SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

‘‘பிரம்படியும் பிட்டுத் திருவிழாவும்’’

2022-09-06@ 14:36:18

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மதுரையில் புட்டுத்திருவிழா 6-9-2022

மதுரை மாநகரம் வைகையின் வெள்ளப் பெருக்கில் அகப்பட்டு வருதலைக் கண்டு அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சர்களை அழைத்து, ‘‘நீங்கள் அனைவரும் சென்று வைகை நதிக்கரையினைக் கட்டிப் பெருகி வரும் வெள்ளத்தின் வேகத்தைத் தணித்து வாருங்கள்!’’ என்று கட்டளையிட்டான். உடனே அமைச்சர்கள் அரசனைத் தொழுது சென்றனர். வெவ்வேறு வகைப்பட்ட பல குடிகளையும், குறிப்பிட்டுப் பெயர்களை எழுதி எல்லையிட்டு அளந்து கோடுகிழித்து விட்டு நகர் முழுவதும் ‘‘அவரவர் பங்கை அடையுங்கள்’’ என்று பறையறிவித்து அழைத்தனர்.

உடனே அவ்வக் குடிகள் தம் கூலியாளை அனுப்பி தமக்கு அளந்து விட்ட பங்கை அடைக்க ஏற்பாடு செய்தனர். அவர்கள் மண்வெட்டி, கூடை, பசுந்தழை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு சென்று கரையை அடைக்கத் தொடங்கினர். அப்போது, மதுரை மாநகரின் தென் கீழ்த்திசையில் வளைந்த உடலையுடைய நூறு வயதான நரை மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் வந்தியம்மை. தாய் இல்லாதவர்களுக்கு அன்னை போன்றவள். சுவை தரும் பிட்டு விற்று வாழ்க்கை நடத்தி வந்தாள். சோமசுந்தரக் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். இத்தகைய வந்தியம்மை, தனக்கு அளந்து விடப்பட்ட பங்கினை அடைப்பதற்கு கூலியாள் கிடைக்காமல் மிகவும் வருந்தினாள்.

‘‘எனக்குக் கூலி ஆளே கிடைக்கவில்லையே! அரசன் தண்டிப்பானே! நான் என்ன செய்வேன்?’’ என்று வருந்தி உள்ளம் தடுமாறினாள். மதுரை நாயகனான சோமசுந்தரக் கடவுளை இறைஞ்சி வேண்டினாள். கண்ணீர் சொரிந்து நின்றாள். உடனே இறைவன் வந்தியம்மையின் துன்பம் நீக்கக் கருதி கூலியாள் போல் தோற்றத்துடன் சும்மாட்டின் மேல் கூடையுடனும், தோளின் மேல் மண் வெட்டியுடனும் வந்தார். வந்தியம்மையின் தெருவில் வந்து ‘‘யாருக்கேனும் வாருண்டோ?’’ என வேத மொழி போல கூறிக்கொண்டு வந்தியம்மையின் அருகில் வந்தார்.

உடனே வந்தி, அக்கூலியாளை அழைத்து, ‘‘ஐயா, எனக்கு அளந்து விடப்பட்ட கரையை அடைத்துத் தருகிறாயா?’’ என்று வினவினாள். அதைக் கேட்ட கூலியாளாய் வந்த இறைவர், ‘‘அடைத்துத் தருகிறேன் தாயே! எனக்குக் கொடுக்கும் கூலி யாது?’’ என்று கேட்டார். உடனே வந்தி, ‘‘ நான் விற்கும் பிட்டையே உனக்குக் கூலியாகத் தருகிறேன்’’ என்றாள். சோமசுந்தரக்கடவுள் அதற்கு உடன்பட்டார். பின், ‘‘அன்னையே! பெரும்பசியால் நான் இப்போது மிகவும் வருந்துகிறேன். அதனால் உதிர்ந்த பிட்டையெல்லாம் எனக்குத் தருவாயா. அதனைத் தின்று இளைப்பாறி விட்டுப் பின்னர் கரையைக் கட்டுகிறேன்.’’ என்றார் இறைவன்.

