SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றிவாகை சூட வைக்கும் வாராஹி வழிபாடு

2022-06-27@ 14:14:13

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவி. ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும்படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் சப்த மாதர்களில் தலையானவள் இந்த வாராஹி.மந்த்ர சாஸ்த்ரம் அறிந்தவர்கள் பல்வேறு வடிவங்களில் இவளை வழிபடுகின்றனர்.இந்த வாராஹி, லலிதா தேவியின் ஸ்ரீபுரத்தின் 16வது பிராகாரமான மரகதமணியால் ஆன பிராகாரத்தில் வசிப்பவள். மகாபத்மாடவீ எனும் கோடிக்கணக்கான தாமரை மலர்கள் பூத்த தடாகங்கள் உள்ள அந்த பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் சர்வாலங்காரங்களுடன் அருள்பவள் இத்தேவி. வடகிழக்குப் பகுதி என்பது ஆராதனைக்குரியது. அமைதி, வளம், ஆரோக்கியம் போன்றவற்றை தருவது. அப்படி வளம் கொடுக்கக்கூடிய பகுதியில் வசிக்கிறாள் வாராஹி. அதனால் தன்னை வழிபடுவோரின் வாழ்வையும் வளம் கொழிக்கச் செய்கிறாள்.
 
நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களைப் பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறு பாராட்டிப் பேசுகின்றன. தந்திரராஜ தந்த்ரம் எனும் நூல் இவளை லலிதையின் தந்தை என்றே குறிப்பிடுகிறது. பெண் தெய்வமாக இருப்பினும் காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே அது இத்தேவியை வர்ணிக்கிறது. இதே கருத்தை பாவனோபநிஷத், ‘வாராஹி பித்ரு ரூபா’ என ஆமோதிக்கிறது. இத்தேவியை பஞ்சமி தினத்தன்று வழிபடுதல் விசேஷம். ‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமை பேசுகிறது. ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராஹியைப் போற்றுகின்றார்.
 
காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி கொண்டிருக்கிறாள். என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராஹி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். வாராஹி காவல் தெய்வம். காலம் எனும் கடலில் நீந்தும் நம்மை கரை சேர்க்கும் கப்பல் அவள். வாராஹி உபாசனை உக்ர நரசிம்ம உபாசனையைப் போல் பயங்கரமானது என்று பாமரரிடையே எண்ணம் உள்ளது. ஸ்ரீவித்யா பூஜை முறையில் மஹாவாராஹியின் இடம் மிக மிக உயர்ந்தது. மஹாவாராஹியை ஏதோ பயங்கர தேவதையாகக் கருதுவது தகாதது. கருணைக்கடலான தேவி அவள்.இந்த தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது, தன் பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற அனந்த கல்யாண குணங்கள் கொண்ட மனைவியாய் இவள் திகழ்வதை உணர்த்துகிறது. வலக்கரம் அபய முத்திரை காட்டி அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குகிறது.

இவள் ஏந்தியுள்ள கலப்பை நான்கு விதங்களாகச் செயல்படுகிறது. முதலாவதாக கடினமான பூமியைப் பிளந்து, இரண்டாவதாக ஆழமாக உழுது, மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்கி, கடைசியில் அதில் பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படிச் செய்கிறது. அதுபோல, நாம் உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி திசுக்கள் வளர உதவி செய்கிறது. நம் ஐம்புலன்களாலும் நுகரும் இறுகிய மனதையும் தெளிவிலா புத்தியையும் மிருதுவாக்கி, மென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும் தெளிவடையும் புத்தியில் இறையுணர்வு வளரவும் வழி வகுக்கிறது.
 
பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்ரன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தவள் இந்த வாராஹி என லலிதோபாக்யானம் இவளை புகழ்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் ‘விஷூக்ரப் ப்ராணஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா’ எனும் நாமங்கள் இவளைக் குறிக்கின்றன.இவள் ஆரோகணித்து வரும் ரதம், கிரி சக்ர ரதம் என்றும் இவளின் யந்திரம் கிரியந்த்ரம் என்றும் போற்றப்படுகிறது. (கிரி&பன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர். பராபட்டாரிகையான லலிதையின் மனக் குறிப்பறிந்து ரதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என இவள் போற்றப்படுகிறாள்.சண்ட முண்டாசுரர்களைக் காளி வதம் செய்த பின் சாமுண்டி எனப் பெயர் கொண்டாள். சும்ப நிசும்பர்களுடனும் ரக்த பீஜனுடன் அவள் போரிடும் போதும் வாராஹி துணைக்கு வந்தாள் என்பதை தேவி மகாத்மியம்...  
‘‘யக்ஞ வராஹமதுலம்ரூபம் யா பிப்ரதோ ஹரே:
சக்தி: ஸாப்யாயயௌ தத்ர வாராஹீம்
பிரதீம்தனும்’’
 - என்கிறது.  

 ஆதி வாராஹி நீலநிறம் கொண்டவள், சந்திரன், சூர்யன், அக்னி மூவரையும் த்ரிநேத்ரங்களாகக் கொண்டவள். தேவர்களாலும், மூவராலும் பணிவிடை செய்யப்படுபவள், சகல மாத்ருகா தேவதைகளும், சதுஷ்ஷஷ்டி கோடி பைரவர்களாலும் பாதுகாக்கப்படுபவள். சர்வாலங்கார பூஷிதையாக பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் சாத்திரங்களையும் அஸ்திரங்களையும் ஏந்தி கலப்பை உலக்கையுடன் காட்சி தருபவள்.லகுவாராஹி எனும் உன்மத்த பைரவி பக்தர்களின் துயரங்களைத் தீர்த்து அவர்களின் பயத்தை நீக்கியருள்பவள். அவர்களின் எதிரிகளின் கொழுப்பை அடக்கி அவரின் அறிவுத்திறனை உன்மத்தமாக்குபவள். வாராஹியின் அங்கதேவி. திருமாலின் ஆத்மசக்தியாய் திகழ்ந்து கடலிலிருந்து பூமியை மூக்கின் நுனியில் சுமந்து வந்த மகாசக்தி. இத்தேவியை மிகப்பெரிய கொம்புகள்
கொண்ட சரீரமுடையவளாக தியானிக்க வேண்டும்.

 பஞ்சமிலலிதா த்ரிபுரசுந்தரியைத் தாங்கும் பஞ்சமூர்த்திகளில் சதாசிவனின் பத்தினி இந்த பஞ்சமி. அவருடன் இணைந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களைப் புரிபவள். சாலோக்யம், சாமிப்யம், சாருப்யம், சாயுஞ்யம், மற்றும் கைவல்யம் எனும் ஐந்து மோக்ஷ நிலைகளில் கடைசியான கைவல்ய நிலையை அருள்பவள் இவளே.  பக்தர்களை தந்தையைப் போல் காப்பவள். மனிதனின் எலும்புக்கு அதிதேவதை இவள். எலும்பு உறுதியாக இருந்தால்தானே அதைச்சுற்றி ரத்தமும் சதையும் நன்றாக நிலைபெறும். பஞ்சமி பஞ்சபூதேசி என லலிதா ஸஹஸ்ரநாமம் இவளைத் துதிக்கிறது. அபிராமி பட்டரோ பஞ்சமி பைரவி பாசாங்குசை எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலில் இவளை போற்றி மகிழ்ந்தார்.

