SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தை பாக்கியம் அருளும் தலங்கள்

2022-05-26@ 13:48:07

இராமாயணத்தில் தனக்கு குழந்தை இல்லாத குறையை தசரதன் குலகுரு வசிஷ்டரிடம் தெரிவிக்க அவர் தெய்வ அனுகூலத்தின் மூலமாக குழந்தைச் செல்வம் பெறலாம் என்று ஆசீர்வாதம் செய்து, ஒரு யாகமும் நடத்திக் கொடுக்கிறார். எனவே, குழந்தை வரம் வேண்டுபவர்கள் முதலில், குரு போன்ற பெரியவர்கள், மஹான்கள் ஆசீர்வாதத்தைப்  பெற்று பின், தெய்வத்திடம் செல்ல வேண்டும். அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப் பேறு கிடைக்கும். குழந்தைப் பேறு அளிக்கும் தலங்கள் நிறைய உண்டு.

1) கருவளர்சேரி

சகல உயிர்களுக்கும் தாயான அம்பாள் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’யாக அருள்பாலிக்கிறாள்.
​கு​ம்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதாநல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. ​​கோயில் நேரம் காலை 8 மணி முதல் 12 மணிவரை, மாலை 4 மணி முதல் 8 மணிவரை. கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தையும் விலக்கி குழந்தை வரத்தை அருளுகிறாள்.

மேலும், கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். அதனாலேயே தேவியை ‘கருவளர் நாயகி’ என்ற திருப்பெயரிலும் அழைக்கின்றனர். குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சந்நதியில் பூசை செய்த மஞ்சள் கிழங்கினைத் தருவார்கள். அதை வாங்கி வந்து, தொடர்ந்து பூசி வர தடைகளை எல்லாம் நீக்கி, மகப்பேற்றை அருளுகிறாள் கருவளர் நாயகி அன்னை. கர்ப்பிணிகளும் இந்தப் பூஜையை செய்து பயன்பெறலாம்.

2) திருக்கருகாவூர்

​​அடுத்து நம் நினைவுக்கு வருவது திருக்கருகாவூர். கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கருகாவூர்​. கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. அம்பிகைக்கு “கரும்பணையாள்” என்ற பெயரும் உண்டு. இனிமையானவள் அல்லவா. அவள் அருளும் இனிமை.மொழியும் இனிமை. குழந்தைப் பாக்கியம் தடைப்படும் பெண்கள், கருக்காத்த நாயகியை பக்தியோடு வேண்டி, நெய்யினால் சந்நதியின் படிகளை மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும்.

பூஜிக்கப்பட்ட நெய்யினை ஒரு மண்டலம் உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும். நம்பிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இந்த பிரார்த்தனையை வாரத்தின் அனைத்து நாள்களிலும் செய்யலாம்.​ குழந்தை பிறந்தவுடன் தொட்டில் கட்டி, துலாபாரம் செய்கின்றனர்.​ பூசிக்கப்பட்ட விளக்கெண்ணெயையும் பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த எண்ணெயைத் தேய்த்தால் சுகப்பிரசவமாகும் என்பது நம்பிக்கை.

3) புட்லூர் அங்காள பரமேஸ்வரி

திருவள்ளூர் அருகே உள்ள சிறிய ஊர் புட்லூர். அங்கே ஊருக்கு நடுவே அங்காள பரமேஸ்வரி கோயில் இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான அம்மன் கோயில். கரு சுமந்த வயிறோடு, பெரிய உருவில் மல்லாந்து படுத்திருக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறாள் அன்னை. தாய்மைக் கோலத்தில் உள்ள இந்த தயாபரியை வணங்கினால் குழந்தைப்பாக்கியம் மட்டுமல்ல, சுகப்பிரசவமும் நடக்கும். இந்தக் கோயிலின் தலவிருட்சம் வேப்பமரம். இந்த வேப்பமரத்தில் எலுமிச்சைப் பழம் மற்றும் தொட்டில் கட்டுகிறார்கள்.

