SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரதநாளிலும் சாப்பிட ஏங்குவதுதான் மனசு!

2022-08-16@ 15:26:55

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 29
(பகவத் கீதை உரை கர்ம யோகம்)


செயலாற்றுவது என்பது தவிர்க்க இயலாதது. நாம் உறங்கும்போதுகூட நம் உடல் செயலாற்றுகிறது. நாமே அறியாமல் மூக்கு சுவாசிக்கிறது, உள் அவயவங்களான கல்லீரல், சிறுநீரகம், இருதயம் என்று எல்லாமே இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கு ஓய்வே இல்லை. அதனதன் பணியை அதது செய்துகொண்டுதான் இருக்கிறது. இதையே கிருஷ்ணன் சொல்கிறார்;

ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
கார்யதே ஹ்யவச கர்ம ஸர்வ ப்ரக்ருதிஜைர்குணை (3:5)


‘‘செயல்புரிவதென்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பானது. யாராலும் ஒரு விநாடிகூட செயல்புரியாமல் இருக்கவே முடியாது. ஏனென்றால் இது பிறப்பிலேயே உடலோடு ஊறிவிட்ட குணாதிசயம். இந்த குணத்தின் நிர்பந்தத்தாலேயே அவன் கட்டாயமாக செயல்புரிந்துகொண்டிருக்கிறான்.’’ ஒருவன் பிறவி எடுத்துவிட்டான் என்றால், அந்தக் கணத்திலிருந்தே அவன் செயல்படத் தொடங்கிவிட்டான் என்றுதான் அர்த்தம். அதாவது சிரிப்பது, அழுவது, உறங்குவது போன்ற ஆரம்ப செயல்களில் ஒரு குழந்தை ஈடுபடத்தான் செய்யும். வயதாக ஆக வேறு பல செயல்களையும் அந்தப் பிறவி மேற்கொள்ளும். செயல்புரிவது இன்றியமையாததாகி விடுகிறது. அப்படி செயல் புரிவது நிற்கிறது என்றால் அந்தப் பிறவியை மரணம் தழுவுகிறது என்றுதான் அர்த்தம்.

சும்மா இருக்கும் சுபாவத்திலும் இந்த நியதி மறைந்து போவதில்லை. சும்மா இருப்பது என்றால் பேச்சில்லாமல், உண்ணாமல், பார்க்காமல், ஆடாமல், அசையாமல் சிலையாக அமர்ந்திருப்பது என்றே வைத்துக் கொண்டாலும், சுவாசிப்பது, இதயம் துடிப்பது போன்ற செயல்கள் தொடரத்தானே செய்கின்றன?மனிதப் பிறவி மட்டுமல்ல, எல்லா ஜீவராசிகளும், ஏன், அணு முதல் அண்டம்வரை எல்லாமுமே செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இது இயற்கையின் நியதி, மாறாது.

போரில் ஈடுபடுவதும் செயல்பாட்டின் ஓர் அங்கம்தான். ஒரு உத்வேகத்தில் போர்க்களத்துக்கு வந்துவிட்டு, வெற்றி ஒன்றே இலக்கு என்ற மனோதிடத்துடன் வந்துவிட்டு, இப்போது அர்ஜுனன் பின்வாங்குகிறான் என்றால் அவன் இயல்பை மீறுகிறான் என்றுதான் அர்த்தம். வெறுமே உண்பதும், உறங்குவதுமாகிய சாதாரண செயல்பாட்டிலிருந்து உலக தர்மத்துக்காகப் போரிடுவது என்ற உயரிய நோக்கமுடைய செயல்பாட்டிற்குத் தன்னை உட்படுத்திக்கொண்டுவிட்ட பிறகு, அவன் தயக்கம் கொள்வதேன்?

சாப்பிடும்போது ஒரு கவளத்தில் கல் ஒன்று இருந்து, அது பற்களுக்கிடையே சிக்கும்போது எரிச்சல் உண்டாகிறது. ஆனால், அதற்காக சாப்பாட்டிலிருந்து எழுந்துவிடுகிறோமா என்ன? அந்தக் கல்லை மட்டும் வாயிலிருந்து எடுத்துப் போட்டுவிட்டு சாப்பாட்டைத் தொடர்வதில்லையா? அல்லது அந்தக் கவள உணவைத் துப்பிவிட்டு அடுத்தக் கவளத்தை எடுக்கக் கை நீள்வதில்லையா? ஒரு செயலில் ஏதேனும் சிறு தடை ஏற்பட்டுவிட்டால் அதற்காக அந்தச் செயலை அரைகுறையாக விட்டுவிட்டு வெளியேறிவிடுவது முறையா? அப்படிச் செய்தால் எடுத்துக்கொண்ட நோக்கமே மதிப்புக் குறைந்ததாகிவிடுமே!

