SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?

2022-06-21@ 14:27:03

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 25 (பகவத் கீதை உரை)

பரந்தாமனும் நல்ல தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது உரலுடன் கட்டப்பட்ட அந்தப் பரம்பொருளுக்குத் தெரியாதா என்ன? ‘போதும், நிறுத்து’ என்று அர்ஜுனன் சொல்லாததிலிருந்து அவன் இன்னமும் குழப்பத்திலிருந்து விடுபடவில்லை என்பது கிருஷ்ணனுக்குப் புரிகிறது. அதோடு தெளிவடைய விரும்பும் அர்ஜுனனுடைய மனமும் புரிகிறது. அப்படித் தெளிவடைய விரும்பாவிட்டால்தான், எரிச்சலுற்று ‘திரும்பத் திரும்ப அதையே சொல்லாதே,’ என்று கோபப்படலாம். அதனால்தான் கிருஷ்ணன் இந்த ஒரு கட்டத்தில் இல்லாது, வேறு ஏதேனும் ஒரு கட்டத்திலாவது அவன் தெளிவடைய மாட்டானா என்று எதிர்பார்க்கிறார், பன்னிப் பன்னிப் பேசுகிறார்.

புலன் ஈர்ப்பால் தற்காலிக சுகங்களில் லயிப்பவன், கூடவே வரும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டியவனாகிறான். காட்சிப் பொருளால் சுகம் அடையும் அவன், அந்தக் காட்சிப் பொருளின் நம்பகத்தன்மையை ஆராயாததால் அபாண்டத்துக்கு ஆளாகிறான்; தான் அனுபவிக்கும் சுகத்துக்குப் பிறகு துன்பத்தையும் அனுபவிக்கிறான். அப்படி அனுபவிக்கும்போதுதான், அந்தத் துன்பம் ஏற்கெனவே அந்த சுகத்தோடு கைகோத்துக்கொண்டு கூடவே வந்துவிட்டதையும், சமயம் பார்த்து அது வெளிவந்து வதைப்பதையும் உணர்கிறான். அதாவது சுகப் போர்வைக்குள் விழித்தபடி தக்க நேரத்துக்காகத் துன்பம் காத்திருக்கிறது!

அதாவது ஏதேனும் இன்பம் நம்மை வந்தடைகிறது என்றால் கூடவே அதில் துன்பமும் இணைந்திருக்கிறது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் இன்பத்தை மிகைப்பட்டு அனுபவிக்காமல் இருக்க முடியும்; அதோடு தொடரக்கூடிய துன்பத்தை சமாளிக்கும் மனப்பக்குவமும் ஏற்பட்டுவிடும். காட்டு யானைகளைப் பிடிப்பதற்கு ஓர் உத்தி கையாள்வார்கள். பெரிதாகப் பள்ளம் தோண்டி அந்தப் பள்ளம் தெரியாதபடி இலைகளையும், தழைகளையும் அதன் மேல் பரப்பி மூடிவிடுவார்கள்.

பழக்கப்படுத்திய ஒரு பெண் யானையை அந்தக் காட்டு யானைக்கு முன்னால் நடந்து செல்லச் செய்வார்கள். பெண் யானையைப் பார்க்கும் காட்டு யானை ஆண் என்றால் காதலாகவோ, பெண் என்றால் நட்பாகவோ  வேட்கையுடன் அதை நோக்கி வேகமாக ஓடி வரும். அப்போது, பழக்கத்தால், மூடப்பட்டிருக்கும் பள்ளத்தைக் கடந்து பெண் யானை முன்னே போகும். பின் தொடரும் காட்டு யானையின் சித்தத்தில் பெண்யானை மட்டுமே இருப்பதனால் வழியில் பள்ளம் இருப்பதை உணர முடியாமல் போய்விடும். இன்பத்தைத் துய்க்க எண்ணி ஆவலோடு வந்து பள்ளத்தில் வீழ்ந்து துன்பத்தில் ஆழ்ந்துவிடும்.

ஆகவே ஏதேனும் இன்பம் இருக்கிறதென்றால், கூடவே துன்பமும் தொடரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல துன்பத்தைத் தொடரும் இன்பமும் அமையும். இரண்டையும் அளவுக்கு அதிகமாக நுகராமல் இருப்பவனே ஞானி. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உபதேசம் இது: பச்சைக் களிமண் யார் கைபட்டாலும் குழையும். அந்த மண்ணைச் சரியான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார் குயவர். அந்தப் பச்சை மண்ணுக்கு பானை, சட்டி, குடம் என்று பலவித வடிவங்களைக் கொடுக்கிறார். ஆனால் அந்த வடிவங்களை அப்படியே வைத்தால் அவை பயன் தருமோ? நாளாவட்டத்தில் அவை மழையால் கரைந்துபோகக்கூடும் அல்லது வெயிலில் காய்ந்து விரிசல் காணும். இதைக் காப்பது எப்படி? அந்த மட்பாத்திரங்களைத் தீயால் சுடவேண்டும். அப்படி சுட்டபின் அவை நம் பயன்பாட்டுக்கு வருகின்றன.

