SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள் !

2022-07-27@ 14:39:28

449. க்ரதவே நமஹ (Krathavey namaha)

(திருநாமங்கள் 446 [யக்ஞ:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை - வேதச் சடங்குகளால் போற்றப்படுபவர் திருமால்)ராகவேந்திர சுவாமிகள் கும்பகோணத்துக்கு விஜயம் செய்த சமயம். தஞ்சை மாவட்டம் முழுவதுமே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. மழை சரியாகப் பெய்யாததால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக மழை பொழியாமல் பஞ்சம் நிலவி வருவதாக மக்கள் ராகவேந்திர சுவாமிகளிடம் தெரிவித்தார்கள்.

அப்போது ஆண்டுவந்த தஞ்சை மன்னர், ராகவேந்திர சுவாமிகளின் பெருமைகளைக் கேள்விப்பட்டு அவரை வந்து அடி பணிந்தார். “சுவாமி! சோழநாடு சோறுடைத்து என்பதற்கேற்ப, விவசாயத்தில் செழித்த இந்தத் தஞ்சைப் பகுதி இப்போது மழை பெய்யாததால் பஞ்சத்தில் தவித்து வருகிறது. தாங்கள்தான் இந்தப் பஞ்சம் நீங்குவதற்கு அருள்புரிய வேண்டும்!” என்று வேண்டினார் மன்னர்.அந்தப் பகுதி மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்த ராகவேந்திர சுவாமிகள், “மன்னனே! மனிதர்கள் ஐந்து வித வேள்விகளை அன்றாடம் தவறாமல் செய்து வரவேண்டும்.

அவற்றுக்குப் பஞ்ச மகா யக்ஞங்கள் என்று பெயர். அவை,

1) பிரம்ம யக்ஞம் - தினமும் வேதத்தில் இருந்து ஒரு பகுதியை ஓதுதல்.
2) தேவ யக்ஞம் - அக்னி ஹோத்ரம், ஔபாசனம் உள்ளிட்ட வைதிக கர்மாக்களால் தேவர்களை ஆராதித்தல்.
3) பித்ரு யக்ஞம் - முன்னோர்களுக்குச் செலுத்த வேண்டிய நீர்க்கடன் உள்ளிட்டவற்றை முறையாகச் செய்தல்.
4) மநுஷ்ய யக்ஞம் - வீடு தேடி வரும் விருந்தினருக்கும், ஏழையருக்கும் உணவு அளித்தல்.
5) பூத யக்ஞம் - மற்ற பிராணிகளுக்கு உணவு அளித்தல்

இந்த ஐந்து வித வேள்விகளாலும், வேதியர்கள் செய்யும் அக்னி ஹோத்ரம் ஔபாசனம் போன்ற வைதிகச் செயல்களாலும் ஆராதிக்கப் படுபவர் திருமால். இவற்றைச் சரியான முறையில் அனுஷ்டித்துத் திருமாலை மகிழ்வித்தால் மழை பொழியும், விளைச்சல் அதிகரிக்கும், செழுமை நிலைக்கும். இந்தக் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் போவதால்தான் பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன!” என்று சொன்னார்.

பின் மன்னரைப் பார்த்து, “இங்கே உடனடியாக ``காரீரேஷ்டி’’ என்னும் வேள்வியை இருபத்தொரு நாட்கள் நடத்துங்கள். மழை பொழியும்!” என்று சொல்லி அருளினார் ராகவேந்திர சுவாமிகள். மன்னரும் அவ்வாறே வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தார். புரோகிதர்கள் மூலம் காரீரேஷ்டி வேள்வியை நடத்தி, அதனால் திருமாலை ஆராதித்து மகிழ்வித்தார் ராகவேந்திர சுவாமிகள். திருமாலின் திருவுள்ளம் மகிழ்ந்தவாறே சோழ நாட்டில் நல்ல மழை பொழிந்தது, பன்னிரண்டு ஆண்டுகாலப் பஞ்சம் நீங்கியது.

