SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

வலம் வருவோம் விநாயகரை...

2022-09-02@ 16:13:27

விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை பக்தர்களுக்கு அள்ளி கொடுப்பவர். விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் அவதரித்த தினத்தைதான் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடிவருகிறோம். அன்றைய தினம் நாம் புதிய விநாயகர் திருவுருவத்தை மண்ணிலோ, மஞ்சளிலோ அல்லது பிற மங்கலப் பொருட்களிலோ செய்து வழிபாடு செய்தால் மிகுந்த பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

உருவாய் அருவாய் திருவாய் விளங்குபவன் இறைவன். அனைத்துயிர்களிலும் அவனே குடிகொண்டுள்ளான். எனவே அவனது திருக்கோலங்களை எண்ணுவது சாத்தியமற்றது. இருந்தபோதும் மனிதன் இறைவனை மூர்த்தங்களில் வடித்து வணங்குவதில் பெரிதும் நிறைவடைகிறான். அந்த விதத்தில் விநாயகரைப் பல ஆலயங்களில் பலவிதமாக வழிபடுகின்றனர். அவற்றில் சில ஆலயங்கள் குறித்துக் நாம் காண்போம்.

விநாயகரின் 32 வடிவங்கள்:

1) பால கணபதி, 2) தருண கணபதி, 3) பக்தி கணபதி, 4) வீர கணபதி, 5) சக்தி கணபதி, 6) துவிஜ கணபதி, 7) சித்தி கணபதி, 8) உச்சிஷ்ட கணபதி, 9) விக்ன கணபதி, 10) க்ஷிப்ர கணபதி, 11) ஹேரம்ப கணபதி, 12) லட்சுமி கணபதி, 13) மகா கணபதி, 14) விஜய கணபதி, 15) நிருத்த கணபதி, 16) ஊர்த்துவ கணபதி, 17) ஏகாட்சர கணபதி, 18) வர கணபதி, 19) த்ரயக்ஷர கணபதி, 20) சிப்ரப்ரசாத கணபதி, 21) ஹரித்ரா கணபதி, 22) ஏகதந்த கணபதி, 23) சிருஷ்டி கணபதி, 24) உத்தண்ட கணபதி, 25) ருணமோசன கணபதி, 26) துண்டி கணபதி, 27) துவிமுக கணபதி, 28) மும்முக கணபதி, 29) சிங்க கணபதி, 30) யோக கணபதி, 31) துர்க்கா கணபதி, 32) சங்கடஹர கணபதி.

இந்த 32 வடிவங்களில், முக்கியமானவர் ருண மோசன கணபதி. இவரின் மற்றொரு பெயர் ரண மோசனர் அல்லது ரிண மோசனர். நான்கு கரங்களுடன் வெள்ளை நிறத்தினைக் கொண்ட இவரைத் தொழுது வர, கடன் தொல்லைகளிலிருந்தும், இதர துன்பங்களிலிருந்தும் நம்மைக் காத்தருள்வார்.

பிள்ளையார்பட்டி

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக்கோயில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோயில், மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப் படுகிறது. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். கற்பகவிநாயகரின் கையில் சிவலிங்கம் உள்ளது. தியானநிலையில் இவர் வீற்றிருக்கிறார்.

மலைக்கோட்டை

திருச்சி என்றாலே மலைக்கோட்டைதான் முதலில் நினைவுக்கு வரும். இந்தக்கோட்டை 6ம் நூற்றாண்டைச்சேர்ந்த குணபரன் என்ற மகேந்திர பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகரை உச்சிப்பிள்ளையார் என்கின்றனர். ராமாயண காலத்தில், விபீஷணனுக்காக மலை மேல் இந்த விநாயகர் அமர்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

உடுமலைப்பேட்டை

சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது. இங்குள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் காசிவிஸ்வநாதர், பிரம்மன், சவுரிராஜப்பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜகம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் உள்ளது. முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம், அரசு ஆகியன இங்குள்ளன. கிருத்திகையில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது சிறப்பு.

சேலம்

400 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபனம் செய்யப்பட்டது சேலம் ராஜகணபதி கோயில். கலியுகக் கண்கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட்செல்வம் சேரும். தீராத நோய் தீரும். இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவதால் ராஜ கணபதி என அழைக்கப்படுகிறார்.

