SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனக்குறையை போக்கிடுவாள் மாலையம்மன்

2022-05-23@ 14:36:57

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கவுண்டம்பட்டியில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த வைரவன்நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இவரது உடன் பிறந்த அக்காவிற்கு முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரண்டும் பெண் குழந்தைகள். இந்த குழந்தைகளை பெற்ற அவள் அன்றைய தினமே இயற்கை எய்திவிட்டார். கண்ணுக்கு அழகாய் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுவிட்டு, கட்டிய மனைவி காலம் சென்றுவிட்டாளே என்று கண் கலங்கிய குழந்தைகளின் தந்தை கால்போன போக்கில் சென்றார்.

தாய், தந்தையர் ஆதரவு இல்லாமல் குழந்தைகள் தவிக்கக் கூடாது என்று எண்ணி, தாய்க்குத் தாயாய் நானிருக்கிறேன். என் உடன் பிறந்த குழந்தைகளை, நான் வளர்த்து ஆளாக்குகிறேன் என்று உறுதி எடுத்துக்கொண்ட வைரவன், தனது தாயிடம் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வாம்மா என்று கூறி தனது வீட்டுக்கு எடுத்து வந்து குழந்தைகளை வளர்த்துவருகிறார். அந்த குழந்தைகளுக்கு வீரவையம்மாள், சின்னவையம்மாள் என பெயரிட்டு வளர்த்துவந்தாள் அவர்களது பாட்டி தோணியம்மா. (இவர்களது பூர்வீகம் கர்நாடகா மாநிலமாகும்.)அகவை 13 ஆன பின்னும் வீரவையும், சின்னவையும் தாய், தந்தையர் பாசத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அன்போடும், பாசத்தோடும் வளர்த்துவந்தார் தாய்மாமன் வைரவன். தனக்காக பாடுபடும் தன் மாமனை அவர்களும் மதித்துவந்தனர்.

அன்று வைகாசி விசாகம், அவளது பாட்டி. திடிரென்று கோபம் கொண்டு ‘‘உங்க ரெண்டு பேரையும் எத்தன நாள் சொல்லுறது, பாவாடை சட்டை மட்டும் போடாதிக, தாவணி போடுங்கன்னு.’’‘‘போம்மா, அது சமைஞ்ச பிறவு போடுவோம். இப்பவேவா,’’ என்று பதிலுரைத்த வீரவையிடம்.‘‘அடியே, அது எனக்கு தெரியுமிடி, வயசுக்கு மிஞ்சி வளர்ந்து தொலைஞ்சிருக்கியேளே, அதான் சொன்னேன்.’’ என்றாள் பாட்டி.‘‘சரியாத்தா’’ என்றபடி வீரவையும், சின்னவையும் குளிக்கச் சென்றனர். நண்பகல் 2 மணி ஆனது. இருவரும் குளித்துவிட்டு பாவாடை சட்டை தாவணியில் தயாராகி பாட்டி முன்பு வந்து நின்றனர். உடனே தோணியம்மா கூறினாள். ‘‘என் மகள உரிச்ச வச்சா போல இருக்கேளடி, நீங்க தாவணி போட்டு, உங்க மாமன் பாத்ததில்ல, அவன் பாத்தான் அசந்துபோவான்.’’ என்றாள். அப்போது வீரவை ‘‘யம்மா, மாமாவுக்கு சோறு கொண்டு கொடுத்திட்டு வந்து நாங்க சாப்பிடுறோம்.’’ என்று கூறினாள். பின்னர் மாமாவுக்கு சோறு எடுத்துக் கொண்டு இருவரும் சென்றனர். கவுண்டம்பட்டியிலிருந்து,  கால் நடையாய் நடந்து 5 கி.மீ தூரம் உள்ள மேலக்கல்லூரணிக்கு சென்றனர். அந்த காலத்தில் மேலக்கல்லூரணி பகுதி மிகவும் காடாக இருந்தது. அங்கு தான் வைரவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

வீரவை, ‘‘ஏய், சின்னு விருசுல நட, நேரம் போகுதா வருதா.. என்று சொல்ல, அக்கா, மாமா அந்தா நிக்காக’’ என்று கூறிய சின்னுவை பதற்றத்துடன். ‘‘அக்கா பாம்பு கால சுத்திடுச்சு’’ என்றாள். உடனே கண்களை மூடிக்கொண்டு கலக்கத்துடன் கூறினாள் வீரவை, ‘‘சின்னு அப்படியே நில்லு நம்ம இரண்டு பேரையும் சேர்த்து தான் சுத்தியிருக்கு’’ என்று கூறிக்கொண்டு இருவரும் அசையாமல் நின்றனர். இருவரின் கால்களையும் நாகம் ஒன்று சுற்றிக்கொள்கிறது. தூரத்துதொலைவிலிருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த வைரவன், இதுக ரெண்டும் ஏன் அப்படியே அசையாம, சிலையாட்டம் நிக்குதுக என்று எண்ணிக்கொண்டு அவர்கள் நிற்கும் இடம் நோக்கி வருகிறார். வந்து பார்த்தால் நல்ல பாம்பு ஒன்று இருவரின் கால்களையும் பின்னியிருந்தது. உடனே தன் கையில் இருந்த தொரட்டி கம்பு (அரிவாள் இணைக்கப்பட்ட கம்பு) கொண்டு பாம்பை வெட்ட, துண்டாடப்பட்ட பாம்பின் தலை, சிதறி வந்து, வைரவன் தலையை தீண்டியது. வைரவன். அதே இடத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மாண்டுபோனார்.