ராகவேந்திர சுவாமிகளின் பிரபாவத்தைக் கண்டு வியந்த தஞ்சை மன்னர், அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது, அனைத்தையும் திருமாலுக்கென்றே அர்ப் பணிப்பவரான ராகவேந்திர சுவாமிகள், அந்தத் தங்கச் சங்கிலியையும் வேள்வித் தீயில் திருமாலுக்கு அர்ப்பணித்தார். தான் கொடுத்த தங்கச் சங்கிலியைத் தீயில் இடுவதைக் கண்டு மன்னர் கோபம்கொண்டார்.

மன்னரின் முக பாவனையைக் கவனித்த ராகவேந்திர சுவாமிகள், முழு மனமில்லாமல் கொடுத்தவனின் பொருளை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாகாது எனக் கருதி, தம் கையை அக்னியில் விட்டு அந்தச் சங்கிலியை வெளியே எடுத்து மன்னரிடமே கொடுத்துவிட்டார். ராகவேந்திர சுவாமிகளின் கையிலோ, தங்க நகையிலோ அக்னி பட்டதற்கான எந்தச் சுவடுமே தெரியவில்லை. இதைக் கண்டு வியந்துபோன தஞ்சை மன்னர், ராகவேந்திரரின் பக்தரானார் என்பது வரலாறு. இதன்மூலம் நாம் அறிவது என்னவென்றால்;

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை - என்று வள்ளுவர் பாடியபடி, பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் ஆகிய ஐந்து வித வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். இவற்றால் ஆராதித்தால் திருமாலின் மனம் உவப்படைகிறது. இத்தகைய ஐம்பெரும் வேள்விகளுக்கு `க்ரதுக்கள்’ என்று பெயர். க்ரதுக்களால் ஆராதிக்கப்படுவதால் ‘க்ரது:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 449-வது திருநாமம்.“க்ரதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்வில் எந்நாளும் செழிப்பு நிலைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

450. ஸத்ராய நமஹ (Sathraaya namaha)

நைமிசாரண்யத்தில் சௌனக முனிவர் உள்ளிட்ட பல முனிவர்கள் ஒன்று கூடி `ஸத்ரயாகம்’ என்ற ஒரு மிகப்பெரிய வேள்வியை நடத்தி வந்தார்க்கள். பல ஆண்டுகளாக அந்த வேள்வி நடைபெற்று வந்தது. வேள்வி நடைபெறாத இடைப்பட்ட காலங்களில் வீண் பொழுது போக்குவதோ, உறங்குவதோ கூடாது என்பது மரபு. அதனால் அந்தப் பொழுதுகளை நற்பொழுதாகப் போக்க வேண்டும் என்று சௌனகர் உள்ளிட்ட முனிவர்கள் கருதினார்கள். பொழுதை வீணடிக்காமல் நற்பொழுதாகக் கழிப்பதற்கு என்ன வழி என்று மற்ற முனிவர்கள் சௌனகரிடம் கேட்டபோது, மிகச்சிறந்த ஞானியான சௌனகர், “அனைத்து வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். அதிலும் குறிப்பாக இந்த ஸத்ரயாகம் என்பது திருமாலுக்குரிய விசேஷ வழிபாடாகும்.

இதில் பங்கேற்கும் அத்தனை முனிவர்களுமே யஜமானர் ஸ்தானத்தில் இருந்து செய்விக்கும் யாகம் இது. எனவே திருமாலுக்குரிய விசேஷ ஆராதனமான இந்த ஸத்ரயாகத்தின் மத்தியில் திருமாலின் கதைகளைக் கேட்பது மிகவும் சிறப்பானதாகும்!” என்று சொன்னார். அச்சமயம் வேத வியாசரின் சீடரான ரோமஹர்ஷணரின் மகனான சூத பௌராணிகர் அங்கே வந்தார். வியாசர் அருளிய அனைத்துப் புராணங்களையும் வெகு அழகாக எடுத்துச் சொல்ல வல்லவர் அந்தச் சூத பௌராணிகர். அவரது வருகையைக் கண்டதும் முனிவர்களின் முகங்கள் அனைத்தும் அப்போது அலர்ந்த செந்தாமரை போல் மலர்ந்துவிட்டன.

