SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி மாதமும் அம்மன் அருளும்!

2022-08-05@ 10:12:56

நன்றி குங்குமம் தோழி

ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப வளர்ச்சிக்காக  அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான். ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் அந்த மாதம் முழுவதும் திருவிழா கோலாகலமாக காணப்படும். ஆடி மாதம் அம்பிகை பிறந்த மாதம். இம்மாதம் அம்பிகை தனது அருள்ஒளியை முழுமையாக பரிபூரணமாக மக்களுக்கு அள்ளித் தருவாள். அதனால்தான் ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும். நமது வாழ்வியல் நெறிகளோடும் முறைகளோடும் அம்மன் விழாக்கள் அமைந்து இருப்பது முக்கியமாகும். பண்டைய காலத்தில் இருந்து இன்று வரை ஆடி மாத விழாக்கள் பெண்களின் வாழ்க்கையுடன் இணைந்துள்ளது. அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம் விதமான வழிபாடுகள் நடத்தப்படும். சக்தி வழிபாடு என்பது மிக மிக பழமையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு’ என்றே கூறினார்கள்.

உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார். “ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார். அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டர்.

கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும். வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் உகந்த நாளாகும்.

அதிலும் முழு பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம். வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமிபட்டர். லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லோருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது. ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும்.

அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும். பெரும்பாலான கோவில்களில் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ்வார்த்து படைத்து பிறகு அதை பக்தர்களுக்கு தானமாக விநியோகம் செய்வார்கள். அம்பிகைக்கு முருங்கை கீரை, தண்டு கீரை மிகவும் பிடித்த உணவு. எனவே அம்மன் படையலில் இந்த 2 கீரைகளும் தவறாமல் இடம் பெற வேண்டும். சில ஊர்களில் கூழ் தயார் செய்த பிறகு கருவாட்டு குழம்பையும் அதனுடன் வைத்து படைப்பார்கள்.

தொகுப்பு: பிரியா மோகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்