SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கங்கையின் மகாத்மியம்

2022-07-05@ 14:26:45

சுகப் பிரம்மம்

ஆராதிக்கும் கங்கை‘‘யார் செஞ்ச புண்ணியமோ இப்போ நாம அனுபவிக்கிறோம்’’ என்று நாம் சில நல்ல விஷயங்களை அனுபவிக்கும்போது சொல்வோம். ஆனால், ‘‘யார் செஞ்ச புண்ணியமோ நமக்கும் புண்ணியமா சேருது’’ என்றுதான் கங்கையைப்பற்றி கூற வேண்டும். பாரதத்தாயே பேரழகு என்றால் அதற்கு அணிகலனாக இருப்பதுதான் கங்கை. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளோடும் சம்பந்தமுள்ளதுதான் கங்கை. ராமபிரான் விஸ்வாமித்திரரால் கங்கையின் மகிமையை கேட்டு வியக்கிறார். ஸ்ரீ சுகப்பிரம்மம் பாகவதத்தில் கங்கையை ஆராதிக்கிறார். மகாபாரதத்தில் பாரத ரத்னமான பீஷ்மரின் தாயே கங்கையாவாள்.

மோட்சத்தின் பாதை

புராண காலம் தொட்டு இன்று வரை கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். பாவங்களை தன்னிடத்தே கரைத்துக் கொண்டும் புண்ணியச் சாரலை வீசிக்கொண்டும் யுகம் யுகமாக பொங்கியபடி நகர்கிறாள். எத்தனை எத்தனை ரிஷிகள் இவளின் கரையில் அமர்ந்து தவமியற்றியிருக்கிறாள். எப்பேற்பட்ட மாமன்னர்கள் இவளை தொழுதிருக்கிறார்கள். ஆதிசங்கரர் கூட, ‘‘நான் இப்படியே கங்கை ஓரமாக ஒரு புல்லாக இருக்க மாட்டேனா’’ என்றெல்லாம் உருகுகிறார். கங்கையின் தீர்த்தத்தை மொண்டு குடித்து கரையருகே தவமியற்றி ஆத்மானந்தம் அடைந்த ரிஷிகள் ஆயிரக் கணக்கில் உண்டு. உயிருள்ள சரீரம் முதல் சவத்திற்குண்டான ஜீவன் வரை காசிக் கங்கை மோட்சத்தை அடைவிக்கிறது. அப்பேற்பட்ட மகிமையை உடைய கங்கையின் சரிதத்தை நாம் அறிவோமா?

மகாபலிச் சக்ரவர்த்தி குனிந்து வாமனரின் அந்த முத்து போன்ற நகங்களுள்ள பாதங்களை கண்டான். மென்மையாக பற்றினான். மெல்ல மேலே பார்க்க வாமனரின் திருமேனி நெடுநெடுவென வளரத் தொடங்கியது. வானம் தாண்டியது. மேலேழ் லோகம் பரவியது. திசையெங்கும் அடைத்து நின்றது. ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே அவரின் திருமேனியாக உள்ளது பார்த்து தன்னை மறந்தான்.

ஓரடியில் பூமியை அளந்தார். இரண்டாவது அடியில் பிரம்ம லோக பரியந்தம், சகல லோகத்தையும் அளந்து அதையும் தாண்டி நின்றது. பிரம்ம லோகத்தில் பெருமாளின் திருவடியை கண்ட பிரம்மா ஆஹா என வியந்தார். ஸ்தம்பம் போன்றிருந்த அந்த பெரும் பாதத்தில் தன்னுடைய அனுஷ்டானத்திற்காக வைத்திருந்த தீர்த்தத்தை அபிஷேகமாக செய்தார். அந்த தீர்த்தம் அந்த பெரும்பாதத்தின் முழுமைக்கும் போதாமல் நகக் கணுவின் ஓரமாகச் சென்று அபிஷேகமாகியது. அந்த பிரம்ம லோகத்தில் அவளை விஷ்ணுபதி என்று அழைத்தார்கள். சகல ரிஷிகளும் எம்பெருமானின் திருப்பாதத்தையும் அதில் படர்ந்து பாய்ந்தோடிய கங்கையையும் கண்டு தொழுதார்கள். பெரிய ஸ்தம்பம் ஒன்றில் வெற்றிக் கொடி பறந்தால் எப்படியிருக்குமோ அதுபோல கங்கை இங்கு பாதத்தின் நகக்கணுவின் ஓரமாக அலை அலையாக பொங்கிப் பரவினாள்.

