SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புண்ணிய நதிகளில் நீராடுவது ஏன்? எப்படி நீராட வேண்டும்?

2022-07-11@ 15:17:00

நன்றி குங்குமம் ஆன்மீகம்

புண்ணிய நதிகளில் நீராடுவது என்பது நம் பாவங்களை நீக்கிக் கொள்ளும் வழிமுறையாகும். பஞ்சபூதங்களில் தண்ணீருக்கு ஒரு பெரிய ஏற்றம் உண்டு. நதி எதையும் தூய்மையாக்கிவிடும். தண்ணீர் வறண்ட பிரதேசத்தையும் பசுஞ்சோலையாக மாற்றிவிடும். இந்த சக்தி நதிகளுக்கு உண்டு என்பதால், கருடபுராணம் தீர்த்த யாத்திரையின் மிக முக்கியமான அம்சமான புனித நதிகளில் நீராடி பித்ரு கடன்களை கழிப்பதை சிறப்பாகக் கூறுகிறது. இதனை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலை ஆசிரமங்களில் உள்ளவர்களும் செய்யலாம். செய்ய வேண்டும். நதியில் நீராடி, பிதுர் கடன் செய்யும் பொழுது நாமும் நமக்கு முந்திய ஏழு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களும் பிறவிப் பயனை அடைகின்றனர்.

மகாபாரதத்தில் ஒரு சுலோகம் பின்வருமாறு பேசுகிறது. ஒருவருக்கு யாகங்கள் போன்ற விஷயங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. யாகங்களுக்கு நிறைய பொருள் வேண்டும். பொருள் இல்லாத சாமானியர்கள் என்ன செய்வார்கள்? அதற்கு மஹாபாரதம் வேறு எளிய வழியைச் சொல்கிறது. அது தான் தீர்த்த யாத்திரை. யாகங்களுக்கு சமமானது தீர்த்தயாத்திரை. அது யாகங்களின் பலன்களை மிக எளிதில் தந்துவிடும்.

ராமாயணத்தில் ராமனை காட்டுக்கு போகச் சொல்கிறாள் கைகேயி. வெறுமனே காட்டுக்குப் போகச் சொல்ல வில்லை. அந்த காட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விதியாகச் சொல்லுகின்றாள்.

1) கடல் சூழ்ந்த உலகத்தை பரதன் ஆள வேண்டும்.
2) நீ ஜடாமுடி தரித்துக் கொண்டு, மரவுரி அணிந்து கொண்டு, காட்டுக்குச் சென்று, தவம் செய்ய வேண்டும்.
3) ஆங்காங்கே இருக்கக்கூடிய புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். காரணம், தவம் செய்பவர்கள் ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கி விடக் கூடாது.
4) பதினான்கு ஆண்டுகள் இப்படிக் கழிக்கவேண்டும். பின் வரவேண்டும். பாடல் இது;

ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய்த்                                                        
தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு                                            
பூழிரும் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள்ஆடி,                                                     
ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்’ என்றாள்.


எனவே தவ வாழ்க்கையில் ஒரு முக்கியமான விதி புண்ணிய நதிகளில் நீராடுவது. எனவேதான் இல்லறத்தில் இருப்பவர்களும் அவ்வப்பொழுது புனித நதிகளில் நீராடி, அங்குள்ள திருத்தலங்களில் உள்ள இறைவனை தரிசிக்க, தீர்த்த யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரைக்கு தீர்த்தயாத்திரை என்று ஏன் பெயர்? நதிகளில் நீராடுவது தான் இதில் முதன்மையாகச் செல்லப்பட்டது. காசிக்குச் செல்வது கங்கையில் நீராடத்தான். பிறகுதான் காசி விஸ்வநாதர் அன்னபூரணி தரிசனம் எல்லாம்.

பொதுவாகவே நமது வாழ்க்கையை தேகயாத்திரை என்று சொல்கிறார்கள். இந்த யாத்திரையின் முடிவு நல்லபடியாக அமைவதற்கு தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும். மனிதர்கள் தீர்த்த யாத்திரையை நடந்து சென்று செய்வதே நல்லது. இந்த காலத்திற்கு இது பொருந்தாது. ஆயினும் தீர்த்த யாத்திரையை தூய்மையான எண்ணத்துடனும், இலகுவான ஆகாரத்துடனும், பயபக்தியுடனும் செய்ய வேண்டும். சுற்றுலா அல்ல தீர்த்த யாத்திரை.

தீர்த்த யாத்திரையில் அங்கங்கே மூர்த்திகளை தரிசனம் செய்வதற்கு முன் புனித நதிகளில் நீராட வேண்டும். தீர்த்தத்தைக் கண்டவுடன் அதனை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும். அதனை கைகளில் அள்ளி தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். தீர்த்தங்களை அசுத்தப்படுத்துவது என்பது நூறு முறை பாவம் செய்வதற்கு சமமான தோஷத்தைக்கொடுக்கும்.

