SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவனார்க்கு உகந்த வில்வ தளம்

2022-07-25@ 14:12:53

பில்வம் எனும் வடசொல்லினைத் தமிழில் வில்வம் என குறிப்பிடுகிறார்கள். உடலுக்கு அருமருந்தாகும் தன்மையுடையதான வில்வதளம் (வில்வ இலை) சிவபெருமான் உவந்து ஏற்கும் தகைமையுடையது என்பதனை ஆன்றோர் பலர் எடுத்துரைத்துள்ளனர். தொன்மங்களான நம்புராண நூல்களும், திருக்கோயில்களில் நாளும் லிங்கப் பெருமானை அர்ச்சிக்கும் வழிபாட்டு நெறிகளும் வில்வ தளங்களின் உயர்வினை நமக்குக் காட்டி நிற்கின்றன. தொண்டை மண்டலத்துத் தேவாரத் தலமான திருவல்லம் (திருவலம்) எனும் ஊர் பண்டு வில்வாரண்யம் (வில்வமரக்காடு) என்று அழைக்கப்பெற்றதோடு, அங்குறையும் சிவபெருமானின் திருநாமமாக வில்வநாதீஸ்வரர் என்ற பெயரே இன்றளவும் வழக்கில் உள்ளது.

சோழநாட்டுத் தேவாரத் தலமான திருக்கொள்ளம்பூதூர் அருகே ஓடும் முள்ளியாற்றில் பெருவெள்ளம் வந்தபோது அங்கு சென்ற திருஞானசம்பந்தர், ஓடம் இருந்தும் ஓடக்காரர் இல்லாததால், அவ்வோடத்தை வெள்ளநீரில் இறக்கி தன் அடியார்களுடன் அதில் அமர்ந்து “கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்” என்ற பதிகத்தைத் தொடங்கி பாடல்கள்தோறும் “செல்ல உந்துக, செல்ல உந்துக” எனப்பாடி தன் தமிழின் ஆற்றலால் எதிர்கரை அடைந்து அங்கு வில்வ வனத்தில் அருள்பாலித்த ஈசனை வணங்கினார். அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய அப்பெருமானின் திருநாமம் வில்வவனேசர் என்பதாகும்.

தமிழ்நாட்டின் மூன்றாவது வில்வ வனம் (வில்வாரண்யம்) திகழும் திருவூர் கொள்ளிடக்கரையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல்பெற்ற திருவைகாவூர் ஆகும். அங்கு திகழும் பெருமானின் திருநாமம் வில்வவனேஸ்வரர் என்பதாகும். அம்பிகையின் பெயராக சர்வஜனரக்ஷகி என அழைக்கின்றனர். அனைவர்க்கும் அருளும் பெருமானும் தேவியும் உறையும் இத் தலத்தில்தான், வில்வத்தின் மகிமைதனை பெருமான் உலகுக்குக் காட்டி அருளினார். அதனை திருவைகாவூரின் வில்வாரண்ய மகாத்மியம் பின்வருமாறு உரைக்கின்றது.

ஒரு சிவராத்திரி நாளின் பகற்பொழுதில் வேட்டைக்காகக் கானகம் சென்ற வேடுவன் ஒருவன் அந்தி மயங்கும் வேளையில் அந்த வில்வாரண்ய பெருங்காட்டிலிருந்து தன் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்ப்பட்ட புலி ஒன்று அவனைக் கொல்வதற்காக விரட்டத் தொடங்கியது. நெடுநேரம் ஓடியும், இரவு கவிந்தும் அப்புலி அவனையே தொடர்ந்தது. ஓட இயலாத நிலை ஏற்பட்டபோது அக்கானகத்திலிருந்த வில்வமரம் ஒன்றின் உச்சிமீதேறி கிளையொன்றில் அமர்ந்துகொண்டான்.

புலியும் அவனைக் கொல்லாமல் விடுவதில்லை என முடிவெடுத்து அம்மரத்தின் கீழேயே அமர்ந்துகொண்டது. சிவராத்திரி நாளான அன்றிரவு அவனால் ஒரு கணம்கூட தூங்கமுடியவில்லை. தான் விழித்திருக்க வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்த அவன் தூக்கத்தைத் தவிர்க்க அம்மரத்திலிருந்து ஒவ்வொரு வில்வ இலையாகப் பறித்து கீழே போட்டவண்ணமே இருந்தான்.
விழுந்த ஒவ்வொரு வில்வ இலையும், அவ்வில்வ மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன. தான் சிவபூசை செய்கிறோம் என்பது அறியாமலேயே சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து, வில்வ பூசை செய்திருந்தான். பொழுதும் புலர்ந்தது. அவன் போட்ட வில்வ தளங்களின் மகிமையால் அவன் முன்பு உமையவளுடன் இடபத்தின் மீதேறி வில்வாரண்யேஸ்வரர் காட்சி தந்தார். புலியாக அங்கு அமர்ந்திருந்த யமனும் உருமாறி அவ்வேடுவனைத் தொழுது நின்றான். திருவைகாவூர் எனும் இத்தலம் திருவையாற்றிலிருந்து சுவாமிமலை செல்லும் சாலையிலிருந்து பிரியும் கிளைச்சாலையில் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ளது.

