்படிப்பட்ட ஒரு இணைப்பு நாள் வரும். இந்த ஆண்டு ஆவணி மாதம் 28ஆம்  தேதி புரட்டாசி மாதம் 24ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் இந்த
நாள்களாக வருகின்றன.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்த தோஷ நிவர்த்திக்கான, வழிபாட்டுக்குரிய நாளாக இந்த நாளைக் கருதுகின்றனர். எத்தனை முயன்றாலும் தனக்குரிய ஒரு நிலத்தையோ வீட்டையோ கட்ட முடியாதவர்கள் இந்த விரதம் இருப்பதன் மூலமாக விரைவில் நிலம் வாங்கி வீடு கட்டலாம்.

செவ்வாய், இரத்தத்தைக் குறிக்கின்றவர் என்பதால் இரத்தக் குறைபாடு நோய் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து நோயிலிருந்து விடுதலை பெறலாம். இந்த நாள், ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு உரிய நாள். ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக லக்ஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும். அஸ்வினி நட்சத்திரம் என்பது மேஷ ராசியில் உள்ள நட்சத்திரம். அந்த மேஷ ராசி, செவ்வாயின் ஆட்சிவீடு. இப்படிப்பட்ட நாளில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செவ்வாய் தோஷங்கள் விலகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். தனலாபமும், பூமிலாபமும் ஏற்படும். சகோதர ஒற்றுமை ஒங்கும்.

15-9-2022 - வியாழன்கிருத்திகை விரதம்

இன்று குருவினுடைய வாரம். முருகப் பெருமானை நினைத்து அனுஷ்டிக்கக் கூடிய கிருத்திகை விரத நாள். கிருத்திகை விரதம் இருப்பதன் மூலமாக, குருவின் அருளைப் பெறலாம். கிருத்திகை நட்சத்திரத்துக்கு உரிய சூரியன், ஆவணி மாதத்தில் முழு பலத்தோடு தன்னுடைய ஆட்சி வீடாகிய சிம்மராசியில் இருக்கிறார். எனவே இந்த மாத கிருத்திகை விரதம் மிகச் சிறப்பான விரதமாகக் கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திர நாளில் பல முருகன் ஆலயங்களிலும், சிவாலயங்களில் உள்ள முருகன் சந்நதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கு, முருகப்பெருமானுடைய பேரருளும் குருவினுடைய ஆசிர்வாதமும், நிச்சயம் கிடைக்கும்.
 
முருகனையே எண்ணி, திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், `குருவாய் வருவாய்’ என்றுதானே முருகனை அழைக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் வைணவத்தில் திருமங்கையாழ்வாரின் நட்சத்திரமும்கூட. அவர் அவதரித்த தலமாகிய சீர்காழி அருகில் உள்ள திருநகரியில், அவருக்கு மிகச் சிறப்பான திருமஞ்சனம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.

16-9-2022 - வெள்ளி - மகா பரணி


மஹாளய பட்சத்தில், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. ஒவ்வொரு நாள் தர்ப்பணத்திற்கும், ஒவ்வொரு பலனுண்டு. மஹாளய பட்சத்தில் வருகின்ற பரணி நட்சத்திர நாள் மகா பரணி எனப்படும். இந்த பரணி நட்சத்திரம் எமதர்மராஜனுக்கு உரிய நட்சத்திரம். யாராக இருந்தாலும், இந்த உலகத்தில் இருந்து விடை பெற்றவுடன் சந்திக்க வேண்டிய முதல் நபர் கால தேவனாகிய எமதர்மராஜன்.

அவருக்கு எமன் என்று மட்டும் பெயர் கிடையாது. தர்மராஜன் என்கிற பெயரும் உண்டு. காரணம், அவர் இன்னார் இனியார் என்று பார்க்காமல், இந்த உலகத்தில் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப, பாவ, புண்ணிய விளைவுகளை அனுபவிக்கும்படியாகச் செய்பவர்.

எனவே, மகாபரணி நாளில், எமனுடைய ஆளுகைக்கு உட்பட்ட, பிதுரர்கள், சத்கதி பெறுவதற்காக அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் பொழுது எமதர்மராஜன் மகிழ்ந்து, நம்முடைய முன்னோர்களுக்கு நற்கதி தருகின்றார். நமக்கும் நல்லருள் தருகின்றார். குறிப்பாக பரணி, மகம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் இந்த மகா பரணியை அனுஷ்டிக்க வேண்டும். சில ஆலயங்களில், அன்றைய தினம் எம தீபம் ஏற்றுவார்கள். அந்த ஆலயங்களுக்கு இயன்றால் சென்று முன்னோர்களை நினைத்து எம தீபம் ஏற்றலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்