வீரவையும், சின்னுவும் ஓடி வந்தனர். மாமன் உடல் அருகே இருந்து கதறி அழுதனர். சிறிது நேரத்திற்கு பின்னர் வீரவை சொன்னாள். ‘‘சின்னு, நாம என்ன பாவம் பண்ணினோமோ தெரியல, பெத்த ஆத்தா, அப்பன பார்த்ததுதில்ல, தாய்க்கு தாயா இருந்து, நமக்காக கஷ்டப்பட்ட மாமன் சாவுக்கு நாம காரணமாயிட்டோம். இனி நாம இந்த மண்ணுல வாழக் கூடாது. ஊரார், உறவினர் பழி சொல்லும் ஆளாகக் கூடாது. வா, சாவோம்.’’‘‘அக்கா... ’’என்று மெல்லிய குரல் கொடுத்தாள். சின்னு.‘‘என்ன, சின்னு பண்ண, உன்ன விட்டுட்டு போக எனக்கு மனசில்ல, அதான் கூப்பிட்டேன். சரி, பரவாயில்ல, என் கதைய நான் முடிச்சுக்கிறேன். நீ பொழுது சாயுமுன்ன, வீடு போய் சேர்ந்திரு,’’ என்று கூறிவிட்டு, மாமா உடலருகே இருந்த வீரவை எழுந்தாள். விரிந்த தலைமுடியை முடித்தாள். அங்கே  இருந்த வன்னிமரம் அருகே வந்தாள். அப்போது, அக்கா என்றபடி ஓடி வந்தாள் சின்னவை. வந்த வேகத்தில் கட்டிபிடித்தாள். பின்னர் இருவரும் சகஜநிலைக்கு திரும்பினர்.

வன்னி மரத்தின் முன் நின்று இருவரும் வேண்ட, வன்னிமரம் சாய்ந்து, தானே தீப் பற்றி எரிந்தது. அந்த தீயினுள் வீரவையும், சின்னுவையும் இறக்கினர். நின்ற கோலத்தில் உடல் கருகி, மாண்டுபோயினர். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குப் பின் கவுண்டம்பட்டியில் வசித்து வந்த செட்டியார் ஒருவர் வளையல் வியாபாரம் செய்துவந்தார். அவர் வீரவை, சின்னவை அடக்கமான இடத்தின் வழியாக ஒரு முறை செல்லும்போது, அங்கே கூரையால் வேயப்பட்ட கொட்டகை இருந்தது போன்றும், அந்த கொட்டகையின் ஜன்னல் வழியாக இரண்டு இளம் பெண்களின் 4 கைகள் மட்டும் வெளியே தெரிந்துள்ளது. அப்போது செட்டியாரே, எங்க கைகளுக்கு வளையல் போடுங்க என்று குரல் கேட்டுள்ளது. துட்டு கொடுங்க தாயி அப்புறமா வளையல் போடுறேன். என்று அவர் கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் அங்கிருந்து 1 கி.மீட்டர் தூரமுள்ள ஒரு ஊரில் சென்று வியாபாரத்திற்காக, வளையல் மூட்டையை பிரித்துள்ளார். அப்போது மூட்டையிலிருந்த அனைத்து வளையல்களும் உடைந்திருந்தது.

இதுபோல மறுநாளும் வளையல் உடைந்தது. உடனே செட்டியார் குறி கேட்க, குறி சொன்ன பெண். வீரவை, சின்னுவை கதையை கூறி அவர்கள் தான் வளையல் கேட்டதாக சொல்ல. மறு நாள் செட்டியார் அவர் கண்ட கொட்டகை இடம் தேடிச்சென்று 6 செட் வளையல்களை அவ்விடம் வைத்துவிட்டு வியாபாரத்துக்குச் சென்றுள்ளார். அன்று நல்ல முறையில் வியாபாரம் நடந்துள்ளது. மேலும் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உடைந்த வளையல்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 மூட்டைகளிலும் உடைந்த வளையல்கள் நல்ல முறையில் இருந்தது.  இவற்றை பெருமைப் பட, வீரவை, சின்னவை குடும்பத்தாரிடம் கூற, அவர்கள் மேலக்கல்லூரணியில் வீரவை, சின்னவை அக்னியில் அடக்கம் ஆன அந்த இடத்தில் கோயில் கட்டினர்.

கோயிலுக்குச் சென்று வழிபட்டவர்களின் குறைகள் நிவர்த்தி ஆனது. தோஷங்கள் விலகின. நாளடைவில் அது அக்கம் பக்கம் கிராமங்களில் பரவ, ஆலயம் தேடி பக்தர்கள் வருகை அதிகரித்தது. திருமணம் தள்ளிப்போன பல பெண்களுக்கு இவ்வாலயம் வந்த பின் திருமணம் நடந்தேறியதால். தங்கள் வாழ்க்கைக்கு மாலை கொடுத்த தாய் என்பதால் வீரவை, சின்னவை சேர்த்து மாலையம்மன் கோயில் என்று அழைக்கலாயினர். அந்த பெயரே இப்போதும் நிலைபெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் வீரவை, சின்னவை அவதரித்த நாளான திங்கள்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அவர்கள் அடக்கமான வைகாசி மாதம் விசாகம் நாளில் குருபூஜை நடக்கிறது. அப்போது செட்டியார் வீட்டிலிருந்து இன்றும் வளையல் கொண்டு வரப்படுகிறது. கோயிலில் தினசரி பூஜை நடக்கிறது. இக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அடுத்த நாகலாபுரம் பஞ்சாயத்திலுள்ள மேலக்கல்லூரணியில் அமைந்துள்ளது. நாகலாபுரத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்