SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-08-20@ 17:09:03

20-8-2022 - சனி  பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி

வைணவ ஆகமங்களில் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமம் முக்கியமானது. ஸ்ரீரங்கம் போன்ற பெரிய கோயில்களில் பாஞ்சராத்ர ஆகமத்தின் அடிப்படையில் உள்ளவை. இந்த கோயில்களிலும், சில குறிப்பிட்ட வைணவர்கள் இல்லங்களிலும் இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.

21-8-2022 - ஞாயிறு  சூரிய வழிபாடு

ஆவணி மாதம் சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம். சிம்மம் அவருடைய ஆட்சி வீடு. ஞாயிறு அவருடைய கிழமை. ஆவணி மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரிய வழிபாடு நடத்துவது மிகச்சிறந்த நன்மைகளைத் தரும். பல குடும்பங்களில் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் காலை சூரியனுக்கு வெட்டவெளியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவதுண்டு. ‘‘ஆவணி ஞாயிறு பொங்கல்” என்று இதற்குப் பெயர்.

காலை சூரிய உதயகாலத்தில், சூரிய வெளிச்சம் தருகின்ற வீட்டின் முன்புறம் அல்லது முற்றத்தில், கோலம் போட்டு, விளக்கேற்றி, புதிய செங்கற்களை அடுக்கி, பானையில் பொங்கல் வைத்து, வாழை இலையில் படைத்து, சூரியனை வணங்குவதுண்டு. எல்லாக் கிரகங்களுக்கும் தலைவரான சூரியனை வணங்குவதன் மூலமாக சகலகிரக தோஷங்களும் நீங்கும். அன்றைக்கு காலையில் ஆதித்ய ஹிருதயம் முதலிய சூரிய ஸ்லோகங்களை அல்லது கீழே உள்ள சூரிய காயத்ரியைச் சொல்வது மிகச் சிறந்த பலனை அளிக்கும்.

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்


22-8-2022 - திங்கள்  வாஸ்து

வருடத்தின் சில நாட்களில் வாஸ்து புருஷன் விழித்தெழும் காலங்கள் உண்டு. அதில் இந்த மாதம் 22.8.2022 திங்கட்கிழமை மாலை 3.18 முதல் 3.54 வரை வாஸ்து புருஷன் விழித்தெழும் காலம். இந்த நேரத்தில் நட்சத்திரங்களையும், வாரதோஷங்களையும் வேறு ராகுகாலம் எமகண்டம் முதலியவற்றையும் பார்க்க வேண்டியதில்லை. வீடுகளுக்கு பூமிபூஜை போடவும், நிலைவாசல் வைக்கவும் வாஸ்து பூஜை செய்யவும் ஏற்ற நாள்.

23-8-2022 - செவ்வாய்  காமிகா ஏகாதசி

தேய்பிறை ஏகாதசியான காமிகா ஏகாதசி நாளான இன்று, பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. அடுத்த நாளான ஜெயந்தி துவாதசியிலும் பெருமாளை பாரணை செய்து வணங்குவது வாழ்வில் நிம்மதியைத் தரும். துவாதசி நாளில், அன்னதானம் செய்வது தலைமுறைக்கே பலன்களை வழங்கும். ஏகாதசி நாளில், கண்டிப்பாக அரிசி சாப்பிடக்கூடாது.

விரதத்தின் முந்தைய நாள் இரவிலும், விரதத்தின் மறுநாளிலும் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. விரதம் இருக்கும்போது, பழங்கள் சாப்பிடலாம். உப்புள்ள பண்டங்களை சாப்பிடக்கூடாது. துவாதசி பாரணையில் பருப்பு, முள்ளங்கி, கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்டவற்றை உட்கொள்ளக்கூடாது.

24-8-2022 - புதன்  பிரதோஷம் மற்றும் வ்யதீபாத சிரார்த்தம்

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும். திரயோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷகாலம். சிவதரிசனம் செய்து எல்லையற்ற நற்பலனைப் பெறுக.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொண்ணூற்று ஆறு. இவற்றில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள்.

இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதில் இன்று வ்யதீபாதம். முன்னோர் வழிபாடு முக்கியம். வ்யதீபாதம் அதிக புண்யத்தை கொடுக்கக் கூடியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

25-8-2022 - வியாழன்  மாத சிவராத்திரி

இன்று மாத சிவராத்திரி. இந்நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவதரிசனம் செய்வதும், நமசிவாய மந்திரம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தரும். சிவாலயம் செல்வதும், சிவபூஜைக்கு உதவுவதும், சிவத் தொண்டு புரிவதும் உத்தம பலன்களைத் தரும்.

25-8-2022 - வியாழன்  செருத்துணையார் குருபூஜை

செருத்துணை நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண் குடியில் தோன்றியவர் சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். சிவ பூஜைக்கு யார் பழுது செய்தாலும் உடனே கடுமையாகத் தண்டித்துவிடும் வழக்கமுடையவர். அதனுடைய பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படமாட்டார்.

திருவாரூர் திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து வந்த காலத்தில் பல்லவ மன்னன் மனைவி, சிவனுக்குரிய பூஜைப் பூக்களை  முகர்ந்து பார்த்ததால் வெகுண்ட நாயனார், பட்டத்து ராணியின் மூக்கினை அறுத்தார். வன் தொண்டரான இவருடைய குருபூஜை நாள் ஆவணி மாதம் பூசம்.

26-8-2022 - வெள்ளி  சர்வ அமாவாசை

இன்று ஆவணி மாத அமாவாசை தினம். எந்த லௌகீக சுப காரியங்களும் செய்யக்கூடாது. முற்றிலும் முன்னோர்கள் வழிபாட்டுக்குரிய தினம். புதனுக்குரிய ஆயில்ய நட்சத்திரத்தில், இன்றைய தினம் இருப்பதால் ச்ராத்த காப்பாளரான (ச்ராத்த சம்ரக்ஷக என்று மந்திரம்) திருமாலை வணங்கி முன்னோர் வழிபாடு முறையாக செய்வது நலம் தரும்.

26-8-2022 - வெள்ளி  அதிபத்த நாயனார் குருபூஜை

‘‘விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கொண்டாடப்படும் அதிபத்த நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் நாகப்பட்டினத்தில் மீன்பிடிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தவர்.

எந்தத் தொழிலைச் செய்தாலும், எந்தக் குலத்தில் பிறந்தாலும், சிவநெறியில் நிற்பவர்களுக்கு சிவனருள் நிச்சயம் என்பதைக் காட்டுவதே சிவனடியார் வாழ்க்கைத் தத்துவம். அதனால்தான் சிவலோகம் என்கின்ற முக்தி கூட வேண்டாம். சிவனிடம் அன்பு வைத்த அடியாரின் கூட்டு போதும் என்று பெரியபுராணம் காட்டும்.

கேடும் ஆக்கமும் கெட்டதிருவினார்  
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.


அதிபத்தர் தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான்பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்கமீனை வலையில் சிக்குமாறு செய்தார்.

ஆனால், தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு வறுமையிலும், பசியிலும் வாடியபொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள். திருநாகையில் பிறந்த அதிபத்த நாயனாரின் குருபூஜை தினம் இன்று ஆவணி ஆயில்யம்.

தொகுப்பு: சங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்