SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாணுமாலயன் கோயில் அதிசய விநாயகர்கள்

2022-09-06@ 14:22:17

நன்றி குங்குமம் ஆன்மிகம்

-சுசீந்திரம்


கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் சுமார் 5.கி.மீ. தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் அமைந்துள்ளது. நாஞ்சில் நாட்டில் உள்ள செழிப்பான கிராமங்களில் சுசீந்திரமும் ஒன்று. சுசீந்திரம் கோயில் மூலவரைத் தாணுமாலயன் என்றே அழைக்கின்றனர். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அருள்பாலிக்கும் மும்மூர்த்திகளின் கோயில் இது என்றாலும், நடைமுறையில் சிவன் கோயிலாகவே கருதப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

இத்திருக்கோயில் பரந்த நிலப்பரப்பில் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. மிக உயர்ந்த ராஜகோபுரத்துடன் பல மண்டபங்களையும், பல கடவுளர்களின் சந்நதியையும் கொண்டிருக்கிறது. இந்தத் தாணுமாலயன் கோயிலில் உள்ள மூலவர்கள் மற்றும் உற்சவ விக்கிரகங்கள் எல்லாம் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என்று இங்குள்ள ஏராளமான கல்வெட்டுக்களிலிருந்து அறியமுடிகிறது. நீலகண்ட விநாயகர், இந்திர விநாயகர், மூடு கணபதி, சந்நதித் தெரு குலசேகரப் பிள்ளையார் ஆகியோர் கம்பீரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மிகப் பழமையான இவ்விநாயகர்களைப் பற்றி சுருக்கமாக அறிந்துகொள்வோமா?

நீலகண்ட விநாயகர்

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் வசந்த மண்டபத்திலிருந்து மேற்கே திருச்சந்நதி கொண்டு, நீலகண்ட விநாயகர் காட்சியளிக்கிறார். இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் கிழக்கே வசந்த மண்டபமும், வடக்கே செண்பக ராமன் மண்டபமும், தெற்கே வெட்ட வெளியும் உள்ளன. இக்கோயிலின் மேற்குச்சுவரையொட்டி உக்கிராணப்புரை உள்ளது. இக்கோயிலுக்கு வசந்த மண்டபம் வழியாகவும், தெற்கு வெளிப்பிராகாரத்திலிருந்து வெட்ட வெளிப்பகுதி வழியாகவும் வந்து செல்ல முடியும்.

இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோயில் கருவறை, முன் மண்டபம் என்ற அமைப்பைக் கொண்டிருக்கிறது. முன் மண்டபம் சுமார் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் உடையது. இந்த மண்டபத்திலிருந்து கருவறையில் இருக்கும் கணபதியை வழிபடலாம். இக்கருவறை மூல விக்கிரகத்தின் வடிவத்திற்கு ஏற்ற அமைப்புடையதாக இல்லை என்கிறார்கள். இந்த நீலகண்ட விநாயகர் கோயிலைக் கட்டியவர் சுசீந்திரம் ஊரை அடுத்த தெக்குமண் பகுதியைச் சார்ந்த புருசோத்தம் நீலகண்டரு என்பவராவார். இவர் தாணுமாலயன் கோயில் யோகக்காரர்களில் ஒருவர். இவர் பெயராலேயே இக்கோயில் நீலகண்டரு விநாயகர் கோயில் என்று வழங்கப்படுகிறது. வாய் மொழி மரபில் இதை ‘முக்குறுணி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.

முக்குறுணி என்பது 3-மரக்கால் அல்லது 24-படி அளவுடையது. இந்த அளவுடைய அரிசியால் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டையைத் தின்பவர் என்ற பெயரில் இந்த விநாயகர் இப்பெயரைப் பெற்றார். இதுபோன்று பெயர் பெற்ற வேறு விநாயகர் கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. இக்கோயில் பற்றி தெக்குமண் மடத்திலிருந்து பெற்ற ஒரு பனைஓலை ஆவணம் வழி, இக்கோயில் மலையாள ஆண்டு 763ல் ஆவணி மாதம் 14ஆம் தேதி (கி.பி.1587ல்) கட்டப்பட்டதாகக் கூறுகிறது. இதன் கட்டுமான அமைப்பும் கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்க முடிகிறது. இந்த நீலகண்ட விநாயகர் படிமம் சுமார் 180 செ.மீட்டர். அதிசயமாக, அமர்ந்த கோலமுடைய இந்தப் படிமத்திற்குப் பத்துக் கைகள் உள்ளன. இவற்றில் நான்கு கைகள் படிமத்தின் பின்பகுதியில் இருப்பதால், அவை வெளியில் சரியாகத் தெரியவில்லை.

