SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் கோயில்கள்

2022-05-11@ 16:56:35

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்   “திருவருணை” ஸ்ரீ கிருஷ்ணா

? எனது மகன் பி.இ. படித்து முடித்து தற்சமயம் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதற்கான தேர்வுகளுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அரசு வேலைக்கான வாய்ப்பு உள்ளதா?
 - தெ. பேராட்சி, திருநெல்வேலி.


உங்கள் மகன் கேட்டை நட்சத்திரம். விருச்சிகம் ராசி. தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்துகொண்டிருக்கிறது. சுக்கிரன் தனது சுய புக்தியில் மொத்தமாக எதுவும் தராவிட்டாலும் சட்டென்று இருக்கும் நிலையினின்று நல்ல நிலைக்கு உயர்த்த முயற்சிப்பார். உங்கள் மகனின் ஜாதகத்தில் சூரியனும் ராகுவும் ஒன்றாக அமர்ந்திருப்பதால் அரசு வேலை வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. மேலும், சூரியனும் புதனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். அதில் புதன் சுக்கிரனுடைய சாரம் வாங்கியிருக்கிறான். அதனால், எண்ணியதை ஈடேற்றும் சக்தியை உருவாக்குவார். ஆனாலும், கடகத்தில் சுக்கிரன் அமர்ந்து தன் தசையை நடத்திக் கொண்டிருப்பதால் கடகச் சுக்கிரன் என்பது கொஞ்சம் சுக்கிரன் பலம் குறைந்த அம்சம். எனவே, சுக்கிரனை இன்னும் விரைந்து பலன் தர வெள்ளிக்கிழமையன்று ஆறு எண்ணிக்கையில் செந்தாமரைப் பூவை அம்பாளுக்கு சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். இயன்றபோதெல்லாம் வெள்ளிக் கிழமைதோறும் சுமங்கலியை வீட்டிற்கு அழைத்து உங்கள் வீட்டு பெண்களை கொண்டு ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு தாம்பூலம் கொடுக்கச் சொல்லுங்கள். திருச்செந்தூருக்கு அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு, கற்குவேல் ஐயனார் கோயிலுக்கு உங்கள் மகனை அழைத்துக்கொண்டு சென்று தரிசித்து வாருங்கள். தினமும் விநாயகர் அகவலை சொல்லச் சொல்லுங்கள். விரைந்து வேலை கிடைக்கும். கவலை வேண்டாம்.

? எங்களுக்கு திருமணமாகி 16 வயதில் மகள் இருக்கிறாள். என்னைச் சுற்றியுள்ள யாரிடமிருந்தும் எனக்கு எந்த மரியாதையும் இல்லை. எந்தவொரு அங்கீகாரமும் இல்லை. என் பேச்சை யாருமே வீட்டில் மதிப்பதில்லை. எனக்கென்று யாரும் இல்லாததுபோன்று தோன்றுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? வழி கூறுங்கள்.
- ஜி. சம்பத்குமார், அனந்த கிருஷ்ணாபுரம்.


உங்களின் நீண்ட கடிதத்தை படித்தேன். அதை அப்படியே கேள்வியாக மாற்றுவதில் சங்கடம் இருந்தது. அதனால், அதைச் சுருக்கி கேள்வியாக மேலே கொடுத்திருக்கின்றேன். உங்களின் கடிதம் முழுக்க வெளிப்பட்டது தாழ்வு மனப்பான்மை மட்டுமே. அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் மிகத் தீவிரமான தாழ்வுணர்ச்சியில் இருக்கிறீர்கள். இன்னொன்று, ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் துணைவர் ஒவ்வொரு மாதிரி அமைவார்கள். ஒரு சிலருக்கு ஆளுமை மிக்கவர்களாகவும், வேறு சிலருக்கு ஆளுமை செய்பவர்களாகவும் அமைவார்கள். உங்கள் மனைவியின் ஜாதகத்தின் லக்னத்திலேயே செவ்வாய், சனி அமர்ந்திருக்கிறார்கள். சிம்ம லக்னம். சனி ஆறுக்கும், ஏழுக்கும் உடையவர். அவர் பாக்கியாதிபதியான செவ்வாயோடு லக்னத்தில் அமர்திருக்கிறார். செவ்வாயை ஆங்கிலத்தில் Ruler planet என்பார்கள். எனவே, ஆளுமைமிக்கவராக இருக்கத்தான் நிறைய வாய்ப்புகள் உண்டு. முடிந்தவரை இந்த இரு கிரகங்களும் தங்களை ஒருவரையொருவர் மிஞ்சத்தான் பார்க்கும். அதனால் விளைவது வெறும் ஈகோ பிரச்னை அவ்வளவுதான்.

