SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-07-09@ 14:37:33

10-7-2022 - ஞாயிற்றுக்கிழமை - விஷ்ணு சயன ஏகாதசி

மாந்தாதா  என்ற ஒரு அரசன் நன்றாக ஆண்டு கொண்டிருந்தான். ஒரு முறை மழை பொய்த்துப் போனது. பயிர்கள் காய்ந்து வாடின. கால் நடைகள் தண்ணீருக்குத் தவித்தன. மக்கள் உணவின்றி கொடும் பஞ்சத்திற்கு ஆளானார்கள். மாந்தாதா ஆங்கீரஸ முனிவர் என்ற முனிவரைச்  சந்தித்தான். மக்கள் படும் இன்னல்களைச்  சொல்லித் தீர்வு கேட்டான். ஆங்கிரஸ முனிவர் மன்னனைக்  கருணையோடு பார்த்தார். ‘‘உன்னுடைய அன்பு உள்ளத்திற்கு நாட்டிலே நிச்சயம் மறுபடியும் மழை பெய்யும்.  நான் ஒரு விரதம் சொல்லுகிறேன். இம்மாத வளர்பிறை ஏகாதசியை அனுசரி. இந்த ஏகாதசிக்கு சயன ஏகாதசி என்று பெயர். வழக்கமான ஏகாதசியை விட சக்தி வாய்ந்தது. காரணம் தேவர்களின் இரவு காலமாகிய தட்சிணாயணம் தொடங்கும் மாதத்தின் முதல் ஏகாதசி.” மன்னன் விரதமிருந்து  நல்வாழ்வை அடைந்தான்.

இந்த ஏகாதசியால் இழந்தது எல்லாம் மறுபடியும் கிடைத்துவிடும். சன்னியாசிகள் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கக் கூடிய  காலக்கட்டத்தில் வருகின்ற முதல் ஏகாதசி. பித்தளை, வெள்ளியால் செய்யப்பட்ட விளக்கை, ஒரு தட்டின் நடுவில் வைத்து,  விளக்கில் நெய்  ஊற்றி, திரியிட்டு, தீபம் ஏற்றி, வேதம் கற்றவருக்குப்  தானமாகப்  தந்தால், ஞானமும் செல்வமும் கிடைக்கும். வழக்கம்போல முதல் நாளாகிய தசமி திதி அன்று இரவு உணவை தவிர்த்து விடவேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பெருமாளை வணங்க வேண்டும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலை திருமால் ஆலயத்துக்குச் சென்று வணங்கி வலம் வர வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாக ஏகாதசியின் முழு பலனையும் நாம் அடையமுடியும்.

10-7-2022 - ஞாயிற்றுக்கிழமை - கோ பத்ம விரதம்

ஆனிமாதம் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற வளர்பிறை ஏகாதசியில் தொடங்கி, பௌர்ணமி வரை ஐந்து தினங்கள் கோபத்ம விரதத்திற்கு உரிய நாளாகச் சொல்லப்படுகிறது. இந்த நாட்களில் பசு பூஜை செய்வது நல்லது. பசுவுக்கு ஒரு வாய் அகத்திக்கீரை, புல், தீவனம், வாழைப் பழம் கொடுத்து, வலம் வந்து தொட்டு  வணங்குவதன் மூலம் மகாலட்சுமியின் பேரருள் கிடைக்கும். பசுவை  நம் வீட்டுக்கு வரவழைத்து இந்த ஐந்து நாட்களில் ஏதேனும் ஒரு நாள் இந்த பூஜையைச் செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் பசு இருக்கக் கூடிய இடத்திற்குச் சென்று அந்தப் பசுவை நன்கு குளிப்பாட்டி அதற்கு பூமாலை போட்டு, வஸ்திரங்கள் அணிவித்து, மஞ்சள் குங்குமம் தடவி, தீவனம் வாழைப்பழம் படைத்து,தூப தீபங்கள் காட்டி, அதனை மூன்று முறை சுற்றி வந்து அதனுடைய பின்புறத்தைத் தொட்டு வணங்குவதன் மூலமாக இந்த பூஜை இனிதாக நிறைவு பெறும். இதைத் தம்பதி சமேதராக செய்வது நல்லது கோ பத்ம பூஜை செய்கின்ற பொழுது பசுவும் கன்றும் இணைந்து இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

