SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீ விமானமே சதாசிவலிங்கம்

2022-08-10@ 17:33:57

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தஞ்சைக் கோயிலின் நெடிதுயர்ந்த ஸ்ரீவிமானத்தின் புறத்தோற்றம் சதாசிவலிங்கமாக வடிக்கப்பெற்றதாகும். சிவலிங்க பாணங்களில் சிவனாரின் ஐந்து முகங்களைச் சிற்பமாகக் காட்டும் மரபு இந்திய நாடு முழுவதும் இருந்துள்ளது. பஞ்சமுக லிங்க அமைப்பில் நான்கு திக்குகளிலும் முறையே தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் என்னும் நான்கு முகங்களை மட்டும் உருவ அமைதியில் காட்டி ஈசான முகத்தை லிங்கத்தின் உச்சிப் பகுதியாக (ஊர்த்துவ முகமாக) கருதிப் போற்றுவர்.

 இத்தகைய லிங்கங்கள் திருவதிகை, காளத்தி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் இன்றும் உள்ளன. சிவனாரின் ஐந்து முகங்களை லிங்கங்களில் காட்டி அவரைச் சதாசிவமூர்த்தி என்றும் போற்றுவர். எலிபெண்டா குடைவரையில் திரிமூர்த்தி எனக் குறிக்கப்பெறும் சுவரில் காணப்பெறும் மூன்று முகவடிவம் சிவனாரின் திருமுகங்களான தத்புருஷம், அகோரம், வாமதேவம் என்பவையேயாகும்.

வடபுலத்துச் சிற்பங்களில் வாமதேவ முகத்தினைப் பெண்முகமாகவே காட்டுவர். ஏனெனில் சிவபெருமானின் வாமபாகத்தில் உறைபவள் உமாதேவி என்பதால் அவ்வாறு காட்டுவர். தஞ்சைப் பெரிய கோயிலின் ஸ்ரீவிமானமே சதாசிவ லிங்கம் என்று மகுடாகமத்தின்படி குறிப்பிட்டோம். இதனைக் காட்ட மாமன்னன் இராஜராசன் சிவபெருமானின் ஐந்து உருவங்களையும் தனித்தனியே வடித்து அவரவர்க்கென குறிப்பிடப்பெறும் திக்குகளில் அமைந்த கோஷ்டங்களில் (மாடங்களில்) பிரதிஷ்டை செய்து நாளும் வழிபாடு செய்துள்ளான். மகுடாகமம் கூறுவதாவது;

அகார: ஸத்யவக்த்ரம் ஸ்யாதுகாரம் வாமவக்த்ரகம்|
மகாரோ கோரவக்த்ரம் ஸ்யாத் பிந்துஸ்தம் புருஷாநநம்|
நாதஸ்த்வீசாநவக்த்ரம் ஸ்யாந் நாதாதீதம் நடேச்வரம்||


இதன் பொருளாவது; “நாதாதீத நடேசர்க்குரிய சக்தியோசாத முகம் அகாரமாயும், அவருடைய வாமதேவ முகம் உகாரமாயும், அகோரமுகம் மகாரமாயும், தற்புருஷ முகம் விந்துவாயும், ஈசான முகம் நாதமாயும் உள்ளன” என்பதாகும். எனவே, இந்த விமானமே பிரணவ வடிவில் உள்ளது. இத்தகையதொரு அமைப்பு உலகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் கிடையாது. சதாசிவ வடிவத்தின் ஐந்து மூர்த்திகளுமே ஸ்ரீ விமானத்தில் வெளி ஆவர்ணத்தில் எழுந்தருளி நின்று அருள்வதால் அந்த ஸ்ரீ விமானமே சதாசிவலிங்கமாக, மகாலிங்க வடிவில் காட்சி நல்குகின்றது. பல மைல் தூரத்திலிருந்து வானளாவி நிற்கும் அந்த விமானத்தைக் காணும்போதே அது சதாசிவலிங்க வடிவம் என உணரலாம்.

அர்த்த மண்டபத்தினுள் திகழும் ஸ்ரீ விமானத்துக் கீழ்த்திசைக் கோஷ்டத்தில் மேலிரு கரங்களில் மான் மழு ஏந்தியவராக நின்ற கோலத்தில் தத்புருஷமூர்த்தி காணப்பெறுகின்றார். அவர் வலக்கரமோ கடக முத்திரையுடன் உருத்திராக்க மணி மாலையைப் பிடித்துத் திகழ்கிறது. இடக்கரத்தில் மாதுளம்பழம் ஏந்தப் பெற்றுள்ளது. ஸ்ரீ விமானத்தின் தென்புற இரண்டாம் கோஷ்டத்தில் அகோரமூர்த்தியின் திருவுருவம் இடம்பெற்றுள்ளது. எட்டுக் கரங்களுடன் திகழும் இம்மூர்த்தி முன்னிரு கரங்களில் திரிசூலமும் கபாலமும் ஏந்தியுள்ளார்.