எதிராளிக்குத் தீங்கு நேருமோ, அந்த எதிராளிகள் தன்னுடைய உறவும், நட்புமாக இருக்கும் பட்சத்தில் அப்படி தீங்கு நிகழ, தானே உடந்தையாக இருப்பது தகுமோ என்றெல்லாம் அர்ஜுனன் சிந்திப்பது மேலோட்டமானது. ஆனால், ஆழ்மனதில் ‘அவர் என்னுடைய தாத்தா, இவர் என்னுடைய குரு, அவன் என் சகோதரன், இவன் என் நண்பன் என்றெல்லாம் அவனுக்கு இந்தப் போர்க்களத்தில்தான் அடையாளம் தெரிகிறதா? அவர்களில் தன்னைப் பொருத்தி, அவர்களைத் தன்னுடையவர்களாக்கி சொந்தம் பாராட்ட இதுவா தருணம்? ‘யாரும் இன்னொருவருக்காகத் துக்கப்படுவதில்லை; எல்லோருமே தனக்காக மட்டுமே துக்கப்படுகிறார்கள்’ என்று மனித உளவியலை விவரிக்கிறது உபநிஷத்.

இந்த கோணத்தில் பார்த்தால், எதிரே நிற்பவர்களின் உடலும், உள்ளமும் பாதிக்கப்படக்கூடாதே என்ற பச்சாதாபம் அர்ஜுனனைப் பொறுத்தவரை போலியானது. தன்னைப்போல எதிரே நிற்பவர்கள் யோசிப்பார்களா என்று அவன் சிந்திக்கத் தோன்றாதவனாகவே இருந்தான். ‘எதுடா சந்தர்ப்பம்…’ என்று அவர்கள் காத்திருக்கும்போது, இவன் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டது முறைதானா?

நான், எனது என்ற சுயநலத்திலிருந்து அவன் மீண்டு வரவேண்டும் என்று கிருஷ்ணன் பெரிதும் எதிர்பார்க்கிறார். என்னுடைய உறவு என்று அவன் சொந்தம் கொண்டாடும்போது, அர்ஜுனன் ‘நான்’ என்ற எதேச்சாதிகாரத்திலிருந்து விடுபடாதவனாகவே இருக்கிறான். ‘இந்தப் போரில் நான் வெற்றி பெற்றுவிட்டால், அதனால் கிடைக்கக்கூடிய செல்வம், ராஜாங்கம் எல்லாவற்றையும், இதுவரை அனுபவித்து வந்தவர்கள் இனி அனுபவிக்க முடியாமல் போய்விடுமே! அவர்களுக்கு இந்தக் கெடுதியை நானே உருவாக்கித் தரவேண்டுமா?’ என்று புலம்புகிறான் அர்ஜுனன்.
இந்தப் புலம்பலின் பின்னணியில், பந்தத்திலிருந்து விடுபடமுடியாத பலவீனம் திரண்டிருக்கிறது. அந்த பலவீனத்தை உடைத்தெறிய கிருஷ்ணன் தொடர்ந்து முனைந்தார்.

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய
ஆஸ்தே மனஸா ஸ்மரண்
இந்த்ரியார்த்தான் வி மூடாத்மா
மித்யாசார ஸ உச்யதே (3:6)


‘‘தன் ஐம்புலன்களையும் அடக்கிவிட்டதாகச் சொல்லிக்கொள்ளும் ஒருவன் மனதை அடக்க இயலாதவனாகிவிட்டால் அவனைப் போன்ற ஒரு மூடன் இல்லை! அவன் போலித்தனம் பூண்டவனாகிறான். பொய்யொழுக்கம் கொண்டவனாகிறான்.’’ கண்களை மூடிக்கொண்டு, இப்போது எதையும் பார்க்க முடியாதபடி தன் கண்களைக் கட்டுப்படுத்தி விட்டதாக ஒருவன் சொல்லலாம்.

