SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாக வரும் பதிகம்

2022-08-16@ 16:10:09

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இலக்கை அடைய, செல்லும் வழி சரியானதாகவும், இடர்ப்பாடு இல்லாததாகவும் இருக்க வேண்டும். பிறக்கின்ற அத்தனை உயிர்களுக்கும் வாழ்க்கைதான் வீடுபேற்றை அடைவதற்கான வழியாக அமைகிறது. வழியில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதுகாப்பானதாகவே இருக்குமென்பது நிச்சயம் அல்ல. செல்லும் வழியில் சிலப்பல சிக்கல்கள் வரலாம். மனித வாழ்க்கையாகிய வழியில் நவகிரகங்கள் உள்ளிட்டவற்றால் நன்மையும் தீமையும் சேர்ந்தே வருகின்றன. நன்மையைக் கண்டு நயக்கும் தீமையைக் கண்டு பயக்கும் பண்புடையதாகவே உள்ளது, நம் வாழ்க்கை. இந்த வாழ்க்கை எனும் வழியில் வருகின்ற தீமைகளைப் போக்கி, வழியைச் செம்மைப்படுத்த ஞானசம்பந்தர் தந்த வரம்தான் கோளறுபதிகம்.

இதை `நலம் தரும் பதிகம்’ என்பாரும் உளர்.இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்த பின்னரே பயணம் மேற்கொள்வது பல சைவர்களுக்குப் பழக்கம். அப்படிச் செய்வதால் பயணங்கள் பாதுகாப்பானதாக அமைகின்றன. உதாரணமாக, மறைமலையடிகளாரின் பேரனின் மனைவியாகிய கலைமாமணி சாரதா நம்பியாரூரன் அவர்கள் இந்தப் பதிகத்தைப் ஓதி பயணித்ததால் ஒருமுறை நடக்கவிருந்த பேராபத்தில் இருந்து தப்பினார் என்பது அவரது வாழ்வில் பதிகத்தால் பெற்ற பெரும்பயனாகும்.

வழிப்பயணத்தில் மட்டுமின்றி வாழ்க்கைப் பயணத்திலும் வழித்துணையாக வருவது இப்பதிகம்.மாற்றுச் சமயத்தாரின் சூழ்ச்சியால் மதுரை மன்னர் கூன்பாண்டியனுக்கு வெப்புநோய் வந்தபோது மன்னனின் மனைவியாகிய மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தருக்கு மதுரைக்கு வரும்படி அழைப்பு அனுப்புகிறார்.

அப்போது, மறைகள் வழிபட்டதும் சேது அணையைக் கட்டி இராவணனைக் கொன்ற பாவம்போக இராமபிரான் வழிபாடற்றியதும் மணிகர்ணிகை, தேவபூஷணம், வேத அமிர்தம் (கடல்) என்ற முப்பெருந் தீர்த்தங்களை உடையதும் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றானதுமான திருமறைக்காட்டில் ஞானசம்பந்தர் திருநாவுக்கரசருடன் தங்கியிருக்கிறார். மங்கையர்க்கரசியாரின் அழைப்பை ஏற்று இந்தத் திருமறைக்காட்டிலிருந்து திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படுகிறார். அப்போது திருநாவுக்கரசர், ‘தற்போது கிரக நிலை சரியில்லை; சமணர்களும் தீங்கு செய்வார்கள். அதனால், தாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டாம்’ என்று கூறி தடுக்கிறார்.

இதை,

“அரசு அருளிச் செய்கின்றார்; பிள்ளாய் அந்த
அமண் கையர் வஞ்சனைக் கோர் அவதி
யில்லை உரை செய்வது உளது ஊறுகோள்
தானும் தீய எழுந்தருள உடன்படுவது
ஒண்ணாது”


- என்று பதிவு செய்கிறார், தெய்வச் சேக்கிழார்.