‘மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும்
மூன்றையும் தொழுவார்க்கு
வார்த்தை சொல்ல சற்குரு வாய்க்குமே’
என்பார் தாயுமானவ சுவாமிகள்.

 
நீர்நிலைகளில் குளிக்கும்போது சில விதிகள் இருக்கின்றன. ஸ்நானம், தவம், ஜெபம், ஹோமம், ஸ்ரார்த்தம், தானங்கள் இவைகளை நதிக்கரையில் செய்ய வேண்டும். அதுவும் பகலிலேயே தான் செய்ய வேண்டும். பொதுவாக, சூரியன் உதிப்பதற்கு முன் அருணோதய வேளையில் நீராட வேண்டும். நீராடுவதற்கு முன் அன்றைய திதி, வாரம், நட்சத் திரம், யோகம், கரணம் முதலியவற்றையும் சொல்லி, புனித நதிகள் ஆக இருப்பின், அதன் பெயரையும் குறிப்பிட்டு சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். முற்காலத்திலே, வீட்டில் நீராடும் போதும் கூட, நதிகளை நினைத்துக் கொள்ளும் சுலோகம் இன்று வழக்கொழிந்து போய்விட்டது. காலையிலே நீராடும் போது, மானசீகமான சொல்லும் சுலோகம் இது; கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி.

நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு.நீராடும்போது பிரவாகங்களுக்கு எதிராகவும், குளங்களில் நீராடும்போது சூரியன் இருக்கும் திசையை நோக்கி நின்று கொண்டும்  நீராட வேண்டும். நாம் எந்த நிலையில் எந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும் உலகில் சகல புண்ணிய நதிகளும் அதில் கலந்து உடலோடு உள்ளத்தையும் தூய்மை படுத்துவதாக எண்ணி பக்தியோடு நீராடவேண்டும்.

சிலர் நீர் நிலைகளில் நின்று ஜெபம் செய்வதுண்டு. நீராடி கரையேறும் போது இரு கைகளில் நீரை நிரப்பிக் கொண்டு, ``என் உடலில் உள்ள அழுக்குகளை நீரில் கழுவி நான் பாவம் செய்திருக்கிறேன். அந்த தோஷம் நீங்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்து இரு கைகளில் உள்ள நீரையும் கரையில் விட்டு ஏற வேண்டும். உடம்பை உடனே துடைத்து விடக்கூடாது. உடலில் வடியும் நீரை தேவர்களும் சித்தர்களும் ஏனைய உயிரினங்களும் பெறுவதாகச் சாத்திரம் கூறுகிறது.
 
எனவே, ஒருகணம் அப்படியே நிற்க வேண்டும். ஒரு முக்கியமான விஷயம். ஆடையின்றி நீராடுதல் மகா பாவமாகும். வீட்டில் பாத்ரூமில் குளிப்பதாக இருந்தாலும், ஒரு ஆடையோடு தான் குளிக்க வேண்டும். மேலாடையை நான்காக மடித்துப் பிழிய வேண்டும். அப்பொழுது சொல்லப்படும் மந்திரம் இது;
 
யே கே சாஸ்மத் குலே ஜாதா :
அபுத்ரா: கோத்ரஜா ம்ருதா :
தே கிருஷ்ணா ஹந்து
மயா தத்தம் வஸ்திர நிஷ்பீட நோதகம்

 
என்ன பொருள் தெரியுமா?

என் குலத்தில் கோத்திரத்தில் பிறந்து சந்ததியின்றி மறைந்தவர்களுக்கு இந்தத் துணியில் இருந்து பிழிந்த நீர் திருப்தி அளிக்கட்டும். அதன்பிறகு பிழிந்த துணியை இடது கையில் வைத்துக்கொண்டு இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் என்பது வலது உள்ளங்கையில் ஒரு துளி நீர் வார்த்து அப்படியே ஒலி எழாமல் உட்கொள்வது ஆகும். ஈரமுள்ள ஆடையை தோளிலோ, காலடியிலோ வைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் மறுபடி நீராடவேண்டும். நதியில் மூழ்குவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி, இடுப்பு வரை தண்ணீரில் நனையும்படி நிற்கவேண்டும். மூன்றுமுறை சிறிதளவு தீர்த்தத்தை, உள்ளங்கையில் எடுத்து, மஹா விஷ்ணுவின் நாமங்களை சொல்லி உட் கொள்ள வேண்டும்.

