SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-09-03@ 16:37:19

3-9-2022 - சனி - குலச்சிறை நாயனார் குருபூஜை

சிவத்தொண்டு என்பது சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டு. ‘‘கூடும் அன்பினில் கும்பிடல் அன்றி வீடும் வேண்டா” என்று சிவனடியார்களைப் பற்றிச் சொல்லுவார்கள். சிவத்தொண்டு என்ற தவத் தொண்டு, மன நிலையில் இருந்த ஒரு அடியார்தான் குலச்சிறையார். பாண்டியநாட்டில், மண மேல்குடி என்ற ஊரில் அவதரித்தவர். பெருநம்பி என்று போற்றப்பட்டவர். சிவனடியார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உபசாரம் செய்து அதுவே சிவத்தொண்டு என்று மன நிறைவு காண்பவர்.

நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதல் அமைச் சராக  இருந்தார். மன்னன் சமண நெறியில் இருந்தாலும், தான் வழிவழியாகப்  பின்பற்றி வந்த சைவ நெறியில் இருந்து வழுவாமல் இருந்தார். சமயம் வருகின்ற பொழுது மன்னனையும் மாற்றவேண்டும் என்று தினசரி ஆலவாய் அண்ணலிடம் பிரார்த்தனை செய்வார்.

ஒருமுறை திருஞானசம்பந்தர் திருமறைக்காடு என்ற ஊரில் தங்கி இருப்பதை அறிந்த குலச்சிறை நாயனார், அவரைச் சென்று பணிந்து மகிழ்ந்தார். பாண்டிய மன்னனின் துணைவியான பாண்டிமாதேவியிடம் சொல்லி, அவரை பாண்டிய நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்று விரும்பினார். அப்படி வந்த பொழுது, அவருக்குக் கடுமையான பல சோதனைகள் ஏற்பட்டன. சமணர்கள் எதிர்த்து வாது புரிந்தனர்.

சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைத்தனர். இத்தனையும் தாண்டி அவர் பாண்டிய நாட்டில் மன்னனையும் மாற்றி சைவத்தையும் பரப்பினார். அதற்கு துணைபுரிந்தவர் குலச்சிறையார். கடுமையான சோதனைகளுக்கு நடுவிலே பாண்டிய நாட்டில் சைவ நெறியைப் பரப்பியவர் என்பதால், இவருக்கு நாயன்மார் அந்தஸ்து கிடைத்தது. இன்று அவருடைய குருபூஜை தினம். ஆவணி மாதம் அனுஷ நட்சத்திரம்.

4-9-2022 - ஞாயிறு - ஜேஷ்டா விரதம்

சிலர் வந்தால் அழகாக இருக்கும். சிலர் சென்றால் அழகாக இருக்கும். வந்தால் அழகாக இருக்கும் என்பது மகாலட்சுமியைக் குறிப்பது. சென்றால் அழகாக இருக்கும் என்பது மகாலட்சுமியின் மூத்த சகோதரி (மூத்த தேவியான) ஜேஷ்டா தேவியைக் குறிப்பது. இந்த ஜேஷ்டா தேவிக்கு ஒரு விரதம் உண்டு. அது ஜேஷ்டாவிரதம் என்று வழங்கப்படுகிறது.

இந்த தேவியை நாம் மூதேவி என்று அழைக்கிறோம். உண்மையில் அந்தப் பெயர் பொருந்தாது. மூத்த தேவி அதாவது முதல் தேவி என்பதைத்தான் ஜேஷ்டாதேவி என்று சொல்வார்கள். தசமஹா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில் ஒரு தேவி வணங்கப்படுகிறார். ஜேஷ்டா தேவியின் அமைப்பு குறித்து லிங்க புராணத்தில் விவரங்கள் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் ஜேஷ்டாதேவி வழிபாடு பிரமாதமாக இருந்தது.

வடமாவட்ட சிவன் கோயில்களில் ஜேஷ்டாதேவி உருவங்களை புடை சிற்பங்களாகக் காணலாம். இந்த வழிபாடு செல்வ வளத்தைப் பெருக்குவதோடு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில் ஜேஷ்டாதேவி, லலிதா பரமேஸ்வரி என்ற பெயரில் காட்சி தருகின்றார்.