கோவை

கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். யோகா பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இவரை வணங்கி வரலாம். யோக வளம், தியானசக்தி, ஆன்மிக அறிவு ஆகியவற்றைப் பெறவும். நாடு நலம் பெற வேண்டி யோக நிஷ்டை விநாயகரை பிரதிஷ்டை செய்ய இப்பகுதி மக்கள் நினைத்தனர். மகான்களின் அறிவுரைப்படியும், சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் சிலையை உருவாக்கினர்.

அமைதியான சூழலில் கோயில் அமைக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் போன்ற யோகநிலையில் இவர் காட்சியளிக்கிறார். இளஞ்சூரியனின் நிறத்தோடு, வலது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசகயிறும் ஏந்தியுள்ளார். தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலிப்பவர்.

நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சந்நதியும், உள்ளே புற்று, ராகு சிலையும் உள்ளது. உட்பிரகாரத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.

மதுரை

மதுரையில் உள்ளது மொட்டை விநாயகர் கோயில். தனது காவலுக்காக பார்வதி தேவியால் படைக்கப்பட்டவர் கணபதி. பார்வதி தேவியைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கணபதியின் தலையை சிவன் வெட்டினார். இதை உணர்த்தும் விதமாக இங்குள்ள விநாயகர், தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருள்பாலிக்கிறார். டாக்டர்கள் சிலர், ஆபரேஷன் செய்யும் முன்பு இவருக்கு தேங்காய் காணிக்கை செலுத்திவிட்டு பணியைத் துவக்குகின்றனர். புதிதாக ஏதேனும் செயலைத் தொடங்கும்போது சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது. வியாபாரிகள் தினமும் கடைதிறக்கும் முன்பு சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர்.

குடந்தை

கும்பகோணத்தில் உள்ளது கரும்பாயிரம் பிள்ளையார். வணிகர் ஒருவர் மாட்டு வண்டியில் கரும்புக்கட்டு ஏற்றி வந்தார். அவரிடம் சிறுவன் உருவில் வந்த விநாயகர் கரும்பு கேட்டார். வணிகர் தர மறுத்தார். எனவே கரும்புகளை நாணல் குச்சிகளாக மாற்றி திருவிளையாடல் புரிந்தார். கலங்கி நின்ற வணிகரிடம் தர்மசிந்தனை பற்றி அறிவுறுத்தினார். வணிகர் விநாயகரிடம் மன்னிப்புக்கேட்டார். பின் நாணல் குச்சிகளை மறுபடியும் கரும்பாக மாற்றி அதிசயம் நிகழ்த்தினார். இதன் காரணமாக இவர் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையான இவர் பக்தர்களின் வாழ்வை இனிப்பாக மாற்றிடுவார்.

புதுச்சேரி

புதுச்சேரி மணக்குள விநாயகர் அகில இந்திய அளவில் விநாயகர் கோயிலின் விமானம் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட கோயில் இது. விநாயகர் கோயில்களில் வேறு எங்குமே இல்லாத வகையில் பள்ளியறையும் இங்குள்ளது. தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். விநாயகருக்கு இத்தலத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

சித்தி புத்தி அம்மைகள் துணைவியராக உள்ளனர். மூலவரான மணக்குளத்து விநாயகரின் பீடம், கிணறு அல்லது குளத்தின் மீது இருப்பதாகச் சொல்கின்றனர். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில், தீர்த்தம் உள்ளது. இதன் ஆழத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது.

திருநாரையூர்

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் (கடலூர் மாவட்டம்) சிவன் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி பூஜை செய்ய கோயிலுக்கு சென்றார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார்.

பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டிக்கொண்டு அழுதார். உண்மையான பக்தியை கண்டு மகிழ்ந்த பிள்ளையார், அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து, பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான்.

பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி, பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே `இரட்டை மணிமாலை’ என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொல்லாப் பிள்ளையார் எனப்பட்டார். `பொல்லா’ என்றால் செதுக்கப்படாத என்பது பொருள்.

