SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லா பிரச்னைகளுக்கும் எளிய பரிகாரம்!

2022-06-15@ 14:36:27

ஒரு நண்பர். அவருக்கு வெகு நாட்களாக வேலை கிடைக்கவில்லை. எந்த இன்டர்வியூக்குப்  போனாலும் ஏதோ ஒரு பிரச்னை. சரி, ஏதோ கிரக பிரச்னை இருக்கும் என்று நினைத்து ஒரு ஜோதிடரிடம் போனார். தன் ஜாதகத்தைக்  காட்டினார். ஜோதிடர் சொன்னார். ‘‘உங்களுக்கு ஜீவனஸ்தானம் பலம் இல்லாமல் இருக்கிறது. தசாபுத்திகளும் சரியில்லை. எனவே சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும்” என்று சொல்லி, சில பரிகாரங்கள் சொன்னார். எதுவும் சரியாக வரவில்லை.அப்போது ஒருநாள் பெருமாள் கோயிலுக்குப்போனார்.  அங்கே ஒரு பட்டாச்சாரியார். ‘‘ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.இவர் தன்னுடைய நிலையைச்  சொன்னார்.

‘எனக்கு எத்தனை முயற்சி செய்தும் உத்தியோகம் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் என் வாழ்க்கை எப்படி ஆகும் என்று தெரியவில்லை” அப்பொழுது அந்த பட்டாச்சாரியார் ,‘‘நான் ஒரு எளிய வழி உங்களுக்குச்  சொல்லுகின்றேன். செய்வீர்களா?” என்று கேட்டார்.இவர் புதிதாக என்ன பரிகாரம் சொல்லப் போகிறாரோ என்று பயந்தார்.‘‘சொல்லுங்கள், செய்கிறேன்” ‘‘நான் அதிகம் செலவு வைக்கும் பரிகாரம் உங்களுக்குச்  சொல்ல மாட்டேன். மிக எளிமையான, அதிகம் செலவில்லாத, ஒரு பரிகாரம்தான் உங்களுக்குச்   சொல்லப் போகிறேன்” என்றார்.இவர் ஆவலோடு அவரிடம் கேட்டார்.

‘‘சொல்லுங்கள், எதுவாக இருந்தாலும் செய்கிறேன்” பட்டாச்சாரியார் சொன்னார்.‘இன்றிலிருந்து நாற்பத்தி எட்டு நாட்கள் மாலை ஐந்தரை மணியிலிருந்து 6 மணிக்குள் உங்கள் வீட்டில் பூஜை அறையில் விளக்கு வைப்பார்கள்  அல்லாவா? அந்த நேரத்தில் நீங்கள் ஒரு மண் அகல்விளக்கில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். ஏற்கனவே எரியும் தீபத்திலிருந்து இதை ஏற்றாதீர்கள். தனியாக வத்திப்பெட்டி வைத்து ஏற்றுங்கள். ஏற்றும் போது இந்த சங்கல்பத்தை சொல்லுங்கள்.”

ஓம் மகாலட்சுமியை நமஹ
சர்வ கிரக தோஷ பரிகாரார்த்தம்  
மம மனோரத சித்யர்த்தம்
சீக்கிரமேவ  உத்தியோக லாபாதி பிராப்தியர்த்தம்
இஷ்ட குடும்ப தேவதா  அனுகிரக சகாயார்த்தம்  
சர்வமங்கள சித்யர்த்தம்
சர்வ விக்ன நிவாரணார்த்தம்  
தீப மங்கள ஜோதி: சரணம் பிரபத்யே
‘‘தீப மங்கள ஜோதி சரணம் பிரபத்யே” என்று மூன்று முறை சொல்லி, தீபத்தை உங்கள் மனதில் கொண்டு வந்து, ஒரு இரண்டு நிமிடம், உங்கள் இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வணங்கி, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யுங்கள்.அதோடு உங்கள் பழைய படியான முயற்சி களைத் தொடருங்கள். நிச்சயம் அந்த பகவான் உங்கள் ஜென்ம ஜாதகத்தில் உள்ள விதித்  தடைகளை நீக்கி அருள்வான்.இதில் தேவையானது இரண்டு விஷயங்கள்.ஒன்று சிரத்தை.