 அப்போது திருஞானசம்பந்தர், `நாம் சிவனடியார்கள். நம்மை கிரகங்களால் ஒன்றும் செய்யவியலாது. நாம் நாளும் நமச்சிவாயனின் நற்பாதத்தையே நாவார, தேவாரத்தால் பாடுவதால், நமக்கு எந்தத் தீங்கும் வராது’ என்றுகூறி சிவபெருமானின் செந்தாமரைத் திருவடிகளைச் சிந்தைசெய்து, “வேயுறு தோளின் பங்கன்” என்று தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாடி, நாளையும் கோளையும் நமக்கு நன்மையே செய்யுமாறு செய்து மதுரையை அடைந்தார் என்பது வரலாறு.

இவ்வாறு இப்பதிகம் ஞானசம்பந்தரின் வாழ்க்கைப் பயணத்தில் நன்மை செய்தது.சாதுக்கள், ஜோதிடம் பார்த்தல் கூடாது என்பர். ஞானசம்பந்தர் தவத்தில் சிறந்த சாது. அதுமட்டுமன்றி தெய்வச்சார்புடையோருக்கு கோள்கள் எந்தக் குறையும் செய்யாது. ஞானசம்பந்தர் தெய்வச் சார்புடையவரும் ஆவார். ஆகவே, அவரைக் கோள்கள் எதுவும் செய்யாது. என்றாலும், அவர் கோளறு பதிகத்தைப்‌பாடியருளியது அவருக்காக அல்ல. மாறாக, நம் போன்று அருளியலில் ஏழையாக இருக்கும் யாவருக்கும் கோள்களால் வரும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்தற்காகவே பெருங்கருணை கொண்டு இந்தக் கோளறு பதிகத்தை அருளியுள்ளார்.

சூரியனை வழிபட சூரியனார் கோயிலுக்கும், சந்திரனை வழிபட திங்களூருக்கும், செவ்வாயை வழிபட வைத்தீஸ்வரன் கோயிலுக்கும், புதனை வழிபட திருவெண்காட்டிற்கும், குரு பகவானை வழிபட ஆலங்குடிக்கும், சுக்கிரனை வழிபட கஞ்சனூருக்கும், சனி பகவானை வழிபட திருநள்ளாற்றுக்கும், இராகுவை வழிபட திருநாகேஸ்வரத்துக்கும், கேதுவை வழிபட கீழ்ப்பெரும்பள்ளத்திற்கும் செல்ல வேண்டும். அத்தலங்களுக்கெல்லாம் செல்லாமலேயே இவ்வனைத்துக் கோள்களும் நமக்கு நன்மையைச் செய்ய வேண்டுமெனில், இந்த கோளறு பதிகத்தை ஓதினால் போதும்.

இப்பதிகத்தைப் பாராயணம் செய்வதால், கோள்களால் மட்டுமின்றி விண்மீன்கள், நாட்கள், தெய்வங்கள், விலங்குகள், நோய்கள், வினைகள், ஆகியவையால் வரும் துன்பங்களும் விலகும் என்பது திண்ணம். காரணம், மேற்கண்டவற்றால் வரும் இடங்கள் யாவும் அடியார்களை ஒன்றும் செய்யாது என ஆளுடையபிள்ளையார் இப்பதிகத்தில் தப்பாமல் ஒவ்வொரு பாடலிலும் முறையே குறிப்பிட்டுப்பாடியுள்ளார்.