பலிச் சக்ரவர்த்தியால் கங்கை பிரம்மாவிடமிருந்து விஷ்ணு திவ்ய பாத ஸ்பரிசம் பட்டு நேராக துருவ லோகத்திற்குள் நுழைந்தாள். துருவ ஸ்வாமியோ ‘என் குலதெய்வத்தினுடைய சரணாகத விந்த தீர்த்தம் என்மீது விழுகிறதே’ என்று ஆனந்தமானான். அருகேயிருக்கும் சப்தரிஷிகளையும் சில்லென நனைத்தாள். இவ்வாறு ஒவ்வொரு உலகத்தையும் புனிதமாக்கிக் கொண்டே நகர்ந்தாள். சொர்க்க லோகத்திற்குள் புகுந்தாள். அவளை ‘‘வா மந்தாகினி’’ என்று அழைத்து துதித்தார்கள்.  விண்ணுலகம் மந்தாகினி... மந்தாகினி... என தலைமேல் கைகூப்பி தொழுதது. பூவுலகத்திற்குள் இறங்காது அங்கேயே சுழித்து சுழன்று கொண்டிருந்தது. பூலோகம் ஏங்கியது. ஏக்கத்தை நிறைவேற்ற சில தலைமுறைகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

சாம்பலான சகரபுத்திரர்கள்

சூர்ய வம்சத்தில் வந்தவனான சகரன் எனும் அரசன் சுமதி என்ற பெண்ணை மணந்து  அறுபதாயிரம் பிள்ளைகளை பெற்றான். யுகத்திற்கு யுகம் வம்சத்தை விருத்தி செய்தல் மாறுபடும். ரிஷி கர்ப்பம் என்பது நினைத்த மாத்திரத்தில் கர்ப்பம் தரிப்பது. அடுத்து தவ வலிமையை பொறுத்து எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதுபோன்று சகரனுக்கு அறுபதாயிரம் குழந்தைகள் பிறந்தன. சகரன் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தான். அசுவமேத யாகங்கள் செய்து நாட்டை வளமாக்கினான். அப்போது இந்திரனுக்கு சகரன் தன்னுடைய இந்திர பதவியை பறித்துக் கொண்டுவிடுவானோ என பயந்தான். அசுவமேத யாகத்தில் பயன்படுத்தப்படும் குதிரையை மறைத்தான்.

சகரன் தன்னுடைய அனைத்து பிள்ளைகளையும் யாகக் குதிரையை தேடும்படி அனுப்பினான். பூமண்டலத்தின் மேல் பகுதியில் தேடினார்கள்; கிடைக்காததால் பூமிக்கு கீழேயுள்ள பாதாளத்தை ஊடுறுவி பயணித்தனர். பாதாளத்தில் தவமிருந்த கபில முனிவருக்கு அருகே யாகக் குதிரையை கண்டனர். கோபமானார்கள். இவர்தான் இதை கவர்ந்து வந்திருப்பாரோ என தாக்க தொடங்கிய அந்த கணத்தில் அவர்கள் எரிந்து சாம்பலானார்கள்.

சகரன் தன் பிள்ளைகளை காணாது வேதனையுற்றான். தேசினி எனும் மங்கைக்கு பிறந்த மற்றொரு மைந்தனான அசமஞ்சனிடம் விஷயத்தை சொன்னான். சமஞ்சன் என்றால் சமர்த்தனமாகப் பேசுவான். காரியம் செய்வான். அசமஞ்சன் எனில் பித்துப் பிடித்ததுபோல பேசி, வேலையையும் கெடுப்பான். அசமஞ்சன் இந்திர ஜாலங்கள் செய்வதில் மன்னனாக இருந்தான். திடீரென குழந்தைகளை நதியில் வீசி காணாமல் போகச் செய்து மீண்டும் மீட்டு வருவான். அசமஞ்சன் ஞானப் பாதையில் ஈடுபாடு கொண்டு உலகில் உள்ளவர்கள் தன்னை வெறுக்கும்படி நடித்து இறுதியில் தவமியற்றவும் புறப்பட்டான் என்கிறது வேறொரு புராணம். ஆனால், இவனாலும் அறுபதாயிரம் பிள்ளைகளை மீட்டுக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், இவனுக்குப் பிறந்த மகனான அம்சுமான் மட்டும் அறுபதாயிரம் பேர்கள் சென்ற பாதைகளை கண்டுபிடித்தான். பாதாளத்தை அடைந்தான். கபில முனிவரை வணங்கினான். என்ன செய்வது என்று பணிவோடு கேட்டான்.    

