SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தையை ஏன் தொட்டிலில் போடுகிறோம்?

2022-06-17@ 13:20:29

சென்ற இதழின் தொடர்ச்சி...

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமான விஷயம் அல்ல. பிறந்த குழந்தையை வளர்த்தாலும் வளர்க்காவிட்டாலும் தானே வளர்ந்து விடும். ஆனால், நம்முடைய முன்னோர்கள், குழந்தையை நல்ல விதமாக வளர்க்க வேண்டும், நல்லவிதமாக வளர்வதற்குள்ள சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்திற்கும் அவன்  சார்ந்த சமூகத்திற்கும் பயனுள்ள ஒரு பிரஜையாக குழந்தை உருவாவான் என்று  சொன்னார்கள். இதில் தாயின் பொறுப்பு மிகவும் அதிகம். ஒரு அழகான தமிழ்ப்  பாடல் உண்டு.

 எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே

ஆழமான உளவியல் சார்ந்த அற்புதமான வரிகள். ஒவ்வொரு தாய்மார்களும் படிக்க வேண்டிய வரிகள். வேடிக்கையாகச் சொல்வார்கள். ஒரு பத்து வயதுக் குழந்தை, “குழந்தை வளர்ப்பது எப்படி?” என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தானாம். அவனுடைய அம்மா வாங்கி வைத்த புத்தகம் அது. இந்தப் புத்தகத்தை இவன் ஏன் இந்த வயதில்
படிக்கிறான் என்று குழம்பிப் போன அம்மா,பிள்ளையிடத்தில் கேட்டாளாம். ‘‘டேய், என்ன இந்த வயதில் இந்த புத்தகத்தைப் படிக்கிறாய்? எதிர்காலத்தில் உனக்கு ஒரு குழந்தை பிறந்தால், எப்படி வளர்ப்பது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் படிக்கிறாயா?” என்று கேட்க, அந்தப் பையன் பதில் சொன்னான். ‘‘இல்லை அம்மா, நீ என்னை, இந்தப் புத்தகத்தில் உள்ளபடி வளர்க்கிறாயா? என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இதைப் படிக்கிறேன்” என்றான்.

வேடிக்கையான  விடயம்தான். ஆனால், குழந்தையை வளர்ப்பதில் உள்ள தாயின் பொறுப்பு இதில் வெளிப் படுகிறது. இதனைத்தான் பிள்ளைத் தமிழ் போன்ற சமய  இலக்கியங்களில் கூட மறைமுகமாக நம்முடைய தாய்மார்களுக்கு, பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார்கள். பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழில் கண்ணனுடைய லீலைகளை மட்டும் அவர் சொல்லவில்லை.
அவனை எப்படி யசோதை வளர்த்தாள் என்பதைப் பற்றிச் சுவையோடு சொல்லும்போது, குழந்தை வளர்ப்பு கலையையும் சொல்லிக்  கொடுக்கிறார். கண்ணன் பிறந்து விட்டான். பன்னிரண்டாம் நாள் பெயர் சூட்டு  விழா நடக்கிறது. உறவினர்கள் எல்லாம் கூடியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மகிழ்ச்சி. அலங்கரிக்கப்பட்ட அழகான தொட்டிலிலே குழந்தையைப் போடுகிறார்கள்.

குழந்தையைத் தொட்டிலில் போடுவது அற்புதமான விஷயம். பொதுவாக குறிப்பிட்ட காலம் வரை தாயின் அரவணைப்பு குழந்தைக்கு தேவைப்படும். அதனால், அவள் எப்பொழுதும் தன்னுடைய மார்பில் அணைத்து கொண்டுதான் குழந்தையைத் தூங்க வைப்பாள். ஆனால், அவளுக்கும் ஒரு இடைவெளி வேண்டும் அல்லவா? அப்பொழுது மிகப் பாதுகாப்பாக குழந்தையை, மூச்சுத் திணறலின்றி, சிறிய அசைவுகளுடன் கீழே விழுந்து விடாமல்  இருப்பதற்காக ஒரு பாதுகாப்பான தூங்கும் இடம் வேண்டும்.

அதற்காகத்தான் தொட்டிலில் இடுவது. இன்றைய அறிவியல் சொல்வது இது.By  rocking or gliding, a cradle calms the baby to sleep comfortably. Cradling supports the baby’s entire spine when done properly. A baby who  is fully supported along her whole back and body feels safe and secure.  A baby can enjoy being cradled by any parent or caretaker, not just a breastfeeding mother. You can cradle a baby anytime, anywhere.

கவிஞர்  வாணிதாசன், புதுவையைச் சேர்ந்தவர். `பாரதிதாசன் பரம்பரை’ என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். குழந்தை இலக்கியத்தில் பல புதுமைகளைச் செய்தவர். குழந்தைக்கு இடும் தொட்டிலைப் பற்றிய இந்தக் கவிதை, ``தொட்டிலுக்குள் இத்தனை விஷயமா?” என்று நமது விழிகளை விரிய வைக்கும்.