ஆனால் இவ்வாறு சுட்ட மட்பாண்டம் உடைந்து போனால்…? அவ்வளவுதான், அதற்கான ஆயுள்! உடைந்து சிதறிய அந்த ஓடுகளால் யாருக்கும் பயனில்லை. ஆமாம், உடைந்த ஓடுகள் மீண்டும் ஒட்டுமோ? என்ன காரணம்? யார் கைபட்டாலும் குழைந்த பச்சை மண், தீயிலிடப்பட்ட பிறகு இறுகிவிடுகிறது, குழைய இயலாது போகிறது. அந்த இறுக்கம் அதற்கு எளிதாக உடையக்
கூடிய தன்மையைக் கொடுத்துவிடுகிறது.

இதில் இன்னொரு பெரிய நஷ்டம், உடைந்ததால் துண்டுகளாகி விட்டவற்றை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது என்பதுதான். உலகாயத விஷயங்கள் என்ற தீயால் ஒருவன் கெட்டிப்பட்டு விடுகிறான் என்றால் அவனை எளிதில் உடைத்துவிடலாம் அல்லது அவன் தானே உடைந்துவிடுவான்!ஆகவே புலன்களை வெல்லாதவனுக்கு ஆன்மாவைப் பற்றிய விவேகம் இல்லாமல் போய் விடுகிறது. அந்த விவேகம் கைகூடாத பட்சத்தில் அவனால் ஆன்ம தியானத்தில் ஈடுபட முடியாது. அப்படி ஈடுபட முடியாத பட்சத்தில் ஆன்ம ஞானம் எப்படி கிட்டும்? அந்த ஆன்மாவை அவனால் எப்படி சாந்தி செய்ய முடியும்? இந்த இழப்புகளுக்கெல்லாம் காரணம், அவன் புலன்களை அடக்காததுதான்.  

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன்மனோனுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரக்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி (2:67)

‘‘கடலில் கப்பல் இயல்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. தன்னை இயக்கும் அதன் கருவிகளோடு அது பயணிக்கிறது. ஆனால் கடலில் வீசும் காற்று அந்தக் கப்பலைத் தன் போக்கிற்கு இழுத்துச் செல்லும். இப்படிப்பட்ட காற்று போன்ற புலன்களின் அலைக்கழிப்புக்கு ஆட்படும் ஒருவன் விவேகம் காண முடியாதவனாகிறான்.’’கரையைத் தாண்டிய கடற்பகுதி அமைதியாகத்தான் இருக்கிறது. சலனமில்லாமல்தான் இருக்கிறது. அங்கே ஒரு கப்பல் நிம்மதியாகப் பயணிக்கிறது. அந்தக் கப்பலின் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க அல்லது கப்பலை திசைமாற்ற, கப்பலில் சுக்கான் போன்ற சில விசைகள் உதவுகின்றன. கப்பலை அசையவொண்ணா வகையில் நடுக்கடலில் நிலை நிறுத்த நங்கூரமும் உள்ளது.

கைதேர்ந்த மாலுமியின் தொழில்நுட்பத் திறமையால் அந்தக் கப்பல் எந்தச் சலனமுமின்றி அழகாக, தன் சேருமிடம் நோக்கிக் கடலில் நீந்திச் செல்கிறது. ஆனால் திடீரென்று புயல் காற்று அடிக்கிறது. இப்படி அடிக்கும் காற்றை முன்கூட்டியே அனுமானிக்க இயலாத மனித பலவீனத்தால் கப்பல் தடுமாறுகிறது. காற்றின் வேகம் இயற்கையின் ஆணைக்குட்பட்டது. எங்கிருந்து புறப்பட்டது, எத்திசை நோக்கி வீசுகிறது, எவற்றையெல்லாம் ஊதித் தள்ளப்போகிறது என்பதை யாரும் அறியார். அதனால் அந்தக் காற்றால், அதற்குத் தாக்குப் பிடிக்க முடியாத எதுவும்  விசிறியடிக்கப்படுவதும் தவிர்க்க முடியாதுதான்.