சார், நான் வாழ்க்கை முழுக்க அடங்கித்தான் போகணுமா... என்றால், உங்கள் வாழ்க்கையில் உங்களின் இலக்கு என்ன என்று கேட்பேன். உங்கள் வாழ்வை, நீங்கள் அடைய வேண்டிய இலக்காக எதை வைத்திருக்கிறீர்கள். வீட்டிலுள்ள மனைவி உங்களை பாராட்டிவிட்டால் அல்லது இனி எப்போதும் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க ஆரம்பித்தால் நீங்கள் நிறைவடைந்து விடுவீர்களா? அதனால், கணவன் மனைவிக்கு அடங்கியிருப்பதும், மனைவி கணவனுக்கு அடங்கியிருப்பதும் என்பதில் பெரிய தீமை என்ன நிகழ்ந்து விடப் போகிறது, என்பதை நீங்கள் உணர வேண்டும். அதனால், பெரிய லட்சியம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியில் புகழ்பெற வேண்டுமென்று ஆசைப்படுங்கள். குறைந்தபட்சம் உங்களின் மாவட்ட அளவிலாவது நீங்கள் ஏதேனும் செய்து உங்களை நிரூபிக்கப் பாருங்கள். வீட்டில் உள்ளோரிடம் புகழையும் அளவுக்கு அதிகமாக மரியாதையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் என்பது உங்கள் வீட்டிலுள்ள எல்லோரையும் சேர்த்துத்தான். அவர்கள் உங்களை புகழ்வதும், இகழ்வதும் என்பதும் உங்களுக்கு நீங்களே செய்வதும், சொல்லிக் கொள்வதுதான். எனவே, இதனால் பெரிதும் பாதிக்கப்படாதீர்கள். லட்சியம், செய்ய வேண்டிய காரியங்கள், உழைப்பு... என்று திட்டமிடுங்கள். நிறைய புத்தகங்களை வாசியுங்கள். நிறைய புத்தகங்கள் வாசிப்பவரோடு நட்பு கொள்ளுங்கள்.

உங்கள் ஜாதகத்திலும் லக்னத்திலேயே செவ்வாய், சுக்கிரன், கேது என்று கூட்டாக அமர்ந்திருக்கிறார்கள். அதனாலேயே நீங்களும் ஆளுமைத்திறனோடு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அந்த விஷயத்தை வீட்டில் வைத்துக் கொண்டால் சிக்கலாகும். ஓரிடத்தில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருந்தால் தொடர்ந்து அந்த விஷயத்தை உங்களின் மனதின் ஆழங்களுக்கு கொண்டு சென்றபடியே இருக்காதீர்கள். நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் அது தொந்தரவை கொடுத்தபடி இருக்கும். உங்களின் ஜாதகத்தில் சூரியனும் புதனும் ஒன்றாக இருப்பதால் தலைமை தாங்கி ஒரு விஷயத்தை எடுத்துச் செல்லும் தன்மை இருக்கும். அதை வெளிப்படுத்துங்கள். உங்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் உடனடியாக வீட்டிற்குள் தெரியும். வெளியில் கொடி பறந்தால் வீட்டிற்குள் சொல்லவா வேண்டும். இம்மாதிரி விஷயங்கள் கொஞ்சம் வயதானாலே சரியாகப் போகும். உங்கள் லக்னத்தில் அமர்ந்துள்ள கேதுவை முன்னிட்டு சங்கட ஹர சதுர்த்தியன்று அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். கந்தர் அனுபூதி என்கிற புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் பாராயணம் செய்யுங்கள். தெளிவும் ஞானமும் பெருகும்.

? நான் எப்போது வீடு கட்டுவேன். எப்பொழுதோ வாங்கிப் போட்ட நிலம் அப்படியே இருக்கின்றது. மிகவும் குழப்பமாக இருக்கின்றது. வழி கூறுங்கள்.
 - கண்ணன், சென்னை-17.


நீங்கள் உத்திரம் நட்சத்திரம். கன்னி ராசி. கன்னி லக்னம். குருதான் உங்களின் வீட்டு யோகத்தை அளிக்கும் நான்காம் இடத்திற்கு அதிபதியாக வருகிறார். உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன் ஆவார். உங்கள் ராசிநாதனான புதனுக்கும் நண்பர்தான். அதனால் அடிப்படையான ராசியின் விதியை ஜெயித்து ரசனையான வீட்டை வாங்குவீர்கள். மேலும், உங்கள் வீட்டை நிர்ணயிக்கும் குருவிற்கு சூரியன் அதிநட்பு கிரகமாக இருப்பதால் இஷ்டப்பட்ட இடத்தில் வீடு அமையும். ஆனால், ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் ராசியான கன்னிக்கு சூரியன் பன்னிரெண்டாம் இடத்திற்குரியவராக வருகிறார். அதாவது விரயாதிபதி என்கிற இடத்திற்கு அதிபதியாக சூரியன் வருகிறார். ‘‘வாடகை வீடும் நல்லதுதானே. சிட்டிக்கு நடுவுல இருக்கலாமே. ஏன் இவ்ளோ தூரம் வரணும்’’ என்று யோசிக்கத் தூண்டுவார். பூர்வ புண்ணிய ஸ்தானமாக சனி வருவதால் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே நிறைய குடிசை வீடுகளும், தொழிலாளர் வாரிய குடியிருப்புகள் இருக்கும். உங்களின் நட்சத்திர தேவதையாக தேவர்களின் தச்சனான விஸ்வகர்மா வருகிறார். இதனால் மிதமிஞ்சிய கற்பனை வளமும், அசாத்தியமான படைப்பாற்றலும் இருக்கும். வாஸ்துவிலிருந்து மாடர்ன் ஆர்ட் வரையில் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்வீர்கள். குபேரன் வழிபட்ட தலங்களையோ அல்லது குபேரன் அருளும் தலங்களையோ வணங்கி வாருங்கள். அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் ஆலயமாகும். இந்த ஆலயம் தஞ்சாவூர் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளது. தரிசியுங்கள். விரைவில் வீடு கட்டுவீர்கள்.


வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் கோயில்கள்
தினகரன் ஆன்மிக மலா். 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம்.
மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப: palanmagazine@gmail.com
பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக பெயா், பிறந்த ஊர், பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்