சந்திர காந்தம் விநாயகர்

ராமநாதபுரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கிடைத்த கல்லை, திருவிதாங்கூர் மன்னர் வீரகேரளவர்மா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் ஒரு அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். தற்போது ஒன்றரை அடி உயரமுள்ள இந்த விநாயகர், ஆரம்பத்தில் அரை அடி அளவே இருந்ததாகச் சொல்கிறார்கள். இவரை நிறம் மாறும் விநாயகர் என்கின்றனர்.

தை முதல் ஆனி வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண காலத்தில் கறுப்பு நிறமாகவும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து சிறிது சிறிதாக நிறம் மாறி முழுமையாகக் கறுப்பாகிறது. இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி (சிலை) உருவாக்கப்பட்ட கல் சந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்கிறார்கள்.

ஆறுமுகமங்கலம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் விநாயகருக்கென தனிக்கோயில் உள்ளது. இவர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். விநாயகர் கோயில்களில் கொடிமரம் உள்ள கோயில் இது. தேர்த்திருவிழாவும் நடத்தப்படும். கி.மு.4-ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான்.

அதில் ஒருவர் மட்டும் குறைய, அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்தார் விநாயகர். இதன் காரணமாக, இந்த விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார். ஆதிசங்கரர், இத்தலத்து விநாயகரை வணங்கிய பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் பாடினார்.

உப்பூர்

சூரியன் வழிபட்ட ஸ்தலமாகும் உப்பூர் விநாயகர். பாண்டிய மன்னர்கள் காலத்திற்கு பிறகு ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்கள் அமைத்த உப்பூர், வெயிலுகந்த விநாயகர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தக்கோயிலைக் கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் (ஆடி - மார்கழி) தெற்குப் பகுதியிலும், உத்தராயண காலங்களில் (தை - ஆனி) வடக்குப் பக்கமாகவும் சூரியஒளி படுகிறது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் இந்த ஊருக்கு உள்ளன.

பனவாசி

பெங்களூரிலிருந்து 374 கி.மீ. தொலைவில் உள்ள பனவாசி எனும் ஊரில் உள்ள மதுகேஸ்வரர் எனும் சிவாலயத்தில் அர்த்த விநாயகர் என்ற திருநாமத்துடன் விநாயகர் அமைந்துள்ளார். காசிக்கு நிகராக போற்றப்படும் இத்தலத்தில் இருப்பதா, அல்லது காசியில் இருப்பதா என விநாயகருக்கே குழப்பம் வந்துவிட்டதாம். இதனால் தன்னுடைய அம்சத்தை இரண்டாக்கி ஒரு வடிவாக கர்நாடகாவிலும் மீதி வடிவாக காசியிலும் இருப்பதாக கூறுகிறார்கள்.

பவானி

தமிழகத்தில் ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் விநாயகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆற்றில் நீராடி ஆனை முகனை வணங்கிடும் ஆனந்தமே தனி. உடலும் உள்ளமும் குளிரும் அற்புத அனுபவம் அது. அத்தகைய திருக்கோயில்களுள் ஒன்று, ஈரோடு மாவட்டம் பவானி நதிக்கரையில் உள்ள வரசித்திவிநாயகர் ஆலயம். மிகுந்த வரப்பிரசாதியான இவரை அனுதினமும் ஆராதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

சுமார் ஐந்தடி உயரமுள்ள திருமேனியராக கம்பீரமாகக் காட்சிதரும் கணபதியை பார்க்கப் பார்க்க பரவசமும் தடைகள் எல்லாம் அப்போதே நீங்கி விட்ட ஆனந்தமும் ஒரு சேரக் கிடைக்கிறது. ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் கரையில் வீற்றிருக்கிறார் இந்த வரசித்திவிநாயகர்.

செதலபதி

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் செதலபதி முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சந்நதியில் இருக்கிறார். பார்வதியின் மூலம் பிறந்த விநாயகர், அவளது சக்திலோகத்திற்குள் சிவனையே அனுமதிக்க மறுத்தார்.

அப்போது கடும் போர் மூண்டதில் விநாயகரின் மனிதத்தலை துண்டிக்கப்பட்டது. பார்வதி இதனை ஆட்சேபிக்கவே, அவருக்கு யானைத்தலை கொடுத்து உயிர்ப்பித்தார் சிவன். எனவே, இந்த விநாயகரை ஆதி விநாயகர் என்கின்றனர். இவரது சந்நதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்பிக்கை.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்