சூத பௌராணிகர் புராணங்களை எடுத்துச் சொல்லும்போது, பக்தி பாவத்தில் மூழ்கித் தன்னை மறந்து, பகவானின் வைபவங்களை எடுத்துச் சொல்லுவார். அடிக்கடி புல்லரித்துப் போய் அவர் மூர்ச்சை அடைவதும் வழக்கம். அத்தகைய சூத பௌராணிகரைப் பார்த்து யாகம் செய்யும் முனிவர்கள், “எங்களுக்கு எது மிகச்சிறந்த நன்மை பயக்குமோ அதை நீங்கள் உபதேசித்தருள வேண்டும். குறிப்பாக, திருமால் கண்ணனாகப் பூமியில் அவதரித்துச் செய்தருளிய லீலைகளை எல்லாம் நாங்கள் கேட்க விழைகிறோம்!” என்று சொன்னார்கள்.

அதற்குச் சூத பௌராணிகர், “வியாசரின் புதல்வரும் எனது குருவுமான சுக முனிவருக்கு நமஸ்காரம். கண்ணனின் லீலைகளைத் தொகுத்த வேத வியாசர் மத் பாகவதம் என்ற புராணத்தை அருளினார். அதை வியாசரின் புதல்வரான சுக முனிவர், பரீட்சித் ராஜாவுக்கு ஏழு நாட்கள் உபதேசம் செய்தார். அந்த மிக இனிய மத் பாகவத புராணம் கண்ணனின் அனைத்து வரலாறுகளையும் லீலைகளையும் விரிவாகச் சொல்வதாகும். அது அனைத்து வேதங்களின் சாரமாகும். அதற்கு நிகரான புராணம் வேறில்லை. மனத்தெளிவைத் தரவல்ல மத் பாகவத புராணத்தை உங்களுக்கு உபதேசம் செய்கிறேன்!” என்று சொல்லி உபதேசத்தைத் தொடங்கினார்.

முதல் ஸ்கந்தத்தில் பரமாத்மாவின் பெருமைகள், பக்தியோகம், பரீட்சித்தின் வரலாறு ஆகியவற்றையும், இரண்டாம் ஸ்கந்தத்தில் பரீட்சித்துக்கு சுகமுனிவர் உபதேசம் செய்தமை, பகவானின் அவதாரங்கள் ஆகியவற்றையும், மூன்றாம் ஸ்கந்தத்தில் உலகின் படைப்பு, வராக அவதாரம், கபில அவதாரம் ஆகியவற்றையும், நான்காம் ஸ்கந்தத்தில் துருவ சரித்ரம், ப்ருது சரித்ரம் போன்றவற்றையும், ஐந்தாம் ஸ்கந்தத்தில் ரிஷபதேவர், ஜடபரதர் ஆகியோரின் சரித்திரங்களையும், ஆறாம் ஸ்கந்தத்தில் விருத்ராசுரன் வரலாற்றையும், ஏழாம் ஸ்கந்தத்தில் பிரகலாத சரித்திரத்தையும், எட்டாம் ஸ்கந்தத்தில் கஜேந்திர மோக்ஷம், வாமனாவதாரம், பாற்கடல் கடைந்த வரலாறு ஆகியவற்றையும், ஒன்பதாம் ஸ்கந்தத்தில் அம்பரீஷ சரித்திரம், ராமாயணம் ஆகியவற்றையும், பத்தாம் ஸ்கந்தத்தில் விரிவாக கிருஷ்ணாவதாரத்தையும், பதினொன்றாம் ஸ்கந்தத்தில் கண்ணன் உத்தவருக்கு உபதேசம் செய்த கீதையையும், பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் கலியுகத்தின் நிலையையும் அதைத் தீர்க்க வல்ல, நாம சங்கீர்த்தனத்தின் பெருமையையும் இப்புராணத்திலே உபதேசம் செய்தார் சூத பௌராணிகர்.

