SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள், கோயில்கள்

2022-05-25@ 13:50:08

?நான் சமீப காலங்களாக என் அலுவலகத்தில் சரியாகவே வேலை செய்வதில்லை. பணம்  வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதை செயல்படுத்தவும் தெரியும். ஆனால்,  மாதாமாதம்தான் சம்பளம் வருகின்றதே என்று அப்படியே விட்டு விடுகின்றேன். ஏதோ  ஒன்று என்னை தடுப்பதுபோல் உள்ளது. என் வாழ்வில் நான் ஜெயிப்பேனா?
 - நாகராஜன், விழுப்புரம்.

உங்களின்  நான்கு பக்க கேள்வியின் சாரத்தை அப்படியே சுருக்கி கேள்வியாக்கி  இருக்கின்றேன். நீங்கள் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. விருச்சிக  லக்னத்தில்  பிறந்திருக்கிறீர்கள். உங்கள் உத்யோக ஸ்தானத்தை சிங்கச்  சூரியன் தீர்மானிக்கிறார். சூரியன் சுய ஒளி கொண்ட விண்மீனாக இருப்பதனால்  சொந்தமாக  யோசிப்பீர்கள். உங்களுக்கென்று ஒரு தனிபாணி அமைத்துக்  கொள்வீர்கள். உங்கள்  ராசிநாதன் செவ்வாய்க்கும், சூரியன் நட்பு கிரகமாக  வருவதால் கம்பெனிக்கு  எவ்வளவு தூரம் வருவாயை அதிகரிக்க முடியுமோ அத்தனை  வழிகளையும் செய்து  தருவீர்கள்.

ஆனால், நீங்கள் ஆரம்ப காலகட்டங்களில் உண்மையாக உழைத்தீர்கள். அதற்கான பலன்களும் வந்தன. ஆனால்,  அதற்குப் பிறகு இவ்வளவுதானா இந்த வேலை என்று செய்த வேலையையே செய்துவிட்டு  அப்படியே அமர்ந்திருக்கிறீர்கள். மேலும், இதன் காரணமாக உங்களுக்குள் படிந்த  சோம்பல் காரணமாக நாளை பார்த்துக் கொள்ளலாம்... நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறீர்கள். நீங்கள் புதிது புதிதாக  வேலை முயற்சியை செய்து வந்திருந்தால் இந்நேரம் நீங்கள் ஒரு தொழில் அதிபதிராகி இருப்பீர்கள்.

அன்று என்னவோ நீங்கள் உழைத்ததைக் கொண்டு இப்போது கொஞ்சம் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களின் ஊதியத்தை  தாண்டி, தினந்தோறும் இன்று உண்மையிலேயே நாம் உழைத்தோமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்களின் மனசாட்சிக்கும் நடக்க வேண்டிய  உரையாடலாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அந்த நிமிடத்திலிருந்து  உழைக்கத் தொடங்குங்கள். உழைப்பது என்பது செய்யும் வேலையில் திளைத்தல் என்று  பொருள் கொள்ள வேண்டும். நீங்கள் நன்கு வளர்ந்து வந்திருக்க வேண்டியவர் ஆனால், சோம்பலில் தோன்றும் ஒரு ஓய்வை, சோம்பல் தரும் போதையை அனுபவித்து அனுபவித்து அதிலேயே காலம் கடத்துகிறீர்கள். உங்களுக்கு பணத்தின் ருசி  தெரிந்தும், அதை வளத்தெடுக்கும் திறன் இருந்தும் செய்யாமல் இருக்கிறீர்கள்  எனில் இது மனதின் அழுத்தமான சோம்பலை தவிர வேறு எதுவும் இல்லை. உங்கள்  ஊரான விழுப்புரத்திற்கு அருகேயுள்ள திருவக்கரை வக்ரகாளி அம்மனை மாதம்  ஒருமுறையாவது, விரதமிருந்து தரிசிப்பதாக வேண்டிக் கொண்டு செல்லுங்கள்.  விநாயகர் அகவலை தினந்தோறும் பாராயணமாகச் சொல்லுங்கள். உழைப்பிற்கு உரியவரான  விநாயகர் உங்களை நன்கு உழைக்க வைத்து வெற்றி பெறச் செய்வார்.

?எனக்கு 44 வயதாகின்றது. ஏதேனும் நோய் வந்து படுத்தி எடுத்தி விடுகின்றது.  என் மனைவியோடு எப்போதும் சண்டையாக இருக்கின்றது? இதிலிருந்து மீள என்ன வழி?  
- சுந்தரம், திருநெல்வேலி.

