SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாயே மலைமகளே செங்கண்மால் திருதங்கச்சியே!

2022-08-16@ 15:01:38

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

அடியேன் முடை நாய்த் தலையே அபிராமிபட்டர் தன்னை இழிவுபடுத்தி இங்கே குறிப்பிடுகிறார்.  ஏனெனில் தான் செய்கின்ற வினையினாலேயே எல்லாம் நடக்கிறது என்று தன் முயற்சியை மட்டுமே நம்புகின்றவர்களை இதுவரை சேர்ந்திருந்தேன் என்பதையே எதிர்மறையால் குறிப்பிடுகிறார். சேர்ந்தால் தானே பிரிய முடியும். “பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்” - 3 என்பதிலிருந்து அவரின் உள்ளக் கிடக்கையை நாம் உணர்ந்து கொள்ளலாம். தெய்வபக்தி பாதியாகவும், மனித முயற்சி மீதியாகவும் கொண்டு இரு பக்கமும் மத்து சுழல்வதை போல தளர்வுற்றிருந்தேன். என்பதையே “ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி” - 7 என்று குறிப்பிடுகிறார்.

அழுக்குடைய நெஞ்சத்தை பெற்றிருந்தேன் என்று “என் நெஞ்சத்து அழுக்கையெல்லாம்” - 27 நீயே நீக்கியருள வேண்டும் என்கிறார். அறியாமை மிகுதியால் செய்வதறியாது செய்யத் தகாதன செய்தேன். என்பதை “நடுக்கடலுள் சென்றே விழினும்” - 30மனதிலே வஞ்சக எண்ணம் உடையவனாக இருக்கிறேன். உமையம்மை வழிபாட்டுக்குப் பொருந்தாத செயல்களை செய்கிறேன். “என் மனத்து வஞ்சத்து இருள்” - 36 அதை போக்க வேண்டுகிறார். உபாசனையில் கூறிய பயிற்சியை செய்யாமலிருந்தேன். “நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்” - 59 ஆசை மிகுதியாக உடையவனாய் நாய்போல் திரிபவளாய் இருந்தேன். “நாயேனையும்” - 61 “ஆசைக் கடலில் அகப்பட்டு” - 32

உன் பக்தனாக ஆவதற்கு எந்த விதமான தகுதிகளும் இல்லாத மனமுடையவனாய் இருந்தேன். ``உன் பத்தருக்குள் தர அன்று இவனென்று தள்ளத் தகாது’’ - 88 இத்தகைய பண்புகளால் ஆட்கொள்ளப்பட்டு தளர்வுற்ற மனதை உடைய இழிகுணங்களை இயல்பாக பெற்றதையே அடியேன் என்ற வார்த்தையால் தன்னைக் குறிப்பிடுகிறார்.

முடை


என்பதை இரண்டு பொருளில் பயன்படுத்துகிறார். அஸ்தி, சுக்லம், மாம்சம் என்ற எழுவகை பொருளால் முடையபட்ட இறைவனால் இணைக்கப்பட்ட உடல். இழிவு கருதி இங்கே குறிப்பிடுகிறார். “குடரும், கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே’’ - 48 என்பதனால் அறியலாம். முடைநாய்தலை என்பது சகிக்க முடியாத நாற்றத்தின் தன்மையைக் கொண்ட அருவருக்கத்தக்க வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் கொண்ட தூய்மையற்ற தனது தலையை ``முடை’’ நாய்தலை என்கின்றார்.

சால நன்றோ

ஒளி தன்மை கொண்டதாகிய தேவர்களின் தலை, புனிதமுற்ற சக்தி பீடம், பேராற்றலும் பெரும் தவமும் செய்து சிவலிங்கத்தையே விழுங்கியதனால், என்றும் புனிதமான மகிஷனின் தலை, அனைத்தையும் புனிதப்படுத்தும் கங்கையையும் அழியா தன்மைகொண்ட சந்திரனும் சிவபெருமான் தலையும் ஒத்து பார்க்க எவ்விதத்திலும் ஒவ்வாத சிறப்புற்ற தாழ்மையுற்ற இழிவான முடை நாற்றமுடைய தன் தலை உன் கால் பதிப்பிற்கு ஏற்ற இடமா? என்பதை தன்னை இழிவுபடுத்தி இறைவனின் கருணையையும் அருளின் மிகுதியையும் வலியுறுத்தவே “சால நன்றோ” என்கிறார்.