அதைக் கேட்டு மகிழ்ந்த முனிவர்கள் தங்கள் ஸத்ரயாகத்தையும் இனிதே நிறைவுசெய்து, திருமாலின் திருவருள் பெற்று இன்புற்றார்கள். “திருமாலுக்குத் திருவாராதனமாக இருக்கும் ஸத்ரயாகத்தின் மத்தியில் அவரது புகழைக் கேட்டமை எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு!” என்று சூத பௌராணிகரிடம் நன்றி சொல்லி மகிழ்ந்தார்கள் அம்முனிவர்கள்.    
இப்படி ஸத்ரயாகத்தாலே ஆராதிக்கப் படுவதால் திருமால் ‘ஸத்ரம்’ என்று அழைக்கப்படுகிறார். பல யஜமானர்களைக் கொண்டு பல நாட்கள் செய்யப்படும் வேள்வி ஸத்ரயாகம் ஆகும். அதனால் ஆராதிக்கப்படும் திருமால் ‘ஸத்ரம்’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 450-வது திருநாமம்.“ஸத்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மாபெரும் செயல்களை எளிதில் செய்து முடிக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

451. ஸதாம் கதயே நமஹ (Sathaam Gathaye namaha)

திருக்குடந்தை என்று அழைக்கப்படும் திவ்யதேசமான கும்பகோணத்தில், கோயில் கொண்டுள்ள கோமளவல்லித் தாயாரின் கேள்வனான சாரங்கபாணிப் பெருமாள் திருவடி களிலே நம்மாழ்வார் சரணாகதி செய்தார். “திருமாலே! உன்னை விட்டால் எனக்கு வேறு புகழ் இல்லை! நீயே அடியேனை இந்தப் பிறவிப் பெருந்துயரில் இருந்து காத்து முக்தி அளிக்க வேண்டும்!” என்று திருமாலிடம் மன்றாடிய நம்மாழ்வார்;

“என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!”
என்று பாடினார்.

“இறைவா! நானும் முக்திக்காக எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன். உன்னைத் தவிர மற்றொருவர் காலிலும் நான் விழ மாட்டேன். என் விஷயமாக நீ திருவுள்ளத்தில் என்ன கருதுகிறாய்? நீ ஒருவன்தான் அடியேனைக் காத்தருள வேண்டும்! உன்னைத் தவிர வேறு எந்த வழியில் முக்தி வந்தாலும் அந்த முக்தியே எனக்கு வேண்டாம்!” என்று இப்பாடலின் வாயிலாகத் தெரிவித்தார் நம்மாழ்வார். இதைக் கேட்ட சாரங்கபாணிப் பெருமாள், “ஆழ்வீர்! உங்களுக்கு முக்திதானே வேண்டும்? அது எப்படிக் கிடைத்தால் என்ன? உங்கள் முயற்சியால் கிடைத்தால் என்ன? வேறொருவர் காலில் விழுந்து பெற்றால் என்ன? கிடைக்க வேண்டிய முக்தி கிடைத்ததே என்று நீங்கள் பெற்று மகிழலாமே! அதை விட்டுவிட்டு நான் கொடுத்தால் தான் முக்தியையே ஏற்பேன் என்பது சரியாகப் படவில்லையே!” என்றார்.

அதற்கு நம்மாழ்வார், “இல்லை இறைவா! நீ கொடுத்தால்தான் அது முக்தி! வேறு வழியில் வந்தால் அதை முக்தியாகவே நான் கருத மாட்டேன்! அது காலனைக் கொண்டு மோதிரம் இடுமா போலே!” என்றார். காலனைக் கொண்டு மோதிரம் இடுதல் என்றால் என்ன? ஒரு ஊரில் வாழ்ந்துவந்த ஏழைக்கு நீண்ட நாட்களாகத் தங்க மோதிரம் செய்து கையில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால், வறுமையில் வாடிய அவரால் தங்க மோதிரம் வாங்க முடியவில்லை. இந்நிலையில் அவ்வூரில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கான பத்து நாள் இறுதிச் சடங்குகளைச் செய்த அவரது மகன், பத்தாம் நாளில் தங்கத்தில் யம தர்ம ராஜாவின் விக்கிரகம் செய்து அதைத் தானம் செய்ய முன்வந்தான். தங்கத்தில் யம தர்ம ராஜா விக்கிரகம் செய்து அதைத் தானம் செய்தால், இறந்தவர் நற்கதி அடைவார் என்பதற்காக அவ்வாறு செய்தானாம்.

