SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-07-25@ 17:29:27

23-7-2022 - சனி  ஆடிக்கிருத்திகை

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் வரும் என்றாலும் கூட, தட்சிணாயன காலத்தின் முதல் மாதமான, தேவர்களின் மாலை நேர சந்தியா காலமான, கடக மாதத்தில், வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகச் சிறப்பானது. கார்த்திகை பெண்கள் அறுவர், சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகப் பெருமானை பாலூட்டி வளர்த்த காரணத்தால், அவர்கள் எம்பெருமானுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.

அப்போது சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். ‘‘கார்த்திகை பெண்களே! நீங்கள் முருகனை  பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் துன்பங்கள் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்” என்று வாழ்த்தினார்.

எனவே ஆடிக்கிருத்திகை மற்ற கிருத்திகை தினங்களை விட எல்லா முருகன் கோயில்களிலும் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கிருத்திகை விரதம் தொடர்ந்து இருப்பவர்களுக்கு, உடலில் நோய் நொடிகள் அகலும். குடும்பத்தில் ஜாதக தோஷத்தால் ஏற்படும் காரியத்தடைகள் நீங்கும். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரத முறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும், உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. மற்ற கிருத்திகையில் விரதம் இருக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

23-7-2022 - சனி  மூர்த்தி நாயனார் குருபூஜை

‘‘மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்” - என்பது சுந்தரர் அருளிச் செய்ததிருத்தொண்டத் தொகை.மூர்த்தி நாயனார் சைவநெறி தழைக்கச் செய்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். பாண்டிநாட்டில், மதுரை மாநகரில் வணிககுலத்திலே அவதரித்தார். சிவபெருமான் திருவடிகளையே தமக்குத் துணையும், பொருளும் எனக்கொண்டவர். சைவத்தில் ஆழ்ந்த பிடிப்பும், அன்பும் உடையவர். சிவபெருமானைத் தவிர வேறு எதையும் தன்னுடைய சிந்தையில் கொள்ளாத வைராக்கிய சீலர். மதுரையம்பதியில் திருக்காட்சி தரும் சொக்கலிங்கப்பெருமானுக்கு தினசரி சந்தனக்காப்பு சிவத்தொண்டு செய்துவந்தார்.

அப்பொழுது, மதுரையில் பெரும்போர் நிகழ்ந்தது. கர்நாடக தேசத்து அரசன் பாண்டியனை வெற்றிகொண்டான். பாண்டிநாட்டின் அரசாட்சியை படை வலிமையால் கவர்ந்து கொண்டான். சமணநெறியைப் பின்பற்றிய அவன் சைவநெறியாளர்களுக்கு மிகப்பெரிய துன்பமும் சங்கடமும் செய்தான். சைவப்பணிகள் செய்ய விடாது தடுத்தான். அதனை நேரடியாகச் செய்யாமல், தொண்டு செய்வதற்கு உரிய பொருள் கிடைக்காதபடி உத்தரவு போட்டான். மூர்த்தியாருக்கு சந்தனக்காப்பு பணிசெய்ய சந்தனக் கட்டைகள் கிடைக்கவில்லை. மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார்.

தன்னுடைய முழங்கையையே சந்தனப் பாறையில் தேய்த்தார். ‘‘இப்படிப்பட்ட கொடுமையை உன்னால் தடுக்க முடியாதா?” என்று சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்ய, அன்று இரவே கொடுமை செய்த மன்னன் மாண்டுபோனான். உடனடியாக அடுத்த அரசனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. யானையிடம் மாலையைக் கொடுத்து, அது யார் கழுத்தில் சூட்டுகிறதோ அவரை அரசராக தேர்ந்தெடுக்க நிச்சயித்தனர். மதுரை சொக்கநாதர் திருக்கோயிலின் முன்வந்து மூர்த்தியார் நின்று கொண்டிருந்தார். அவர் கழுத்தில் மாலை சூட்ட, சொக்கனின் திருவருளால் அவரே மன்னரானார். எந்தத் துன்பமும் இன்றி சைவத்தைப் பரப்பினார். நல்லாட்சிபுரிந்த பின்னர் சிவனின் திருவடியை அடைந்தார். அவருடைய குருபூஜை ஆடிக்கிருத்திகை. இன்று.

23-7-2022 - சனி  புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் புகழ்ச்சோழ நாயனார். உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர். தமது தோள் வலிமையினால் போர்செய்து ஆட்சியை விஸ்தரித்தார். சைவத்தில் மிகுந்த பற்றுடையவர். இவருடைய வாழ்க்கையோடு எறிபத்த நாயனாரின் வாழ்க்கையும் இணைந்திருக்கும். சிவாலயங் களில் சிறந்த பூஜை நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் புகழ்ச்சோழ நாயனார்.ஒரு முறை எறிபத்த நாயனார், மன்னரின் மனைவியை, சிவபூஜைக்கு அபராதம் நிகழ்ந்ததாகக் கருதி தண்டிக்க, “இதற்குக் காரணமான தன்னை அல்லவா தண்டிக்க வேண்டும்” என்று அவரிடம் தன் வாளை எடுத்து தந்தார் புகழ்ச்சோழ நாயனார். சிற்றரசர்களிடம் திறைப் பணம் வசூலித்து அவர்களுக்கு ஆட்சி உரிமையை அந்தந்த பகுதிகளுக்குத் தந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரே ஒரு சிற்றரசன், அதிகன் என்பவன் மட்டும், திறைப் பணம் செலுத்தவில்லை. உடனே அவனை வென்று வருமாறு கட்டளையிட்டார். அமைச்சர்கள் சேனையுடன் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.சிற்றரசன் அதிகன் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அமைச்சர்கள் பல பொருட்களுடன் கொல்லப்பட்ட தலைக்குவியல்களையும் அரசன் முன் கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டு வந்த தலைக்குவியல்களுள் ஒரு சிவனடியாரின் தலையும் திருநீறு பூசிய நெற்றியுடன் இருந்ததைக் கண்டு நடுங்கினார் நாயனார்.