“நன்றோ” என்றதனால் இழிவும் உமையம்மையின் கால் படச்சிறக்கும் என்பதையே ``நன்றோ’’ என்று ஓங் காரத்தால் உணர்த்தினார். உமையம்மையானவள், தன் குழந்தையின் மீது கொண்ட கருணையினால் இழிவு கருதாமல் தேவர்கள் போன்றோரின் சிறப்பு கருதி முதன்மைபடுத்தாமல், ஆற்றல் கருதி ஆணவமலம் நீங்கி எளிமையாக பாரில் உன்னை சந்திப்பவர்க்கு எளிதாம் என்ற பண்பை தவம் இல்லா பாவங்களே மிக்க செய்த என்னை ஆண்டு கொண்ட கருணையின் சிறப்பை எண்ணி வியக்கிறேன் என்கிறார் பட்டர். அப்புறம், இது இல்லாவிட்டால் எவ்வாறு ஆகிவிடுவோம் என்று அஞ்சுகின்றார். இவ்வளவு சிறப்பினையும் உடையது உமையம்மையின் திருவடியே என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

நம்மில் சிலர் சிறுசிறு தவறுகளை செய்து, தாம் தகுதியற்றுவிட்டோம். தூய்மையற்றுவிட்டோம். மிகப்பெரியதாக வேத ஆகம முறைகளை எல்லாம் கற்று பூசனை செய்யாது பண்பற்றுவிட்டோம். மிகப்பெரிய பொருளை இறைவனுக்கு காணிக்கையாக்க செல்வமற்று இப்படி ஆகிவிட்டோம் என்று மனக்கலக்கம் கொள்ள வேண்டாம். எத்தகைய சிறுமையையும் நீக்கி, பாவத்தை போக்கி நம்மை ஆட்கொள்ள வல்லவள் என்று தன்னை முன்னிலைப்படுத்தி உமையம்மையின் அருளையும் அளவற்ற அவளின் கருணையையும் நமக்கு மறைமுகமாக அறுவுறுத்துகிறார் பட்டர்.  

நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய்; என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருதங்கச்சியே
அந்தாதியின் பாடல் எண் 61
முதலாக (ஆதியாக)

கவிகள் ஒரு கருத்தை அடுத்தவர்களுக்கு புலப்படுத்துவதற்கு யார் புரிந்து கொள்ளுகிறார்களோ அவர்களுக்குத் தெரிந்த பொருள்களைக் கொண்டே தன் கருத்தை விளக்க முற்படுகிறார்கள். அதில் அபிராமி பட்டரும் விதிவிலக்கல்ல நாய், பேய், தாய் என்ற இந்த மூன்றையும் கொண்டு மனித இயல்பையும் உமையம்மையின் சிறப்பையும் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியையும் மிக துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறார். உயர்ந்தவர்கள் தன்னை இகழ்ந்து கொள்வர். பிறரை இகழ மாட்டார்கள். அதுபோல   அபிராமி பட்டர் தன்னையே நாய் எனவும் பேய் எனவும் குறிப்பிட்டுக் கொள்கிறார்.

நாயேனையும்

இந்த வார்த்தையால் தன்னை இழிவுபடுத்தி கூறுவது போல் தோன்றினாலும் நாயின் சில குணங்களையே நாய் என்ற வார்த்தையால் கூறுகிறார். உயர்வு பண்பு ஆறும், இழிவு பண்பு ஆறும் ஒன்றாக இனணந்தவை நாயின் பண்புகள். அதை தெரிந்து கொள்வதென்பது இறையருளை பெற உதவுவது மற்றும் பெறுவதற்கு தடையாவது எதுவோ அதை அறிவது. பிற உயிரினங்கள் இருக்கும்போது மாணிக்கவாசகர், சுந்தரர் மற்றும் சிற்ப சாஸ்திரங்கள் கூட நாய் என்ற சொல்லை பயன்படுத்தி இறை ஆன்மா விளக்கத்திற்கு உதவுகின்றன. இனி பன்னிரண்டு குணங்களாக பிரித்து பார்ப்போம்.