அதேபோல, எதையும் பேசாமல், எதையும் உண்ணாமல் தன் நாவையும், வாயையும் கட்டுப்படுத்திவிட்டதாகவும் அவன் சொல்லலாம். கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு எதையும் கேட்காமல் தன் செவிகளைக் கட்டுப்படுத்தி விட்டதாகவும் அவன் சொல்லலாம். மூச்சைச் சிறிது நேரம் அடக்கி வாசனையை உணராதபடி தன் மூக்கைக் கட்டுப்படுத்தி விட்டதாகவும் சொல்லலாம்.

ஆனால், உள்ளுக்குள்ளிருந்தபடி பார்ப்பதையும், ருசிப்பதையும், பேசுவதையும், கேட்பதையும், நுகர்வதையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறதே, மனம், அதை அவனால் அடக்க முடிகிறதா? அது எப்போதும் விழித்துக்கொண்டு, எந்தப் புலன் ஏமாறும், அதனால் தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்று காத்திருக்கிறதே, அதை ஒடுக்கி அடிமையாக்க முடிகிறதா? தியானம் செய்வதாகச் சொல்லிக் கொள்பவர்களில் எத்தனை பேர் நிர்ச்சலனமாக இருக்கிறார்கள்? ஒருவர்கூட கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் மனதை அடக்குவது அத்தனை கடினம்; இல்லாத வாசனையை மூக்கால் உணர முடியும்! இல்லாத உணவின் ருசியை வாயால் சுவைக்க முடியும்; அதன் மூலம் நாவையும் ருசிக்கவைக்க முடியும்! அத்தனை வலிமையானது மனது.

இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவுக்குப் போக விரும்பினான்; அடுத்தவன் ஆன்மிக சொற்பொழிவுக்குப் போக விரும்பினான். இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகத் தயாரில்லை. தம்முடைய தனிப்பட்ட விருப்பமே பெரிதெனக் கருதினர். ஆகவே அவரவர் அவரவருக்குப் பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபட்டனர். ஆனால் சொற்பொழிவு அரங்கில் இருந்தவனுக்கு உடல் அங்கே இருந்ததே தவிர மனம் சினிமா தியேட்டரில்தான் இருந்தது.

காதல், பாடல், சண்டை, காமெடி என்று நவரசங்களை அனுபவித்தபடி தன் நண்பனுக்குப் பொழுது இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும் என்று ஏங்கினான். தியேட்டரில் இருந்தவனோ, ‘என்ன பாடாவதி கதை இது. ஒரே ஆட்டம், பாட்டம், ஒரே மாதிரியான இசை, காமெடி… சே, நண்பன் சொற்பொழிவில் தன் அறிவை வளர்த்துக்கொண்டிருந்திருப்பான். புதுப்புது விஷயங் களைத் தெரிந்துகொண்டிருந்திருப்பான். நான் இங்கே வந்து முட்டாள்தனம் செய்துவிட்டேன்!’ என்று மனசுக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

சொற்பொழிவு கேட்க ஒருவன் விரும்பினான் என்றாலும், அவனுடைய நண்பன் சினிமாவுக்குப் போவதாகக் கேட்டதும் மனம் அந்த விருப்பத்துக்குத் தாவிவிட்டது. ஆனாலும் வீம்பாக சொற்பொழிவு மண்டபத்திற்குள் போய் உட்கார்ந்த அவனுடைய மனம் அவனை தியேட்டருக்கே இழுத்தது. அவன் என்னவோ தன் புலன்களை அடக்கிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தான். ஆனால், அவனுடைய மனமோ சொற்பொழிவைக் கேட்க விடாமல் காதை மறைத்தது; சொற்பொழிவாளரின் கையசைவு பாவங்களைக் காணவிடாமல் கண்ணைத் தடுத்தது.

தகுந்த நேரங்களில் பாராட்ட விடாமல் கைகளை நிறுத்தியது; புகழ முடியாமல் வாயைக் கட்டிப்போட்டது. காரணம் இந்த ஐம்புலன்களையும் இயக்கும் மனம் சொற்பொழிவில் ஈடுபாடு காட்டாததுதான்.இதே நிலைதான் சினிமா தியேட்டரில் இருந்தவனுக்கும். வண்ணக் காட்சிகளில் கண்களை லயிக்க மறந்தான். பாடல்கள் அவன் காதுகளை ஈர்க்கவில்லை; சிறப்பான காட்சிகளைப் பாராட்ட கைகள் தயாராக இல்லை.