ஆனால், அந்த யம தர்மன் விக்கிரகத்தைத் தானமாக வாங்க யாருமே முன்வரவில்லை. வீட்டிலேயே பல பிரச்னைகள் இருக்க, யமனை வேறு வீட்டுக்கு அழைத்துச் செல்ல யார்தான் முன்வருவார்கள்? மோதிரம் வாங்க நினைத்த இந்த ஏழை, அவசர அவசரமாகப் போய் அந்த யமன் விக்கிரகத்தைத் தானம் வாங்கி வந்தார். அதை உருக்கித் தங்க மோதிரம் செய்துகையில் அணிந்துகொண்டாராம். ஆனால், இப்போது என்ன பிரச்னை என்றால் மோதிரத்தைக் காணும் போதெல்லாம், யமன் எப்போது நம்மை வந்து பிடித்துச் செல்வானோ என்ற யம பயம் அவருக்கு ஏற்பட்டதாம்.

இக்கதையை உதாரணமாகக் காட்டிய ஆழ்வார், “இறைவா! மோதிரம்தான் தேவை என்பதற்காக யமனை உருக்கி மோதிரம் அணிதல் உசிதமாகுமா? நல்ல தங்கத்தால் தானே மோதிரம் செய்வோம்? அதுபோலத்தான் மோட்சம் தேவை என்றால் அதற்காக ஏதோ ஒரு வழியில் அதைப் பெற்றால் அது உண்மையான மகிழ்ச்சி அளிக்காது. உன்னைப் பெறுவது தான் முக்தி. அதையும் உன் மூலமாகவே பெற்றால்தான் மகிழ்ச்சி! உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்!” என்றார் ஆழ்வார். “நம்மாழ்வாரே! உங்கள் வாயால் உங்கள் சரணாகதி நிஷ்டையை நன்றாகக் கேட்டு மகிழவே உங்களிடம் இப்படிக் கேள்வி கேட்டேன்!” என்று சொன்ன சாரங்கபாணிப் பெருமாள், “திருவாய்மொழி ஆயிரம் பாசுரங் களையும் பாடி நிறைவு செய்யுங்கள். அதன்பின் என் திருவடிகளை வந்து அடைவீர்கள்!” என்று கூறி அருளினார்.

இப்படி இறைவனை அடைவதற்கு இறைவனே வழி என்ற திடமான உறுதி பூண்டிருக்கும் நம்மாழ்வாரைப் போன்ற சரணாகதர்களுக்கு ஒரே புகலிடமாகத் திருமால் இருப்பதாலே, அவர் ‘ஸதாம் கதி:’ என்று அழைக்கப்படுகிறார். ஸத் என்பது சரணாகதி நிஷ்டையில் நிலைபெற்றவர்களைக் குறிக்கிறது. கதி என்றால் புகலிடம். ‘ஸதாம் கதி:’ என்றால் சரணாகதர்களுக்குப் புகலிடமாக இருப்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 451-வது திருநாமம்.“ஸதாம் கதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தானே புகலிடமாக இருந்து திருமால் காத்தருள்வார்.