பதிகத்தின் முதற்பாடலில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு மற்றும் கேது ஆகிய ஒன்பது கோள்களால் வரும் துன்பங்களும்;
இரண்டாவது பாடலில், அசுவினி முதல் ரேவதி ஈறாகவுள்ள 27 விண்மீன்களால் (ஒன்பதொடொன்றுடேழு பதினெட்டொடாறும் அதாவது சிவபெருமானுக்குரிய திருவாதிரையை முதலாகக் கொண்டால், அதற்கு ஒன்பதாவது சித்திரை. அதனோடு சுவாதி, அதிலிருந்து முன்னேழு ஆயில்யம். அதற்குப் பதினெட்டாவது விண்மீன் பூரட்டாதி. அதற்கு முன் ஆறாவது விண்மீன் பூராடம் உடனாகிய பரணி, கிருத்திகை, மகம், பூரம், விசாகம் மற்றும் கேட்டை) வரும் துன்பங்களும் கிழமை மற்றும் திதிகளால் வரும் துன்பங்களும்;

மூன்றாவது பாடலில், திருமகள் கொற்றவை, நிலமகள், இந்திரன், அக்னி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசானனாகிய எண்திசைக் காவலர்களால் வரும் துன்பங்களும்;
நான்காவது பாடலில், தீக்கடவுள், யமன், யமதூதர் ஆகியோரால் வரும் துன்பங்களும், கொடிய நோய்களால் வரும் துன்பங்களும்; ஐந்தாவது பாடலில், கொடுங்கோபம் கொண்ட அசுரர்களால் வரும் துன்பங்களும், இடி, மின்னல் மற்றும் ஐம்பூதங்களால் வரும் துன்பங்களும்; ஆறாவது பாடலில், புலி, யானை, பன்றி, பாம்பு, கரடி, சிங்கம் ஆகிய கொடிய விலங்குகளால் வரும் துன்பங்களும்; ஏழாவது பாடலில், வெப்பம், குளிர், வாதம், மிகுபித்தம், வினைகள் ஆகியவற்றால் வரும் துன்பங்களும்; எட்டாவது பாடலில், இராவணனைப் போன்ற அரக்க குணம் கொண்டோரால் வரும் துன்பங்களும்; ஒன்பதாவது பாடலில், பிரம்மன், திருமால் போன்ற தேவர்களை வழிபடாமை மற்றும் தீய நேரங்கள் போன்றவையால் வரும் துன்பங்களும்; பத்தாவது பாடலில், புத்தர், சமணர் உள்ளிட்ட புறச் சமயத்தோரால் வரும் துன்பங்களும், நம்மை அனுகாது.

மேலும், பதினோராம் பாடலாகிய திருக்கடைக்காப்பில் இப்பதிகத்தைப் பாராயணம் செய்தால் அடியார்களுக்கு கோள்கள், நாள்கள் உள்ளிட்டவற்றால் வரும் துன்பங்கள் ஒன்றும் செய்யாது என்று ஆணையிட்டுள்ளார் ஆளுடைய பிள்ளையார்.சமயாச்சார்யர்கள் நால்வருள் சம்பந்தர் மட்டும்தான் “இது நமது ஆணை” என்று ஆணையிட்டு பாடியவர். வெண்காட்டு பதிகத்தில் “ஆணையே” என்றும், வேதிகுடிப் பதிகத்தில் “ஆணை நமதே” என்றும் ஆணையிட்டுள்ளார். அதைப்போன்றே இந்தக் கோளறு பதிகத்திலும் “ஆணை நமதே” என்று ஆணையிட்டு பதிகத்தை நிறைவு செய்துள்ளார். இதனால், இவரை “ஆணை நமதென்ற பிரான்” என்று ஒரு கல்வெட்டு போற்றுகிறது.

