SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

இந்த வார விசேஷங்கள் :ஆடிப்பெருக்கு

2022-08-01@ 13:54:46

1-8-2022 - திங்கள்  நாகசதுர்த்தி

ஆடி அல்லது ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். பொதுவாக சதுர்த்தி நாள் விநாயகருக்கு உரியது என்றாலும் இந்தக் குறிப்பிட்ட சதுர்த்தியை நாகங்களுக்கு உரிய நாளாக கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு. ஒருமுறை காட்டில் ஒரு பையனை நாகம் தீண்டியது. அவன் இறந்து போனான். அதைக் கண்டு அவனுடைய சகோதரி துடித்தாள். தன்னுடைய சகோதரனுக்கு உயிர் தரும்படி அவள் நாகராஜனை வேண்டிக் கொண்டாள். அதற்காக விரதம் இருந்தாள். அந்த விரதத்தின் பயனாக அந்தப் பெண்ணின் சகோதரன் மறுபடியும் உயிர் பெற்றான். அந்த நாள்தான் நாகசதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர். இது பல பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு விழா. நம்மூரில் பெண்கள் நாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் வழிபாடு நடத்துகின்றனர் அல்லது அம்மன் கோயிலில் பாம்பு புற்றுக்கு படையல், பூஜை செய்து வழிபடுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் மற்றும் வடமாநிலங் களில் இது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாகத்திற்கு என்று சில கோயில்கள் உள்ளன. தெற்கே நாகர்கோவில் என்ற ஒரு ஊர் உண்டு. நாகப்பட்டினத்திலும், கும்பகோணத்திலும் நாகநாதர் கோயில்கள் உண்டு. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பொதுவாகவே ஜாதகங்களில் ராகு கேது எனும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறவர்கள், நாக வழிபாடு செய்வது அவசியம். அரச மரத்தடி, வேப்பம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள நாகப்பிம்பங்களுக்கு பால் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் கட்டி பூஜை செய்யலாம். திருப்புல்லாணி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

2-8-2022 - செவ்வாய்  கருட பஞ்சமி

ஆடி அமாவாசைக்கு அடுத்து வருகின்ற ஐந்தாவது திதி பஞ்சமி திதி. இந்த பஞ்சமி திதியை கருட பஞ்சமி என்று கொண்டாடுகின்றனர். இது கருடனின் ஜெயந்தி விழாவாக பல வைணவக் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. கருடன் எம்பெருமானுடைய வாகனம். கருட சேவை விழா என்பது பெரும்பாலான பெருமாள் கோயில்களிலும் நடக்கக்கூடிய பிரசித்தி பெற்ற விழா. ஒரு பிரம்மோற்சவத்தில் கருட சேவை விழாவை தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியம். உயரே வானத்தில் வட்டமிடும் கருட தரிசனம் பாவங்களை தொலைத்து புண்ணியங்களைத் தந்து எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி வைக்கும். கருட பஞ்சமி அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

இதே நாள் நாகபஞ்சமி நாளாகவும் இருப்பதால், நாகர்களின் தலைவனான ஆதிசேஷனுக்கு பூஜை செய்வதும் நடைபெறும். எதிரெதிர் விஷயங்களான கருடன், பாம்பு இந்த இரண்டையும் ஒரே பஞ்சமி நாளில் வணங்குகின்ற பொழுது, பகை கொண்ட உள்ளங்கள் மாறும். நட்பு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம், குதூகலம் நிலவும்.
கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த தினத்தில் அவசியம் நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி பூஜைகளில் கலந்து கொள்வதால் நட்பு பலப்பட்டு கூட்டுத்தொழில் விருத்தியாகும். கருட பஞ்சமி அன்று சொல்வதற்கென்றே சில மந்திரங்களும் ஸ்லோகங்களும் உண்டு. குறிப்பாக இன்றைக்கும் கருட பத்து என்கின்ற ஒரு பாடலை மனப்பாடமாக கிராமத்து மக்கள் சொல்வது வழக்கம். கருடனை வணங்குவதன் மூலமாக கண் திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் குறையும். ஐஸ்வர்யம் பெருகும்.