இழிவுப் பண்புகள்

நாயானது தன் இடத்தை விடாது, அதுபோல், ஆன்மாவானது தான் தங்கி இருக்கும் கூட்டை விட விரும்பாது (உடல் மீது மிகுந்த பற்றுடன் இருக்கும்) இதையே ‘ஆசைக்கடலில் அகப்பட்டு’ - 32 என்றால் பட்டர். நாயானது அல்ப ஆயுளை கொண்டது. மானுட வாழ்க்கையில் ஆன்மாவை அறிந்துகொள்ளும் நேரம் குறைவு. அதுகுறித்து செயல்படும் நேரமும் குறைவு என்பதை ‘மாத்திரை போதும் மனதில் வையத்தார்’ - 67 என்று குறிப்பிடுகிறார். ஒரு நாயானது பதினோரு மைல் வரையில் மோப்ப சக்தியை  பயன்படுத்தி அறிய வல்லது. மானுட ஆன்மாவானது பஞ்சக்ரோஷ (ஆன்மா ஒடுங்கிய சமாதி ஷேத்திரங்கள் பஞ்சக்ரோஷ க்ஷேத்ரம் எனப்படும்) தூரம் வரை தன் இருப்பை உணர்த்த வல்லது. நாயானது மானுட முகம் பார்த்து அன்பு, பகையை அறியவல்லது.

மானுட ஆன்மாவானது, மிக குறைந்த அளவு இறையருளையும் ஆன்மாவையும் குறிப்பிட்ட எல்லையுடன் மட்டுமே அறிய வல்லது. நாயை பழகினால் பழகியவாறு செயல்படும். அதுபோல், மானுட ஆன்மாவிற்கு உதவி செய்யும் மனமானது பழக்கினாலன்றி இயல்பாக நல்இயல்பு உடையதல்ல, இந்த குறைபாட்டையே பட்டர் ‘நெஞ்சம் பயில’ - 59 என்கின்றார். நாய் கக்கியதையே உண்ணும். அதுபோல், மானுட ஆன்மாவானது தன் வினையாகிய கர்ம பலனையே புசிக்கும் என்பதையே ‘கரும நெஞ்சால்’ - 3 என்கிறார் பட்டர்.

உயர்வு பண்புகள்

*நாயானது தன்னை காக்கும் எஜமானை நன்கு அறியும். ஆன்மாவானது தனக்கு உதவிய இறைவனை நன்கு அறிய வேண்டும்.

*நாயானது தன் எஜமானனை தவிர மற்ற யாரை கண்டாலும் குரைக்கும். தன் எஜமானனின் உத்தரவின் பேரில் மட்டுமே நிறுத்தும். நன்கு பாதுகாக்கும். அதுபோல், இறை உணர்வையும், அறத்தையும் நன்கு பாதுகாக்க வேண்டும். அதற்கு, முரணான பண்பை மனதை விட்டு புறம் தள்ளி விட வேண்டும்.

*நாயானது ஒவ்வொரு மனிதனின் வாடையை கொண்டு தனித்தனியாக பிரித்தறியும் தன்மை கொண்டது. அதுபோல், உபாசகர் தன் உபாசனையின் பலத்தால் தேவதைகளின் தனித்தன்மையை பிரித்தறியும் பண்பு கொண்டவன்.

*நாயானது மனிதர்களிடமிருந்து சுமார் நூற்றி ஐம்பது வார்த்தைக்கு மேல் கற்றுக் கொள்ளும். அதுபோல், உபாசகர் தம் கருத்தை தேவதைக்கு உணர்த்தவும், தேவதையின் கருத்தை தான் உணரவும் (முழுமையாக அல்ல) முடியும்.