நல்ல நிம்மதியும் தூக்கமும் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் ஜேஷ்டா தேவியை வணங்க வேண்டும். “எங்களை நீ பிடிக்காதே” என்று மூத்த தேவியை வணங்கும் விரதம் இது. பொதுவாகவே அஷ்டமி திதியில் கடைபிடிப்பார்கள். இன்று அஷ்டமி.

5-9-2022 - திங்கள் - குங்கிலியக்கலய நாயனார் குருபூஜை

காலசம்ஹார மூர்த்தி அருள் கொடுக்கும் தலம் திருக்கடவூர். அன்னை அபிராமி காட்சிதரும் தலமும் அதுவே. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. மறலியை உதைத்து மார்க்கண்டேயனின் ஆயுளைக் காத்த தலம் என்பதால் இத்தலத்தில் ஆயுள் தோஷம் நீங்கவும், அன்னை அபிராமியின் அருள் பெறவும் பலரும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

சாந்தி ஹோமங்கள் செய்து கொள்கின்றனர். அங்கே அவதரித்தவர் குங்கிலியக்கலய நாயனார். எளிமையாக இருந்தாலும், அதை வலிமையாகவும் வைராக்கியத்துடன் செய்வதுதான் சிவத்தொண்டு எனும் அருந்தொண்டு. குங்கிலியம் எனும் நறுமணப் பொருள் கொண்டு தூபம் இடும் திருப்பணியை தினசரி இறைவனுக்கு செய்து வந்ததால் இவருடைய இயற் பெயர் மறைந்து குங்கிலியக்கலய நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

கோயில் முழுக்க வாசனைப்பொருட்களோடு குங்கிலியம் கலந்து தூப மிட்டு வந்ததால் பெரும்பொருள் தேவைப்பட்டது. தன்னுடைய நிலங்களையும் மற்ற பொருட்களையும் விற்று இடைவிடாது திருப்பணியைச் செய்து வந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவருடைய மனைவி தன்னுடைய மாங்கல்யத்தைத் தந்து, இதனை விற்று உணவுப் பொருள்களைக் கொண்டு வருக என்று சொன்னார்.

 அப்பொழுது, வணிகன் ஒருவன் வாசனையுள்ள குங்கிலிய மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தான். இந்த குங்கிலியப் பொதிகளை வாங்கினால் பல நாட்கள் இறைவனுக்குத் தூபம் போடலாமே என்று மகிழ்ந்து, உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வைத்திருந்த தாலிக்கொடியை தந்து, குங்கிலியப் பொதிகளை சுமந்து வீட்டில் சேமித்து வைத்தார்.

இறைவன் தொண்டு தடைப்படவில்லையே என்ற மகிழ்ச்சி இருந்தாலும், வயிற்றில் பசி வாட்டியது. ஆயினும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஈரத் துணியை வயிற்றில் போட்டுக் கொண்டு சிவ சிந்தனையுடன் உறங்கினார். இவருடைய வைராக்கியத்தைக் கண்ட இறைவனார், குபேரனை அழைத்து பொற்குவியலை அவருடைய வீட்டில் நிறைக்குமாறு கட்டளையிட்டார். அந்த செல்வத்தை கொண்டு வறுமை நீங்கி தொடர்ந்து திருப்பணியை செய்து வந்தார்.

 அந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தது. சிவலிங்கம் சாய்ந்ததால் அரசன் மனம் கலங்கினான். தன்னுடைய சகல படைகளையும் வைத்துக்கொண்டு, கயிறு கட்டி சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றான். ஆனால், அது நடக்கவில்லை. இதனை அறிந்த குங்கிலியக் கலயனார் தானே நேரில் சென்று சிவலிங்கத் திரு மேனியைக் கட்டிய கயிற்றை தன் கழுத்தில் கட்டி மிகவும் சிரமப்பட்டு இழுத்தார். அடியாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன், அதற்கு மேலும் சாய்ந்திருக்காமல் நிமிர்ந்தார்.

