SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிந்த தலம் அறியாத தகவல்கள்

2022-05-11@ 16:55:14

தில்லை காளி - சிதம்பரம்

* பஞ்சபூதத் தலங்களில் மிகவும் உயர்ந்தது, ஆகாயத் தலமான `சிதம்பரம்’. இங்கு நடராஜப்பெருமான் ஆடும் திருநடனம், உலகையே ஆட்டிப் படைக்கும். ஆனந்தக் கூத்தரான நடராஜப்பெருமான், தான் மட்டும் தனியே ஆட வில்லை, காளி தேவியுடன் வாதம் செய்து, போட்டி அமைத்து, ஊர்த்துவ தாண்டவமும் ஆடி அருளினார். அகிலாண்டநாயகியும் தில்லைக் காளியாகி, நம் தீவினையைப் போக்கி அருள் புரிகிறாள்.    
         
* குமரகுருபர சுவாமிகள், சிவபெருமானுடன் நடனமாடும் காளியைப் பார்க்க அழைக்கிறார்.

காளி ஆடக் கனல் உமிழ் கண்ணுதல்
மீளி ஆடுதல் பாருமே!
மீளி ஆடல் வியந்தவள் தோற்றெனக்
கூளி பாடிக் குனிப்பதும் பாருமே! பாருமே!
(சிதம்பரச் செய்யுட் கோவை)
           
இப்படிப்பட்ட தில்லைக் காளியின் மகிமை, தில்லையின் மகிமைக்கு முக்கியமான அங்கமாகவே திகழ்கிறது.

* சிவபெருமானின் அருள் வடிவாகவும், ஞான வடிவாகவும் விளங்கும் உலக அன்னை, நடராஜருக்கு அருகில் சிவகாமியாக எப்போதும் அவரது ஆடலை கண்டு ஆனந்தித்து இருப்பதோடு, தில்லையின் எல்லையில் காளியாகவும், பிரம்ம சாமுண்டியாகவும், ஏன் தனிக்கோயில் கொண்டு நமக்கு அருள வேண்டும்? இதற்கு விடை காணவேண்டுமானால், காளி அந்தத் தோற்றத்தை எப்போது கொண்டு அருள்புரிகிறாள் என்று பார்க்க வேண்டும்.
                    
போகே பவானி புருஷேஷூ விஷ்ணு
க்ரோதேஷு காளி சமரேஷு துர்கா  
        
கருத்து: அம்பிகை அருள் சக்தியாக விளங்கும்போது பவானியாகவும், புருஷ சக்தியாக விளங்கும் போது திருமாலாகவும், கோப சக்தியாக விளங்கும் போது காளியாகவும், போர் சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் திருக்கோலம் கொள்கிறாள்.         

* காளியைப் `பிடாரி’ என்றும் கூறுவார்கள். பீடை (தீமை)களை அறுப்பவள், பிடாரி ஆனாள். தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாகத் தில்லை காளியும், நல்லவைகளை அருளும் சாந்த வடிவினளாகத் தில்லை அம்மனுமாக, இரு வடிவினளாக இருந்து அருளாட்சிபுரிந்து வருகிறாள். கோபசக்தியான காளியில் இருந்து பார்க்கலாம்!

* மகிஷாசுரன் முதலான அசுரர்களின் கொடுமை தாங்காது, தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் அம்பிகையை நோக்கி, ‘‘நீ காளியாக இருந்து அசுரர்களை எல்லாம் அழித்து தேவர்கள், முனிவர்கள் ஆகியோரைத் துயரத்திலிருந்து காப்பாற்று! அதன் பின் தில்லை வனத்தில் எம்மை நோக்கித் தவம் செய்! முனிவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, யாம் ஆனந்த நடனம் ஆடுவோம். அப்போது, உன்னை சிவகாமியாக ஆட்கொள்வோம்” என்றார்.