*நாயானது இறந்த ஆன்மாவை பார்க்கும் வல்லமை பெற்றது. மனிதனின் இறப்பை முன்னமே அறிய வல்லது. உபாசகனானவன், தேவதையை காணும் சக்தி பெற்றவன். தனக்கு வரும் நன்மை தீமையை தேவதையின் உதவியால் முன்னமே அறிந்து விலக்கி கொள்ளும் ஆற்றல் உடையவன்.

*சிற்ப சாஸ்திரத்தை பொறுத்தவரை, நாயானது வேதமாக கருதப்படுகிறது. தத்தாத்ரேயர் சிலையில் உள்ள நாய்கள் நான்கும், வேதத்தை குறிக்கும். வேதம் என்பது ஆத்ம ஞானத்தை குறிக்கும்.

*பைரவர் சிலையில் உள்ள நாயானது சிவஞானத்தை சூட்டுவது. கங்கை அருகில் போடப்படும் நாயானது நதி செல்கின்ற பாதையை குறிப்பிடும். நாய், தான் சென்ற வழியை அறிந்து மீண்டும் அதே வழியில் வர வல்லது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே “நாயேனையும்” என்கிறார். வழிபாட்டிற்கு உடன்பாட்டு பண்புகளையும், தடை பண்புகளையும் “நாய்” என்ற பொருளில் சொல்லியுள்ளதை அறியலாம்.

இங்கு ஒரு பொருளாகஉமையம்மையானவள், அபிராமிபட்டரை ஒரு பொருளாக மதித்து அருள் செய்தாள் என்று தகுதி குறைவான தனது பண்பினையும், தகுதியினாலே மிக மிக உயர்ந்த உமையம்மையினுடைய பண்பினையும் ஒப்பிட்டு சிந்திக்கிறார். அதை ஒரு உதாரணத்தினால் உணரலாம். மலையானது எந்த அளவிற்கு மிக உயரமானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு, நிலப்
பரப்பானது தாழ்வானதாக இருக்கிறது. இதில், உமையம்மையின் கருணையை மலை எனவும் அபிராமிபட்டரின் இயல்பை நிலம் எனவும் நாம் கருதினால் அதன் வேறுபாடு தெளிவாக தெரியும். எந்த அளவிற்கு அபிராமி உயர்ந்தவளோ, அந்த அளவிற்கு தாழ்ந்தவராக தன்னை கருதுகிறார். ‘அழியாத குணக்குன்றே’ - 95 என்பதனால் இதை நன்கு உணரலாம்.

நயந்து வந்து

அபிராமியானவள், அகில உலகிலும் பரவி (அவ்யக்தம்) தோன்றா நிலையில் இருப்பவள். அபிராமி பட்டரோ, அதற்கு நேர்மாறாக வியக்தமாக ஓர் இடத்திலே குறுகிதோன்றும் படி இந்த பூமியில், பாரத தேசத்தில், தமிழகத்தில், சோழ நாட்டில், திருக்கடையூர் என்ற ஒரு குறுகிய பிரதேசத்தில் ஒரு இடத்தில் சூட்டப்படுபவராய் மானுட யாக்கை உடையவராய் இருக்கிறார். ‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத’ - 87 ‘ஒன்றாய்’ - 56 இருப்பதாக திகழ்கின்ற உமையம்மையானவள், தனது கருணையினால் நினைவிற்கு எட்டும்படியாக ‘சொல்லும் பொருளுமாக’ - 28 கண்முன்னே தோன்றும் பொருளாக குருகி வந்து அருள் செய்கிறாள்.

எத்தன்மையினாலும் மிக சிறிய பட்டருக்காக, எத்தன்மையினாலும் மிக பெரிய உமையம்மையானவள் தனது கருணையினால் தோன்றியதையே “நயந்து வந்து” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். “இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து” என்ற சொல்லால் எல்லையற்ற உமையம்மையின் கருணையை, தான் அடைந்ததை அனுபவித்ததை, தன்னிடத்தில் இல்லாத தகுதியை நன்கு அறிந்து தனக்கு அருளியதை நினைத்து வியக்கிறார்.

