SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

இக்கட்டிலிருந்து மீள்வது எப்படி?

2022-09-07@ 15:39:05

(நீதிமொழிகள் 6:1-23)

திருமறையில் நீதிமொழிகள் எனும் ஒரு நூல் உள்ளது. அந்நூலில், அன்றாட வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் நிறைய காணப்படுகிறது. மேலும், இந்நூலில் ஞானம் (Wisdom) என்பது பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது. நம் கூட சிறு குழந்தைகள் நாம் எதிர்பாராத விதத்தில் அவர்கள் பேச்சை கேட்கும் போது ‘‘என்ன ஞானமாய் இக்குழந்தை பேசுகிறது’’ என்று வியந்து பாராட்டு வோம். ஞானத்தை வெறும் ஏட்டுக் கல்வி மூலம் பெற்றுவிட முடியாது. அடிப்படையில் ஞானம் என்பது பல நல் தகவுகளின் வெளிப்பாடாக உள்ளது எனலாம்.
 
நீதிமொழிகள் நூலில் ‘‘ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்’’ (நீதிமொழிகள் 9:10) எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஞானம் எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கிறது. அதைக் கண்டு உணரும் ஆற்றல்தான் மனிதருக்குத் தேவைப்படுகிறது. நீதிமொழிகள் நூலில் இது மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது. பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது; பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது; நகர வாயிலிலிருந்து முழங்குகின்றது; (நீதிமொழிகள் 1:20) என்று கூறியிருக்கிறது.

மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ பல இக்கட்டுகளைச் சந்திக்க நேர்கிறது. ஒரு சிலர் இக்கட்டுகளிலிருந்து விரைவாக மீண்டு விடுகின்றனர். வேறு சிலர், சில இழப்புகளைச் சந்தித்த பின் மீண்டு வருகின்றனர். இன்னும் சிலர் அந்த இக்கட்டில் மீண்டு வர முடியாமல் அதிலே அமிழ்ந்தும் அழிந்தும் போகின்றனர். இவ்வாறு இக்கட்டுகளைச் சந்திப்பவருக்கு பல நேரங்களில் அவரது அறிவோ, பண பலமோ அல்லது ஆட்பலமோ உதவுவதில்லை. இது போன்ற கைவிடப்பட்ட சூழலில் ஞானம் தான் கைகொடுக்கிறது. இவ்வாறு இக்கட்டில் சிக்கித் தவிப்பவருக்கு நீதிமொழிகள் ஒரு எளியவழியைக் கூறுகிறது.

எல்லா நேரத்திலும் எல்லாரிடத்திலும் இவ்வழி வெற்றியைத் தரும் என்று கூற முடியாது. ஆனால், இவ்வழி செலவற்றது முயன்று பார்ப்பதில் தவறேதும் இல்லை. அதாவது, நீயாரிடம் சிக்கிக்கொண்டிருக்கின்றாயோ அவரிடமே காலதாமதம் செய்யாமல் நேரடியாகச் சென்று வருந்திக் கேட்பது ஆகும். நம்நாட்டிலும், இதற்கு நிகரான பழமொழி இன்றும் நமது வழக்கத்தில் இருந்து வருகிறது. அது யாதெனில், ‘‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதுமேல்” என்பதாகும்.

சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்குப் பல வழிகள் உண்டு. அதில் இதுவும் ஒரு வழி என்பது நம் கவனத்தில் இருப்பது நல்லது. நாம் பெரும்பாலான நேரங்களில் தயக்கத்தின் காரணமாகவோ, அச்சத்தின் காரணமாகவோ அல்லது நமக்கே உள்ள வீராப்பின் காரணமாகவோ நமது பிரச்னையை இவ்வாறு அணுகுவதில்லை. அதற்குப் பதில் வன்முறை, வழக்கு, நீதிமன்றம் எனப் பிரச்னையை வளர்த்துக் கொள்கிறோம். அல்லது மூன்றாம் நபரின் உதவியை நாடிச் செல்கிறோம். அவ்வாறின்றி நாமே நேரடியாக அணுகும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்விஷயத்தில் நீதிமொழிகள் வேறொன்றையும் நமக்கு வலியுறுத்துகிறது. அது என்னவென்றால் நாம் ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பதை முதல் நோக்கமாகக் கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் படுத்தாலும் எழுந்தாலும் அதே எண்ணம்தான் வரவேண்டும். அசட்டையுடனோ, மெத்தனமாகவோ இருந்துவிடக்கூடாது என்கிறது. (நீதிமொழிகள் 6:2-5). இவ்வாறு ஒரு இக்கட்டில் சிக்கி வாழ்க்கையை நடத்துவது நமக்குக் கவலையையும் (Anxiety), அச்சத்தையும் (Fear) ஏற்படுத்தும். நம்மைத் தவறான முடிவுகள் எடுக்கத் தூண்டும்.

இந்த ஞானப் பாரம்பரியத்தை (Wisdom Tradition) நன்கு அறிந்தவரான நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், தமது மலைப்பொழிவில் இவ்வாறு கூறியுள்ளார். ‘‘உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம்  ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்’’ (மத்தேயு 5: 25-27) என்றார்.

ஒரு பிரச்னை விரைவாகத் தீர்க்கப்படாவிட்டால், அது அடுக்கடுக்கான பிரச்னைகளைக் கொண்டு சேர்க்கும் என்பதால் அதை விரைவாக முடித்து அப்பிரச்னையிலிருந்து விரைவில் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ஏழைகளான தமது சீடர்களுக்கும், திரளாகக் கூடியிருந்த ஏழைகளுக்கும் இயேசு இந்த உரையை ஆற்றினார்.

இது ஏதோ கோழைத்தனம் போன்றும் தன்மானத்திற்கு இழுக்கு போன்றும் தோன்றும். இயேசுவின் இந்த அணுகுமுறையில் ஞானம் வெளிப்படுகிறது. ஏழைகளுக்கு பொருளாதார பலமோ, அதிகாரவர்க்கத்தின் ஆதரவோ சற்றும் இல்லாத சூழலில் தங்கள் உயிரையும். உடைமையையும் இழக்காமல் காக்க ஞானத்தை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதுதான் இயேசுவின் உரையில் இருக்கும் உண்மையாகும்.

அதே சமயம், அவர் தமது சீடர்களுக்கு ‘‘சிறுமந்தையே நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்’’ (லூக்கா 12:32) என்று துணிவூட்டவும் செய்கிறார்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்