உடனே வந்தியம்மையும் உதிர்ந்த பிட்டினை எடுத்து, ‘‘இதனை உண்பாயாக!’’ என்று மிகுந்த அன்போடு கொடுத்தாள். ‘‘இது நன்றாய் இருக்கிறது!’’ என்று கூறி இறைவன் அன்புடன் உண்டார். பின்னர் கரையைக் கட்டப் புறப்பட்டுச் சென்றார். வைகைக் கரையினை அடைந்து ‘‘நான் வந்தியம்மைக்குக் கூலி ஆள்’’ என்று தம்மைக் கணக்கில் எழுதி வைத்துக் கொண்டார். உடனே சென்று கரையினை அடைக்கத் தொடங்கினார்.

மண்ணினை வெட்டுவார். கூடையில் போடுவார். அதனை முடிமேல் வைப்பார். அதிகபாரம் என்று அதைக் கீழே கொட்டுவார். இப்படியே பல தடவை செய்வார். பிறகு குறைவாக மண் எடுத்துச் செல்வார். பின்னர் விரைந்து செல்வது போல் சென்று ஏனோ தானோ வென்று கரையில் கொட்டுவார். வேலை செய்து களைத்தாற்போல ஓய்வு வேண்டி ஒரு மர நிழலை அடைவார். இடையில் வந்து வந்தியம்மையிடம் பிட்டை வாங்கி உண்பார். பின்னர் கரையை அடைக்க ஓடுவார். வெள்ளத்தில் நீந்துவார். மூழ்குவார், நீராடி மகிழ்வார். நீந்திச் ெசன்று வெகு தூரத்தில் முளைப்பார். மற்றவர்கள் வேலையும் கெடும் படியான காரியங்கள் பல செய்வார்.

கூலியாளாக வந்த சோமசுந்தரக் கூடவுள் இப்படிப் பல திருவிளையாடல்களப் புரிந்த வண்ணமிருந்தார்.அப்போது அடைபட்ட கரைகளையெல்லாம் வரிசையாக சரி பார்த்து வரும் மன்னனின் ஏவலர்கள் வந்தியம்மையின் பங்கு மட்டும் அடைபடாதிருப்பத்தை கண்டு வெகுண்டனர். உடனே, ‘‘வந்தியம்மைக்குக் கூலி ஆளாய் வந்தவன் யார்?’’ என்று வினவினர். கூலி ஆளான இறைவன் அடக்கத்தோடு அங்கே வந்து நின்றார். ‘‘ஏடா தம்பி! என்ன இது? மற்ற எல்லோரும் தங்கள் பங்கினையெல்லாம் அருமையாக அடைத்து விட்டனர்.

நீ இன்னமும் இந்தப் பங்கினை மட்டும் அடைக்காமல் சும்மா இருக்கிறாயே? அதற்குக் காரணம் என்ன?’’ என்று கோபத்தோடு கேட்டனர். அதற்குக் கூலி ஆளாய் வந்த இறைவன் ஏதும் பேசாமல் இருந்தார். என்ன கேட்டும் அவர் பதிலளிக்கவில்லை. உடனே ஏவலர்கள் அரசனிடம் சென்று இச்செய்தியனைக் கூறினர்.

உடனே அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சர்களோடு வைகை ஆற்றங்கரையை அடைந்தான். அடைபட்ட கரைகளை எல்லாம் கண்டு மகிழ்ந்தான். வந்தியம்மையின் கரை மட்டும் அடைபடாமல் அடுத்த கரையையும் இடித்துக் கொண்டு வெள்ளம் செல்வதைக் கண்டு மிகவும் கோபம் கொண்டான். உடனே, ‘‘இக்கரையினை அடைப்பவன் எங்கே போனான்?’’ என்று கேட்டார். அரசனின் ஏவலர், கூலியாளாக வந்த இறைவனின் கையைப் பற்றி இழுத்து வந்து, ‘‘இவன்தான் வந்தியம்மையின் கூலியாள்’’ என்றனர்.

உடனே அரிமர்த்தன பாண்டியன், அமைச்சர் கையிலிருந்த பிரம்பை வாங்கி, இறைவனது முதுகில் ஓங்கி வீசி அடித்தான். அடுத்தகணம் மின்னல் வெட்டுப் போல் வந்தியம்மையின் கூலி ஆளாக இருந்த சோமசுந்தரக் கடவுள் ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்டி விட்டு மாயமாக மறைந்தருளினார். உடைந்திருந்த கரை அடைக்கப்பட்டது. எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அரசன், இறைவனை அடித்த தழும்பு அவன் உடம்பிலும் பட்டது.