தொட்டில்! தொட்டில்! தொட்டில்!
தொங்கி ஆடும் தொட்டில்!
பட்டுக் குழந்தை தூங்கப்
பாட்டி வாங்கிய தொட்டில்!
பொம்மைக் குழந்தை தூங்கப்
பொம்மை சிரிக்கும் தொட்டில்!
அம்மா ஆட்டும் தொட்டில்!

அழகுத் தொட்டில்! தொட்டில்!
அக்கா வளர்ந்த தொட்டில்!
அண்ணன் வளர்ந்த தொட்டில்!
செக்கச் சிவந்த தம்பி
சிணுங்கச் சிரிக்கும் தொட்டில்!
வளர்த்து மங்கிய தொட்டில்!

வளரா திருக்கும் தொட்டில்!
தளர்ந்த முதியோர் இளைஞர்
உளத்தை ஈர்க்கும் தொட்டில்!
கன்னிப் பெண்கள் நெஞ்சில்
களிப்பை ஊட்டும் தொட்டில் !

சின்னப் பிள்ளை தூங்க
அன்னை ஆட்டும் தொட்டில் !
பாட்டி ஆட்டும் தொட்டில்!
பாட்டன் ஆட்டும் தொட்டில்!
வீட்டிற் பிறந்த முன்னோர்
விரும்பி ஆட்டும் தொட்டில்!

குழந்தைக் கேற்ற அன்பைக்
கொடுக்கும் கிழவி தொட்டில்!
பழகும் தாயைப் போலப்
பற்றைக் காட்டும் தொட்டில்!
பிள்ளை இன்பம் ஒன்றே
பெரிதாய் எண்ணும் தொட்டில்!

உள்ளம் நொந்த பிள்ளைக்(கு)
உறக்கம் ஊட்டும் தொட்டில்!

தொட்டிலில் இடுவது என்பதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று தொட்டிலில் குழந்தையைப் போட்டு ஆட்டுவது. இரண்டாவது தொட்டிலில் குழந்தை தூங்குவதற்காக தன் நாக்கை  ஆட்டுவது. இந்த நாக்கை ஆட்டுவது தாலாட்டு. ``தால்” என்றால் நாக்கு. அதனை  ஆட்டிப் பாடுவது தாலாட்டு. இந்தத் தாலாட்டு பாடும் முன், தொட்டிலில்  போடுகின்ற விஷயத்தைப் பார்த்து விடுவோம். சில குழந்தைகள் தொட்டிலில் போட்டாலும் தூங்காது. தூக்கி வைத்துக் கொண்டிருந்தால்தான் பேசாமல்  இருக்கும். அந்தக்  குழந்தையை தொட்டு கவனத்தைத் திருப்பினாலும் அவ்வளவு  எளிதில் திரும்பாது. சில குழந்தைகள் போட்டது போட்டபடியே இருக்கும்.  அசையாது. தொட்டால் உடனே அழ ஆரம்பித்துவிடும்.

தொட்டால் உடனே  பளீரென்று பொக்கை வாயால் சிரிக்கக் கூடிய குழந்தைகளும் உண்டு. இன்னும் சில  குழந்தைகள், தாய் கொஞ்சம் வேலையாக தொட்டிலில் போட்டு விட்டு, நகர்ந்தால்  போதும். ஓங்கி அழ ஆரம்பித்துவிடும். ‘‘ஏன் என்னைத் தொட்டிலில் போட்டாய்?  முதலில் தூக்கு. என்னை இப்படித் தொட்டிலில் கிடத்திவிட்டு, நீ உன் வேலையைப்  பார்க்கப் போகிறாயா? என்னை தூக்கி வைத்துக்கொள்வதுதான் உன் வேலை?” என்று அழுது அழிச்சாட்டியம் பண்ணும். கைகால்களை உதைத்துக் கொள்ளும். அது  ஒரு நிலை. இப்பொழுது பெரியாழ்வார் தொட்டிலில் கண்ணனைக் கிடத்திய காட்சியை  நம் கண்முன் படம் பிடிக்கிறார்.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன்நங்காய்.

தொட்டிலே கிழிந்துவிடும்படியாக, கைகால்களை உதைத்துக்கொள்கிறானாம். காரணம், பின்னால் சகடாசுரன் முதல் கம்சன் முதலியோரை உதைத்து அழிக்க வேண்டும்  அல்லவா. அதற்கான ஒத்திகை கண்ணனுக்கு தொட்டிலிலேயே துவங்கிவிடுகிறது. கண்ணன் உதைத்த விஷயத்தை திருமங்கையாழ்வாரும் பாடத் தவறவில்லை.பருங்கை யானையின் கொம்பினைப்பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு ஒறுங்க மல்லரைக் கொன்று, பின் கஞ்சனை உதைத்தவன்” உறை கோயில்  குழந்தையின்  ஒவ்வொரு செயல்களுக்கும், பின்னால் நிகழக்கூடிய காரண காரியங்களையும்  இணைத்து, இந்த இடத்திலே பெரியாழ்வார் பாடுவது ஒரு அழகு.