சிவ மகாபுராணத்தின் ஒரு பிரிவான ஞான சம்ஹிதையில் வேடன் ஒருவன் சிவராத்திரி பலன் பெற்ற தொன்மம் உரைக்கப்பெற்றுள்ளது. சூத முனிவரால் கூறப்பெற்ற இப்பகுதியில், வில்வ தளத்தின் மகிமை உரைக்கப்பெற்றுள்ளது. நீர்க் குடுவையுடன் மான் வேட்டைக்குக் கானகம் சென்ற ஒரு வேடன் மாலைப்பொழுதில் ஒரு பெண்மானைக் கண்டு அதனைக் கொல்ல அம்பு தொடுத்தான். அப்பெண்மான் அவனிடம், தான் தன் இருப்பிடம் சென்று தன் கன்றுகளை மற்றொரு பெண்மானிடம் ஒப்புவித்துவிட்டுத் திரும்பி உனக்காக வருவேன் என்று சத்தியவாக்கு கொடுத்தது. அதனை ஏற்று அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். அப்போது, அவனுடைய நீர்க்குடுவையிலிருந்து சிறிது நீரும் அவன் கையிலிருந்து வில்வ இலைகளும் கீழே கொட்ட, அவை அங்கிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.

சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண்மானும் அங்கு வர, அதைக் கொல்ல முயன்றபோது அதுவும் சத்தியவாக்கு கொடுத்து தன் இருப்பிடம் சென்று திரும்பி வருவதாக உறுதி செய்து சென்றது. அதனை எதிர்பார்த்து அமர்ந்திருந்த அவன், நீர்க்குடுவையிலிருந்து நீரும் அவன் பறித்திருந்த வில்வ இலைகளும் கீழிருந்த லிங்கத்தின்மீது வீழ்ந்தன. மூன்றாவதாக அவ்விரு மான்களின் இணையான ஆண்மான் அங்கு வந்தது. அதுவும் தன் கடமை முடிந்து திரும்புவதாக உறுதி அளித்துச் சென்றது. அப்போது ஒருமுறை நீரும், வில்வ இலைகளும் பெருமான்மீது அபிடேகித்தன.
சத்திய வாக்கை நம்பி மூன்று மான்களும் அங்கு வருமெனக் காத்திருந்தான் அவ்வேடன். அப்போது ஆண்மான், தன் இரு பெண்மான்களுடனும் குட்டிகளுடனும் அங்கு திரும்பி வந்தது.

அவற்றைக் கண்டு ஆனந்தத்தில் அவன் துள்ளவே குடுவையில் எஞ்சியிருந்த நீரும், அவன் பற்றியிருந்த மரக்கிளையிலிருந்த வில்வ இலைகளும் மீண்டும் லிங்கப்பெருமான்மீது விழுந்தன. சிவராத்தியின் பலனும், சிவபூசையின் பலனும் அறியாமலேயே அன்று இரவு நான்கு காலங்களிலும் கண் விழித்து, நீரும் வில்வ தளிரும் கொண்டு சிவபூசை செய்த அவனுக்கு ஞானம் கிட்டியது. உண்மைப் பொருள் உணர்ந்தான். விலங்கினங்களின் சத்தியம் அறிந்தான். ஈசனால் ஆட்கொள்ளப்பெற்றான். சிவபெருமானின் பெருங்கருணையால் வியாதன் என்ற அவ்வேடன் தன் பாவம் நீங்கி குகன் என்ற திவ்யநாமம் பெற்றான்.

அவனே இராமபிரானின் தோழனுமானான். வில்வ தளங்களின் மகிமைக்கு இத்தொன்மங்கள்தான் எடுத்துக்காட்டு. அவ்வில்வத்தால் ஈசனை எவ்வாறு நாம் அர்ச்சிப்பது என்பதைக் காட்டுவதே ``வில்வ அஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்’’ என்னும் நூலாகும். ஆன்மிகத்தின் அற்புதத்தைக் காட்டும் இந்நூல் நாம் செய்யும் பூசைகளை ஈசனிடம் நேர்கொண்டு செலுத்த வழிவகுக்கும் ஒன்றாகும்.

திருவைகாவூர் தலபுராணத்தைக் காட்சியாகக் காட்டும்வண்ணம் அமைந்த சுதை பதுமைகளால் ஆன காட்சி ஒன்று அக்கோயிலில் உள்ளது. அதுபோன்றே வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வசந்த மண்டத்து தூண் ஒன்றில், இப்புராணக் காட்சி சிற்பமாக இடம்பெற்றுள்ளது. வில்வ மரமொன்றில் வில்லுடன் அமர்ந்துள்ள வேடனின் கரம் வில்வ இலையைப் பிடித்தவாறு காணப்பெறுகின்றது. மரத்தின்கீழ் புலியும் சிவலிங்கமும் உள்ளன.

முதுமுனைவர் குடவாயில்
பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்