முகத்தில் எடுப்பான மீசை காணப்பெறுகின்றது. அவர் உடல் முழுதும் பாம்புகளே அணிகலன்களாக விளங்குகின்றன. விமானத்தின் மேற்குத் திசை கோஷ்டத்தில் சத்யோஜாதமூர்த்தி நின்ற கோலத்தில் அருளுகின்றார். பின்னிரு கரங்கள் மான் மழு ஏந்த, முன்னிரு கரங்கள் அபய வரதநிலை காட்டுகின்றன. இதே விமானத்தின் வடபுறக் கோஷ்டமொன்றில் வாமதேவ மூர்த்தி காணப்பெறுகின்றார்.

மேலிரு கரங்களில் மானும் மழுவும் விளங்க, கீழ் இரு கரங்களில் வாளும் கேடயமும் உள்ளன. வாமபாகம் தேவிக்குரியது என்பதால் இவ்வட திசையில் உள்ள மற்ற கோஷ்டங்களில் முறையே கங்கையை சடையில் ஏந்தும் கங்காதரர், உமையொருபாகர், கௌரி பிரசாதமூர்த்தி என தேவியுடன் இணைந்து திகழும் மூர்த்திகளின் திருவுருவங்களே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஸ்ரீ விமானத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கோஷ்டத்தில் ஈசானமூர்த்தியின் திருவுருவம் இடம்பெற்றுள்ளது. இங்கு இம்மூர்த்தி இரண்டு கரங்களுடன் மட்டும் திகழ்கின்றார். வலக்கரத்தில் நீண்ட திரிசூலம் உள்ளது. இடக் கரமோ தொடை மீது இறுத்தும் பாவனையில் உள்ளது.

இத்திருக்கோயிலில் காணப்பெறும் இராஜராஜ சோழனின் கல்வெட்டுச் சாசனமொன்றில் அப்பேரரசன் இக்கோயிலுக்கென அளித்த பஞ்சதேகமூர்த்தி என்ற செப்புத் திருமேனி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.“ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் யாண்டு இருபத்தொன்பதாவது வரை எழுந்தருளுவித்த செப்புத் திருமேனி. உடையார் கோயிலில் முழத்தால் அளந்து கல்லில் வெட்டின பஞ்சதேக மூர்த்திகளில் பாதாதி கேசாந்தம் இருபத்திரு விரலே நான்கு தோரை உசரத்து பத்து ஸ்ரீ ஹஸ்தம் உடையாராகக் கனமாக எழுந்தருளுவித்த திருமேனி ஒருவர்.

இவரோடுகூட நாலு முகத்திலும் பாதாதிகேசாந்தம் பதினால் விரல் உசரத்து நந்நாலு ஸ்ரீ ஹஸ்தங்கள் உடையார்களாக கனமாக எழுந்தருளுவித்த திருமேனி நாலு இவர் எழுந்தருளி நின்ற மூவிரலேய் நான்கு தோரை சமசதுரத்து பத்மபீடம் ஒன்று” என்பதே அக்கல்வெட்டாகும். தென்புறத் திருச்சுற்றின் தூண் ஒன்றில் தற்போது இக்கல்வெட்டு காணப்பெற்றாலும், அவன் அளித்த அந்த பஞ்சதேகமூர்த்தி என்ற அத்திருமேனியினை நாம் இழந்துவிட்டோம்.

இக்கல்வெட்டின் அடிப்படையில் கோட்டோவியமாக அத்திருமேனியின் உருவத்தை இங்கு தந்துள்ளோம். திருஞானசம்பந்தர் திருவாஞ்சியப் பதிகத்தில் சிவபெருமானை  “உடல் அஞ்சினர்” எனக் குறிப்பதும், திருநாவுக்கரசர் திருவதிகைப் பதிகத்தில் அஞ்சினால் பொலிந்த சென்னி எனக் குறிப்பதும் இத்திருவடிவத்தினையே ஆகும். திருமூலர் திருமந்திரம் ஏழாம் தந்திரத்தில் சதாசிவலிங்கத்தின் சிறப்புகள் பற்றிக் கூறியுள்ளார். சதாசிவமான ஐந்துடல் மூர்த்தி பற்றியும், அவருக்குரிய தசாயுதங்கள் பற்றியும்,

அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சாயுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே (திருமந்திரம் - 1736)

என்று கூறியுள்ளார்.