கபில முனிவர், ‘‘இதுதான் உன் பாட்டனார் சகரன் அசுவமேத யாகம் செய்வதற்காக வைத்திருந்த குதிரை. இந்தச் சாம்பல் குவியல்தான், அறுபதாயிரம் சகர புத்ரர்கள்.  விண்ணுலகில் பாயும் கங்கை இவர்கள் மீது பட்டால் உயிர் பெறுவார்கள்’’ என்று ஆசிர்வதித்தார்.

பகீரதனின் பிரயத்தனம்

குதிரையை மட்டும்தான் அம்சுமானால் மீட்க முடிந்தது. கங்கையை கொண்டு வர முடியவில்லை. அம்சுமான் இறந்து போனான். அவருடைய பேரனும், திலீபனின் மகனுமான பகீரதன்தான், ‘‘நான் எப்படியேனும் கங்கையை கொண்டு வருகிறேன்’’ என்று கடுந்தவமிருந்தான். குளிர்ந்திருந்த கங்கையே பகீரதனின் ஒற்றைக்கால் தவத்தை எண்ணி தவித்துப்போய் பகீரதன் முன் உதித்தாள்.
‘‘நான் வருகிறேன். ஆனால், என் வீழ்ச்சியை தாங்கும் பலம் இங்கு யாருக்கு உண்டு. என் வேகத்தால் பூமியைத் தாண்டி அதல, பாதாள, ரசாதலம் சென்று
விட்டால் என்ன செய்வீர்கள்’’ என்றாள்.

கங்காதரன் எனும் நாமம் ஏற்றார்!

பகீரதன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். காட்சி தந்த ஈசனிடம் தாங்கள்தான் கங்கையை தங்கள் ஜடையில் தரிக்க வேண்டுமென்று கேட்டுப் பணிந்தான்.
விண்ணுலக நாயகி பூவுலகிற்கு பயணித்தாள். இமயத்தின் மடியில் தவழ்ந்திறங்கியவளை சிவபெருமான் தன்னுடைய ஜடாபாரத்தில் தாங்கினார். இப்போதுதான் மந்தாகினி என்ற பெயருடைய நதி கங்கா என்று பெயர் பெறுகிறது.

கௌஹ் என்றால் பூமி. காம்ஹா என்றால் அடைந்தாள். இதைச் சேர்த்து பொருள் கொண்டால் (கௌஹ்+காம்ஹா) கங்கா என்று வரும். தேவலோக நதி பூமியை அடைந்து கங்கா என்று பெயர் பெற்றாள். பகீரதன் இந்த அரிதான நிகழ்வைக் கண்டு ஆனந்தித்தான். அதேசமயம் அப்பேற்பட்ட கங்கை சிவனுடைய ஜடாபாரத்தில் எப்படி தெரியுமா இருந்தாள். நல்ல பனிக்காலத்தில் அறுகம்புல்லின் நுனியில் முத்துபோன்று நீர்த்துளிகள் சரமாக இருக்கும்.

அதுபோல ஈசனின் ஜடையின் ஓரத்தில் தாரையாக கொட்டினாள். இமயத்தின் உச்சியில் தோன்றி வந்ததால், அதற்கு அரசனான ஹிமவானுடைய புத்திரியாக தன்னை பாவித்தாள். ஹைமவதி என்ற திருப்பெயரிட்டு அழைத்தார்கள். ஈசனுடைய தலையை ஆனந்த மயமாக செய்ததால் அலகநந்தா என அன்போடு அழைத்தனர். அலகம் என்றால் கேசம், ஜடை என்றும், அதை ஆனந்தப் படுத்தியதால் அலகநந்தா என்றனர். கங்கையை தாங்கியதால் ஈசன் கங்காதரனாக அருட்கோலம் காட்டினார்.