அவன் மனைவி, பிள்ளைகள், மந்திரிகள், வீரர்கள், குடிமக்கள், உலக உயிர்கள் என அனைத்தின் மீதும் பட்டது. தேவர்களின் மீதும் பட்டது. உலக மக்கள் அனைவரும் திடுக்கிட்டனர். கூலியாளாக வந்தவர் இறைவனே என்பதை அரசன் உணர்ந்தான். வணங்கினான் அப்போது சோமசுந்தரக்கடவுளின் திருவருள் ஆணையாலே வந்தியம்மையை சிவ கணத்தவர் சிவலோகத்திற்கு அழைத்தும் சென்றனர்.இதைப் பரஞ்சோதி முனிவர் தம்முடைய திருவிளையாடற்புராணத்தில் கூறுகிறார்;

‘‘கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொற் பிரம்பு வாங்கி
அண்டமு மளவி லாத வுயிர்களும் ஆகமாகக்
கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு
மண்டனை யுடைப்பிற் கொட்டி மறைந்தனனிறைந்த சோதி!’’
‘‘வருபுனல் பெருகப் பார்த்தேம் வந்திகைப் பிட்டு வாங்கிப்
பருகிவந் தானாய் மாறு பட்டன மண்போ கட்டுப்
பொருகரை யுயரச் செய்து போகியவ்வன்னை போல்வாள்
பெருகிய விடும்பை தீர்த்தெம் பேருலகு அடையச் செய்தேம்!’’


மாணிக்கவாசகப் பெருமானுக்காக சிவனருளால் வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீட்டுக்கு ஒருவர் வந்து ஆற்றின் கரையை உயர்த்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அரிமர்த்தன பாண்டியன் ஆணைப் பிறப்பித்தான். அப்போது மூதாட்டி வந்தியம்மையின் பொருட்டு, கூலி ஆளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து, மன்னனிடம் சிவபெருமான் பிரம்படி பட்டது சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்களில் ஒன்றாகும். பரமனின் முதுகில் விழுந்த அந்த பிரம்படியை உலகின் சகல உயிர்களும் உணர்ந்தன. மன்னனும் உணர்ந்தான். பிரம்படியின் வலியை மட்டுமல்ல, அன்புக்கு அடிபணிந்து அடியார்தம் நலம் போற்றும், அடி முடிகாண இயலாத அண்ணலின் அருட்கருணையையும்தான்!

அதை, இந்த கலியுகத்தில் உள்ள மாந்தரும் உணர்ந்து உயர்வடைய வேண்டும் என்பதற்கோர் அடையாளமாகத் திகழ்கிறது, அருள் மிகு பிட்டு சொக்கநாதர் திருக்கோயில்.
இத்திருக்கோயில் மதுரை, ஆரப்பாளையம், பிட்டுத் தோப்புப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பழமையான திருக்கோயிலின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது இங்கு அமைந்துள்ள ‘வந்தியம்மை’ சந்நதி. ஆலவாய் அண்ணலுக்குப் அன்புடன் பிட்டமுது அளித்த இந்த அம்மை வழிபடுவது அவ்வளவு விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள்.

சந்நதியின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகியர் நிற்க, திருவாசி பிரகாசிக்க வந்தியம்மை கையில் ஊன்று கோளுடன் நின்றவாறு காட்சி தருகிறாள். இந்த பழமையான திருக்கோயிலில் வருடந்தோறும் ஆவணி மாதம் பூராட நட்சத்திரத்தில் ‘பிட்டுத் திருவிழா’ வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பிட்டுத் திருவிழாவும், பிட்டுப் பிரசாதமும் இந்தப் பகுதியில் வெகுப்பிரசித்தம்.

சிவனருள் பெற்ற வந்தியம்மைக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால், திருமணம் மற்றும் குழந்தை வரம் உறுதியாக கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. மதுரை மீனாட்சியம்மையைத் தரிசிக்க வரும் பக்தர்கள், ஆரப்பாளையத்தில் உள்ள அருள்மிகு பிட்டு சொக்கநாதரையும், அம்பாளையும் தரிசிப்பதோடு வந்தியம்மையையும் தரிசித்து வழிபட்டு அம்மையின் ஆசியுடன் ஆண்டவனின் அருளையும் ஒரு சேரப் பெற்று உயர்வடையலாம்!

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்