SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணாமலையாரும் அரிய தகவல்களும்

2022-09-01@ 17:02:12

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* சூரியனின் கிரிவலம்

உத்தராயணம் - தட்சிணாயணம் எனும் புண்ணிய காலங்களில், சூரியனுடைய பாதைபோக்கு மாறும்.  அப்போது கூட, எந்தக் காலத்திலும் சூரியனின் பாதை இந்த மலை மேல் அமைவது  இல்லை. சூரியனுடைய பயணமும், மலை வலம் - கிரிவலம் வருவதைப் போலத்தான் அமைந்திருக்கும்.

* மலை முகம் பார்ப்பது

கிரி வலம்  வரும் வழியில், நிருதி லிங்கத்திற்கு அருகே உள்ளடங்கினாற் போல உள்ளது, சனி  தீர்த்தம். இந்த குளத்தில், மலை தன் முகத்தைப் பார்த்துக் கொள்ளும் காட்சி அபூர்வமானது. மலையின் அழகை அப்படியே இந்தக்குளத்தில், கண்ணாடியில்  பார்ப்பதைப்போலப் பார்க்கலாம்.

* வரிசையாக ஏழு


மலை உச்சிக்குக் கொஞ்சம் கீழாக (உயரத்தில்) நீண்ட வரிசையில் ஏழு சுனைகள் அமைந்துள்ளன. குகையும் அபூர்வமான மூலிகைகளும் அங்கு உள்ளன.

* வலம் வருகையில் வாசனை


சூரியன் உதிக்கும் முன்விடியற்காலை வேளையில், கிரிவலம் வரும்போது பலவிதமான  மூலிகைகள், மலர்கள், விபூதி, ஜவ்வாது என ஏதாவது ஒன்றின் வாசனையை அங்கங்கே  அனுபவித்து உணரலாம்.

* வென்ற அமலை

மகிஷாசுரனை அம்பிகை  வென்ற இடம் இங்குள்ளது. அமலை - பார்வதி வென்றதால், `வென்ற அமலை’ என அழைக்கப்பட்டு வந்த இடம், தற்போது `விண்ணமலை’ என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில், ஐந்து கி.மீ.  தொலைவில் உள்ளது இந்த இடம்.

* அக்னி மலையும் ஆங்கிலேயர்களும்

ஆதியும்  அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியான சிவபெருமானே, அக்னி வடிவாக  இருக்கும் இம்மலையை `அக்கினி மலை’ என்று சொல்வோம். ஆங்கிலேயர்கள் இம்மலைக்கு, ‘இக்னீஷியஸ் ராக்’ என்னும் மிகமிகப் பழைமையான பாறைகளால்  ஆனதால், இம் மலைக்கு `இக்னீஷியஸ் ராக்’ எனப் பெயர் சூட்டினார்கள்.  ‘இக்னீஷியஸ் ராக்’ என்பதற்கு ‘நெருப்பால் வந்த மலை’ என்பது பொருள்.

* வெள்ளிக்குடம் தந்த அரசர்


கோயிலில்  இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக, வெள்ளிக்குடத்தில் நீர் கொண்டு வருவார்கள். இந்த வெள்ளிக்குடத்தை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்தவர்,  கிருஷ்ண தேவராயர்.

* ஒருவர் மட்டுமே

இங்குள்ள திருமஞ்சன கோபுரத்தின் வழியாக, ஆனித் திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை ஆகிய இரண்டு  நாட்களில், நடராஜர் மட்டுமே சென்று வருவார். மற்ற உற்சவ மூர்த்திகள்  இவ்வழியே செல்வதில்லை.

* திரௌபதி மூவர்

காட்டு திரௌபதி  அம்மன், வடபாரிச திரௌபதி அம்மன், தென்பாரிச திரௌபதி அம்மன் எனும் பெயர்களில், தனித்தனியே மூன்று திரௌபதி அம்மன் ஆலயங்கள் இங்குள்ளன.

* மூன்றாவது இளையனார்

கம்பத்து  இளையனார், கோபுரத்து இளையனார் எனும் திருநாமங்களில் முருகப்பெருமான் இங்கே எழுந்தருளியிருப்பது, அடியார்கள் அனைவருக்கும் தெரியும். இங்கே கிளி கோபுரத்தின் வடக்காக, ‘பிச்சை இளையனார்’ என்ற திருநாமத்தில், முருகப்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.