ஜான்ஹவியானகங்கா!   

ஆனந்தமாக ஓடியவள் நேரே பாதை அறியாத குழந்தைபோல ஜன்ஹூ என்ற மகரிஷியின் ஆசிரமத்திற்குள் கொலுசு சத்தமோடு நடக்கும் குழந்தைபோல குடுகுடுவென நுழைந்தாள். ஜன்ஹூ கங்கையை சிறு கமண்டலத்தில் தாங்கி வேகம் குறைத்தார். பகீரதன் கேட்டுக் கொண்டதால் கங்கையை விடுவித்தார். இதனால் கங்கைக்கு ஜான்ஹவி என்ற பெயரும் உண்டு. ஜன்ஹூ மகரிஷி, ‘‘இவள் என் மகளைப் போன்றவள்’’ என்று சீராட்டினார்.

சாம்பலில் இருந்து உயிர் பெற்ற சகரபுத்திரர்கள்

இவ்வளவு தடைகளையும் பொறுமையாக தந்தையின் பின்னே நடக்கும் மகள்போல பகீரதனின் பின்னால் அடக்கமாக வந்தாள். பகீரதனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்ததால் இவளுக்கு பாகீரதி என்ற பெயரும் உண்டு. பகீரதன் பாதாளத்திலுள்ள சகர புத்திரர்களின் மீது கங்கையை பாயச் சொன்னாள். அறுபதாயிரம் பேர்களும் உயிர் பெற்றனர். கங்கை பாதளத்திற்கு பாய்ந்தபோது போகவதி எனும் திருநாமத்தை ஏற்றாள்.

பகீரதப் பிரயத்தனம் என்பார்களே, அந்த பகீரதன் எத்தனை கஷ்டப்பட்டு கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கேயோ எப்போதே உருவானவளை புராண காலத்திய பகீரதன் கொண்டு வந்தான். அழகாக விளக்கினார். பரீட்சித்தோடு, கங்கையும் சேர்ந்து கேட்டாள். பகீரதன் திடீரென்று கங்கை வேண்டுமென நினைக்கவில்லை. பரம்பரை பரம்பரையாக முயற்சித்த விஷயம் பகீரதனால் முடிந்திருக்கிறது. கங்கை பூலோகத்தில் மட்டுமல்லாது, திரிபுவனத்திலும் பாய்ந்து செல்கிறாள்.

மதங்களை கடந்த ஈர்ப்பு!

எத்தனையோ ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களுக்குத்தான் மூன்று இடங்களில் கங்கா ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். முதலாவதாக ஹரித்வார். ஹரியை அடைய இத்தலம் துவாரமாக இருப்பதால் ஹரித்வார் என்றழைக்கப்படுகிறது. இரண்டாவது காசி. மூன்றாவதாக வங்காளத்தில் உள்ள கங்கா சாகர சங்கமம். இந்த மூன்று இடங்களும்தான் அத்தனை பிரசித்தி பெற்றது. காசி எனும்போதே எல்லோருக்கும் கங்கைதான் நினைவுக்கு வரும். காசி மகாத்மியமே கங்கா மகாத்மியமாகும். காசிக்கு எத்தனை விசேஷம் உண்டோ அத்தனை விசேஷமும் கங்கைக்கும் உண்டு. மதங்களைத் தாண்டிய ஈர்ப்பு பெற்றது காசிக் கங்கை.