நீங்கள் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்களின் லக்னத்திற்கு சத்ரு, நோய், கடன் போன்ற இடங்களுக்கு அதிபதியாக மகரச் சனி வருகிறார். அவரே சத்ரு ஸ்தானாதிபதியாகவும் வருகிறார். அதனால் ஒரு விஷயத்தை தொடங்கும்போதே  முதலில் எதிர்ப்புதான் வரும். சிறிய வயதிலிருந்தே ஏதாவது செய்ய வேண்டும்  என்று நினைப்பதால் உறவினர்கள், அக்கம்பக்கம் வீட்டிலுள்ளோர் ஏதாவது சொல்லி தடுப்பார்கள். அவர்களை மீறி செல்வதால் மெல்லிய பொறாமையோடு தடுப்பார்கள்.  வீட்டுக்கு வந்து போவோர்களெல்லாம் உங்களுக்கு அறிவுரை மழையை பொழிவார்கள்.  ‘‘நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாமான்னு இருக்கேன்’’ என்றால் அதற்கு  முட்டுக்கட்டை போட பலபேர் வருவார்கள். அவர்களை அப்படியே தள்ளி வையுங்கள்.  அதேபோல, உங்களின் ஆறாம் இடத்திற்குண்டான சனியே ஏழாம் இடமான வாழ்க்கைத் துணை  ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார்.

அதனால் உங்களின் வாழ்க்கைத் துணை  திறமையுள்ளவராக இருப்பார். உங்களை மீறி சிந்திப்பவராகவும் இருப்பார். முகத்திற்கு நேராக குறைகளை சுட்டிக் காட்டுவதால் எதிரியாக நினைப்பீர்கள். எனவே, ஈகோ பார்க்காதீர்கள். உங்களின் மனைவிதானே! நாளை நீங்கள் வெற்றி  பெற்றால் அவருக்கும் பெருமை
தானே! நீங்கள் எப்போதும் உங்களை உயர்வாக  நினைத்திருப்பதில் பெரிய தவறு ஒன்றுமில்லை. அதை வீட்டில் இருப்பவர்களிடம்  எப்போதும் காட்டிக் கொண்டிருப்பதுதான் தவறு. இன்னும் ஒரு விஷயம் உங்களுக்கு இருக்கும் இந்த நோய்களெல்லாம் கொஞ்சம் தற்காலிகமானது. நீங்களே சொல்கிறீர்கள் அவ்வபோது கொஞ்சம் வயிறு வலிக்கும். தலை வலிக்கும் என்று.  அதனால், உங்களின் வியாபாரத்தில் நவீனமாக செய்து முன்னேறப் பாருங்கள். காலத்திற்கு தகுந்தாற்போல் வியாபார யுக்தியை மாற்றிப் பாருங்கள். வெற்றி  நிச்சயம்.  
உங்கள் சொ
ந்த ஊரிலுள்ள குல தெய்வத்தை ஆறு  மாதத்திற்கு ஒருமுறையாவது சென்று தரிசித்து வாருங்கள். அதேபோல, குல தெய்வம்  ஐயனாராகவோ இருந்தாலோ அல்லது கருப்பண்ண சாமியாக இருந்தாலோ சூலம், வேல்,  கத்தி ஏதேனும் வாங்கி சார்த்துங்கள். தினமும் திருஞானசம்பந்தர் அருளிய  கோளறு பதிகத்தை சொல்லி ஈசனை வணங்கி வாருங்கள். வெற்றி பெறுவீர்கள்.

?நான் நிறைய பேரை கைதூக்கி விட்டிருக்கின்றேன். ஆனால், என்னை மதிக்காது  இருக்கிறார்கள். எனக்குத் தகுந்த வேலையும் ஊதியமும் இன்னும் எனக்கு  
கிட்டவில்லை. என்ன செய்வது?
- ராஜா கணேசன், கும்பகோணம்.  

முதல் கேள்விக்கான பதிலை நீங்களும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். நீங்கள்  உத்திரம் நட்சத்திரம். கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்களின் வேலை ஸ்தானத்தை மேஷச் செவ்வாய் தீர்மானிக்கிறார். மேஷச் செவ்வாய் என்பது நாசூக்காக இருக்கும். ஆனால், மேஷச் செவ்வாய் கன்னியில் சென்று  அமர்ந்து அதை சனி வேறு பார்க்கிறார். அலுவலகத்தில் எத்தனைதான் எல்லோரும்  வேலை செய்தாலும் அதிகமாக பாராட்டி கெடுத்து விடக் கூடாது என்று  நினைப்பீர்கள். இதனால் உங்களின் செயல் திறனை குறைத்துக் கொள்ளும் சிறிய அபாயமும் அங்கு உள்ளது. ‘நண்டானுக்கு இடம் கொடேல்’ என்றொரு ஜோதிட மொழி உண்டு. ஏனெனில், எதில் நுழைந்தாலும் தன் அதிகாரத்தையும், ஆளுமையையும் நிலை நிறுத்துவதிலேயே குறியாக இருப்பீர்கள். அதீத அதிகாரத்திலுள்ளவர்களை  வலுவிழக்கச் செய்வீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவதெல்லாம் பிடிக்காது. ஆனால், நீங்கள் நடைமுறையில் நீங்கள் அப்படி இல்லையே!
உங்களுக்கு வெறும்  41 வயதுதான் ஆகின்றது. ஆனால், ஓய்வூய்தியம் பெறப் போகும் முதியவர்போல  கடிதத்தில் எழுதியிருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லட்டுமா, உங்களுக்கு கீழே  உள்ளவர்கள் மேலே செல்லச் செல்ல நீங்கள் என்னவோ அவர்களை ஆசிர்வதிப்பதுபோல  நினைத்துக் கொண்டெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். இந்த விஷ வட்டத்தில் சென்று  விழாதீர்கள்.