சமயக் குரவர்கள் நால்வருள் இவர் மட்டுமே மகன்மை நெறியாகிய சற்புத்திர மார்க்கத்தைப் பின்பற்றி உயர்ந்தவர். ஆகவே, இறைவனின் மகன் என்ற நிலையில் ஆணையிட்டுப் பாடும் உரிமை இவருக்கு உண்டல்லவா. இந்த அருட் பதிகத்திற்கும் இந்தியாவின் சுதந்திரத்திற்கும் ஒரு சம்பந்தமுண்டு. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, செவ்வாய்க் கிழமை. அந்நாளில் நள்ளிரவு 12மணிக்கு சுதந்திரம் வழங்குவதாக அந்நிய நாடு அறிவித்தபோது, அன்று நாளும் கோளும் நலமாக இல்லையே என்று ஏங்கிய அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியார், சைவம் வளர்க்கும் ஞானப்பண்ணையாகிய திருவாடுதுறை ஆதீனத்தை அணுகினார். சந்நிதானங்களின் அருளாணையின் வண்ணம் திருமடத்திலிருந்து செங்கோலுடன் தம்பிரான் சுவாமிகளும், ஓதுவாமூர்த்திகளும் சுதந்திரம் வழங்கும் இடத்திற்கே சென்று ஞானசம்பந்தர் அருளிய இந்தக் கோளறு பதிகத்தைப் பாடினர். அந்த நேரத்தில்தான் சுதந்திரம் வழங்கப்பட்டது என்பர்.

இத்தகு சிறப்பு வாய்ந்த கோளறு பதிகம் நாட்டுக்கு வரும் இன்னலையே மாற்ற வல்லது எனில், நம் வீட்டுக்கு வரும் இன்னலையும் மாற்றி இன்பம் நல்கும் என்பது திண்ணம். இந்தக் கோளறு பதிகம் ஜோதிட சாஸ்திரத்திற்கு உட்பட்டதேயாகும். கோள்களால் வரும் குறைவை கோளின் அதிபதிகளையும் இறைவனையும் நினைத்து வழிபடுவதால் குறைக்கலாம் என்பது ஜோதிட விதி. இப்பதிகம் முழுவதிலும் கோளதிபதியான இறைவன் போற்றப்பட்டுள்ளார். அதுவும், இறைவன் மட்டும் போற்றப்படாமல் பத்துப் பாடல்களிலும் இறைவியும் இணைத்தே போற்றப்பட்டுள்ளார்.

இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கிற கோலத்தை நினைந்து வழிபட்டால், வாழ்க்கையில் வரும் துன்பங்களும் காலனால் வரும் கடுந்துன்பமும் (மரணபயம்) நீங்கும் என்பதை அபிராமிபட்டர்,

“வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே”


- என்று பாடுகிறார். ஆகவே, கோளறு பதிகத்தை ஓதி இறைவனையும் இறைவியையும் வேண்டினால் நமக்கு நாள் என் செய்யும்? வினைதான் என் செய்யும்? நன்மை நாடிவந்த கோள்தான் என் செய்யும்?  கொடுங் கூற்றுவனால்தான் என்ன செய்துவிட முடியும்??

திருச்சிற்றம்பலம்

1) வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்
தேனுளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

2) எண்பொடு கொம்பொடாமை யிவை
மார்பி லங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே
னுளமே புகுந்த வதனால்
ஒன்பதொ டொன்றோ டேழுபதி
னெட்டோடாறு முடனா யநாள்களவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

3) உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள்
முடிமேலணிந் தெனுளமே புகுந்த வதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

4) மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோ துமெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலைமுடி
மேலணிந் தேனுளமே புகுந்த வதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

5) நஞ்சணி கண்டெனந்தை மடவாள்
தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை
முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால்
வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

6) வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர்
மடவா டனோடு முடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
கோளரியுழு வையோடு கொலை
யானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

7) செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெப்போடு குளிரும் வாதம் மிகையான
பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

8) வேள்படி விழிசெய் தன்று விடை
மெலிருந்துமடவாள் தனோடு முடனாய்
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு
மிடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

9) பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

10) கொத்தலர் குழலியோடு விசையற்கு
நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல்
திருநீரு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

11) தேனமர் பொழில் கொளாலை விளை
செந்நெல் - துன்னி
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்
தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசெல் மாலையோதும் அடியார்கள்
வானில்அரசாள் வராணை நமதே.

சிவ.சதீஸ்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்