SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணனும் கன்னித் தமிழ் நூல்களும்

2022-08-30@ 15:29:28

நன்றி குங்குமம் ஆன்மிகம்

1) கண்ணன் குழலோசை கேட்போம்

பாம்பைக் கயிறாகக்கொண்டு கடலை கடைந்த மாயவன் - கண்ணன் இங்கே வருவான்; அவன் புல்லாங்குழல் இசைப்பதை நாம் கேட்கலாம் தோழி, எனக் கண்ணன் குழலோசை கேட்க விழைகிறார் இளங்கோ அடிகள்.

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் மானுள் வருமேல் அவன் வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளோமோ தோழீ!


(சிலப்பதிகாரம்)

2) எளியவன் கண்ணன்

இப்படிப்பாடிய இளங்கோ, கடல் கடைந்த தகவலை மறுபடியும் சொல்லி, கண்ணனின் பெருமையை வெளிப்படுத்தி, கூடவே எளிமையையும் சொல்லி வியக்கிறார். வடமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடலைக்கடைந்த கண்ணன், யசோதையின் கைக்கயிற்றால் கட்டப்பட்டாரே! என்ன மாயம்!

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல் வண்ணன்!
பண்டொரு நாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கிய கை யசோதையார்
கடைகயிற்றால் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே!


3) இவ்வாறு வியந்த சிலப்பதிகாரம்,மறுபடியும் வியக்கிறது


“கண்ணா! தேவாதி தேவர்கள் எல்லாம் உன்னை வணங்கித் துதித்திருக்க, உலகையே உண்டு உமிழ்ந்த நீ, உறியில் இருந்த வெண்ணெயைக் களவாடி உண்டாயே! இது என்ன மாயம்!” என்கிறது சிலப்பதிகாரம்.

அறுபொருள் இவனென்றே
அமரர்கணம் தொழுதேத்த
உறுபசி யொன்றின்றியே
உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான்
உறிவெண்ணெய் உண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ
மருட்கைத்தே


4) தூது சென்ற தூயவன்

``தேவர்களும் துதித்திருக்க’’ என்று பாடிய சிலப்பதிகாரம், வாமன அவதாரத்தைச் சொல்லி, “உலகங்களை எல்லாம் உன் திருவடிகளால் அளந்த நீ, பஞ்ச பாண்டவர்களுக்காகத் தூது நடந்தாயே! இது என்ன மாயம்!” என்று வியக்கிறது.

திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல
இரண்டு அடியான் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே.
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி,
மடங்கலாய் மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே!


5) நாக்கு என்ன நாக்கு?

கண்ணனின் பெருமைகளையும் எளிமையையும் சொல்லி வியந்த இளங்கோவடிகள், “வேதங்களும் துதிக்கும் அப்படிப்பட்ட கண்ணனை, பாண்டவர்களுக்காகத் தூது நடந்த கண்ணனைச் சொல்லித் துதிக்காத நாக்கு, என்ன நாக்கு?” என நாக்கின் பயன் கண்ணன் திருநாமத்தைச் சொல்வதே எனப்பாடுகிறார்.

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;

6) மூன்றும் என்று?

பழந்தமிழ் நூலான பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு, கண்ணனின் மூன்று நிகழ்வுகளைச் சொல்லி, அப்படிப்பட்ட கண்ணனின் திருக்கோலத்தை என்று காண்பேன்? என ஏங்குகிறது; ஏங்க வைக்கிறது. கண்ணனையும், கூட உள்ள கோபாலச் சிறுவர்களையும் அழிப்பதற்காக, அசுரன் ஒருவன் கன்றுக்குட்டி வடிவில் வந்து, கன்றுகளோடு கன்றாகக் கலந்து, காலத்தை எதிர்பார்த்திருந்தான். காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கயவனைக் காலனிடம் அனுப்பிவிட்டார் கண்ணன். கன்றின் வடிவாக இருந்த அசுரனின் கால்களைப்பிடித்துச் சுழற்றி, விளாமரத்தின் மீது வீசியெறிந்தார். அசுரனும் இறந்து விழுந்தான். மரத்திலிருந்து விளாம்பழங்களும் விழுந்தன. கன்றுக்குட்டியைத் தூக்கிவீசிக் கோபாலர்களைக் காத்த கண்ணன், கோவர்தனமலையைத்தூக்கி அனைவரையும் காத்து அருள் புரிந்ததையும் சொல்லி, “அப்படிப்பட்ட கண்ணனின் திருக்கோலத்தை என்று காண்பேன்?” என ஏங்குகிறது; ஏங்க வைக்கிறது, அப்பழந்தமிழ் நூல்.

இனிப் பெறுவது என்று கொல்?
கன்று எடுத்து ஓச்சிக் கனி விளவின்
காய் உகுத்துக்குன்று எடுத்து நின்ற நிலை
(பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு இறுதி)


7) ஈ ஏற மலை குலுங்கியது


ஈ ஏற மலை குலுங்குமா? குலுங்கும் என்கிறார் கவிராஜ காளமேகம். கண்ணன் செய்யும் குறும்புகள் தாங்காமல், கண்ணனை அடித்து விட்டாள் யசோதை. அதன் காரணமாகக் கண்ணனின் திருமேனியில் புண் உண்டாகி விட்டது. அந்தப் புண்ணில் ஓர் ஈ மொய்த்தது. அதை விரட்டுவதற்காகக் கண்ணன் தன் திருமேனியைச் சற்று அசைத்தார். அதன் விளைவாக, அகில உலகங்களும் குலுங்கின.

திசை யானைகள், மேரு மலை, கடல், பூமி என அனைத்தும் குலுங்கின, எனப்பாடுகிறார் கவிராஜ காளமேகம். கண்ணன் எல்லா இடங்களிலும் இருப்பவர்; சர்வ வியாபி என்பதை விளக்குவதோடு, சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் தமிழின் ஆற்றலையும் வெளிப்படுத்திப் பாடியிருக்கிறார் கவிராஜ காளமேகம்.

வாரணங்கள் எட்டும் மகமேருவுங் கடலும்
தாரணியும் எல்லாம் சலித்தனவால் நாரண
னைப்பண்வா யிடைச்சி பருமத்தினால் அடித்த
புண் வாயில் ஈ மொய்த்த போது


(கவிராஜ காளமேகம்)

தொகுப்பு: V.R.சுந்தரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliand-monkey

  தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

 • light-show-28

  பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்