SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பான வாழ்வருள்வார் சிவசைலநாதர்

2022-07-04@ 14:12:45

மன்னர் சுதர்சன பாண்டியன் தினமும் சிவசைலநாதர் தரிசனத்துக்கு வருவார். அப்போது இறைவனுக்கு சாத்திய மாலை மற்றும் அர்ச்சனை மலர்கள், பிரசாதங்கள் என்று அவருக்கு அளிப்பது, அர்ச்சகரின் வழக்கம். ஒருநாள் மன்னன் வரவை, அவர் கடந்து வரவேண்டிய கடனா நதி, வெள்ளம் பெருகித் தாமதப்படுத்தியது. இனி அவர் வரமாட்டார் என்று கருதிய அர்ச்சகரின் மனைவி அந்த மாலையை எடுத்துத் தான் சூடிக்கொண்டுவிட்டாள். அதைக் கண்டு அர்ச்சகர் வெகுண்ட அதே சமயம் மன்னர் வரும் தகவல் எட்டியது. உடனே அந்த மாலையை மனைவியின் கழுத்திலிருந்து அகற்றி வழக்கமாக மன்னருக்கு சமர்ப்பிக்கும் ஒரு தட்டில் வைத்துவிட்டார். கோவிலுக்குள் வந்து மாலையை ஏற்ற மன்னர் அதனுடன் நீண்ட கருமுடி இருப்பதைக் கண்டுவிட் டார். ‘முடி எப்படி இந்த மாலையுடன் வந்தது?‘ என்று அர்ச்சகரை மிரட்டிக் கேட்டார் மன்னர்.
 
உடனே அர்ச்சகரோ, அது சிவசைலநாதர் உச்சியிலிருக்கும் ஜடா முடியின் ஓர் இழை என்று கொஞ்சமும் தயங்காமல் சொல்லிவிட்டார். விடுவாரா மன்னர்? உடனே கர்ப்ப கிரகத்தின் வலது, இடது மற்றும் பின்பக்க சுவர்களையும் உடைக்க உத்தரவிட்டார். கர்ப்ப கிரகத்திற்குள் நுழைந்து பார்க்க தனக்கு அனுமதி இல்லை என்பதால், அந்த சந்நதியை வலம் வந்து உடைத்ததால் உண்டான துவாரங்கள் வழியாக சிவசைலநாதரின் தலையில் முடி இருக்கிறதா என்று பார்த்தார்.

இங்கே தவித்து மறுகிப்போன அர்ச்சகர் சிவசைலநாதரை மனம் நெகிழ்ந்து வேண்டிக்  கொண்டார்.  உடனே, விண்ணிலிருந்து வீழ்ந்த கங்கையைத் தாங்கிய அந்த ஜடாமுடி, இப்போது அர்ச்சகரைக் காப்பதற்காக லிங்கரூப ஈசனின் சிரசில் காட்சியளித்தது! அதைப் பார்த்த மன்னர் வியந்துபோய், அர்ச்சகரைப் பாராட்டிவிட்டுச் சென்றார். இப்போது அந்த சாளர துவாரங்கள் வழியாக, கருவறையை வலம் வரும் நாமும், அர்ச்சகரின் கையிலிருக்கும் கற்பூர ஒளியில் லிங்கத்தின் சடைமுடியைக் காணலாம். இத்தகைய அற்புதம் நடந்த திருத்தலம்தான் சிவசைலம். இங்கே ஐயன் சிவசைலநாதராகவும், அம்பிகை பரமகல்யாணியாகவும் கொலுவிருக்கிறார்கள். இக்கோவில், தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சிக்கு அருகிலுள்ள சிவசைலத்தில், கடனையாற்றின் தென்கரையில், மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

இத்தலத்தில், அகத்தியரின் யோசனைப்படி ஆசிரமம் அமைத்து குருகுலம் நடத்தி வந்தார் அத்திரி முனிவர். ஒருநாள் மலர் சேகரிக்க சென்ற சீடர்கள் ஓரிடத்தில் ஒரு பசு தானாக வந்து பால் சொரிவதைக் கண்டு திகைத்து முனிவரிடம் சொன்னார்கள். அதைக் கேட்டு வியந்த முனிவர் அந்த இடத்தில் தோண்டிப் பார்க்க, உள்ளிருந்து சுயம்பு லிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அதைக் கண்டு பரவசமடைந்த அத்திரி முனிவர் அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து சிறு கோவில் ஒன்றை நிர்மாணித்தார். கூடவே, அகத்தியருக்கு அருளியது போலவே தமக்கும் ஈசன் திருமணக் கோலம் கடாட்சிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டிக்கொள்ள அவ்வாறே, அம்பிகையுடன் ரிஷபாரூடராகக் காட்சியளித்தார் இறைவன்.நாளாவட்டத்தில் அந்தக் கோயில் புதர் மண்டி, புற்றுக்குள் மறைந்துவிட்டது. பின்னாளில் சுதர்சன பாண்டியனின் அஸ்வமேத யாக குதிரை அந்தப் புற்றை இடற, அங்கிருந்து வெளிப்பட்டார், சிவசைலநாதர். இவரைதான் மன்னன் தினமும் தரிசித்து வந்தான். ஐயனுடன் அம்பிகைக்கும் தனி சந்நதி உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இத்தலத்திற்கு அருகிலிருக்கும் கீழ ஆம்பூர் (அப்போதைய சிநேகபுரி) கிராமத்தில் ஓர் அந்தணரின் கனவில் அன்னை காட்சி தந்தார்.