* அதன் பின்பே அன்னை, காளியாக வடிவம் கொண்டு அசுரர்களை எல்லாம் அழித்தாள். அவளுடைய ஆவேசம் அடங்கவில்லை. அவளுடைய ஆவேசத்தை அடக்கி, ‘‘தில்லையில் அமர்க!” என்றார் சிவபெருமான்.

* காளி, தில்லைவனம் அடைந்து தவம் செய்யத் தொடங்கினாள். காளி, உரு நீங்க வேண்டிய காலம் நெருங்கியது. ‘‘காளி உரு இனி இல்லை. காளி உருவுக்கு இதுவே எல்லை” என்றாகி, `எல்லைக்காளி’ எனக் கருதப்படு கிறாள் அன்னை. எல்லைக்காளி, தில்லையில் எழுந்தருளியதால் `தில்லைகாளி’ எனவும் அழைக்கப்படுகிறாள்.
      
* அன்னை அங்கே, தில்லை வனத்தில் காளியாகத் தவம் செய்துகொண்டிருந்த வேளையில்தான், தில்லை வனத்தில் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்
குளிரக் கண்டு மகிழ்வதற்காக, வியாக்கிரபாதர், பதஞ்சலி முதலான முனிவர்கள் சுயம்புவான மூலநாதரை வழிபாடு செய்துகொண்டிருந்தார்கள்.     
 
* தில்லைவனம் எனும் இத்தலத்தில் நடராஜப்பெருமானுக்குத் திருக்காவில் ஏற்படுவதற்கு முன்னாலேயே, அங்கு இடம் பெற்றிருந்த காளிக்குக் கோயில் அமைந்திருந்தது. வியாக்கிர பாதர் முதலானவர்களின் தவத்திற்கு இரங்கிய இறைவன், அங்கே அவர்களுக்குத் தம் திருநடனக் காட்சி தந்தருளினார்.

* அதே நேரத்தில், அசுரர்களை அழித்து ஏற்கனவே தில்லைவனம் வந்து தவத்தில் ஈடுபட்டிருந்த, கோபசக்தியான காளியின் அடங்காத கோபக்கனல், அங்கிருந்த முனிவர்களின் யாகத்திற்கு இடையூறு செய்தது. அவர்கள் நடராஜப்பெருமானிடம் முறையிட, காளியின் கோபத்தை அடக்கத் தீர்மானித்தார். காளிக்கும் சிவபெருமானுக்கும் நடனப்போட்டி ஏற்பாடானது. ‘‘இந்தப் போட்டியில் நான் தோற்றால், தில்லையின் எல்லைக்குச் சென்றுவிடுகிறேன்” என்றாள் காளி.

* போட்டியில் காளி தோற்க, ‘‘தேவி! அரக்கர்களின் அழிவிற்காகவே, நீ காளியாக வந்தாய். அரக்கர்களை அழித்துவிட்டாய். இன்னும் ஏன் கோபம்? கோபம் நீங்கி, சிவகாமி எனும் நாமத்துடன் வருவாயாக!” என்றார் சிவபெருமான்.       
            
* சிவபெருமான் பலவிதமாகக் கூறியும் காளியின் கோபம் தணியவில்லை. நான்முகனான பிரம்மா, நான்கு வேதங்களாலும் காளியைப் பலவாறாகத் துதித்து, சாந்தம் அடையுமாறு வேண்டினார். ஒரு வேதத்திற்கு ஒரு முகமாக, நான்கு வேதங்களுக்கும் நான்கு முகங்களாகக் கொண்டு, கோபம் நீங்கிய அன்னை `பிரம்ம சாமுண்டீஸ்வரி’யாக வடிவம்கொண்டு தில்லையம்மனாக ஆனாள். பின் நடராஜருடன் சேர்ந்து, சிவகாமியானாள்.

* தேவியின் சினக்கனல் அடங்கியதை கண்ட சிவபெருமான், ‘‘தேவி! நீ கோபம் கொண்டதில்லை. காளியாகவும், சாந்தம் கொண்ட பிரம்ம சாமுண்டியாகவும் எழுந்தருளச் செய்தது, மானிடர்களின் விருப்பங்களுக்காகவே. ‘‘தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அரக்கர்கள் எப்படித் தொல்லை கொடுத்தார்களோ, அது போல ஆணவம், அகம்பாவம், கோபம், பகைவர்கள், தீயவர்கள், கொடிய வியாதிகள் எனப் பலவும் அரக்கத்தனமாக, மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை நீ, தில்லைகாளியாக சங்காரம் செய்!