பெரும்பாலான குழந்தைகளின் இயல்புகளை கண்ணனோடு இணைத்துப் பாடுவது இன்னும் அழகு. கண்ணன்  தொட்டிலில், ‘‘என்னைத் தூக்கு” என்று உதைத்துக்கொள்கிறான்.  அழிச்சாட்டியம் செய்கிறான். ‘‘ஐயோ, இந்தத் தொட்டில் கவிழ்ந்து கண்ணன் கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது? இப்படி உதைத்தால் பிஞ்சுக் கால்களுக்கு  வலிக்காதா?” என்று தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டால், இடத்தை  விட்டு நழுவி இடுப்பை முறித்துவிடுகிறான். இடுப்பில் வழுக்கிக்கொண்டு  உடைகளையும் நெகிழச் செய்து விடுவான் போல இருக்கிறது என்று அப்படியே தோளில் சாய்த்துக் கொண்டால், கால்களால் வயிற்றில் உதைக்கிறான். குழந்தையோடு  தாய் படும் இந்தக் காட்சியை மனதில் நிறுத்தி பாருங்கள். சுகானுபவம் அல்லவா?  இப்பொழுது பக்கத்து வீட்டுப் பெண் பரிதாபப்பட்டுக் கேட்கிறாள்.

“பையன் குறும்புக்காரனாக இருக்கிறான். நல்ல கொழு கொழு என்று கொலு பொம்மை போல் இருக்கிறான். பாவம், உனக்கு இடுப்பு வலிக்கிறது போலிருக்கிறதே” என்று  சொல்லும்பொழுது சடக்கென்று யசோதைக்கு கோபம் வருகிறதாம். ‘‘போடி, உன் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. மற்றக் குழந்தைகள் எல்லாம் எப்படி  இருக்கிறார்கள் தெரியுமா? இவன் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறான். மெலிந்து போய்க் கிடக்கிறான். நீ வேறு வந்து கண் வைக்கிறாய். இனி, இப்படிப் பேசாதே. இவன் மற்ற குழந்தைகள் போல் மிடுக்கு இல்லாமல் இருக்கிறானே என்று  நானே தவித்துகொண்டு இருக்கிறேன்......”அப்போது அந்தப் பெண்  ஒரு கேள்வி கேட்டாள்.

‘‘ஓ... அப்படியானால் இந்தக் குழந்தையைக் தூக்கி  வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நீ இளைத்து விட்டாயோ?” யசோதை பளிச்சென்று பதில் சொன்னாள். ‘‘ஆமாம்.. ஆமாம்... இந்தக் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல்  நன்றாகக் கொழு கொழு என்று வளரவில்லையே என்று நினைத்து நினைத்து இளைத்து  விட்டேன். இந்த மெலிந்த குழந்தையைக் கூட தூக்கி வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு, நான்தான் பலமில்லாது மெலிந்துவிட்டேன்” ஒரு அழகான உளவியல் பாருங்கள். ஒருவர் உடலை பரிசோதித்துக் கொள்வதற்காக மருத்துவ மனைக்குச் சென்றார். மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு, ‘‘நீங்கள் எடை கூடியிருக்கிறீர்கள்.

உங்களுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. நீங்கள் முதலில் உங்கள் எடையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் உங்களுக்குச் சரியாக வராது ‘‘ஊருக்கு வருகிறார். நண்பர்கள் கேட்கிறார்கள்.”  ‘‘என்னப்பா ரொம்ப சந்தோஷம் போல இருக்கிறது.. உடம்பு ஊதின மாதிரி தெரிகிறது” வீட்டில் நுழைகிறார். அவருடைய அம்மா வருகின்றார். பரிவோடு
கேட்கிறார்.‘‘குழந்தே..வா..வா..  இப்பொழுதுதான் ஊரிலிருந்து வந்தாயா? என்னப்பா, இப்படி மெலிந்து விட்டாய். வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிடுவது இல்லை போலிருக்கிறது” எல்லோருக்கும் கொழுத்து போனதாக தெரிகிற உடம்பு, பெற்ற தாயின் கண்களுக்கு இளைத்துப்  போனதாகத் தெரிகிறது. இந்த விஷயங்களை எல்லாம் இந்தப் பாசுரத்தில் மிக  அழகாகக் கொடுக்கிறார் பெரியாழ்வார்.‘‘நான் மெலிந்தேன் நங்காய்” என்ற வரிகளை மறுபடி படியுங்கள். ஒரு தாயின் குதூகலமும் மறைமுகமான மகிழ்ச்சியும் பளிச்செனத் தெரியும்.

எஸ்.ஆர்.சுதர்சன்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்