4) சென்னை ஸ்ரீசந்தான சீனிவாச பெருமாள் கோயில்

சென்னையிலுள்ள அண்ணாநகரை அடுத்த முகப்பேரில் உள்ள கோயில் ஸ்ரீசந்தான சீனிவாச பெருமாள் கோயில். இந்த ஆலயத்தின் உள்ள சந்தான சீனிவாசனை, குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள், மடியில் வைத்து பூஜை செய்தால், குழந்தை பாக்கியம் விரைவில் ஏற்படும். மகப்பேற்றிற்காக தம்பதி சமேதராக வந்து விஷேசமாக சந்தான கோபால பூஜையில் கலந்து கொண்டு இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

5) புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் ஆலயம்

ஆரணிக்கு அருகே உள்ள புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் ஆலயம் புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டிய திருக்கோயில். இத்திருக் கோயிலில் அம்பாள் பெயர் பெரிய நாயகி. குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா, புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பின்னர், இந்த ஆலயத்திற்கு வந்து ஈசனை சேவித்ததாக ஐதீகம். இத்தலத்தின் அருகே வடக்காக ஓடும் செய்யாற்றில் நீராடி, புத்திர காமேஸ்வரரை சேவித்த தசரதனுக்கு இங்கே தனி ஆலயம் உண்டு. அரச மரத்துடன் வேம்பு இணைந்த மரத்தடியில் அநேக நாகர்கள் உள்ளனர். இவர்களை 108 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். வில்வம், பவளமல்லி என இரண்டு தல விருட்சங்களை கொண்ட இந்த தலத்தில், பிரதோஷ வழிபாடு, ஆனி திருமஞ்சனம் போன்றவை சிறப்பாகும்.

6) திருச்செந்தூர் அருகே சில தலங்கள்

`குலசை முத்தாரம்மன்’ கோயிலுக்குச் சென்று அம்பாளை மனமுருகி தரிசனம் செய்ய வேண்டும். இது திருச்செந்தூர் அருகே உள்ளது. இங்குள்ள அம்பாள் மிகுந்த வரப்பிரசாதி. திருச்செந்தூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் உவரி என்ற கிராமத்தில், சுயம்புவாக தோன்றி இருக்கும் ‘உவரி லிங்க கோயிலில்’ இருக்கும் சுயம்பு லிங்கத்தை வழிபட வேண்டும். வேண்டிய வரங்களை உடனடியாக அள்ளிக் கொடுக்கக் கூடிய சக்தி இந்த சுயம்பு லிங்கத்திற்கு உண்டு.

7) திருவாலங்காடு வண்டார்குழலம்மை

மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவாலங்காடு அமைந்துள்ளது. இங்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தனிச் சந்நதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் புத்திரகாமேஸ்வர தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் நீராடி இத்தல ஈசனையும், புத்திரகாமேஸ்வரரையும் வழிபாடு செய்து, அதிதி தேவர்களையும், இந்திரன் தன் மகன் ஜெயந்தனைப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. புத்திரபாக்கியம் வேண்டி இங்கு வழிபட மிகச்சிறப்பான நாள், பங்குனி மாத அமாவாசைதான்.
அன்றைய தினம் இங்கு வந்து புத்திரகாமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்து வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம்.

8) திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. வைணவ 108 திவ்யதேசங்களில் ஒன்று. இவ்விடம் நாகபட்டினம் - திருவையாறு சாலையில் நாகபட்டினத்திலிருந்து 8 கி.மீ., தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. வசிட்டர் முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு, வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணெய்க் கண்ணன் உருகவில்லை. கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணெய்க் கண்ணனை உண்டு ஓடத்தொடங்கினான்.

இதனை அறிந்த வசிட்டர், சிறுவனை பிடிக்க விரட்டினார். வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர். கண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார். குழந்தைப்பேறு வேண்டி பெருமாளை வணங்கலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயசம் படைத்து வழிபாடு செய்யலாம்.

9) ஸ்ரீமுஷ்ணம் அரசமர வழிபாடு

வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அமைந்துள்ள ஊர்தான் ஸ்ரீமுஷ்ணம். வட இந்தியாவில் சாளக்கிராமம், புஷ்கரம், நைமி சாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து பெருமை சேர்க்கிறார்.

தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப்பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம் ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.

பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, 108 முறை அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். பெருமாள் சந்நதிக்கு வடக்குச் சுற்றில், ஆண்டாள் சந்நதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோயிலும் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்பமரத்தடியில், குழந்தை அம்மன் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு.
 