* ‘‘சாந்த வடிவான பிரம்ம சாமுண்டியாகக் கலைகள், கல்வி, செல்வம், வீரம், சக்தி எனப்பலவிதமான செல்வங்களையும் அடியார்களுக்கு அருள்புரிவாயாக!” என்றார். இவ்வாறு சிவபெருமானால் சொல்லப்பட்ட தில்லைகாளிக்கு, `உத்தரப் பிரத்யங்கிரா காளி - வட பத்ரகாளி’ எனும் திருநாமமும் உண்டு.

* இப்படிப் பழங்கால முதலாகவே விளங்கி வரும் இந்தத் தில்லை அம்பிகையை, நான்முகன் முதலான தேவர்கள், முனிவர்கள், அரசர்கள், வீரர்கள், புலவர்கள், பாமரர்கள் எனப் பலரும் வழிபாடுசெய்து, நன்மை அடைந்திருக்கிறார்கள்.

* ஒரு குறிப்பின்படி, `கவி சார்வ பௌமன்’ எனப் புகழ் பெற்ற மகாகவி காளிதாசர், தில்லை காளியை வழிபட்டு, இந்த அன்னையின் அருளாலேயே வடமொழிப் புலமை பெற்று விளங்கினார் என்பதும் தெளிவாகிறது.

* மூன்றாம் குலோத்துங்க சோழமன்னரின் படைத்தலைவரும் பல்லவ குலச் சிற்றரசருமான கோப்பெருஞ்சிங்கன் என்பவர் (கி.பி.1229-1278) தன் ஆட்சியை நிறுவுவதில் ஏற்பட்ட இடையூறுகளை நீக்கித் தனக்கு வெற்றி அருள வேண்டும் எனத் தில்லைகாளியை வழிபட்டார். அம்பிகையின் அருளால், அல்லல்கள் நீங்கி, ஆட்சி நிறுவிய அந்த அரசர் தில்லைகாளிக்கும், பிரம்ம சாமுண்டிக்கும் திருக்கோயில் கட்டினார் எனக் கல்வெட்டுகளின் மூலம் தெரியவருகின்றது.

* ஆனால் தில்லை காளிக்கோ, நல்லெண்ணெய் அபிஷேகம் தவிர, வேறு எந்தத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. நல்லெண்ணெய் தவிர, மற்ற குளிர்ந்த திரவியங்களால், தில்லைகாளிக்கு அபிஷேகம் செய்தால், அவள் கோபம் தணிந்து கருணை உள்ளம் பெருகிவிடும். அதன் காரணமாக, உலகில் ஏற்படும் தீமைகளை அழிக்க இயலாமையாகி விடக்கூடாது. காளியின் கோபம் கொண்டே, அத்தீமைகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, அவள் கோபத்தை
எண்ணெய் ஊற்றிஊற்றி ஊக்குவிக்க வேண்டியதாக இருக்கிறது.

* அதே சமயம், அந்த அன்னையின் உக்கிர வெம்மை, வணங்குகின்றவர்களைப் படுத்தக்கூடாதல்லவா? அதனால், தில்லைகாளிக்கு மஞ்சள் காப்பு இட்டு, திருமேனி முழுதும் மறைக்கப்படுகிறது. நமக்குத்தேவை, அன்னையின் பார்வை நம் மீது பட வேண்டும். அன்னை உள்ளம் குமைந்து கோபமே வடிவாக இருந்தாலும், தன்னை வழிபடுபவர்களுக்கு அன்னை சாந்தமே கொண்டிருப்பதாக, வெள்ளை ஆடை சூடிக் குறிப்பால் உணர்த்துகிறாள்.

V.R.சுந்தரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்