10-7-2022 - ஞாயிற்றுக்கிழமை - நாதமுனிகள் ஜெயந்தி

ஸ்ரீமந் நாதமுனிகள், எட்டாம் நூற்றாண்டில், வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈச்வர பட்டாழ்வார்க்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாதமுனி, நாதப்ரஹ்மர் என்னும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர்தான் தொடங்கி வைத்தார். ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் நூலை தொகுத்துக் கொடுத்தவர் நாதமுனிகள். நாதமுனிகள் இல்லாவிட்டால் 4000 தமிழ்ப் பாசுரங்கள் இல்லை. இன்று வைணவ ஆலயங்களில், மூலஸ்தானத்தில், ஆழ்வார் களின் அருந்தமிழை, பெருமாள் கேட்பதற்கு, ஆலய வழிபாட்டு முறையை ஏற்படுத்தித் தந்தவர் நாதமுனிகள்.

வைணவ ஆச்சார்யர்களில்  முதன்மையானவர். வைணவ ஆசாரிய பரம்பரை இவரி டத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. இவருடைய அவதாரம் ஜெயந்தி தினம்  ஆனி மாதம் அனுஷ நட்சத்திரம். (10.7.2022).இந்த உற்சவம் ஒவ்வொரு திருமால் ஆலயங்களிலும் மிக மிக விசேஷமாக நடைபெறும். அவர் அவதாரம் செய்த காட்டுமன்னார்குடி என்னும் ஊரில் பத்து நாள் உற்சவமாக இந்த அவதார உற்சவம் நடைபெறும்.

11-7-2022 - திங்கட்கிழமை சோமபிரதோஷம், சாதுர்மாஸ்ய விரதம், ஜேஷ்டாபிஷேகம்

இன்று திங்கட்கிழமை. பல விசேஷங்கள் அடங்கிய நாள். வருடத்தில் நான்கு மாதங்கள் சன்னியாசிகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சாதுர்மாஸ்ய விரதம் இன்று தொடங்குகிறது.சாதூர்மாஸ்யம் என்றால் நான்கு மாதங்கள். ஆஷாட மாத வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கி, அடுத்து வரும் ச்ரவண, பாத்ரபத, ஆச்வின மாதங்களிலும் விரதம் அனுஷ்டித்து, கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று இந்த விரதத்தை சன்னியாசிகள் நிறைவு செய்வார்கள். இந்த நான்கு மாதங்களிலும் அவர்கள் வேறெங்கும் சஞ்சரிக்காமல் ஒரே இடத்தில் தங்கிவிடுவார்கள். சாதுர்மாஸ்ய சன்னியாசிகளை வணங்குவதன் மூலமாக பல நன்மைகள் கிடைக்கும். தோஷங்கள் விலகும்.

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் நீண்ட மாதமாகிய ஆடி மாதத்தை ஜேஷ்ட மாதம், அதாவது மூத்த மாதம் என்று சொல்வதால், பல திருக் கோயில்களில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். பெரிய கோயில் என்று கருதப்படும் திருவரங்கத்தில் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரமான இன்று பெரிய திருமஞ்சனம் நடைபெறும்.
இந்தத்  திருமஞ்சனத்தை காண்பவர்களுக்கும், ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்பவர்களுக்கும், இந்திரனுக்கு சமமான பதவியும் புகழும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இது தவிர இன்றைய தினம் திங்கட்கிழமை, சோம பிரதோஷம் நாளாகவும் அமைந்திருக்கிறது. சோமவார பிரதோஷ நாளில் சிவ ஆலயங்களில் மாலை வேளைகளில் நந்தி தேவருக்கும் அபிஷேம் நடைபெறும் வேளையில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் நல்லது.

13-7-2022 - புதன்கிழமை  வியாச பூஜை, குரு பூர்ணிமா

ஆனி மாதம், அமாவாசை கழிந்து வரும் ழுழுநிலவு நாள் அன்று, சீடர்கள், தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவைப் போற்றும் குரு வழிபாடு செய்யும் தினம் குரு பூர்ணிமா. மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தைப் பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப்படுத்தினார்கள். அதனால் குருபூஜை முக்கியமானது. ‘‘வியாஸாய விஷ்ணு ரூபாய” என்பார்கள். வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த வியாசர்தான் முதல் குரு என்பது இந்திய சமய மரபு. புதன் மகா விஷ்ணுவுக்குரிய கிழமை. இந்தக் கிழமையில் குருபூஜை வருவது சிறப்பு.

