SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஞானகுரு தட்சிணாமூர்த்தியின் அபூர்வ வடிவங்கள்

2022-05-12@ 17:49:22

நன்றி குங்குமம் ஆன்மிகம்

*தமிழ்நாட்டில் குரு பகவானுக்கென்று நவக்கிரக சாந்நித்ய முள்ள திருக்கோயில் ஆலங்குடி ஆகும். அந்த குரு ஞான தட்சிணாமூர்த்தியாக பல ஊர்களிலும் வீற்றிருக்கிறார்.   தியான ரூபியாகவும், தியான ரூபமாகவும் உள்ள குரு சந்நதிகளை நாம் அறிந்து தரிசித்துப் பலன் பெறுவோம்.

*மயிலாடுதுறை காவிரிக்கு அருகே வடகரை என்னும் இடத்தில், வள்ளலார் கோயிலில் மேதா தட்சிணா மூர்த்தியாக யோகாசனத்தில் ஞான முத்திரை காட்டி அமர்ந்துள்ளார். நந்தி தேவனுக்கு இறைவனைத் தாங்குபவன் நான் என்ற செருக்குண்டாக, அதை அடக்கினார். வியாழன் தோறும் இவருக்கு தங்கக் கவசம் சாத்துகிறார்கள்.

* திருநெல்வேலி மாவட்டம் கழுகு மலையில், ஒரு கையை தரையில் ஊன்றியபடி சற்று சாய்ந்தவாறு விஸ்ராந்தியாக போதனை செய்யும் விதமாக தட்சிணா மூர்த்தி காட்சி தருகிறார்.

*திருவையாறு ஐயாறப்பன் சந்நதியில், ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார். திருச்சுற்றில் இவரைக் கடந்து செல்லக்கூடாது என்பது ஐதீகம்.

*திருவஹிந்திரபுரம், உத்தரமேரூர், ஆகிய தலங்களில் உள்ள திருமால் ஆலயங்களிலும், விமானங்களிலும் தட்சிணாமூர்த்தி வடிவம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

*மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும், திருக்கண்டியூரிலும் தட்சிணாமூர்த்தி உருவில், ஆக்ருதியில் பெரிய ரூபியாய் அருள்பாலிக்கிறார்.

*சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உள்ள திருக்கோயிலில், தட்சிணாமூர்த்தி தனியாகக் கோயில் கொண்டுள்ளார்.

கார்த்திகைப் பெண்களுக்கு, அஷ்ட மாசித்திகள் அருளும் நிலையில், கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

*விழுப்பும் மாவட்டம் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். ரிஷபத்தின் மீது கையை ஊன்றிய படியும், இடது கையில் சுவடி ஏந்தியபடியும் அபூர்வமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.

*மேல்பாடி ஸ்ரீசிம்மேந்திர சோழீஸ்வரர் திருக்கோயிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து வீணை வாசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம்.

*சென்னை-பெரியபாளையம் பாதையில் உள்ளது திருக்கண்டலம் எனும் திருத்தலம். இங்கு அம்பிகையுடன் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி. இவர் ‘சக்தி தட்சிணா மூர்த்தி’ என்றழைக்கப்படுகிறார்.

*வாணியம்பாடி திருத்தலத்தில், மேற் கரத்தில் ஜெப மாலை, மற்றும் அமுதகலசமும், முன் வலதுகரத்தில் சின்முத்திரை, இடது கரத்தில் புத்தகமுடனும் அம்பிகையை அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார். ‘சக்தி தட்சிணாமூர்த்தி’ இதில் ஆலமரம் மற்றும் முயல்கள் இல்லை. இது ஒரு பஞ்சலோக படிமம் ஆகும்.

* திருவிடைமருதூர் ‘ஸ்ரீசாம்பவி தட்சிணாமூர்த்தி’ வடிவில், காலடியில் நந்தி படுத்திருக்க, அதன் முதுகில் வலது காலை ஊன்றி காட்சி தருகிறார் பெருமாள்.

*தக்கோலம் ஸ்ரீசோமநாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ளவர் ‘உத்குடிகாசன தட்சிணாமூர்த்தி’ ஆவார். இது இடதுகரத்தை முழந்தாளின் மீது நீட்டியுள்ள யோக வடிவமாகும். திருவெண்காட்டுத்தலத்திலும் இவ்வடிவைக் காணலாம்.