இதனைக் கண்டு அரசன் மகிழ்ச்சி அடைந்தான். நாயனார் அங்கேயே சில நாட்கள் தங்கி திருப்பணியாற்றி விட்டு திருக்கடவூர் திரும்பினார். நாயனாரின் சிவத்தொண்டுவை அறிந்து, அப்பரும், ஞானசம்பந்தரும் இத்தலத்திற்கு எழுந்தருளினர். அவர்களை நன்கு உபசரித்தார். இப்படி பலவாறு சிவனுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்து, நிறைவாக சிவனடி அடைந்தார். அவருடைய குருபூஜை நாள் ஆவணி மாதம் மூல நட்சத்திரம் இன்று.

6-9-2022 - செவ்வாய் - விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி


வாமன அவதாரத்தை ஒட்டி வருகின்ற ஏகாதசி விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி. இந்த ஏகாதசி திதியில்தான், பகவான் வாமன அவதாரம் எடுத்தார் என்பதால் அவசியம் எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டிய ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் என்பது மிகவும் எளிமையான விரதம். பிரத்தியேகமாக மன் நாராயணனை வழிபடவேண்டிய விரதம். எங்கும் நிறைந்து இருக்கக்கூடிய மஹாவிஷ்ணுவின் பூரணமான அனுக்கிரகத்தை பெற்றுத் தரும் இந்த விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆடவர்கள், பெண்கள், பிரம்மச்சாரிகள், சம்சாரிகள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம்.

இதற்கு பத்ம ஏகாதேசி என்றும் ஒரு பெயர் உண்டு. பூராட நட்சத்திரத்தில் வருவதால் அவசியம் ஸ்ரீ மஹாலட்சுமித் தாயாரையும் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். சகல பாவங்களையும் தோஷங்களையும் தூளாக்கும் ஏகாதசி விரதம் இது. ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்கி, ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்குப் படைத்துவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம், துவாதசி பாரணையோடுதான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றிகளையும் கொடுப்பது என்பதால், விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

7-9-2022 - புதன் - வாமன ஜெயந்தி, ஸ்ரீகுருபகவான் ஜெயந்தி,

ஸ்ரீ புவனேஸ்வரி ஜெயந்தி இன்று திருமாலுக்குரிய புதன்கிழமை. அவருடைய அம்சமாக சூரியனுக் குரிய உத்திராட நட்சத்திரம். வாமன அவதாரம் நிகழ்ந்த நாள். சகல விஷ்ணு ஆலயங்களிலும், குறிப்பாக உலகளந்த பெருமாள் சந்நதி இருக்கக்கூடிய ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். வாமன அவதாரத்தை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும். இழந்த பொருள் எதுவாயினும் திரும்பக் கிடைக்கும்.

இன்று குருபகவான் ஜெயந்தி. குரு பகவான் நவகிரகங்களில் பூரண சுபராகக் கருதப்படுகிறார். ஜாதகத்தின் சகல தோஷங்களையும் குரு பார்வை நீக்கிவிடும். ‘‘குரு பார்க்க கோடி புண்ணியம்” என்று ஜோதிடத்தில் சொல்வார்கள். குருஜெயந்தியன்று இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.

1) அருகாமையில் உள்ள ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட வேண்டும்.

குருவே தெய்வம் என்பதால் பகவானை குருவாக நினைத்து வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை சுண்டல் செய்து நிவேதிக்க வேண்டும். மஞ்சள் வஸ்திரத்தை அணிவித்து வணங்க வேண்டும்.
 
2) தங்களுடைய ஆசிரியர்களையும், தங்களுக்கு நல்ல ஆன்மிக ஆலோசனை சொல்பவர்கள் அல்லது தங்களுக்கு மந்திர தீட்சை தந்த குருவை அவசியம் சென்று வணங்கி ஆசிகள் பெற வேண்டும்.

இன்று ஸ்ரீபுவனேஸ்வரி ஜெயந்தி என்பதால் அம்பாளை வணங்கி அருள் பெற வேண்டும்.

தொகுப்பு : சங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்