SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைணவத்தில் பேதம் இல்லை!

2022-08-10@ 10:25:20

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஆளவந்தார் அவதார விழா 10.8.2022

இராமானுஜருக்கு முன்னாலே, வைணவத்தை, பரப்பிய இருவருள் முக்கியமானவர் நாதமுனி. அவரிடமிருந்துதான் வைணவ ஆசாரிய பரம்பரை தொடங்குகிறது. அதற்குப் பிறகு அவருடைய மகன் வயிற்றுப் பெயரர் யமுனாச்சார்யார் என்கின்ற ஆளவந்தார் நாதமுனிகளுக்கும் பின்னால் வைணவ தத்துவத்தை,  உலகெங்கும் பரப்பி ராமானுஜரிடம் கொடுத்தவர் ஆளவந்தார். அவர் மட்டும்  இல்லாவிட்டால் பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரமே இல்லாமல் போயிருந்திருக்குமே? பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தைக் காப்பாற்றி கொடுத்ததன் மூலம், திவ்ய தேசங்களை எல்லாம் காப்பாற்றிக் கொடுத்தார். நாம் நுட்பமாக கவனிக்கின்ற பல தத்துவ போராட்டங்கள் அவருடைய வாழ்க்கையிலே நிகழ்ந்தன. வாதப்போர்கள் நிகழ்ந்தன. அத்வைதத்துடன் போர் நிகழ்ந்தது. வேத மறுப்பாளர்களுடன் போர் நிகழ்ந்தது. அதையெல்லாம் வென்றார்.

பின்னால் வருகின்ற ஆசாரியர்கள், தத்துவ தரிசன விளக்கத்தில் எந்தவித சங்கடமும் குழப்பமும் அடையக்கூடாது என்பதற்காக, ஆளவந்தார் செய்த மகத்தான காரியத்தை, இன்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொதுவாகவே வைணவத்தில், நாம் ஆழ்ந்து கவனிக்கின்ற பொழுது ஒரு ஆச்சாரியன் எப்படி வாழ்ந்து வந்தார் என்பதை வைத்து, அவர் எந்த கொள்கையை என்ன கருத்தை, தமக்கு அடுத்து வருபவருக்கு சொல்ல நினைத்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அவருடைய வாழ்க்கை முறை, அவர் அவ்வப்பொழுது சொல்லிய சில விளக்கங்கள், இவற்றை வைத்து ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது இந்த வர்ணத்தை சேர்ந்தவன்தான் வைணவன் ஆக முடியும். அவனுக்கு மட்டும்தான் மோட்சம் கிடைக்கும். இவன்தான் பகவானின் அபிமானத்தைப் பெற முடியும். என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லை என்ற கோட்பாட்டை வைணவத்தின் சிறப்பாக வளர்த்தெடுக்கிறார் ஆளவந்தார். எம்பெருமானுக்கு, யாரெல்லாம் தொண்டர்களோ, அவர்களெல்லாம் கொண்டாடத்தகுந்தவர்கள் என்கின்ற ஆழ்வார்கள் காட்டிய வழியை எடுத்துக்கொண்டு அதற்கு சேர தன்னுடைய வாழ்க்கை முறையை, அனுஷ்டானமாகக் கொண்டார்.

ஒரு ஆச்சாரியனுக்கு, இரண்டு விஷயங்கள், மிக முக்கியமானது. ஒன்று, ஞானம். மற்றொன்று அந்த ஞானத்துக்கு சேர்ந்த அனுஷ்டானம். அந்த அடிப்படையிலே, ஆளவந்தார் ஞானத்திலே சேர்த்தியான அனுஷ்டானத்தைக் கடைபிடித்து வந்தார் என்பதை, அவரைப் பற்றிய குரு பரம்பரைக் கதைகளிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு உதாரணம் தான் மாறனேரி நம்பிகளை அவர் சந்தித்தது. அவரைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டது.

ஒரு சாதாரண விவசாயி, மதியம் வெயிலில் திருமண் அணிந்துகொண்டு, கடுமையான விவசாய வேலையை செய்துவிட்டு, சேற்று மண்ணை, மண் கலயத்தில் கலந்து பருகுவதைப் பார்க்கிறார். “ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று விசாரிக்கின்ற போது, ‘‘மண்ணை மண் உண்கிறது”, என்று சொன்ன பதிலைப் புரிந்து கொண்டு அவரை தனது பிரதான சீடர்களில் ஒருவராகக் கொள்கிறார். அவர்தான் காலட்சேபகூடங்கள் அமைத்து, அதிலே பல சீடர்களை வைத்துக் கொண்டு, கலந்துரையாடுவது என்பது போன்ற  விவாத அரங்கை ஏற்படுத்தியவர்.