3-8-2022 - புதன்  ஆடிப்பெருக்கு

பொதுவாகவே ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு அமைப்பில் கொண்டாடப்படும். சில விழாக்கள் கிழமைகளில் கொண்டாடப்படும். சில விழாக்கள் திதியை அடிப்படையாக வைத்துக் கொண்டாடப்படும். சில விழாக்கள் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு கொண்டாடப்படும். ஆனால், இந்த விழா அது எந்த நாள் எந்த திதியாக இருந்தாலும், ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஆடி பதினெட்டு பெருமாளுக்குரிய புதன்கிழமையன்று, முருகனுக்குரிய சஷ்டி திதியில், சந்திரனுக்குரிய ஹஸ்த நட்சத்திரத்தில், அமைந்திருப்பது அதிசயம். கடக ராசி நீர் ராசி. கடக ராசிக்குரிய சந்திரனும் நீர்நிலையைக் குறிப்பவர். எனவே இந்த ஆண்டு நாளும் திதியும் கிழமையும் விசேஷமாக அமைந்திருக்கிறது.

ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது அற்புதமான ஒரு விழா. தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபிம்பமான விழா. உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில் புதுநீர் பெருக்கெடுத்து ஓடும். அதனால் பச்சை பயிர்கள் நன்கு விளையும். அந்த ஆறுகளையும் ஆறுகளில் ஓடும் நீரையும் தெய்வமாக நினைத்துக் கொண்டாடி மகிழும் நாள் ஆடிப்பெருக்கு. ஆடியில் செய்யும் வழிபாடு மிகப்பெரிய செல்வப் பெருக்கத்தையும், குடும்பத்தில் இன்ப பெருக்கையும் வழங்கும்.  
ஆடிப்பெருக்கு திருநாளன்று பெண்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆறு, கால்வாய் முதலில் நீர் நிலைகளுக்குச் சென்று, அந்த நீருக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து வாழை இலையில் படையல் இட்டு, தேங்காய் உடைத்து, கற்பூர தூப தீபங்கள் காட்டி, புது அரிசி வெல்லம் கலந்து வைத்து. சித்ரான்னங்களைப் படைத்து(கலவசாதம்), குதூகலமாகக் கொண்டாடுவது உண்டு.

அன்று, நீர் நிலைகளுக்கு சீர் செய்வார்கள். வாழை மட்டையில் அகல் விளக்குகளை ஏற்றி நீரில் விடுவதும் சில இடங்களில் நடைபெறும். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அன்று தாலிக் கயிறு மாற்றிக் கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் திருமணமான பெண்களிடம் இருந்து வாங்கி மஞ்சள் சரடு அணிவதன் மூலமாக அவர்களுக்கும்  மிக விரைவில் திருமணம் ஆகும். ஆறு, குளம் முதலியன, அருகே இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் போர் வெல் அல்லது அடி பம்பு இருந்தால் அந்தக் குழாயடியிலும் பூஜையைச் செய்யலாம். அல்லது ஒரு சிறு குடத்தில் தண்ணீர் எடுத்து அதில் அரைத்த மஞ்சளைக் கரைத்து வைத்து படைக்கலாம்.

விளக்கேற்றி வைத்து, குடத்தண்ணீரில் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய் தீபம் காட்ட வேண்டும். அந்த நீரையே புண்ணிய நதிகளாக நினைத்துக் கொண்டு மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பூஜை முடிந்தவுடன் அந்த நதி நீரை கால் படாத வண்ணம் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும்.
திருவரங்கத்தின் புகழ்பெற்ற அம்மா மண்டபம் என்கின்ற படித்துறை உள்ளது. அங்கே காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் பெரிய கோயிலில் இருந்து நம் பெருமாள் யானை மீது புறப்பாடாவார். அம்மா மண்டபம் படித்துறைக்கு வருவார். அங்கு காவிரி நீரால் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். அங்கே மாலை வரை பெருமாள் வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமான தாலிக்
கயிறு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