 கோர்ட், வழக்கு என அலைந்துகொண்டிருப்பவர்கள் இத்தேவியை வழிபட சிக்கல்கள் தீரும் என்பது நம்பிக்கை. ராஜராஜசோழன் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வாராஹியை வழிபட்டுத்தான் ஆரம்பிப்பது வழக்கம். வாராஹியை வெற்றி தெய்வம் என்றே போற்றினார் அவர்.காசி - த்ரிபுரபைரவி காட் அருகில் முன்பு பாதாள பைரவி என்று வணங்கப்பட்ட  வாராஹி, காஞ்சி காமாட்சியம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, தஞ்சை பெரிய கோயில் வாராஹி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில்  மங்களேஸ்வரர் ஆலயம் அருகில் அருளும் வாராஹி, திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலய வாராஹி,  ஆந்திரா - பிரொடத்தூர்  ராமலிங்கேஸ்வரர் ஆலய வாராஹி, பூரி ஜகன்நாதர் ஆலயம் அருகில் வாராஹி தெருவில் வீற்றிருக்கும் வாராஹி என நாடு நெடுக கோயில் கொண்டு அன்னை வாராஹி  பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள்.
பாவனோபநிஷத் குறிப்பிடும் லலிதையின் தாயாக குறிப்பிடப்படும் குருகுல்லாவிற்கும், தந்தையாக குறிப்பிடும் வாராஹிக்கும் புவனேஸ்வருக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள கொரகொரா எனும் சிற்றூரில் தனிக்கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி வடிவில் மகாவாராஹி, வேலூர் அருகேயுள்ள பள்ளூரில் வராஹி,  தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் ஆதி வாராஹியாகவும் அருள்கிறாள்.  இந்த தேவி ஆரோகணித்து வரும் சிம்மம் வஜ்ரகோஷம் என வணங்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு இத்தேவி எருமை மீதும் ஏறி வருவாள். சில சமயங்களில் நாக வாகனத்திலும் அமர்ந்தருள்வாள் என தேவி பாகவதம் கூறுகிறது. இந்த வாராஹி குதிரை மீதேறி வரும்போது அஷ்வாரூடா வாராஹி என போற்றப்படுகிறாள். குதிரைக்காரி என சித்தர்கள் போற்றுகின்றனர்.

 இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும் வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லம் சேர்த்த பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமைவடை, வாசனைப் பொருட்கள் சேர்த்த எருமைப் பால், எருமைத் தயிர், எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை சுண்டல் மற்றும் தேனும் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வெண்தாமரையும் செந்தாமரையும் இந்த அன்னையின் பூஜைக்கு உரியவை. இரவு நேர பூஜையே இந்த தேவிக்கு உரியது.

 வாராஹியைக் குறித்த வாராஹி மாலை எனும் தமிழ் துதியும் நிக்ரஹாஷ்டகம், அனுக்ரஹாஷ்டகம் எனும் வடமொழி துதிகளும் புகழ் பெற்றவை.
  வழக்குகளிலிருந்து விடுபட இவள் அருள் கட்டாயம் தேவை. வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் உதவும்.எலும்பிற்கு அதிதேவதையான இவள் கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். மயில் தோகை விசிறியால் விசிறி, பிரார்த்தனை செய்து முறுக்கும் வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு விநியோகம் செய்தால் நலம் பெறலாம். பஞ்சமி தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து, அந்த மூடிகளில் நெய் ஊற்றி விளக்கேற்ற, கேட்ட வரங்களைத் தப்பாமல் பெறலாம். ஆஷாட நவராத்திரி எனும் பெயரில் வாராஹி நவராத்திரியாக தேவி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது.

  திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சமே. இரவு அர்த்தஜாம பூஜையின் போது அகிலாண்டேஸ்வரியின் திருமுகம் வாராஹியைப் போல் தோற்றமளிப்பதாக பக்தர்கள் கூறுவதுண்டு.  அஷ்டோத்ரம், ஸஹஸ்ரநாமாவளி போன்ற பல்வேறு துதிகளால் அன்னையை வழிபடலாம். வாராஹி மந்திரத்தில் வார்த்தாலீ, வாராஹி, வராஹமுகீ, அந்தினீ, ருந்தினீ, ஜம்பினீ, மோஹினீ, ஸ்தம்பினீ போன்ற எட்டு தேவதைகளும் அடங்கியுள்ளனர்.


மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

 • oil-tanker-17

  பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்