இந்தக் காற்றைப் போல, புலனுணர்வுகள் நாமே அறியவொண்ணாத வகையில் நம்மை கலங்க அடிக்கின்றன. அந்த உணர்வுகளுக்கு அடிமைப்பட்ட மனம் அலை பாய்கிறது, பதறித் தவிக்கிறது. அதனால் ஆன்மாவைப் பற்றியோ அதனை அறியும் விவேகமோ மனதுக்கு அற்றுப் போய்விடுகிறது.புலன்களின் எல்லையை நாம்தான் வரையறுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக உணவு சாப்பிடுகிறோம். அறுசுவை உணவு. பரிமாறப்படுவதற்காக அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த உணவுவகைகளின் அழகு கண்களைக் கவர்கிறது.

அதிலிருந்து எழும் நறுமணம் நாசியை ஈர்த்து ‘ம்….’ என்று வேட்கையைத் தூண்டுகிறது. கண்ணும், நாசியும் அனுபவித்து அனுப்பும் உணர்வை நாவும் ஏற்க, அதில் எச்சில் ஊறுகிறது; அந்த உணவை ருசிக்க அது தயாராகிவிடுகிறது. கையும் அந்த உணர்வுக்கு மதிப்பளித்து முன்வர, வாய் அகலத் திறக்கிறது. தன்னுள் விழப்போகும் அந்த உணவை, தன்னைப் பொறுத்தவரை ருசியற்ற அந்த உணவை, வயிறு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!

அந்த உணவை உட்கொள்கிறோம். மிகவும் ருசியாக இருக்கிறது. நாலு பேருக்கான உணவு அத்தனையையும் உட்கொண்டுவிடும் பேராசை எழுகிறது. ஆனால், ஓரளவு உண்டுவிட்ட பிறகு, ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?’ என்று தோன்றுகிறதே, அந்தக் கணத்தில் எழுந்துவிட்டு கைகழுவுகிறீர்களா, உங்களால் புலனை அடக்க முடியும் என்பது நிச்சயம். இப்படி ருசியைக் கட்டுப்படுத்தக்கூடியவனால்தான், புலன் நுகர்ச்சிக்கு முக்கியத்துவம் தராதவனால்தான், ஆன்மாவை உணர முடியும். அதன் சொரூபத்தை அறிய முடியும். அதற்கான விவேகத்தை
வளர்த்துக்கொள்ள முடியும்.

ஸ்மாத் யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதானி ஸர்வச
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேப்யஸ் தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா (2:68)
‘‘தோள்வலுமிக்கவனே, அர்ஜுனா, உடல் பெற்றிருக்கும் ஒவ்வொருவனுக்கும் புலன்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும். ஆனால் அந்தப் புலன்களிலிருந்து அதனதன் உணர்வுகளை ஒருவனால் பிரித்து விலக்க முடியுமானால், அவனுடைய அறிவு நிலைபெற்றதாகத் திகழும்.’’பிறவி எடுத்துவிட்ட ஒருவனுக்கு, இயற்கையாகவே, அவனுடைய வாழ்நாள் முடியும்வரை புலன்கள் அமைந்திருக்கும். அந்தப் புலன்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு.

இந்த உணர்வுகள் அவனுடைய உயிர் நீங்கும்வரை நீடித்திருக்கும். உடல் முதுமை அடைந்துவிட்டால் அவை பழுதுபடலாமே தவிர, முற்றிலுமாகச் செயலற்றுப் போவதில்லை. ஆனாலும் அந்தப் புலன்களைப் பெற்ற ஒருவன் அவற்றின் உணர்வுகளுக்கு அடிமையாகாதவனாக இருப்பானானால் அவனே நிலைத்த அறிவுடையவனாவான்.

பார்த்தல் என்பது கண்ணின் கடமை. தன் விழித்திரைக்குள் விழும் காட்சியையெல்லாம் அது மூளைக்குக் கொண்டு சென்றாலும், அவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளாததுதான் அறிவின் உயர்ந்த பண்பாடு. ஏற்கத் தக்கது, ஏற்கத் தகாதது என்ற பாகுபாடு தெரியாமல் அனைத்துக் காட்சிகளையும் பிரதி எடுத்து மூளைக்கு அனுப்புவது கண்களின் இயல்பு.
கண்ணிமைகள் கண்களை மூடி பாதுகாக்கும் கருவிகளாக இயங்குகின்றனவே அல்லாது, அவையும், பார்க்கக்கூடாதவற்றை மறைப்பதில்லை; அவற்றைக் காண கண்களை அனுமதிக்கின்றன. தூசி விழாமலும், இரவில் தூங்கும்போது விழி திறந்திருக்க முடியாததாலும், கண்களை இமைகள் மூடியிருக்கலாமே தவிர, விழித்திரையில் காட்சிப் பதிவாவதை இமைகளால் கட்டுப்படுத்த முடியாது.

