துன்பங்களை போக்கும் ரணபலி முருகன் திருக்கோவில்
2022-06-24@ 14:33:14

இராமநாதபுரம் அருகே உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் இந்த ஆலயமும் சிறப்பு வாய்ந்தது. இது பழமையான கோவிலாக இருந்தாலும் கோவிலின் சிறப்பு பெரும்பாலான மக்களுக்கு தெரியாததால் சரியான பராமரிப்பின்றி இருக்கிறது. இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களில் ஒருவரான கிழவன் சேதுபதியின் தளபதியாக விளங்கியவர் தளவா வயிரவன் சேர்வை. முருகபக்தரான இவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும்.
அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார். இதே போன்று கனவு அருகில் உள்ள திரு உத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, முருகன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பல மணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள்.
கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையை வேலையும் எடுத்து வந்தார். மன்னர் தான் வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் தானமாக கொடுத்து உதவினார். அதன் பின்னர் ஆலயத்திருப்பணிகள் வேகமாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தளபதி வயிரவன் சேர்வை ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் மீதும் தீவிர பக்தி உடையவராதலால் இருவருக்கும் இங்கு சன்னதி அமைத்துள்ளார்.
மேலும் இங்கு முருகன் ராகு கேதுக்களுடன் தனியாக காட்சி தருகிறார் இவரை வழிபட்டால் ராகுதோஷம் நீக்குவார் என்பது நம்பிக்கை. கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார். பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்' என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும்.
இராமநாதபுரம் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிபட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு எனற இடத்தில் இறங்கி, அங்கிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் பெருவயல் கிராமத்தில் ரண பலி முருகன் ஆலயம் உள்ளது.
மேலும் செய்திகள்
ஆவணி மாத கிரக நிலைகள்!
திருப்புள்ளமங்கை துர்கை!
வாசுதேவன் நிகழ்த்திய லீலைகள்
கோதையின் திருப்பார்வை கண்ணனின் அருட்பார்வை!
வேதாத்திரி பஞ்ச நரசிம்மர்
கலைமகளுக்கு குருவாய் அமைந்த ஹயக்ரீவர்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!