இரண்டாவது நம்பிக்கை. பகவத் விசுவாசம். இன்னும் சுய சக்தியால் ஜெயிக்க முடியாத தடைகளை தெய்வ பலத்தால் ஜெயிக்க வேண்டும். நண்பர் எல்லாவற்றையும் ஜாக்கிரதையாக கேட்டுக்கொண்டார். சொன்னபடியே மிகவும் நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் விளக்கு ஏற்றினார் .சரியாக முப்பத்தி இரண்டாம் நாள். அவருக்கு வேலைக்கான கடிதம் கிடைத்தது. அவருடைய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. அவருக்கு வேலை கிடைத்த நாள் மிருகசீரிஷம். பரம மைத்ர தாரையில் வரும் நாள்.
இதைச் சொல்லும் பொழுது சாதாரண பரிகாரம் போல் தெரியும். ஆனால் இதன் சக்தி அளவற்றது. இது பற்பல பரிகார நூல்களில் சொல்லப்பட்ட சக்திவாய்ந்த பரிகாரம். ஆனால் மிக மிக எளிய பரிகாரம்.

திரு விளக்கு ஏற்றுவது, திருவலகிடுவது போன்றவையெல்லாம் எளிய பரிகாரங்கள். எந்த மங்கலச் செயல்களும் ஒரு குத்து விளக்கு ஏற்றி வைத்துத்தான் தொடங்கி வைக்கப்படும். பெரிய புராணத்தை துவக்குகின்றபொது இறைவனை ஜோதி ஸ்வரூபமாக சொல்லித் துவங்குகிறார்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
இதில் அலகில்  சோதியன் என்ற வார்த்தை முக்கியம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை முதல்முதலில் அருளிச் செய்கின்ற ஆழ்வார்கள் தமிழால் ஒரு விளக்கு ஏற்றி வைத்துத்தான் தொடங்குகிறார்கள். அதுதான் வெற்றி தருகிறது. அவர்கள் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கிறது.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று
(பொய்கையார்)
அடுத்த ஆழ்வார் ‘‘ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்” என்று, தான் விளக்கு ஏற்றிய வைபவத்தைப்  பாடுகிறார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
விளக்கு ஏற்றினால் வெளியில் உள்ள இருட்டு மட்டும் அல்லாது, மனத்திலுள்ள இருட்டும்  போகும். ஒரு தெளிவு பிறக்கும். அந்தத்  தெளிவினால் செய்கைகளில் வெற்றி கிடைக்கும்.

ஒரு முறை புதிதாகப்  படமெடுத்த  நண்பர் ஒருவர் , கவியரசு கண்ணதாசனிடம்,  பாட்டு கேட்டு வந்தபோது, அவர் ஒரு அழகான பாட்டு எழுதினார்.
அந்த நண்பர் கடன் வாங்கி முதல் முதலில் படம் எடுக்கிறார். அந்த படம் வெற்றிகரமாக வந்தால்தான் அவர் வாழ்க்கை விடியும். அப்போதெல்லாம் முதலில் ஒரு பாடலை எழுதிப் பதிவு செய்து, பூஜை போடுவார்கள். அதுதான் தொடக்கம். அது மங்களகரமான பாட்டாக இருக்க வேண்டும். அது அந்த தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைத்  தரவேண்டும். கவியரசு கண்ணதாசன் இந்த பரிகாரத்தை ஒரு பாடலாக வைத்து எழுதித் தந்தார்.
அந்தப் பாடல்தான் இது.
விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்கப்போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
எளிய பரிகாரம். சிரத்தையோடு செய்து பலன் பெறலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்