452. ஸர்வ தர்சினே நமஹ (Sarva dharshiney namaha)

திருவரங்கநாதனிடமே முழுமையாக ஈடுபட்ட ஆழ்வார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். அவர் அருளிய `திருமாலை’ என்னும் பிரபந்தத்தில்;
“எளியதோர் அருளும் அன்றே என்திறத்து எம்பிரானார்அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே”
 - என்று ஏக்கத்துடன் பாடினார். “மற்ற பக்தர்களைக் காப்பாற்றியது போல், வில்லும் கோலும் எடுத்தெல்லாம் என்னைக் காக்க வேண்டாம். அரங்கன் தனது வாயைத் திறந்து என்னைப் பார்த்து, ‘ஆழ்வீர்!’ என்று அழைக்க வேண்டாம். ‘அடே பையா!’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமே! நம் பையன் என்று பகவான் அடியேனை அங்கீகரித்த பின், இனி இவ்வுலகில் அடியேனுக்கு வேறென்ன வேண்டும்?” என்கிறார்.

இதைக் கேட்ட அரங்கன், “ஆஹா! இருள் தருமா ஞாலம் எனப்படும் உலகில் கூட தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரைப் போல் பக்தியிலும் சரணாகதி நிஷ்டையிலும் நிலைத்திருக்கும் ஒருவர் கிடைத்திருக்கிறாரே! நாமும் வைதிகச் சடங்குகளையும் பக்தியோகம் போன்ற உபாயங்களையும் பின்பற்றுவோரைக் கவனித்துவருகிறோம். சரணாகதி செய்வோர்களையும் கவனித்து வருகிறோம். இப்படிப்பட்ட ஒரு சரணாகதரைப் பார்த்ததில்லையே!” என்று வியந்து தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘அடே பையா!’ என்று ஆசையோடு அழைத்தான்.
அதைக் கேட்ட தொண்டர் அடிப்பொடி ஆழ்வார், “அரங்கா! சரணாகதர்களை மிகவும் விரும்பும் நீ, சரணாகதி நிஷ்டையில் ஒருவர் நன்றாக நிலைபெற்றிருப்பதைப் பார்த்தால் பெருமகிழ்ச்சி அடைந்துவிடுகிறாய். உனது மகிழ்ச்சி உன் புன்னகையில் தெரிகிறது!” என்று அடுத்த பாசுரம் பாடுகிறார்;

“மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பறத் தலைச்சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத்தானே”

“அரங்கா! மேலெழுந்தவாரியாகத் தெரியும் இந்த உலகியல் இன்பங்களிலே நாட்டம் கொள்ளாமல், ஜீவாத்மாக்கள் அனைவரும் உனக்கே தொண்டர்கள் என்ற மெய்யறிவைப் பெற்று, உனக்குத் தொண்டு செய்வதே வாழ்வின் மிக உயர்ந்த இலக்கு என்பதையும் அறிந்து கொண்டு, அவ்வாறு தொண்டு செய்யும் போதும் தனது ஆனந்தத்துக்காகத் தொண்டு செய்யாமல் உனது மகிழ்ச்சிக்காகவே தொண்டு செய்துவரும் சரணாகதர்களைப் பார்த்து நீ உகக்கிறாய்!”

அவர்களின் சரணாகதி எப்படிப்பட்டது? ‘காம்பறத் தலைச் சிரைத்து’ என்று குறிப்பிடுகிறார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். தலைச்சிரைத்தல் என்பது, நான் என்ற அகந்தையை விட்டு இறைவனிடம் சரணாகதி செய்வதைக் குறிக்கிறது. அவ்வாறு அகந்தையை அறுத்தாலும் கூட ஒரு காம்பு நீட்டிக்கொண்டிருக்குமாம். அது என்ன காம்பு? நான் சரணாகதி செய்தேன் என்ற எண்ணமே அந்தக் காம்பு. காம்பறச் சிரைத்தல் என்பது, “நான் சரணாகதி செய்யவில்லை, இறைவனே என்னை சரணாகதி செய்ய வைத்தான். அவன் அருளன்றி இதுவும் சாத்தியமில்லை!” என்ற புரிதலோடு மொத்தமாக அகந்தையை விட்டு இறைவனைப் பற்றுவது.