* எட்டும் ஒன்றாக

மலையைச் சுற்றி எட்டு சிவலிங்கங்கள் உள்ளன. இந்திர லிங்கம், அக்கினி லிங்கம், யம லிங்கம், நிருதிலிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என அழைக்கப்படும் இந்த எட்டு ஆலயங்களும் ஒரே அமைப்பில், அதாவது சம அளவில் அமைந்துள்ளன.

* அயலூர் அண்ணாமலையார்

ஆண்டிற்கு  மூன்று நாட்கள், அண்ணா மலையார் அயலூர் செல்வார். தை மாத ரத சப்தமி அன்று  கலசப்பாக்கம், தை மாதம் ஐந்தாம் நாள் அன்று மணலூர்பேட்டை, மாசி மகம் அன்று  பள்ளிகொண்டாப்பட்டு எனும் ஊர்களே அவை.

* விபூதி லிங்கம்

மலையில் கந்தாசிரமத்திற்குக் கீழே உள்ள விருபாட்சி குகையில் உள்ள சிவலிங்கம், விபூதியால் ஆனது. ரமண பகவான் தவம் இருந்த குகை இது.

*ஆயிரம் பாடல்கள்

முருகனைப் பலமுறை நேருக்குநேராகத் தரிசித்து அருள் பெற்ற வண்ணச்சரபம் ஸ்ரீ தண்டபாணி  சுவாமிகள், இங்குள்ள ‘கோபுரத்து இளையனார்’ மீது, ‘சகஸ்ர தீபம்’ என்ற பெயரில் ஆயிரம் பாடல்கள் பாடினார். அவற்றை `திருவிளக்கு ஆயிரம்’ என்ற  பெயரில், கௌமார மடாலயத்தினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

* வண்ணச் சரபத்து வேல்


ஆலயத்தில்  கோபுரத்து இளையனார் சந்நதியில், வேல் ஒன்று இருக்கிறது. அந்த வேல்,  வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளால் பலகாலம் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல்.

* இங்கு மட்டுமே

`மன்மத தகனம்’ எனும் மன்மதனை எரிக்கக் கூடிய நிகழ்வு, இத்திருத்தலத்தில் மட்டுமே நிகழக்கூடியது. சித்திரை - வசந்த உற்சவ காலத்தில் இங்கே மன்மத தகனம் நடைபெறும்.

* அண்ணாமலையார் கிரிவலம்

தீபத்திற்கு மறுநாளும், தை மாதம் மூன்றாம் நாளும் என ஆண்டிற்கு இருமுறைகள் அண்ணாமலையார் கிரிவலம் வருவார்.

* பகலவன் பூசிக்கும் லிங்கம்


கிரிவலம்  வழியில் உள்ள நிருதி லிங்கத்தின் மீது புரட்டாசி அமாவாசை, பங்குனி பௌர்ணமி  ஆகிய இரு நாட்களில் காலை 6:40 மணியளவில், சூரியக்கதிர்கள் அப்படியே  விழுந்து பற்றிப்பரவி, சூரிய பகவானே வழிபாடு செய்வது போன்ற, ஓர்  அதிசயத்தைத் தரிசிக்கலாம்.

* நந்தி எங்கே?

மலையே சிவலிங்கமாக இங்கே இருக்கிறது என்பது தெரிந்ததுதான். ஆகம விதிப்படி  சிவலிங்கம் இருந்தால், எதிரில் நந்தி இருக்க வேண்டுமே! ஊரின், புகைவண்டிப்பாதையில் கீழ்த்திசையில் ரிஷபக்குன்றில், அந்த அழகிய பிரம்மாண்ட  மான நந்தி உள்ளது. கவனிப்பார்தான் இல்லை.

* வைரத்தில் வைரம்

வைரக்குன்று எனும் குன்று ஒன்று இங்குள்ளது. வைரம் போல, அழுத்தமான அழகான பொலிவான பாறைகள் கொண்டதால், வைரக்குன்று எனப்பெயர் அமைந்தது. இந்த வைரக்குன்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பாறைகளில்தான், வைரம் போன்ற வரிகளைத்தந்த,  வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டது. வைர வரிகளைத் தந்தவருக்கு  வைரக்குன்றில் இருந்து எடுத்து, வள்ளுவர் கோட்டம் உருவானது பொருத்தம் தானே!

* ஒன்றில் பல

சுவாமி  சந்நதியில் முன்னால் ‘மகர மண்டபம்’ உள்ளது. இந்த மகர மண்டபத்தின் கல்தூண்  ஒன்றில், யாளி வடிவம் ஒன்று உள்ளது. அதன் வாயில் இருந்து, பல வளையங்கள்  இணைந்து நீளமான ஒரு சங்கிலி தொங்குவதைப் போல, தொங்கிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் ஒரே கல்லில் உருவானது என்பது, மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கும்.