ஆழ்வார்களின் பிரபந்த ஆராய்ச்சி, வேத உபநிடத ஆராய்ச்சி, வைணவத் தத்துவ ஆராய்ச்சி என பலவும் அந்த விவாத அரங்கில் நடைபெற்றன. அதன் மூலமாக வைணவ தத்துவ தரிசனம் விளக்கம் பெற்றது. ஐயங்கள் அகன்றன. குழப்பங்கள் நீங்கின. ஆளவந்தாருக்கு நுகர்வினையாக (பிராரப்தம்) கொடுமையான ஒரு நோய் வந்தது. முதுகில் வந்த ராஜ பிளவை நோயினால் மிகுந்த துன்பப்பட்டார். எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், அப்பொழுது மாறனேரி நம்பிகள் அந்த நோயை ஆசாரிய பிரசாதமாக ஏற்றுக்கொண்டார். அந்த மாறனேரி நம்பிகளை, நிகரற்ற வைணவராகக் கருதிய ஆளவந்தாரின் மற்றொரு சீடரான பெரிய நம்பிகள், அவரை கடைசிவரை அன்புடன் பாதுகாத்தார்.

அவர் பரகதி அடைந்தபொழுது, உயர்ந்த ஒருவருக்கு, செய்ய வேண்டிய, அத்திம சஸ்காரங்களை (திருமஞ்சனம், இயல் சற்று, பிரம்ம ரதம்) செய்தார். இதுதான் ஆளவந்தாரின் மனதுக்கு உகந்த ஒரு ஆசாரியை கைங்கரியம் என்று பெரியநம்பிகள் நினைத்தார். தம்முடைய சீடர்களின் மூலம் ஆளவந்தார் சொன்ன உபதேசம் இதுதான். பிரபன்னனுக்கு ஜாதி இல்லை. பிரபஞ்சனுக்கு குலம் இல்லை. ஆளவந்தாரின் முதல் உபதேசம் இதுதான். இதை எங்கிருந்து அவர் எடுத்தார்?

ஆழ்வார்களின் அருளிச் செயலில் இருந்து எடுத்தார். திருப்பல்லாண்டிலே பெரியாழ்வார் சொன்ன உபதேசம்தான். ஒருவன் பிறந்த பண்டைய குலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவன் வைணவ நெறியைத் தழுவி, ஆச்சாரியனுக்கும், எம்பெருமானுக்கும் ஆட்பட்ட பிறகு, அவனுக்கு ``ஸ்ரீவைஷ்ணவன்’’ என்கிற ஒரே ஒரு குலம்தான் இருக்க வேண்டும். அது தொண்டுக்கே கோலம் பூண்ட குணம். கைங்கரிய குலம். தொண்டர் குலம். இந்த குலத்தில் எந்த பேதங்களும் இல்லை. அதைத்தான் திருமங்கை ஆழ்வார், தன்னுடைய பெரிய திருமொழி முதல் பதிகத்தில் பின்வரும் பாசுரத்திலே அழுத்தமாகச்  சொல்லுகின்றார்;

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்

பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
இதை தெளிவு படுத்தியவர் ஆளவந்தார்.

இராமானுசரின் முதன்மை குரு இவர் என்பதும், திருமலையில் திருவேங்கடவனுக்குண்டான கட்டிய பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரைக்கொண்டே இன்றும் யமுனைத்துறை என்று அழைக்கப்பட்டுவருகிறது.

மகத்தான சீடர் குழாம் கொண்டவர்

பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெயிவவாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈஸ்வராண்டான், ஜீயராண்டான் ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவபெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்க பெருமாள் அரையர் (மணக்கால் நம்பியினுடைய சிஷ்யர் மற்றும் ஆளவந்தாருடைய திருக்குமாரர்), திருக்குருகூர் தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, கோவிந்த தாசர் (வடமதுரையில் அவதரித்தவர்), நாதமுனி தாசர் (ராஜ புரோஹிதர்), திருவரங்கத்தம்மான் (ராஜ மஹிஷி).

ஆளவந்தார் அருளிச்செய்தவைசது:
ஸ்லோகீ, ஸ்தோத்ரரத்னம், ஸித்தி த்ரயம்,
ஆகம ப்ராமாண்யம், கீதார்த்த சங்ரஹம்பரம
பதித்த இடம்: திருவரங்கம்


அவருடைய அவதாரம் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. ஆளவந்தார் அவதார உற்சவத்தை பல திவ்ய தேசங்களிலும் கொண்டாடுவார்கள். குறிப்பாக அவர் அவதரித்த காட்டுமன்னார் கோயிலில் பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு, பத்தாம்நாள் அவருடைய அவதார தினத்தில் சாற்று முறை நடைபெறும். அது இவ்வாண்டு ஆடி 25, (10.8.2022) நடைபெறுகிறது.

தொகுப்பு: சங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்