பின், தலையில் சிறிதளவு தெளித்து கொள்ள வேண்டும். முதல்முறை மூழ்கும்போது, கண்கள், காதுகள், மூக்குத்துளைகளை கைகளால் மூடிக்கொண்டு மூழ்கவேண்டும். நீராடும்போது சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது. நதிகளில் எச்சில் துப்பக்கூடாது. நீராடும்போது நீருக்குள்ளேயே சிறுநீர் கழித்தலும் கூடாது. செருப்புக்காலோடு நதிகளில் இறங்கக்கூடாது. நீண்ட தலைமுடி கொண்ட ஆண்களும், பெண்களும் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. தலைமுடியில் உள்ள நீர் முன்புறமாக விழுந்தால் அது கங்கை தீர்த்தத்திற்குச் சமமாகும். பின்புறம் விழுந்தால் அது கள்ளுக்குச் சமமாகும். ஆகையால், முன்புறமாக குனிந்து கொண்டு தலைமுடியில் உள்ள நீரை பூமியில் விழச் செய்ய வேண்டும்.

நதியினுள் நின்று ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும். நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிரை கையால் உதறக் கூடாது. தலைமயிரில் உள்ள நீர், வஸ்திர நீர் பிறர் மேல் படக் கூடாது. இது எவர் மீது படுகிறதோ அவரிடம் உள்ள செல்வமெல்லாம் தொலைந்து, தரித்திரராகி விடுவர் என்பது சாத்திர விதி. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது. நெற்றியில் திருநீறோ அல்லது கோபி சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முறை நதியை வணங்க வேண்டும்.

நீராடுதல் ஆறு வகைப்படும்.

1. நித்தியம், 2. நைமித்திகம், 3. காமியம், 4. க்ரியாங்கம், 5. மலாப கர்ஷணம், 6. க்ரியா ஸ்நானம்

எந்தக் கடமையாக இருந்தாலும் தினசரி ஸ்நானம் செய்துவிட்டு தான் தொடங்க வேண்டும். காலைக் கடன்களில் முக்கியமான கடன் நீராடுதல். தினசரி கடமைகளில் ஒன்றாக இருப்பதால், இதனை நித்தியம் என்று சொல்லுகின்றோம். வீடுகளால் ஏற்படும் அசுத்தியைப் போக்கிக்கொள்ள நீராடுவதை நைமித்திகம் என்கிறோம். சில விழாக்களுக்காக பிரத்தியேகமாக நீராடுதல், காம்யமாகும். சிராத்தம் மற்றும் தர்பணம் போன்றவற்றுக்காக நீராடுதல், க்ரியாங்கமாகும். அதாவது ஒரு கிரியைக்கு அங்கமாக நீராடல் அமைந்திருக்கிறது. உடம்பின் சுத்தமாகும் புண்ணிய நதிகளில் நீராடுவது மலாப கர்ஷணமாகும். புண்ணிய நதிகளில் நீராடுவது க்ரியா ஸ்நானமாகும். எல்லா நீர்நிலைகளும் நீராட ஏற்றவை அல்ல.
 
ஸ்நானம் செய்ய ஏற்ற நீர் நிலைகள்.

1) மலையில் தோன்றி கடலில் கலக்கும் நதிகள்
2) ஊற்றாக வெளியில் வந்து பூமியில் மறைகின்ற நீர் நிலை
3) ஓடை அல்லது நீர்தேக்கம் (சரஸ்)
4) தானே அமைந்த புஷ்கரணிகள்  
5) தடாகங்கள்
6) நல்ல படிகளால் முறையாக கட்டப்பட்ட குளங்கள்
7) மலை பிளந்து அதிலிருந்து தாரையாக ஊற்றும் அருவிகள்
8) கிணறு

இன்னொரு முக்கியமான விஷயம், எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன. அந்தக் கடலைப் பார்த்தவுடன் சமுத்திர ஸ்நானம் செய்ய சிலர் இறங்கி விடுகின்றனர். அமாவாசை, பௌர்ணமி போன்ற சில காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் கடலில் நீராடுவது சரியானதல்ல என்கிறது சாஸ்திர. இதற்கு விதிவிலக்கு உண்டு.

சில குறிப்பிட்ட இடங்களில் சமுத்திர ஸ்நானம் சிறந்தது. புண்ணிய நதிகள் கூடும் சமுத்திரத் துறைகளுக்கு வார தோஷம் கிடையாது. சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தால் சுத்தமான தண்ணீரால் ஆசமனம் செய்ய வேண்டும். நதி தேவதைகளின் பெயரை உரக்கச் சொல்லி நீராடவேண்டும். ஸ்ரீ மன் நாராயணன் என்ற சப்தம் நீரைக் குறிக்கிறது. அவருடைய திவ்யமான ஹரி: என்ற நாமத்தை மெல்லச் சொல்லி நீராடுவது உடலை மட்டுமல்லாது மனதையும் தூய்மைப்படுத்தும்.

சுதர்சன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

 • turist_world

  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

 • noru-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்