மனதின் சுயரூபத்தை ஒவ்வொருவருமே உணரலாம். ஏதேனும் விசேஷ நாளில் விரதம் இருந்து பாருங்கள்; அன்றைய தினம்போல என்றைக்கும் பசி வயிற்றைப் புரட்டாது! தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது உறவினரோ, நண்பரோ வீட்டிற்கு வர, ரிமோட்டால் ஒலி குறையலாமே தவிர, கண்கள் அடிக்கடி திரைப் பக்கம் போய்க்கொண்டுதான் இருக்கும். எந்த எண்ணத்துக்கும் இடம் கொடுக்காமல் பூஜையில் ஆழவேண்டும் என்றுதான் அமர்வோம்; சமையலறையிலிருந்து புறப்படும் வாசம் மூக்கைத் துளைக்கும். அதை மறைக்க ஊதுபத்தியும், வாசனை மலர்களும் எவ்வளவுதான் முயன்றாலும், அவற்றையெல்லாம் சமையலறை வாசனை வெற்றிகொண்டுவிடும்!

கிருஷ்ணன் மறைமுகமாக அர்ஜுனனை, ‘மூடனே!’ என்கிறார். ‘நீ போலியானவன், பொய்யொழுக்கம் கொண்டவன்’ என்றெல்லாமும் சொல்கிறார். அதாவது அர்ஜுனனை நிந்திப்பது கிருஷ்ணனுடைய நோக்கமல்ல; உலகில் மனித மன இயல்பு என்ன என்பதை உணர்த்துவதுதான். போரிடமாட்டேன் என்று அர்ஜுனன் மறுப்பது எதற்காக? போர் முடிவில் தனக்கு சாம்ராஜ்யம் கிடைக்குமானால் அது கௌரவர்களை ‘வஞ்சித்து’ பெற்றதாகிவிடுமோ என்ற குற்ற உணர்வு தன்னைக் குடையும் என்று கருதுகிறானா? அல்லது போரில் தோற்றுவிட்டால் பெருத்த அவமானத்துக்குள்ளாக வேண்டுமே என்று அஞ்சுகிறானா?  மொத்தத்தில் தன் மனசுக்கு வேதனை தரவேண்டாம் என்று நினைக்கிறானா?

அடிபட்ட பிறகு, தான் வலியை உணரவில்லை என்று போலித்தனமாகக் காட்டிக்கொள்கிறோம். கைதூக்கி உதவிட வருபவர்களை நிராகரிக்கிறோம். மருந்திட முயற்சிப்பவர்களை மறுதலிக்கிறோம். நமக்கு வலியே இல்லை என்று காட்டிக்கொள்ளப் பெருமுயற்சி மேற்கொள்கிறோம். ஆனால் உள்ளே வலிக்கிறது. நேரமாக ஆக அது அதிகரிக்கிறது. அதை மறைப்பதற்கான பிரயத்தனமும் அதிகரிக்கிறது! எதற்காக இந்த போலித்தனம்? வலியை உணர்ந்துவிட்டு, அனுபவித்துவிட்டுப் போகலாமே! அடிபடுதலால் தவிர்க்கமுடியாமல் ஏற்படும் வலியை, வேதனையை, மறைப்பதால் என்ன லாபம்?

ஆக, மனதை அடக்குவது என்பது அத்தனை எளிதல்ல. அது ஐம்புலன்களையும் ஆட்டுவிப்பதை சும்மா பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். இதை விட்டுவிட்டு மனதை வசப்படுத்தி விட்டேன் என்று சொல்பவன் மூடனாகத்தான் இருப்பான் என்கிறார் கிருஷ்ணன்.