‘‘தாம் சிவநெறி வளர்த்த அழகா இது?” என்று வருந்தி, தன்னுடைய புதல்வனுக்கு முடி சூட்டும் படி சொல்லிவிட்டு, தான் செய்த சிவ அபராதமாகிய பழிக்குத் தன் உயிரை மாய்த்துக் கொள்வது தான் ஒரேவழி, என்று நெருப்பில் புகுந்தார். இவருடைய பெருமையை ‘‘பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழற் கடியேன்” என்று சுந்தரர் பாடுகிறார். அவருடைய குருபூஜை ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரம்.

24-7-2022 - ஞாயிறு  யோகினி ஏகாதசி


இந்த ஏகாதசி கண்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திரத்தில், சூரியன் கிழமையில் வருவது சிறப்பு. ஏகாதசி விரத மகாத்மியம் நூலில், இந்த ஏகாதசி விரத மகிமை மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சொன்ன ஒரு முக்கியமான விஷயம். 88000 வேத வித்துக்களை அதிதி பூஜை செய்தால் எத்தனை புண்ணியம் கிடைக்குமோ, அத்தனை புண்ணியம், இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் கிடைத்துவிடும் என்று கூறுகிறது. அன்று நாள் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி மகாவிஷ்ணுவை வழிபட அனைத்து நற்பலன்களையும் அடைவதோடு தீராத நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

26-7-2022 - செவ்வாய்  மகா பிரதோஷம் மற்றும் கூற்றுவ நாயனார் குருபூஜை

இன்று இரண்டு விசேஷங்கள். ஒன்று தேய்பிறை மகா பிரதோஷ நன்னாள். இன்று மாலை சிவன் கோயிலில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்வது சிறப்பு.
மற்றொன்று, ஒரு நாயன்மாரின் குருபூஜை விழாவும் இருக்கிறது. அவருடைய பெயர் கூற்றுவ நாயனார். மிகச் சிறந்த போர் வீரர். போர் செய்யும் போது எதிரிப்படைகளுக்கு எமன் போல நிற்பவர் என்பதால் கூற்றுவர். சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவர்.

களந்தை என்னும் பதியிலே வாழ்ந்தவர். சிவ பெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும், சிவனடியார் பாதம் பணிந்தும், சிவ சிந்தனையோடு வாழ்ந்துவந்தார். தம்முடைய ஆற்றலால்  அரசர்களையும் வென்று அவர்களது நாடுகளையெல்லாம் கவர்ந்தார். எல்லாவற்றையும் இணைத்து பேரரசராக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அந்தக் காலத்தில் தானே முடி சூட்டிக் கொள்ள முடியாது. மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டார். அவர்கள் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி, மற்றவர்களுக்கு முடிசூட்ட மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

அதேநேரம், தங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளாது, தாம் மறுத்துவிட்டதால் தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி கேரள தேசத்திற்குச் சென்றுவிட்டனர்.தம்மால் தில்லை நடராஜருக்குத் தொண்டு புரியும் தில்லை அந்தணர்கள் வேறு தேசம் சென்று விட்டதை அறிந்து வருந்தினார் கூற்றுவர். மனம் தளர்ந்தார். இனி தனக்கு முடிசூட்ட வேண்டிய அவசியமில்லை என்று கோயிலுக்குச் சென்று “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி, அந்நினைவுடன் துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருளினார். அவருடைய குருபூஜை இன்று ஆடி திருவாதிரை.

27-7-2022 - புதன்  வாஸ்து நாள்

வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில், பூமிபூஜை செய்யலாம். ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாட்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். இன்று புதன்கிழமை ஆடி மாதம் 11ஆம் தேதி காலை 6.48 மணி முதல் 8.18 மணி வரை வாஸ்து புருஷன் காலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வாஸ்து புருஷன் விழித்ததும் நீராடுவார், பின் பூஜைகள் செய்வார் என்றும் கூறுகின்றனர். இதையடுத்து உணவு எடுத்துக்கொள்ளுவார். பிறகு தாம்பூலம் போடுவார். வாஸ்து புருஷன் நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நல்ல நேரமாகும். இன்று அப்படி மிக நல்ல நேரமாக காலை 7.42 மணி முதல் 8.18 மணி வரை வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்வது நல்லது.

28-7-2022 - வியாழன்  ஆடி அமாவாசை

 சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருவிழா இன்று ஆடி அமாவாசை. இன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் திருவிழா விசேஷமாக நடக்கும். நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் இந்த மலை ‘‘சதுரகிரி” என அழைக்கப்படுகிறது. சதுரகிரி மகாலிங்கம் கோயில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும்.  சுந்தரமகாலிங்கம் சந்நதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது.

இந்த வனப்பகுதியானது கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்த இடம். இம்மலையில், ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளன. இங்கு மகாலிங்க சுவாமி சித்தர்களுக்கு காட்சியளித்த நாள் ஆடி அமாவாசை. எனவே ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்