மேலும்,சக்திதான் நிற்கின்ற ஐமுகஞ் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சக்தி
பச்சிமம் பூருவம் தற்புருடனுரை
தெற்கில் லகோரம் வடகிழக் கீசனே (திருமந்திரம் - 1741)


என்ற திருமூலரின் திருவாக்கின் காட்சி நிலைதான் தஞ்சை இராஜராஜீச்சரத்து கோஷ்டங்களில் காணப்பெறும் பஞ்சமூர்த்திகளின் திருவடிவங்களாகும்.கேரளாந்தகன் திருவாயில் என்னும் முதல் இராஜகோபுரத்தின் முதற்தளத்தின் வடக்கிலும், மேற்கிலும் சுதை உருவச் சிற்பங்களாக இரண்டு சதாசிவ வடிவங்கள் உள்ளன. சோழர் காலத்தில் இச்சுதை சிற்பங்களைப் பின்நாளிலும், அண்மையிலும் திருத்தம் செய்துள்ளனர். இருகால்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்துள்ள சதாசிவர், ஆயுதங்கள் ஏந்தியவாறு பத்துத் திருக்கரங்களுடன் காட்சியளிக்கின்றார். நான்கு திக்குகளிலும் நான்கு திருமுகங்கள் விளங்க ஐந்தாவது முகம் மகுடம் போன்று அந்நான்கு தலைகளுக்கு மேல் விளங்குகின்றது. இரு கால்கள், பத்துக்கரங்கள், ஐந்து முகங்களுடன் ஓருடல் மூர்த்தியாக
இத்திருமேனிகள் இரண்டும் காட்சி நல்குகின்றன.

இத்திருமேனி பற்றி;
கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடுமுகம் ஐந்து செங்களிண் மூவைந்து
நாடுஞ் சதாசிவ நல்லொளி முத்தே
(திருமந்திரம் 1730)


என்ற பாடல் வழி திருமூலர் எடுத்துரைத்துள்ளார்.தஞ்சைப் பெரியகோயில் சதாசிவ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பெற்றதால் பஞ்சதேஹ மூர்த்தி செப்புத் திருமேனி, ஸ்ரீ விமானமே சதாசிவ லிங்கம் எனக் காட்டும் ஐந்து மூர்த்திகளுடன் உள்ள கோஷ்டங்கள், திருக்கோபுரத்தில் இரு இடங்களில் மகாசதாசிவ சுதை உருவங்கள் ஆகியவை இடம்பெறலாயின.
சதாசிவலிங்கமாக, தூலலிங்கமாக, மகாலிங்கமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஸ்ரீ விமானத்தைக் காத்து நிற்கும் துவாரபாலகர்கள் பதின்மரும் தசாயுத புருடர்களே.

அம்மூர்த்திகளில் சக்தி, சூலம், மழு, வாள், துவஜம் என்னும் ஐந்து ஆயுத மூர்த்திகளின் வடிவங்களே தற்போது சிதைவு பெறாமல் உள்ளன.மற்ற ஆயுதங்களான கதை, சக்கரம், அங்குசம், பாசம், வஜ்ரம் ஆகியவைகளுக்குரிய மூர்த்திகளின் கரங்கள் பின்னாளில் சிதைக்கப்பெற்று, மீண்டும் அவற்றைச் சுதையால் திருத்தியவர்கள் அவரவர்க்குரிய ஆயுதங்களை இடம்பெறச் செய்யாமல் செய்துவிட்டனர்.

ஆனால், இக்கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டு பஞ்சாயுதமூர்த்தியின் செப்புத் திருமேனி பற்றி விவரிக்கின்றது. அண்மையில் திருப்புகலூர் சிவாலயத்துப் பிரகாரத்தில் புதைந்திருந்து வெளிப்பட்ட செப்புத் திருமேனிகள் வரிசையில் தசாயுதமூர்த்திகளின் உருவங்கள் கிடைத்துள்ளன. அவை இராஜராஜன் காலத்தியவையாகும்.தஞ்சைப் பெரியகோயிலை இனி நாம் தூரத்திலிருந்து தரிசிக்கும்போது அதனைக் கட்டடம் எனக் கருதாது, சதாசிவலிங்கமாக, மகாலிங்கமாகக் கண்டு வணங்கிப்போற்றுவோம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்