யஸ்த்விந்த்ரியாணி மனஸா நியம்யாரபதேஅர்ஜுன
கர்மேந்த்ரியை கர்மயோகம்ஸக்த ஸவிசிஷ்யதே (3:7)


‘‘ஆகவே அர்ஜுனா, ஐம்புலன்களையும் மனதால் அடக்கி, எந்த ஆசையும், பற்றுதலும், எதிர்பார்த்தலும் இல்லாமல் தன் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுபவனே மிகச் சிறந்தவன்.’’ எதிர்பார்ப்புகள் இல்லாதபோது ஏமாற்றமும் இருக்காது. எதிர்பார்த்து ஏங்கும் மனம், எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் அப்படியே உடைந்துபோகிறது.

எதிர்பார்க்காவிட்டால், கிடைக்காததை எண்ணி மனம் வருந்தவேண்டிய அவசியமில்லை. அற்ப ஏமாற்றங்களைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். எட்டு மணிக்கு ரயில் வரும் என்று எதிர்பார்த்துச் செல்லும் நாம், எட்டு என்பது எட்டரையாகி, ஒன்பதாகி, பத்தும் ஆகிவிட்டால் உடம்பில்தான் எத்தனை உஷ்ணம் ஏறுகிறது! குறிப்பிட்ட அந்த ரயிலில்தான் போகவேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டாகிவிட்டது. என்ன காரணத்தாலோ தாமதம். நியாயமான காரணம் இல்லாமல் ரயில் தாமதமாக வரவேண்டிய அவசியமே இல்லை என்பதும் தெரியும். அந்த சமயத்தில் மாற்று ஏற்பாடு எதுவும் செய்ய இயலாது.

என்ன செய்வது? காத்திருக்கத்தான் வேண்டும். மாறாக வெகுண்டு, ரயில்வே அதிகாரிகளிடம் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம். அப்போதைக்கு நம்மால் செய்ய முடிந்தது அதுதான். அதுவே ஒரு பேருந்து என்றால் அது வந்துசேர பல சாலை வழிகள் இருக்கின்றன. ஆனால் ரயில் அந்த ஒரு தடத்தில் மட்டும்தான் வரமுடியும். என்ன செய்வது? காத்திருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்வது?

மனம் குமைவதும், கோபப்படுவதும், அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவதும், அல்லது அப்படி வெளிக்காட்டி தன்னுடைய அத்தகைய பராக்கிரமத்தை விளம்பரப்படுத்திக்கொள்வதும், சம்பந்தமேயில்லாமல் உடன் வந்திருக்கக் கூடியவர்களிடம் கோபத்தை வீசுவதும்தான் - எதிர்பார்த்ததன் பலன்கள்!

இப்படி தவிர்க்க இயலாமல் காத்திருக்க வேண்டிய தருணத்தில், கோபப்பட்டு மனதையும், உடலையும் வருத்திக்கொள்ளும் நேரத்தில், தாமதமாக வரும் ரயிலால் தொடர் சங்கிலியாகத் தாமதமாகக்கூடிய விஷயங்கள் என்னென்ன என்று சிந்திக்கலாம்; அவற்றை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கலாம். அவற்றுக்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்யமுடியுமா என்று எண்ணலாம். மொத்தத்தில், ஏமாற்றத்துக்கும், அதன் விளைவான மன அழுத்தம் மற்றும் கோபத்துக்கும் மூலகாரணமான எதிர்பார்த்தலை இனி கை கொள்ளக்கூடாது என்ற உறுதிப்பாட்டுக்கு வரமுடிந்தால், அதுதான் சரி. அனுபவம்தானே அறிவு!

ஆக, நம் புலன்களை அலைக்கழிக்கவல்ல இச்சை எனும் உணர்வை மனதிலிருந்து அகற்ற வேண்டும். ரயில் உரிய நேரத்துக்கு வரவேண்டுமே என்ற தவிப்பை, இந்த இச்சையை நாம் மனதில் ஏற்றிக்கொள்ளாவிட்டால், புலன்கள் உஷ்ணமாவதைத் தவிர்க்கலாம்.அதாவது, ஆசைப்படுவதன் அல்லது எதிர்பார்ப்பதன் விளைவு துக்கமாகவே அமைகிறது. அதேபோல, பலனை எதிர்நோக்காமல் கர்மாக்களை இயற்றுவதால், எந்த விளைவுகளையும் நம்மால் இன்முகத்துடன் எதிர்கொள்ள முடியும், அப்படி எதிர்கொள்ளத் தேவையான காரணிகளையும் கண்டுணர முடியும்.

(கீதை இசைக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்