* இப்படியும் ஒரு பெயரா?

இங்குள்ள  அம்பிகை உற்சவ அம்பிகையாக வரும்போது, அம்பிகையின் வாகனமாகச் சின்ன ரிஷபம் இருக்கும். ஆனால், இதை ‘பிளேக் ரிஷபம்’ என்று அழைக்கிறார்கள்.  திருவண்ணா மலையில் பிளேக் நோய் பரவியிருந்த காலத்தில் இது செய்து வைக்கப்பட்டதால், இந்தப் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள்.

* அதிகம் உள்ளவை

வேறு எந்தத் திருத்தலத்திலும் காண இயலாதவாறு, இங்கே விநாயகர் சந்நதிகளும், முருகப் பெருமான் சந்நதிகளும் அமைந்துள்ளன. இங்குள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று.

* இடது கைதான்

இங்கே மலையில் உள்ள சுனைகளில்  ‘ஒறட்டுக் கை’ சுனை என்பதும் ஒன்று. ஒறட்டுக்கை என்பதற்கு, இடது கை என்பது  பொருள். இந்தச் சுனையில் எப்படித்தான் முயன்றாலும் வலது கையால் நீர் குடிக்க முடியாது. நீர் குடிக்க வேண்டுமானால், வலது கையால் அங்குள்ள  பாறையைப் பிடித்தபடி, இடது கையால்தான் நீர் குடிக்க வேண்டும். இதனால்தான்  ஒறட்டுக் கை சுனை என, அது பெயர் பெற்றது.

* கதிரவன் வழிபாடு

நேர் அண்ணாமலையார் சந்நதி. இது கிரிவலம் வரும் வழியில் உள்ளது. இங்கே நேர்  அண்ணாமலையாரை, நேராக சூரியன் வழிபாடு செய்யும் அழகை, வருடத்தில் இரண்டு  நாட்கள் தரிசிக்கலாம். ஆவணி - உத்திரம் மற்றும் சித்திரை - முதல் நாள் ஆகிய இரு நாட்களில் சூரியன் நேராக, நேர் அண்ணாமலையாரின் திருவடிகளில், தன் ஔி வெள்ளத்தை வீசி வழிபடுவதை, காலை 7-10 மணியளவில் தரிசிக்கலாம்.  சூரியனுக்கு உண்டான பல பெயர்களில் ‘கிரிவலம் செய்பவன்’ என ஒரு பெயர் உண்டு. அது இங்கே நிரூபணம் ஆகும். இப்பெயரைச் சொல்லும் ‘நாம தீப நிகண்டு’ எனும் நூலில் உள்ள பாடல்:

கிரகேசன் எல்லி  ‘கிரிவலம் செய்கின்றோன்’
தரணி சனி தாதை சவிதா - விரவி
மதி அளப்போன் வாணாள் அளப்போன் சான்றோன் செங்
கதிரவன் வியாழ சினேகன்  
(நாமதீப நிகண்டு 94)

* மூத்த மலை

உலகப்புகழ் பெற்ற இமயமலை, ஆர்மீனியன் மலை, ஆண்டிஸ் மலை, முதலான மலைகள் எல்லாவற்றையும்விட, திருவண்ணாமலை வயதில் மிகவும் மூத்தது.

* அம்மன்கள் அதிகம்

திருவண்ணாமலை என்றாலே, அண்ணா மலையார்தான் நினைவிற்கு வருவார். அந்த அளவிற்குப் புகழ்பெற்ற சிவத் திருத்தலம் இது. ஆனால், திருவண்ணாமலையில் ஊரெங்கும்  திரௌபதி அம்மன், முத்தாலம்மன், வனதுர்கை அம்மன், பச்சையம்மன், செல்லியம்மன், மாரியம்மன், ஆதி காமாட்சியம்மன், அசலியம்மன், துர்கையம்மன், அங்காளம்மன், காளியம்மன் எனப் பல்வேறு திருநாமங்களைக் கொண்ட அம்மன்களுக்கென சந்நதிகள் (ஊரெங்கும்) இருக்கின்றன. சீரும் சிறப்புமாக இருக்கின்றன. வேறு எங்கும் இல்லாத அதிசயம் இது.

* மூன்றும் ஒன்றும்

திருவண்ணாமலை  ஆலயத்தில், ஆண்டுக்கு நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் மூன்று சிவபெருமானுக்கும், ஒன்று அம்பாளுக்கும் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்