மகாலட்சுமிக்குரிய பூராட நட்சத்திரத்தில், குரு தன்னுடைய சொந்த ராசியான மீன ராசியில் ஆட்சிப் பலத்தோடு இருக்கும்பொழுது இந்த ஆண்டு குருபூஜை விசேஷமாக வருகிறது. இன்றைய தினம், குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும்  வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர். பௌத்தர்களும், புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர். குரு பூர்ணிமா தினத்தில், நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைக்க வேண்டும். அன்று கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது.

13-7-2022 - புதன்கிழமை  அருணகிரிநாதர் குருபூஜை

வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் நம் வாழ்க்கைக்கு திருப்புகழ் தந்த ஸ்ரீ மத் அருணகிரிநாதர் குருபூஜை விழா இன்று (ஆனி மாதம் பௌர்ணமியோடு கூடிய மூல நன் நாள்)  கொண்டாடப்பட உள்ளது. அருண கிரிநாதர் சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு அநேகம். கந்தர் அந்தாதி (102 பாடல்கள்), கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்), கந்தரனுபூதி (52 பாடல்கள்), திருப்புகழ் (1307 பாடல்கள்), திருவகுப்பு (25 பாடல்கள்), சேவல் விருத்தம் (11 பாடல்கள்), மயில் விருத்தம் (11 பாடல்கள்), வேல் விருத்தம் (11 பாடல் கள்), திருவெழுகூற்றிருக்கை.அவருடைய குரு பூஜை நாளில் அவர் பாடிய திருப்புகழைப் பாடி நலம் பெறுவோம். முருகனின் அருள் பெறுவோம்.
 
14-7-2022 - வியாழக்கிழமை அசூன்ய சயன விரதம்

இது ஒரு வித்தியாசமான விரதம். இதன் மூலமாக நமக்கு நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும், தம்பதிகளிடையே அன்னி யோன் யமும் குடும்பத்தார் இடையே சினேகித உறவும், நட்பும் நல்ல முறையில் விளங்கும். அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை எழுந்து வழக்கமாக பூஜைக்கு தயாராக வேண்டும். அன்று திருமால் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளி கொண்ட பெருமாள் சேவை தரும் ஆலய தரிசனம் சாலச் சிறந்தது. மாலை பூஜையறையில் விளக்கேற்றி
ஸ்ரீகிருஷ்ணர் - ராதை அல்லது மஹா விஷ்ணு மஹாலஷ்மி இணைந்த விக்ரகம் அல்லது படத்தை ஒரு பலகையில் கோலமிட்டு வைத்து ஆவாஹனம் செய்ய வேண்டும். அதனைப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்பூஜையை தம்பதிகளாக அமர்ந்து செய்வது உத்தமம். ரங்கநாத அஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். ஏலக்காய், குங்குமப் பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீ கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும். இரவு பகவான் சிந்தனையோடு படுத்து உறங்க வேண்டும். மறு நாள் காலை எழுந்து, முறையாகப்  புனர் பூஜை செய்து, ஸ்ரீ கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி விக்கிரஹம் படம், தக்ஷிணை, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் வைத்து தானம் செய்துவிட வேண்டும். அசூன்ய சயன விரதத்தை நிறைவு செய்வதற்கு உரிய தலங்கள், கரூரில் அபய ரெங்கநாதர் ஆலயம்,  திருத்தங்கல் ரெங்கநாத மூர்த்தி திருக்கோயில், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகிய மணவாளம் ஊரின் அருகே உள்ள பழமையான ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் போன்றவையாம். இந்த விரதத்தை எல்லோரும் கடைபிடிக்கலாம். நற்சிந்தனையும், நல் வாழ்க்கையும் அமையும். கிருஷ்ண பக்தி பெருகும்.

தொகுப்பு: சுதர்சன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்