வலது பக்கக் கைகளில் சக்கரம், திரிசூலம், அங்குசம், கரும்பு, பழம் ஆகியவை இருக்கின்றன. இக்கையில் ஒடிந்த தந்தம் உள்ளது. துதிக்கை ரத்தினக் கலசத்தை ஏந்தி இருக்கிறது. வலது பக்கம் கொம்பு ஒடிந்து உள்ளது. இந்த விநாயகர் வடிவம் பிற்காலச் சிற்பச் சாஸ்திர விதியின்படி அமைக்கப்பட்டது என்கிறார்கள். விநாயகரின் மடியில் தேவி இருக்கிறாள். இவளைச் சக்தி தேவி என்கிறார்கள். விநாயகரின் வலப்புறக் கைகளில் ஒன்று தேவியை அணைத்திருக்கிறது. சக்தியின் இடதுகையில் தாமரை மலர் உள்ளது.

இந்த மூலவரான விநாயகப் பெருமானின் கால்பாகத்திற்கு அருகில் 30 செ.மீட்டர் உயர முடைய மற்றொரு விநாயகர் கல்சிற்பம் உள்ளது. இது வேறு எங்கோ இருந்து இங்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த விநாயகர் சிற்பத்திற்கும் நான்கு கைகள் உள்ளன. இவற்றின் வலப்புறம் பின்கையில் அங்குசமும், இடப்பக்கப் பின்கை இருக்கிறது. முன் இடதுகையில் மோதகம் உள்ளது. வித்தியாசமாக இக்கோயிலில் இரண்டு மூஷிக வாகனங்கள் உள்ளன.

இந்திர விநாயகர் கோயில்

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் உட்புற வளாகத்தில், கிழக்கு வௌியிடத்தில் சித்திர சனபக்கருகில், கோபுரத்தின் வடமேற்கில், பெரிய கோயிலின் ஈசான் திசையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. இந்திர விநாயகர் கோயில். இதன் கிழக்கே கோயில் கிணறு உள்ளது. இந்த இந்திர விநாயகர் கோயில், சுசீந்திரம் கோயில் தலபுராணத்துடன் தொடர்புடையது.

கௌதம முனிவரின் மனைவி அகலிகையைச் சூழ்ச்சி செய்து பங்கப்படுத்திய இந்திரன், கௌதமரால் சாபம் பெற்றான். பின்னர் தன் சாபம் தீர, விமோசனம் பெற சுடு நெய்யில் கையை விட்டு தூய்மையை திரூபித்தான். அதன் பின் இந்த விநாயகரை வழிபட்டுப் புனிதம் பெற்றான் என்பது சுசீந்திர தலபுராணம் கூறுவது. இந்திரன் வழிபட்ட விநாயகர் என்பதால் இவர் ‘இந்திர விநாயகர்’ எனப்பட்டார்.

இந்திரன், இந்த விநாயகர் கோயிலின் அருகே உள்ள நீராழியில் முழுகித் தூய்மை பெற்ற பெண், விநாயகரை வழிபடுவான் பின் வடக்குக் கருவறையில் உள்ள சிவபெருமானுக்கு அர்த்த சாம பூஜை செய்து வழிபடுவான் என்பது ஐதீகம்.

ஆரம்பத்தில் இக்கோயிலின் கருவறையும், முன் மண்டபமும் மட்டும்தான் இருந்தன. இப்போது இதன் முன்பு கான்கிரீட்டால் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் விமானமும் புதுப்பிக்கப்பட்டு மொத்த அமைப்பும் மாறியுள்ளது. இக்கோயில் 17-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இக்கோயிலில்தான் குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரிகள், இந்தக் கோயிலின் அருகில் உள்ள நீராழியில் குளித்து விட்டு, வேறு உடை மாற்றிக் கொண்டு இந்திர விநாயகரை வணங்கிய பின்பே செண்பகராமன் மண்டபத்துக்குச் செல்வார்கள் என்னும் செய்திகள் கி.பி.1627-ம் ஆண்டு ஆவணம் குறிப்பிடுகிறது. இதனால் இக்கோயில் கி.பி.17ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியலாம். இக்கோயில் கருவறையில் உள்ள கல் சிற்பம் கோயில் உள்பிராகாரத்தில் இருக்கும் ‘மூடுகணபதியின்’ வடிவத்தை ஒத்துக் காணப்படுகிறது.

இதனால், இது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த விநாயகரின் முன்னே மூஷிக வாகனம் இல்லை. கருவறையின் எதிரே நந்தியின் சிற்பமும், அருகே யானையின் சிற்பமும் உள்ளன. நந்தி விநாயகருக்குத் தொடர்பற்றது. யானை சிற்பம் இந்திரனை நினைவுப்படுத்துகிறது. எனவே இவற்றை இவ்வாலயத்தின் பழமையை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

ஆதிமூல கணபதி கோயில்

சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில் உட்பிராகாரத்தில் மூலகணபதி கோயில் வடக்கேடம் மற்றும் தெக்கேடம் கருவறைகளின் நடுவில் உள்ளது. இதற்கு வடக்கேடம் பிராகார வாசல் வழியாகவும் தெக்கேடம் உட்பிராகார வாசல் வழியாகவும் செல்லலாம். நடுப்பிராகாரத்தில் துர்க்கை அம்மனுக்கும் சங்கரநாராயணருக்கும் நடுவில் வடக்கு பார்த்து இக்கோயில் இருக்கிறது.