இதே கிராமத்தில் ஒரு கிணற்றுக்குள் தான் ஜலவாசம் கொண்டிருப்பதாகவும் தன்னை எடுத்து சிவசைலநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யும்படியும் அருளினாள். அதேபோல கிணற்றில் தேட, தேவி, நான்கு கரத்தினளாகக் காட்சி அளித்தது அனைவருக்கும் பெரு வியப்பை அளித்தது. பொதுவாக தமிழ்நாட்டில், அம்மன் இரு கரங்களுடனேயே அருள் பாலிக்கிறாள். ஆனால் இத்தலத்தில் மட்டும் நான்கு கரங்கள்! அம்மை பரமகல்யாணியாக கோவிலில் தன் மணாளனுக்கு அருகே தனி சந்நதி கொண்டாள். அன்னை அணிந்திருக்கும் மூக்குத்தியும், புல்லாக்கும் அவளுடைய பேரழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. ஒரு பக்தர் காணிக்கையாக அளித்த தங்க கைக் கடிகாரம் அவளை நவீன அம்பிகையாகவே சித்திரிக்கிறது!

கோவிலில் அற்புதமான தோற்றத்தில் காணப்படும் கம்பீரமான நந்தி, எழுந்திருக்க முயல்வது போல உயிரோட்டமாகக் காட்சி தருகிறது.  இதற்கான புராணமும் சிலிர்க்க வைக்கிறது! ஒருமுறை இந்திரன் சிவனது கோபத்திற்கு ஆளானான். அவன் விமோசனம்  கோரியபோது, ‘நான் மேற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சிவசைலம் கோவிலில் நந்திகேஸ்வரரை பிரதிஷ்டை செய்' என்று அருளினார் ஈசன். இந்திரனும் உலகின் முதல் சிற்பியான மயனைக் கொண்டு நந்தி சிலையை வடித்தான். சிற்ப சாஸ்திரங்களின்படி எந்தக் குறையும் இல்லாமல் நுணுக்கமாக வடிக்கப்பட்டதால் அந்த நந்தி பளிச்சென்று உயிர் பெற்றது. துள்ளி எழுவதற்காகக் காலை ஊன்றி நிமிர்ந்தது. உடனே மயன் ஒரு உளியால் நந்தியின் முதுகை அழுத்த, நந்தி அப்படியே சிலையாக நிலை கொண்டது. உளி அழுத்திய தடம் இன்றளவும் மிக நுட்பமாக நந்தியின் மேனியில் நாம் காணலாம்.

‘நந்திக் களவம்’ என்ற தனிப் பெரும் விழாவை நடத்தி இந்த நந்தியைச் சிறப்பிக்கிறார்கள். நந்திக்கு அடிக்கடி திருமுழுக்கும், முழுக்காப்பும் செய்யப் படும் பல கோவில்களில் இதுவே முதன்மையானது எனலாம். அந்த விழாவில் முழுக்காப்புடன் தோன்றும் நந்தி கண்கொள்ளா கம்பீரத் தோற்றம் கொண்டிருக்கும். உருவம் மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் அழகில் நிகரற்று விளங்குகிறது. அதீதமான ஒளிசிந்தும் விழிகளில் மிளிரும் அழகு நம்மைப் பரவசப்படுத்தும். சற்றே விகசித்த அதன் நாசி, அந்த நந்தி சுவாசிக்கிறதோ என்றே எண்ண வைக்கிறது.

கோவிலின் வடபுறம் பிள்ளையார் கொலுவிருக்கிறார்.  தென்புறத்தில் சந்திரசேகரரும், அம்மையும் காட்சி தருகிறார்கள். சிவகாமி அம்மை சமேதராக கூத்தபெருமான், தன்னை காரைக்காலம்மையார் வணங்கிப் பாடுவது கேட்டு இன்புறும் தோற்றத்தில்  அருள்பாலிக்கிறார். மாமண்டபத் தூண்கள் எல்லாம் தலையில் சிங்க முகம் பொறிக்கப்பட்டு,  அழகுடன் மிளிர்கின்றன.