இத்தகைய சரணாகதர்கள் ‘வாழும் சோம்பர்கள்’ ஆவர். இறை நம்பிக்கை அற்றவர்களாக இருந்து கொண்டு, அறநூல்கள் கூறும் கடமைகளைச் செய்யாமல் சோம்பேறித் தனமாக இருப்பவர்கள் ‘வீழும் சோம்பர்கள்’ ஆவர். இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டதால், முக்திக்கென்று தாங்கள் எந்த முயற்சியும் செய்யாமல் அரங்கனின் வாசலே கதி என்று அவன் திருவடிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் ‘வாழும் சோம்பர்கள்’ ஆவர்.“அனைவரையும் கவனித்து வரும் நீ வாழும் சோம்பர்களைப் பார்த்து மகிழ்கிறாய்! அரங்கா! அந்த மகிழ்ச்சியை உனது புன்னகையால் வெளிப்படுத்துகிறாய்!” என்று கொண்டாடுகிறார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்.

இப்படிக் கர்மயோகம், பக்தியோகம், சரணாகதி போன்ற அனைத்து விதமான தர்மங்களைப் பின்பற்றுவோரையும் கண்காணித்து வருவதால், ‘ஸர்வதர்சீ’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். தர்சீ என்றால் பார்ப்பவர். ‘ஸர்வதர்சீ’ என்றால் எல்லா விதமான தர்மங்களைப் பின்பற்றுவோரையும் கண்காணிப்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 452-வது திருநாமம்.
“ஸர்வதர்சினே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அனைவருக்கும் சரணாகதி நிஷ்டை நன்றாக நிலைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

453. நிவ்ருத்தாத்மனே நமஹ (Nivrutthaathmaney namaha)

(குறிப்பு: சில பாடங்களில் இந்தத் திருநாமம் ‘விமுக்தாத்மா’ என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பராசர பட்டரின் அதிகாரப் பூர்வமான விளக்கவுரையில் ‘நிவ்ருத்தாத்மா’ என்றே இத்திருநாமம் எடுத்தாளப்பட்டுள்ளது. அதையே நாமும் பின்பற்றுகிறோம்.)“என்ன யோசனையில் இருக்கிறீர்கள்?” என்று வைகுண்டத்தில் சிந்தனையில் ஆழ்ந்திருந்த திருமாலிடம் திருமகள் கேட்டாள். அதற்குத் திருமால், “உலகிலுள்ள மக்கள் எல்லோரும் உய்வடைய நாராயண நாமத்தை உள்ளடக்கிய `அஷ்டாக்ஷரம்’ என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசிக்க விழைகிறேன்!” என்றார். “விரைவில் அதைச் செய்ய வேண்டியது தானே!” என்று கேட்டாள் திருமகள். “தேவி! இம்மந்திரத்தை உபதேசிக்கும் குருவுக்கும், உபதேசம் பெறும் சீடனுக்கும் அனைத்து நற்பண்புகளும் நிறைந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாக குரு சிஷ்ய பரம்பரையில் இம்மந்திரம் உலகில் பரவ வேண்டும். அத்தகைய குருவும் சிஷ்யனும் கிடைப்பார்களா என்று தான் தேடிக்கொண்டிருக்கிறேன்!” என்றார் திருமால்.

“குருவுக்கு என்னென்ன லட்சணங்கள் வேண்டும்?” என்று கேட்டாள் திருமகள். அதற்குத் திருமால், “முன்னோர்கள் காட்டிய நன்னெறியில் நிலை பெற்றவராகவும், சந்தேகம் இல்லாத தெளிவான ஞானம் பெற்றவராகவும், களங்கம் அற்றவராகவும், வேத வேதாந்தங்களில் ஆழங்கால்பட்டவராகவும், அசைக்க முடியாத பக்தி கொண்டவராகவும், சத்துவ குணம் நிறைந்தவராகவும், சத்தியத்தையே பேசுபவராகவும், தான் உபதேசம் செய்வதை வாழ்வில் பின்பற்றுபவராகவும், பொறாமை டம்பம் போன்ற தீய குணங்கள் அற்றவராகவும், மனதையும் புலன்களையும் வென்றவராகவும், சீடர்களுக்கு அனைத்து வித நன்மைகளையும் செய்ய வல்லவராகவும், கருணை மிக்கவராகவும், சீடர்கள் தவறு செய்கையில் சுட்டிக் காட்டித் திருத்துபவராகவும் இருப்பவரே நல்ல குரு ஆவார்!” என்றார்.