இக்கோயில் மிகச்சிறியது. இந்தக் கணபதி `பிரம்மரூப கணபதி’ எனப்படுகிறார். மகா விஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்கும் நடுவில் இவர் இருக்கிறார். மும்மூர்த்திகளில் பிரம்மாவைக் கணபதியாகக் கொள்ளுவது மரபு. பிரம்மாவுக்குப் பொதுவாக எங்கும் கோயில் இருப்பதில்லை.

ஆதலால், இந்த கணபதியை பிரம்மாவுக்குப் பதிலாக இங்கே பிரதிஷ்டை செய்திருக்கலாம். அடிமுடி காணமுடியாத லிங்கோத்பவர் கதையுடன் தொடர்புடைய பிரம்மாவை இங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆதிகாலத்திலேயே வந்திருக்கலாம்.

ஆலயத்தின் பழைய ஆவணங்களில் மூலகணபதி, பிரம்மரூப விநாயகர் என உள்ளது. இப்படி கணபதியைப் பிரம்மனுடன் இணைப்பதை ஐத்ரேய பிரமாணம் வழியில் பிற்காலத்தில் தோன்றிய புராணக்கதைகள் மேற்கோள் காட்டுகின்றன. இந்த கணபதி வடிவத்தை இருதெய்வ இணைப்புத் தெய்வமாகவும் கருத்தில் கொள்ளலாம்.

இந்த மூலகணபதியின் வடிவம் மிகவும் பழமையானது இதன் துதிக்கை சப்பையாக இருக்கிறது. இந்த கணபதிக்கு மூஷிக வாகனமும் இல்லை. இந்த அமைப்பே இக்கணபதி படிமம் மிகவும் பழமையானது என்று உணர்த்துகின்றது. இந்த மூலகணபதி படிமத்து நான்கு திருக்கரங்கள் உள்ளன. இவரது பின்னிரு கைகளில் நெற்கதிரும் மோதகமும் வைத்துக் கொண்டிருக்கிறார். முன் இடதுகை காலின் மீது பதிந்துள்ளது. இவர், கிரீடா மகுடம் உடையவராக இருக்கிறார்.

இக்கணபதி கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. இவரை மூடுகணபதி என்றும் கூறுவர். விநாயகர் சதுர்த்தியன்று இந்த கணபதி படிமத்தைக் நிறையக் கொழுக்கட்டைகளைக் கொண்டு இவரை முழுகும்படி மூடி வைத்துவிடுவார்களாம். இப்படிச் செய்வது மூடு கொழுக்கட்டை எனப்படும். இதனால் இவரது திருநாமம் ‘மூடு கணபதி’ என்றாயிற்று. ஆய்வாளர்கள் இதனை மறுத்து மூல கணபதி என்பதே மூடு கணபதி ஆயிற்று என்று கூறுகிறார்கள். எப்படியோ ‘மூடு கணபதி’ என்ற திருநாமம் கொண்டே அருளாட்சி புரிந்து வருகிறார். இந்த ஆதி மூல கணபதி!

சந்நதித் தெரு குலசேகரப் பிள்ளையார் கோயில்:

சுசீந்திரம் சந்நதித் தெருவில் வடக்குப் பகுதியில் உள்ள சிறிய பிள்ளையார் கோயில் மிகவும் பழமையானது. தற்போது பழைய வடிவத்தை மறைத்துக் கொண்டு புதுப்பொலிவுடன் இருக்கிறது. இத்திருக்கோயில் ‘குலசேகரப் பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது சிறிய கருவறை மண்டபமும், கோபுரமும் சுற்றுச்சுவரும் கொண்ட இக்கோயில் பற்றிய அறிய பழமையான ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது.

கி.பி. 1605-ஆம் ஆண்டில் உள்ள இக்கல்வெட்டு, இந்த குலசேகரப் பிள்ளையார் கோயிலைச் சுசீந்திரம் ஊரைச் சேர்ந்த தாணுமாலயன் கோயில் யோகக்காரராகிய புத்தில்லம் சேந்தன் நம்பூதிரி என்பவர் கட்டியதாகக் கூறுகிறது. இக்கோயிலில் தினப்படி அமுது பூஜை செய்யவும் உற்சவங்கள் நடத்தவும் இந்த சேந்தன் நம்பூதிரி குறுங்குளம் என்ற கிராமத்தை ஒட்டிய இடத்தில் ஒரு வயல் நிபந்தமாகக் கொடுத்திருக்கிறார். மேலும், இக்கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே நாணம்பி என்ற மற்றொரு நம்பூதிரியும் இக்கோயில் பணிக்கு உதவியிருக்கிறார். இத்திருக்கோயில் விஜயநகரை ஆட்சிபுரிந்த மன்னர்களின் படையெடுப்புக் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்