SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதாசிவமாக நின்ற பிரம்மேந்திரர்

2022-05-11@ 09:51:06

ஆராதனை: 11:5:2022

அது 18ம் நூற்றாண்டு. ஸ்ரீபரமசிவேந்திரர் என்கிற ஞானியை சதாசிவம் சந்தித்து நமஸ்கரித்தார். அவர் மூலமாக பல வித்யைகளை கற்றார். சில காலத்திற்குள் சதாசிவம் தர்க்க சாஸ்திரத்தில் சிறப்புற்று விளங்கினார். எதிராளி என்ன பேசினாலும் அந்த வாதத்தை தன்னுடைய சாஸ்திரக் கூர்மையினால் தவிடு பொடியாக்குவார், சதாசிவர். அப்படி தோல்வியுறு வதைக் கண்டு மகிழ்ந்தார். இந்த மனோபாவத்தை பரமசிவேந்திரர் வெகுநாட்களாக கவனித்து வந்தார். வாசல் திண்ணையில் யாரோ ஒருவரிடம் சதாசிவம் குரலை உயர்த்தி வாதத்தையே விதண்டாவாதமாக பேசிக் கொண்டிருந்தார்.

பரமசிவேந்திரர் உள்ளிருந்து இதை கேட்டுக்கொண்டிருந்தார். ‘சதாசிவா...’ என்று அழைத்தார். சதாசிவமும் உள்ளே சென்றார். குருநாதர் முகம் கொஞ்சம் சிவந்திருந்தது. ‘ஊரார் வாயை அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை மூட கற்றுக்கொண்டாயோ, சதாசிவா வாயை மூடாயோ’ என்று கேட்டதுதான் தாமதம், சதாசிவம் அந்த சிவமே சொல்கிறது என்று அப்படியே கற்சிலையாக நின்று விட்டார். அந்த ஒரு வார்த்தை மனதையே ஆட்டங் காணச் செய்து விட்டது. மனம் குருநாதரின் தீ ஜுவாலை போன்ற வாக்கியத்தால் எரிந்து போயிற்று. சதாசிவம் உண்மையான சதாசிவனானார்.

இதற்கு முன்பிருந்த தர்க்க சாஸ்திரி காணாமல் போனார். ஞானத்தின் உச்சியான துரீய நிலையை அடைந்தார். பல இடங்களில் அவர் பரமஹம்ஸ எனும் முத்திரை வார்த்தையால் தன் நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்குப்பிறகு பரமஹம்ஸ பரிவ்ராஜகர் என்று ரிஷிகளால் அழைக்கப்படும் உன்னத நிலையை அடைந்து காடுகளிலும் மலைகளிலும் சஞ்சரிக்கத் தொடங்கினார். இறுதியாக தன்னுடைய தேகத்தை விட்டு விட்டு விதேக கைவல்யம் அடையும் நாள் வருவதை உணர்ந்தார்.

கரூர் என்கிற ஊருக்கு அருகேயுள்ள நெரூர் எனும் காவிரிக் கரை கிராமத்திற்கு வந்து சேர்ந்தார் சதாசிவ பிரம்மேந்திரர். தமது யோக மகிமையினால் தமது சீடர்களான புதுக்கோட்டை மகாராஜாவையும், தஞ்சாவூர் மகாராஜாவையும் நினைத்தார். அவர்களும் ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டு விரைவாக வந்து சேர்ந்தார்கள். ‘ஒரு குழி அமைத்துக் கொடுங்கள். நான் உட்கார்ந்ததும் என்னை வைத்து மூடிவிடுங்கள்’ என்று அவர் கேட்டுக்கொண்டபோது அவர்கள் அழத் தொடங்கினார்கள். ‘நான் எங்கும் செல்லப் போவதில்லை.

இங்கேயே எப்போதும் இருப்பேன். விபூதி, கற்பூரம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியன போட்டு மூடிவிடுங்கள். சரியாக ஒன்பதாவது நாள் சிரசின் மீது வில்வ விருட்சம் துளிர்விடும். பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து வரும் பிரம்மச்சாரி பாணலிங்கம் கொண்டு வருவான். அதை பன்னிரண்டு அடிக்கு கீழே வைத்து விடுங்கள். இந்த வில்வ விருட்சத்திற்கு எந்த மறைப்பும் வேண்டாம்’ என்றார். அவர் சொன்னதுபோல அனைத்தும் நடந்தன. வில்வ விருட்சம் வளர்ந்தது.

அவரது சாந்நித்தியம் பல்வேறு நூற்றாண்டுகளாக இன்று வரை அப்படியே அருகே வருவோரை மோட்சத்தின் பாதைக்கு நகர்த்துகிறது. சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி கரூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்று தரிசியுங்கள். பிறவிப் பிணியைப் போக்கடியுங்கள்.

தொகுப்பு - அருணை கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்