இதைக் கேட்ட திருமகள், “சுவாமி! இத்தனை லட்சணங்கள் பொருந்திய ஒரு குருவைத் தேடுவதை விட, அனைத்து மங்கல குணங்களுக்கும் இருப்பிடமான நீங்களே பூமியில் ஒரு குருவாக அவதாரம் செய்துவிடுங்கள்!” என்று ஆலோசனை சொன்னாள். அதன்பின், சீடன் எப்படி இருக்க வேண்டும் என்று திருமகள் கேட்க, “குருவுக்கு அனைத்துவிதப் பணிவிடைகளும் செய்பவனாகவும், நல்லொழுக்கம் மிக்கவனாகவும், ஞானம் பெறுவதில் ஆர்வம் கொண்டவனாகவும், அகந்தையற்றவனாகவும், குருவுக்கு அடங்கி நடப்பவனாகவும், பணிவோடு பேசுபவனாகவும், மனவடக்கமும் புலனடக்கமும் கொண்டவனாகவும், பொறாமை அற்றவனாகவும், குருவிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவனாகவும், குருவிடம் நன்றி விஸ்வாசம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்!” என்றார், திருமால்.

அதற்குத் திருமகள், “நல்ல குருகூட கிடைத்துவிடுவார். இத்தகைய குணங்கள் நிறைந்த சீடன் கிடைப்பது இன்னும் கடினம். உலக நன்மைக்காக நீங்கள் குருவாக அவதரிப்பதோடு நில்லாமல், சீடனாகவும் நீங்களே அவதாரம் செய்துவிடுங்கள்!” என்றாள். அதன்படி, பத்ரிநாத்தில் நாராயணன் என்னும் குருவாகவும், நரன் என்னும் சீடனாகவும் திருமாலே அவதாரம் செய்தார். நாராயண ரிஷி நரனுக்கு, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்ய, அதன்பின் அம்மந்திரம் சிஷ்ய பரம்பரையில் பரவியது.

அந்த நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்ட இந்திரன், தேவலோகத்தில் இருந்து பல தேவமாதுகளை அனுப்பி நடனம் ஆட வைத்தான். ஆனால் நாராயண ரிஷி அதற்கெல்லாம் கலங்காமல், தனது தொடையில் ஒரு பூவை வைத்தார். அந்தப் பூவில் இருந்து ஊர்வசி என்னும் பூவை வந்தாள். அவளது அழகைப் பார்த்து வெட்கப்பட்டு தேவமாதுகள் தேவலோகத்துக்கே ஓடி விட்டார்கள். அதன்பின் ஊர்வசி தேவலோகத்தில் நடனமாதாக ஆனாள் என்பதை நாம் அறிவோம்.

இப்படி உலகியல் ஆசைகளை வென்ற நாராயணன் என்னும் குருவாகவும், நரன் என்னும் சீடனாகவும் அவதாரம் செய்து, சரணாகதி செய்வோருக்கு அவசியம் அறியத் தக்கதான எட்டெழுத்து மந்திரத்தைப் பிரச்சாரம் செய்தார் திருமால். அந்த நர நாராயண அவதாரத்தில் தான், உலகியல் ஆசைகள் நீங்கிய மனம் படைத்தவர் என்பதைத் திருமால் உணர்த்தியதாலே, அவர் ‘நிவ்ருத்தாத்மா’ என்று அழைக்கப்படுகிறார். ஆத்மா என்பது இங்கே மனதைக் குறிக்கிறது. நிவ்ருத்த என்றால் நீங்கப்பெற்ற. ‘நிவ்ருத்தாத்மா’ என்றால் உலகியல் ஆசைகள் நீங்கப் பெற்ற மனதை உடையவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 453-வது திருநாமம்.“நிவ்ருத்தாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனங்களில் தாழ்ந்த ஆசைகள் ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்