வடமேற்குப் பகுதியில், வேலேந்தி நிற்கும் பாலகன் முருகனின் தரிசனம். தொடர்ந்து வலம் வந்தால் அர்த்த மண்டபத்திற்கு அருகில் சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். திருமதிலை ஒட்டி, கிழக்குப் பகுதியில் சனி பகவான், அன்னபூரணி, சுரதேவர்,  துர்க்கை, பைரவர் ஆகிய தெய்வங்கள் நமக்கு அருள் பாலிக்கின்றனர். கிழக்கு உட்சுவரில் சூரிய பகவான், விசுவநாதர்- விசாலாட்சி, கண்ணபிரான், சந்திரபகவான் ஆகியோரை வழிபடுகிறோம். சிவசைலநாதரின் கர்ப்ப கிரகத்திற்குத் தெற்கே தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். இவருக்கு எதிரே உற்சவ மூர்த்திகளாக சிவசைலநாதரும் பரமகல்யாணி அம்மையும் காட்சி அருள்கிறார்கள். தெற்கு உட்சுவரில் அறுபத்து மூன்று நாயன்மார்களை தரிசிக்கலாம்.

சிவன் சந்நதிக்கு அருகில் ஒரு உரலும் உலக்கையும் உள்ளன. திருமணம் ஆகாத கன்னியர் இந்த உரலில் மஞ்சள் இட்டு, உலக்கையால் இடித்து அந்தத் தூளைக் கொஞ்சம் எடுத்துப் பூசிக்கொண்டால் திருமணம் நடக்கும் என்பதும் நம்பிக்கை. ஆண்டுதோறும், பங்குனி மாதக் கடைசியில் துவங்கும் சித்திரை விஷுத் திருவிழாவில் ஆழ்வார்குறிச்சிக்கு வரும்வழியில் அமைந்துள்ள செவந்தியப்பர் கோயிலில் எழுந்தருளி திருவீதி உலா வந்து திருத் தேர்க்காட்சி தந்தருளுகிறார், சிவசைலநாதர்.
சித்திரைத் திருவிழாவின் பத்து நாட்களும் காண்போர் என்றுமே மறக்க முடியாதவை. முதல் நாள் துவங்கி, ஏழாம் திருநாளில் வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி வைபவங்கள் உள்ளிட்டு திருத்தேர் பவனி வரும் கோலாகலம் வரை ஒவ்வொரு நிகழ்ச்சி யும் நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும். இவ்விழாவில் கடைசி நாள் தேரோட்டம் நடக்கிறது. அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆமாம், அம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள்.

பல ஊர்களிலிருந்தும் திரளான கூட்டம் வந்து, திருவிழாவையும் சிவசைலப்பர்-பரமகல்யாணி திருமணத்தையும் நடத்துவார்கள். சாதாரணமாக கோவில்களில் திருக்கல்யாணம் மட்டுமே நடக்கும். இங்கோ திருமணத்திற்குப் பிறகு பெண்ணும், மாப்பிள்ளையும் மறுவீடு (கிருஹப் பிரவேசம்) செல்லும் சம்பிரதாயமும் மேற்கொள்ளப்படுகிறது! சிவசைலபதியையும், கல்யாணியையும் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு மறுவீடு அழைத்துச் செல்வர். இறையர் இருவரும் அங்கு மூன்று நாட்கள் தங்குவர். அவர்களை சிவசைலத்திற்குத் திருப்பி அனுப்பும்போது மணமக்களுக்கு சீர் வரிசை தருகிறார்கள். தங்கள் குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுத்து, பாசத்தால் பிரிய மனமில்லாத ஏக்கம், பக்தர்கள் கண்களிலிருந்து அருவி நீராகப் பெருகும். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி இது!

மனம்போல மங்கல வாழ்வருளும் பரம்பொருள் இந்த பரமகல்யாணி சமேத சிவசைலநாதர். தத்தமது பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி நன்றிக்கடனை சமர்ப்பிக்கிறார்கள்.சிவசைலநாதர் கோவில், திருநெல்வேலியிலிருந்து மேற்கே 58 கி.மீ. தொலைவிலுள்ளது. சாலைப் போக்குவரத்து தவிர ரயில் மார்க்கமாகவும் ஆழ்வார்க்குறிச்சி ரயில் நிலையம் சென்று கோவிலை அடையலாம். காலை 6 முதல் 10 மணிவரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும். இத்திருக்கோவிலுக்கு கடந்த 23.6.2022 அன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் பெருமகிழ்வு கொண்டார்கள்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்