*திருமங்கலக்குடி திருத்தலத்தில், தெற்கு பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி விக்ரகத்தைத் தட்டிப் பார்த்தால் கணீரென்று வெண்கல மணிச்சத்தம் கேட்கிறது. அதனால் இந்தத் தட்சிணாமூர்த்திக்கு ‘நாதகுரு தட்சிணாமூர்த்தி’ என்று பெயர்.

*விருதுநகருக்கும், ராமநாதபுரத்திற்கும் இடையே ஓடும் குண்டாற்றின் தென் கரையில் அமைந்துள்ள தண்டலமாணிக்கம் திருத்தலத்தில் உள்ள கயிலாசநாதர் ஆலயத்தில் தட்சிணா நிலையில் உள்ளார். இவரது சந்நதியில் சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக அர்ச்சனை செய்யப்படுகிறது.

*தாராசுரம் என்ற திருக்கோயிலில், விதவிதமான திருக்கோலங்களில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இருபத்தெட்டு திருவுருவங்களில் அழகழகாய்க் காட்சியளிக்கிறார். இப்படியொரு அமைப்பு வேறெங்கும் இல்லை.

*கழுகு மலையில் உள்ள வெட்டுவான் கோயிலிலும், புகழ் பெற்ற பாதாமி குடைவரை கோயிலிலும், தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தியபடி காட்சி தருகிறார்.

*திருவைகாவூர் திருத்தலத்தில், கையில் கோலேந்தியபடி, நின்ற திருக்கோலத்தில் தட்சிணா மூர்த்தி அருள் பாலிக்கிறார்.

*காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியின் ஜடாம குடத்தில் அபூர்வமாக மூன்றாம் பிறைச் சந்திரன் காணப்படுகிறது.

*திருச்சி மலைக் கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் தட்சிணா மூர்த்தி வடிவம், ஆறு சீடர்களுடன் காட்சியளிக்கிறது. மற்ற தலங்களில் சனகாதி முனிவர்கள் எனும் சீடர்கள் நால்வரே இருப்பார்கள்.

*அரக்கோணம் அருகில் உள்ள இலம்பையங்கோட்டூர் ஆலயத்தில் உள்ளவர் ‘ஆத்ம நாத தட்சிணா மூர்த்தி’. வலது முன்கையில் சின் முத்திரையுடன் மார்பில் வைத்து, பின் கரங்களில் சூலம், ஜெபமாலை கொண்டு திகழும் வடிவம் இது.

*சுவாமி மலையை அடுத்த தியாக சமுத்திரம் கயிலாய நாதர் ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மழுவேந்திய கோலத்தில் காணப்படுகிறார்.

*திருச்சி, திருநெடுங்களம் திருத்தலத்தில் இருகால்களையும் மடித்து ஒன்றன்மேல் ஒன்றைப் படியவிட்டு உள்ள தட்சிணாமூர்த்தி வடிவை ‘ராஜ லிங்காசன தட்சிணாமூர்த்தி’ என அழைக்கிறார்கள்.

*கழுகு மலை வெட்டுவான் கோயிலில் மிருதங்கம் வாசிப்பது போன்று அமைந்திருக்கும் தட்சிணாமூர்த்தி திருக்கோலம் அபூர்வமானது.

*காசி மாநகரில் உள்ள அனுமன் காட்டில் உள்ள ஸ்ரீசக்ரலிங்கேஸ்வர ஆலயத்தில் ‘அர்த்தநாரீஸ்வரர் தட்சிணாமூர்த்தி உற்சவர் திருமேனி சிறப்பானது.

*திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பட்ட மங்கை சுந்தரேசரர் ஆலயத்தில், தட்சிணா மூர்த்தி கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். வீராசனத்தில் உள்ள இவரது வடிவமே பெரிய வடிவம் ஆகும்.

*திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் வெளிப்புறம் யோகீஸ்வரர், திருமடத்தில் உள்ள மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.

*வழக்கத்திற்கு மாறாக பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, திங்களூர் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயிலில் காணலாம்.

*திலதைப்பதி எனும் செலதலப்பதி திருக்கோயிலின் ஆலயத்தின் வெளியே உள்ள ஸ்ரீ ஆதி விநாயகப் பெருமானை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி என்றே கூறுகிறார்கள்.

*ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி என்னும் ஊரில், ஐயப்பன் போல திருக்கோலம் கொண்டு வீற்றிருக்கிறார் தட்சிணாமூர்த்தி.

*ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளியில், ஒரு காலை மடித்து ஆசனத்தில் வைத்தபடியும் அந்தக் காலும் இடுப்பும் சேர்ந்தபடி பட்டை ஒன்று போடப்பட்டும் அபூர்வமான நிலையில் தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார்.

*இதே ஊரில் தான், மற்றொரு கோயிலில் அம்பிகை தட்சிணா மூர்த்தியை அணைத்தபடி அமர்ந்திருக்கிறார். இவர் ‘சாம்ப தட்சிணாமூர்த்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

*கர்நாடகாவில், மைசூருக்கு அருகில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வீணை கையில் கொண்டு ‘வீணா தட்சிணாமூர்த்தியாய் காட்சி தருகிறார்.

*பழனிக்கு அருகேயுள்ள பெருவுடையார் கோயிலில், முகத்தில் அற்புத அழகு வாய்ந்த வசீகரமான குரு மூர்த்தியாய் தட்சிணாமூர்த்தி விளங்குகிறார்.

*திருநாகேஸ்வரம் அருகே உள்ள தேவப் பெருமாள் நல்லூரில் அன்னதான சிவன் என்பவர். பலருக்கு அன்னமிட்டு விட்டு, தான் மட்டும் தனியே சாதம் பொங்கி தட்சிணா மூர்த்திக்கு நிவேதனம் செய்து அதைச் சாப்பிட்டு வந்தார். அதனால், அவ்வூரில் ‘அன்னதான தட்சிணாமூர்த்தி என்றழைக்கப்படுகிறார்.

*சென்னை பல்லாவரம் அருகிலுள்ள திரிசூல நாதர் திருக்கோயிலில் வலக்கால் மீது மற்றொரு காலை மடித்துப் போடாமல் வீராசனமாகவும், முகத்தில் வீரம் கொண்டும் தட்சிணா மூர்த்தி அருள்புரிகிறார்.

* திருவிடைக் கழி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் அர்த்த மண்டபத்தில், விசேஷமான தட்சிணாமூர்த்தி வடிவைக் காணலாம். இந்த வடிவில் இடம் பெற்றிருக்கும் ஆலமரத்தில் பறவை, பாம்பு, பொக்கணம் எனும் விபூதிப்பை முதலியானவை காணப்படுகின்றன.

*தஞ்சை பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் அளித்துள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, உற்சவ மூர்த்தி வடிவில் ஒன்பது பெருங்கிளைகள் மற்றும் சிறு கிளைகளுடன் திகழும் ஆலமரத்தில் விபூதிப்பை, வெண் சாமரம் ஆகியவை உள்ளன.

*நெல்லை மாவட்டம் சேரன் மாதேவி அம்மை நாத சுவாமி கோயிலில், மான், மழு ஏந்திய தட்சிணாமூர்த்தி வடிவத்தைக் காணலாம்.

*பாசுபத சைவர்கள் வழிபடும் தட்சிணா மூர்த்தியான ‘லகுளீசர்’ திருமேனியை திருவையாறு மற்றும் திருவொற்றியூர் திருக்கோயில்களில் காணலாம். இந்த வடிவில், பின் கரங்களில் சூலம், கபாலம் திகழ, வலது முன்கரம் சின் முத்திரை காட்ட, இடது முன் கரம் தியான முத்திரை காட்ட அபூர்வமாய் அமைந்துள்ளது. மேலும், சடா முடியை எடுத்துக் கட்டியுள்ள அமைப்பில் பத்மாசனத்தில் உள்ளார்.

*கோவிந்தவாடி தட்சிணா மூர்த்தி ஆலயம் ‘பூலோக கைலாசம்’ என்று சொல்லப்படு கிறது. தட்சிணா மூர்த்தி இங்கு ஆமை (கூர்ம) ஆசனம், அனந்தாசனம் (பாம்பு), பத்மாசனம் (தாமரை) என்று மூன்று ஆசனங்கள் மீது வீற்றிருக்கிறார். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வடிவம். கல்லாலமரம் இல்லை. காலடியில் இரண்டு முனிவர்கள் மட்டுமே உள்ளனர். இங்கு இவர் வியாக்யான தட்சிணாமூர்த்தியாக, பிரதான தெய்வமாகத் திகழ்கிறார். இவருக்கு அன்னாபிஷேகம் போன்ற அனைத்து ஆராதனைகளும் விசேஷமாகச் செய்யப்படுகின்றன.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்