மேலும், தான் எந்த வகையினாலும் முயற்சி செய்தும் அடைய முடியாத தூரத்தை கொண்டது உமையம்மையினுடைய அருள் முயற்சியினால் மட்டும் சென்றடையக் கூடியதாக இருந்தால், உமையம்மையின் அருளின் மதிப்பு முயற்சியை விட குறைந்ததாக ஆகிவிடும். அப்படி அல்ல என்பதை நன்கு உணர்த்துவதற்கே உமையம்மை தானே வந்து கருணை செய்பவள் என்பதையே ``நயந்துவந்து” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்

மூன்று நிலைகளில் நின்று தன்னைப் பற்றி யோசித்து, உமையம்மையிடம் இந்த வார்த்தையை குறிப்பிடுகிறார். அதை ஒவ்வொன்றாய் காண்போம். தேவர்கள் பதவியில் ஆட்சி செய்ய உதவிபுரியும் அபிராமியின் கருணயை நோக்கி பட்டர் ‘படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்’ - 26 என்கிறார். ஞானமே வடிவாகிற அபிராமியின் உண்மைத்  தன்மையை நன்கு அறிந்தால் அன்பு செய்கின்ற ரிஷிகள், முனிகள் போன்றவர்கள் இதையே பட்டர் ‘மாய முனிவரும்’ - 4 என்கிறார்.

அனைத்து துன்பங்களையும் அபிராமியே தீர்ப்பாள் என்று கருதி குருவினிடத்து பெற்ற மந்திர ஆலோசனையின்படி உபாசனையின் வழி பின்பற்றப்படும் ஆசார அனுஷ்டான வைதீக நெறிகளை எல்லாம் பின்பற்றி தன்னைத் தேடி வந்த பக்தர்களையே பட்டர் `மனிதரும்’ - 4 என்கிறார். இப்படி உமையம்மையின் அருளைப் பெற தகுதியுடையவர்கள் பலர் இருந்த போதும் பதவிக்குரிய தேவர்களாகவோ, உமையம்மையை உணர்ந்த ஞானியோ, தன்னைத் தேடி வந்த தேவர்களாகவோ, மனிதனாகவோ தான் இல்லை என்பதை எண்ணிப் பார்க்கிறார்.

‘‘வல்லபம் ஒன்று அறியேன் சிறியேன் - 66'' ‘அறிவொன்றிலேன்’ - 81 என்று தான் எந்த விதத்திலும் உமையம்மையின் அருளை பெற தகுதி இல்லாதவன். ஏனென்றால், அதற்கான உபாசனை முதலிய செயலையோ, ஞானத்தையோ அறிய ஆத்ம ஞானம் முதலிய சிறப்பான பயிற்சியையோ, உடலால் செய்யும் ஆசனம் முதலிய பயிற்சியையும், உள்ளத்தால் செய்யும் யோகம் முதலிய பயிற்சியையும் செய்யவில்லை என்பதை நன்கு உணர்கிறார் அறிகிறார்.

‘நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்’ - 59 என்பதனால் உமையம்மை தனக்கு நினைவின்றி அருள் செய்து இருக்கிறாள்.நன்கு நினைவு இருக்குமாயின் தன் குற்றம், குறை, இழிவு கருதி விலக்கி இருக்கக்கூடும். தகுதியானவர்களாகிய தேவர்கள், ரிஷிகள், உபாசனை மனிதர்கள், துறவியர்கள் இவர்களை தேடி அருள் சென்றடையகூடும். அப்படி அவர்கள் அருகில் இருக்கும் போதும் அவள் அருளானது தகுதியே இல்லாத தன்னை வந்து அடைந்ததை கண்டபிறகும் கூட சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது என்பதை “நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்” என்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

 • INS_ship

  நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்