10) குழந்தை வரம் தரும் குருவாயூர்

குருவாயூர் கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலாகும். இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது. இங்கு குடி கொண்டிருக்கும் சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கண்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குவது வழக்கம்.

108 திவ்ய தேசக் கோயில்களில் ஒன்றல்ல எனினும் வைணவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வரும் திருக்கோயில். குழந்தை வரம் வேண்டியும், குழந்தைக்கு முதல் மாதம் அன்னம் ஊட்டும் விழா நடத்தவும், கோரிக்கை நிறைவேறியவுடன் துலாபாரம் தரவும் புகழ்பெற்ற தலம் இத்தலம். இங்குள்ள குழந்தைக் கண்ணனை வேண்டினால் குழந்தைப்பேறு கட்டாயம் கிடைக்கும்.

11) திருப்புட்குழி

திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம், தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது. இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி என்று பெயர். நான்கு தோள்களுடன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லிக்குத் தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை, உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது.

இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் துறந்தானாம். இவனது உறுதியையும் பக்தியையும் போற்றும் வகையில் பெருமாள் 8ஆம் உற்சவத்தன்று, அத்தச்சனது வீதிக்கு எழுந்தருளுகிறார். இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி, இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக் கொண்டு படுக்க, மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்களுக்கு  குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த இறைவி `வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

12) மாமல்லபுரம்

108 திருத்தலங்களில் 63-வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது மாமல்லபுரம். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு. இங்குள்ள பெருமாளை பூதத்தாழ்வார்
அன்பே தகழியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடுதிரியா - நன்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
என்று போற்றிப் பாடியுள்ளார். இந்த ஆலயத்தில் தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். மாசிமகத்தன்று மாமல்லபுரம் கடலில் நீராடி பெருமாளை வணங்க காசி, ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சத்சந்தான பாக்யம் கிடைக்கும்.

13) தொட்டமளூர் கிருஷ்ணன்

புத்திர தோஷங்களுக்கு சிறப்புமிகு பரிகாரத் தலமாக இருப்பது ``தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன்’’ திருக்கோயில். பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில், தவழும் திருக்கோலத்தில் தொட்டமளூர் திருத்தலத்தில் தவழ்கிறான் கண்ணன். ராமானுஜர், வியாசராஜர், ராகவேந்திரர், ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர். சாளக்கிராமக்கல்லில் உருவான நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோயில் மூடப்பட்டிருந்தது. அதனால், அவர் வெளியில் இருந்த படியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா’ என்னும் கீர்த்தனையைப் பாடினார்.

ஆச்சரியம்! கோயில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சந்நதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம். புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லத்தால் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சந்நதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

14) திருவல்லிக்கேணி

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் திருவல்லிக்கேணி என்ற பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவரான பார்த்தசாரதி, தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். இக்கோயிலிலுள்ள நரசிம்மருக்கு `தெள்ளிய சிங்கர்’ என்ற திருநாமம். இவரை வழிபட  சகல உடல் நோய்களும், மன நோய்களும் நீங்கும். இக்கோயிலின் பெருமாளை வேண்டினால் பதவி உயர்வுகள் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். குழந்தைப்பேறு சித்திக்கும். இங்கு செய்யப்பட்ட புத்திரகாமேஷ்டி யாகத்தினாலும் வழிபாட்டினாலும் சுவாமி ராமானுஜர் அவதரித்தார். பெருமாளை வேண்டிக் கொள்ள நிச்சயம் குழந்தைப் பேறு கிடைக்கும்.

15) ஆழ்வார் திருநகரி

நம்மாழ்வார் அவதரித்த தலம் ஆழ்வார் திருநகரி. 108 திருத்தலங்களில் ஒன்று. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவக்கிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில், இத்தலம் குருவுக்குரியதாகும். குருதானே குழந்தை வரம் அருள்பவர்! நம்மாழ்வாரின் பெற்றோர் இப்பெருமானை வேண்டி ஒருநாள் இந்த சந்நதியில் தங்க, அவர்களுக்கு மகப்பேறு வாய்த்தது. இன்னும் ஏராளமான திருத்தலங்கள் உள்ளன. அத்தலங்களின் வரலாற்றை அறிந்து, உரிய வகையில் வழிபாடு நடத்தினால், நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும்.

நாகலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்