இந்த சமயத்தில்தான் அறிவு தனக்குத் தேவையான காட்சியை மட்டும் ஏற்றுக்கொண்டு ஒவ்வாத பிற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும். அத்தகைய அறிவுதான் நிலையானது. கண்ணுக்குத் தெரிகிறது என்பதால் அந்தக் காட்சிப் பொருட்களின் மீது எந்த உரிமையையும் தான் கொண்டாட முடியாது என்பது அந்த அறிவுக்குத் தெரியும். உரிமை மட்டுமல்ல, அவற்றின்மீது எந்தப் பற்றையும் கொள்ளக்கூடாது என்பதும் தெரியும்.

இதே பற்றற்றத் தன்மை நாசி, காது, வாய், மேனி ஆகிய பிற புலன்களுக்கும் விஸ்தரிக்கப் படும்போது அறிவு மேலும் தீட்சண்யமாகிறது.
ஆக, தமக்குரிய கடமைகளை ஆற்றவேண்டியது அந்தந்த புலனின் பொறுப்புதான். ஆனால், கொட்டப்படும் குப்பையிலிருந்து மாணிக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியது அறிவின் பொறுப்பாகிறது.

பொதுவாகவே ஒன்றை ஏற்காமல் மறுப்பதே ஒரு கம்பீரத்தைக் கொடுக்கும். தேவையானதென்றாலும் ஒன்றை மறுத்தல் என்பது மனதிலிருந்து மாசை நீக்கும். ஆனால், தேவையற்றதை சேர்த்துக்கொள்ளும் மனப்பான்மையால் மனசு குப்பையாகும்; அது ஆன்மாவையும் அசுத்தப்படுத்தும்! நல்லதை நாடிக் கொள்ளும்போது, தீயன கூடவே வந்து கவர்ந்திழுக்க முயலும். மிகுந்த பலமுள்ளதாகவும், ஈர்ப்புள்ளதாகவும், உலக சுகங்கள் அனைத்தையும் ஈட்டித் தருவதாகவும் போலித்தனம் காட்டும். ஆனால் அவையெல்லாம் தற்காலிக சுகம்தான் என்பதை அறிவு உணர்ந்து கொள்ளும். இப்படி உணர்ந்து கொள்ளும் அறிவை மனசுதான் கெடுக்கிறது.

அற்ப விஷயங்களில் ஆனந்தம் கொண்டு அறிவையும் மழுங்கச் செய்ய முயற்சிக்கிறது. இதற்கு உடன்படாமல் அறிவு விழித்துக்கொள்ளுமானால், போலி சுகங்கள் எல்லாம் வெளிச்சம் பட்ட நிழல்போல கலைந்து, கரைந்துவிடும். நேரெதிரான இரண்டு நபர்களை நம் பாரத தேசம் பார்த்திருக்கிறது. ஒருவர் ஹைதராபாத் நிஜாம். தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குக்கூட செலவு செய்ய விரும்பாதவர். தன் கஜானா பொன்னாலும், பொருளாலும், பணத்தாலும் நிரம்பி வழிவதை தினமும் கண்டு, கண்டு மகிழ்ந்தவர். இவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு காசைச் சுண்டிவிட்டால் அந்த சப்தத்திலேயே பளிச்சென்று எழுந்துவிடுவாராம். அந்த அளவுக்குப் பணப் பேராசை!

இவருக்கு நேர் மாறானவர், பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். பணம் என்பது இவரைப் பொறுத்தவரை முற்றிலும் தீண்டத்தகாதது. அதனை வெறுத்து ஒதுக்கியவர் அவர். இந்த மனப்பான்மையால் அவரது உடலின் ஒவ்வொரு அணுவும் பணத்துக்கு எதிரானதாகவே இருந்தது. இவரை சோதித்துப் பார்ப்பதற்காக ஒருசிலர் இவர் உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு நாணயத்தை எடுத்து அவரது உடலைத் தீண்டினார்கள். அவ்வளவுதான். உடலே பதறிப்போட, மிகுந்த வலியை அனுபவித்தவர்போல வேதனையுற்றார் பரமஹம்ஸர். அந்த அளவுக்குப் பணத்தை அவரது மனம் மட்டுமல்ல, உடல் முழுவதுமே வெறுத்திருந்தது! அதாவது அவருடைய புலன்கள் ஐந்தும் அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன! ‘புலனடக்கம் கைகூடுமானால், ஈஸ்வர ஞானம் எளிதாக சித்திக்கும்’ என்று கூறுவார் பரமஹம்ஸர்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்