4-8-2022 - வியாழன்  பெருமிழலைக் குறும்பர் குருபூஜை விழா

பெருமிழலைக் குறும்ப நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டின் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர். ‘‘பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்” - என்ற சுந்தரரின் திருத்தொண்டத் தொகை, தொகையிலிருந்து இவர் தம் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம். சிவனடியார்களை தொழுவதே,  சிவனைத் தொழுவது என்பது சைவத்தின் உயிர்நாடி. எனவே தொண்டர் தம் பெருமையை எப்பொழுதும் போற்றியவர். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர், சிவபெருமானின் திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றியவர். இவ்வாறு சிவபக்தியிலும், சிவனடியார் பக்தியிலும் சிறந்து வாழும் வேலையில் சில சிவனடியார்கள் மூலம் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார்.

அவரைச் சந்திக்க வேண்டும், அவருடைய திருவடிகளைத் தொழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டார். அவர் திருப்பெயரை உச்சரிக்காமல் எந்த வேலையும் செய்வதில்லை.தன் மனக்கண்ணில் சுந்தரமூர்த்தி நாயனாரை நினைத்து வழுத்தினார். சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்தில் திருப்பதிகம் பாட, அவருக்குச் சிவபெருமான் அருளால், வடகயிலை அடையும் பேறு மறு நாள் கிடைக்க, இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார். தன்னுடைய குருவான சுந்தர மூர்த்தி நாயனார் திருக்கயிலாயம் சென்று அடைவதற்கு முன்னர், தம்முடைய உடலை  இங்கேயே உதிர்த்து விட்டு, யோக சக்தியால் ஒரு நாள் முன்னதாகவே, அவரை எதிர்கொண்டு அழைக்க, சிவபதம் அடைந்தார். அவருடைய குருபூஜை தினம் ஆடி மாதம் சித்திரை. அதாவது இன்று அவரின் குருபூஜை தினம்.

5-8-2022 - வெள்ளி  சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை

சுந்தரமூர்த்தி நாயனார் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவர். தேவார மூவரில் ஒருவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். தம்மைத் தடுத்து ஆட்கொண்டது அந்தச் சிவ பெருமானே என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் மீது தமிழால் பாடினார். பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்து அவன் திருப்புகழை வாயாரப் பாடினார். எத்தனையோ அடியார்கள் இருந்தாலும் கூட, சுந்தரர் மீது சிவபெருமான் கொண்ட அன்பு அபாரமானது. படிக்கப்படிக்க மெய்சிலிர்ப்பது. தோழமை பக்தி என்று ஒரு வகை உண்டு. அந்த பக்திக்கு முழுமையான எடுத்துக்காட்டு சுந்தரமூர்த்தி நாயனார். சிவபெருமான் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்களைத் `திருப்பாட்டு’ என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினைச் `சுந்தரர் தேவாரம்’ என்றும் அழைப்பர். இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார், பெரிய புராணம் எனும் நூலை இயற்றினார்.

5-8-2022 - வெள்ளி  
சேரமான் பெருமான் நாயனார் குரு பூஜை

எல்லா அடியார்களின் வாழ்க்கையும் வேறொரு அடியார்களுடைய வாழ்க்கையோடு பிணைந்து இருக்கும். அவ்வகையில் சுந்தரர் வாழ்க்கையோடு இணைந்த வாழ்க்கை இவருடையது. இவருடைய சிறப்பு எல்லையற்றது. சிவபெருமானோடு தோழமை கொண்ட சுந்தரரோடு தோழமை கொண்டவர் சேரமான் பெருமாள் நாயனார்.சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்’ எனப் போற்றப் பெற்ற இவர் சேரமன்னர். சுந்தரரின் இனிய தோழர். சுந்தர ருடன் கயிலைச் சென்றவர். ஆலவாய் இறைவர். பாண பத்திரர் பொருட்டுத் திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமி களால் கழறிற்றறிவார் புராணம், வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
இவரது காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8ஆம் நூற்றாண்டாகும். இத்திருமுறையில் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.


மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்