கபீர்தாசர் இக்கரை ஓரத்தில்தான் தனது குருவிடமிருந்து ராமநாம உபதேசம் பெற்றார். ஜைன மத துறவிகளுக்கு இங்கு வருவதையே மிக முக்கியமாக கருதுகிறார்கள். ஆதிசங்கரருக்கு காசி விஸ்வநாதரே புலையன் வேடத்தில் வந்து உபதேசித்து காட்சி தந்தார். சாஸ்திர சம்பிரதாயம் அறிந்தவர்களும், எதுவுமே தெரியாதவர்களும் இத்தலத்தை பொறுத்தவரை சமம்தான். மகாபண்டிதரும் வெட்டியானும் இத்தலத்திற்கு சமமாவார்கள். ஏனெனில், காசிக் கங்கையின் தல சாந்நித்ய பலத்தினாலேயே வேதாந்த ஞானம் அசாதாரணமாக வாய்த்து விடுகிறது. பாமர ஓடக்காரன் கூட வேதாந்த விஷயங்களை பாடல்களாக பாடும் அதிசயத்தை இங்கு காணலாம். இதற்கு காரணம் கங்கையின் ஞானக்காற்றை சுவாசிப்பதால்தான் எனில் அது மிகையில்லை.  

கங்கா யமுனா சரஸ்வதி காட்டும் தத்துவம்

கங்கை ஞான சொரூபமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். யமுனை பக்தியை பிரவாகமாக பொங்கிக் கொண்டிருக்கிறாள். சரஸ்வதியோ வைராக்கிய சொரூபிணியாக விளங்குகிறாள். பக்தி, ஞானம், வைராக்கியம் இந்த மூன்றும் சேர்வதே திரிவேணி சங்கமமாகும். இங்கு வைராக்கியம் எனும் சரஸ்வதி அந்தர்வாகினியாக, சூட்சுமமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இந்த ஞானரூபமான கங்கையை தரிசித்தாலும், மூழ்கி எழுந்தாலும் போதும். கங்கையை அதனாலேயே தீர்த்த ராஜம் என்பார்கள்.  

செடிகளில் இறைச் சக்தி துளசி வடிவில் வந்திருக்கிறது. இறைவன் இமயம் எனும் மலை வடிவில் அருள்கிறார். வில்வமாக ஈசன் விரிந்திருக்கிறார். அதுபோல ஞானம் எனும் இறைவன் நீர் வடிவில் கங்கையாக பொங்குகிறது. எனவே, ஞானம் வேண்டுமெனில் கங்கையை தரிசிக்க வேண்டும். ஞானம் பெற வேண்டுமெனில் கங்கைக்குள் மூழ்கி எழ வேண்டும். அவள் பக்தியை தருவாள். வைராக்கியத்தை பெருக்குவாள். இறுதியில் ஞானத்தையும் தந்து இறைவனின் திருப்பாதத்தில் சேர்த்து வைப்பாள். ஞானியரின் இருதய கமலத்திலும் பிரவாகமாக பொங்கியபடி இருக்கிறாள். அவளின் குளுமையைத்தான் ஞானிகள் பேரானந்தமென அனுபவித்தபடி இருக்கிறார்கள். அதனாலேயே அவளை எப்போதும் ஞான கங்கா... ஞான கங்கா... என்று கொண்டாடு கிறார்கள்.  

தீபாவளியன்று எல்லோர் இல்லங்களிலும் எழுந்தருள்பவள்!

ஆனால் கங்கைக்கு, ‘நான் சில குறிப்பிட்ட தலங்களில் மட்டும் பாய்கிறேனே’ என்றொரு கவலை இருக்கும் போலிருந்தது. எனவே, நான் எங்கோ ஹரித்வாரிலும், காசியில் மட்டும் பிரவகித்து ஓடுபவளல்ல. நீங்கள் என்னை வந்து பார்க்கிறீர்களல்லவா? அதுபோல உங்களையும் நான் வந்து பார்க்கிறேன் என்று தீபாவளியன்று மட்டும் சகல நதிகளிலும் சூட்சுமமாக கலக்கிறாள். தேங்கிய நீருக்குள் கூட சூட்சுமமாகப் பரவுகிறாள். அன்று மட்டும் எல்லா நீரும் என் சொரூபமாக இருக்கும் என்று அறிவித்து விட்டே வருகிறாள். அதனால்தான் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்று கேட்கிறோம். கங்கை நீர் வடிவம் மட்டுமல்ல. வாக்கினால் கூட கங்கே... கங்கே... என்று சொல்லி நீராடினாலே மேனியின் மீது வழியும் நீர் கங்கே... கங்கே... எனும் மந்திர வாக்கினாலேயே புனிதம் பெற்று விடுகிறது.

அனந்த பத்மநாபன்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்