அதனால், உங்களுக்கு எந்தப் பிரயோஜனும் இல்லை. நான் கொஞ்சம்  சோம்பேறி என்பதை பெருமையாக வேறு எழுதுகிறீர்கள். அதெல்லாம், வி.ஐ.பி.கள்  பேட்டியில் விளையாட்டுக்குச் சொல்வது. அடக்கத்திற்காக சொல்லப்படுவது. அதை அப்படியே நீங்கள் சொல்லி பெருமை தேடிக் கொள்கிறீர்கள். சோம்பல் என்பது  குடிக்கு அடிமையாவதை விட இன்னும் போதை நிறைந்தது. உங்களிடத்தில் படிந்த  இந்தச் சோம்பல் எனும் செயலின்மை என்கிற தன்மை வீட்டிலுள்ள எல்லோரையும்  பாதிக்கும். குடும்பம் பின்னுக்கு போகும். நீங்கள் மரியாதையை இழப்பீர்கள்.  உட்கார்ந்தபடி எப்படி பணம் வரும் என்று யோசித்துயோசித்து மறுகிப் போவீர்கள். ஊர் உலகத்தில் எல்லா  ஜோதிடர்களையும் பார்த்து எப்போது பணம்...  எப்போது பணம் வரும்.. என்று கேட்பீர்கள். அவரும் உங்களின் சோம்பல்  தெரியாமல் ஏதேனும் ஒரு தேதியையும் வருடத்தையும் சொல்லுவார். நீங்களும் ஏதோ கேட்டுக் கொண்ட திருப்தியில், ஆஹா... கிரகங்கள் எப்படியாவது நம்மை கைதூக்கி  விட்டு விடும் என்று சுற்றிக் கொண்டே இருப்பீர்கள். எனவே, சோம்பல் என்பது  எல்லோருக்கும் இருக்கும்தான். ஆனால், அது அப்படியே தங்கி விடும்போது பெரும்  நோயாக மாறிவிடும். சிறிய உடலசைவைக் கூட அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். பிறகு, யோசிப்பதைக் கூட நாளை... நாளை... என்று தள்ளிப்  போட்டபடியே இருக்கும்.

எனவே, ஒவ்வொரு நாளையும் உருப்படியாக இன்று உழைத்தோமா என்று எண்ணி  காரியமாற்றுங்கள். உங்களை விட தாண்டிச் செல்கிறவர்களை கோபமாகப் பார்த்து, ‘‘நான் ஆளாக்கினவன்... என்னை மதிக்காம போறான்’’ என்று குறையும் வேறு சொல்கிறீர்கள். உங்களின் திறனை நீங்கள் கணித்து எப்படியெல்லாம் செயல் திறனை பெருக்கிக் கொள்ளலாம் என்று யோசித்து  செயல்பட்டால் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முடியும். எல்லா  ஏகாதசி நாட்களிலும் விரதம் இருங்கள். உங்கள் ஊரான கும்பகோணத்திற்கு  அருகேயுள்ள திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமையன்று சென்று  தரிசியுங்கள். அந்த கோயிலில் உள்ள சரபேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள். தினமும்  வீட்டில் அமர்ந்து அபிராமி அந்தாதியிலுள்ள அனைத்து பாடல்களையும் காலையில்  குளித்துவிட்டு சொல்லுங்கள். அப்படி தினமும் செய்வேன் என்று உறுதி  எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருபது வயதில் கவிதை புத்தகம் போட்டதாக  எழுதியிருக்கிறீர்கள். அதனாலேயே உங்களின் கடிதத்தின் மொழியும் அழகாக  இருந்தது. வருடா வருடம் கவிதைத் தொகுதி கொண்டு வருவேன் என்று வைராக்கியமாக  எழுதுங்கள், கவிஞரே. வெற்றி உங்களுக்கே!மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்