SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறவழி நடப்போர் உத்தமராகலாம்!

2022-05-10@ 14:36:22

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நற்பண்புகளையும், வாழ்வியலுக்கான வழிகாட்டுதலையும் சொல்லித் தருகின்ற ‘அற்புத ஒளி’ ஆன்மிகம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம். சற்றேறக்குறைய 300 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த அம்பலவாணக் கவிராயர் என்பவர், தான் வாழ்ந்த ெகால்லிமலை சதுரகிரி என்னும் இடத்தில் அருள் பாலிக்கின்ற அறப்பளீச்சுர இறைவன் சிவபெருமான் அறப்பளீச்சுர பெருமானையும் உமையவளையும் ‘சதகம்’ என்னும் யாப்பு வகையிலே பாடுகிறார்.

1 00 பாடல்களுடன் அகம், புறம் இரண்டையும் பாடும் முறை சதகம் எனப்படுகிறது. மனிதனின் பக்தியும், பக்தியினால் கிடைக்கும் நல்வழிகாட்டுதலும் பற்றிப் பாடுகின்றார். அருணாசலக் கவிராயரின் மூத்த புலவர் ஆதி இசை மும்மூர்த்திகளில் ஒருவர் அருணாசலக் கவிராயர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களைப் போன்ற கவிராயர்கள் இறைவனைப் பாடுகின்ற போதே மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே பாடிவைக்கின்றனர். இந்தக் கவிதைப் பாடல்களை நாம் வாசிக்கின்ற போதே ஆன்மிக அதிர்வலைகளால் நாம் சூழப்படுகின்றோம் என்பது உண்மையாகும்.

மனிதனும் மகாதேவனே!

தானுண்டு தன் வேலை உண்டு என்று வாழ்பவர்கள் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியுடனேயே காலத்துடன் பயணிக்கிறார்கள். ஒரு சிலர், எல்லாவற்றையும் எவராது தரமாட்டார்களா என்று ஏங்குவதும், பிறரிடம் எவ்வகையிலாவது உதவிகள் பெற வேண்டும் என்றும் யோசித்துக் கொண்டே இருந்து, மனதிலும் உடலிலும் துன்பத்தை வரவழைத்துக் கொள்வார்கள். அவ்வாறு இல்லாத தனது கடின உழைப்பால் பெறுகின்ற செல்வத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகின்ற போதுதான் அவளுக்குள் இறைதரிசனத்தை மனிதன் உணருகின்றான். தான் மற்றவர்களிடம் யாசகம் கேட்க மாட்டான், ஆனால் மற்றவர்க்கும் கேட்டவர்க்கும் இல்லை என்று ெசாலாது யாசகம் தருவான். பத்து பேரைக் காப்பாற்றுவானாயின், அந்த மனிதன் தருமதேவன் நூறு பேரைக் காப்பாற்றினாலோ இந்திரன். ஆயிரம் பேரைக் காப்பாற்றினால் பிரம்ம தேவன் பத்தாயிரம் பேருக்கு உதவி செய்தால் திருமாலுக்கு ஒப்பாவான்.

தினமும் வெகுஜனங்களுக்கு உதவி செய்தால் அவன் மனிதனல்ல! மகாதேவனாகிய ஈஸ்வரன் ஆகிறான். இது எப்பொழுது நிகழும் என்றால், கார்குழல் போன்ற கூந்தலையுடைய உமையவளை இடப்பாகத்தில் வைத்து இருக்கும் இறைவன் சதுரகிரி அறப்பளீச்சுரனை நினைத்தாலே போதும் தானம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வளரும் என்கிறார். மாணிக்கவாசகப் பெருமான் பாடிய “புல்லாகிப் பூடாகி” என்பது போன்ற மனிதன் தெய்வநிலைக்கு உயர்த்தவே வாழ்வின் இலட்சியம் ஆக இருக்க வேண்டும். பாடல் எளிது! பார்ப்போம்!

மேன் மேல் உயர்ச்சி
தன்மட்டிலாவது இரவாது சினம் செய்பவன்
சாமர்த்திய முள புருடனாம்.
சந்ததம் பதின்மரைக் காப்பாற்றுவோன்
மிக்கதரணி புகழ் தரு தேவனாம்.
பொன்மட்டிலாமல் ஈந்து ஒரு நூறு பேரைப்
புரப்பவன் பொருவில் இந்திரன்.
புவி மீதிலாயிரம் பேர்தமைக் காப்பாற்று
புண்யவானே பிரமனாம்.
நன்மைதரு பதினாயிரம் பேர் தமைக் காத்து
ரட்சிப்பவன் செங்கண் மால்.
நாளும் இவன் மேலதிகமாக வெகுபேர்க்கு
உதவு நரனே மகாதேவனாம்!


அத்தனை பேரும் உத்தமராகலாம்

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்று கேள்வி கேட்பவர் உண்டு. உத்தமர் என்பதற்கான இலக்கண வரையறை “அறவழி நடப்போர்” என்று சொல்லலாம். எது எல்லாம் அறம் என்று அடுத்த கேள்வி வரும். இதற்கான பதிலாக இப்பாடல் அமைகிறது. பிறர் செய்த நன்றியை மறவாமல் இருத்தல். அதே சமயம் பிறர் செய்த தீமையை மறந்து விடும் பண்பு. பிறர் மனைவி மீது சிந்தனை வயப்படாது இருத்தல். எவரோ தொலைத்த பொருளை கண்டெடுப்போமாயின் அதன் மீது ஆசை கொள்ளாது உரியவர்களிடத்தில் சேர்த்தலும் ேசர்க்கும் முயற்சியில் ஈடுபடுதலும் அவசியம். கோடி நிதி கொடுத்தபோதும் பொய் கூறாதிருத்தல், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமானது. எளிய வடிவில் எண்ணிலடங்கா ஞானம் போதிக்கிறது இப்பாடல்.

செய்ந்நன்றி மறவாத பேர்களும் ஒருவர்
செய் தீமையை மறந்த பேரும்
திரவியம் தரவரினும் ஒருவர் மனையாட்
டியை சித்தம் வையாத பேரும்
கைகண்டெடுத்த பொருள் கொண்டு
போய்ப் பொருளானவர் கையில் கொடுத்த
பேரும் புவி மீது தலைபோகும் என்னினும்
கனவிலும் பொய்மை உரையாத பேரும்
ஐய இங்கு இவரெலாம் சற்புருடர் என்று
உலகில் அகமகிழ்வர்.


இப்படித்தான் இருக்க வேண்டும் என வழிகொண்ட சற்புருடர், அதாவது உத்தமர் என்கிறார். அடைக்கலம் என்று தேடிவருபவர் எவராயினும் அவர்களைக் காத்தல், தீயவைக்கு அஞ்சாமல் இருத்தல், சொன்ன சொல் தப்பாது செய்தல் வேண்டும் என்பதும் கூட அடுத்த பாடலிலே சொல்கிறார். தியாகியார் என்றால் நம் உறவினர்கள், நண்பர்கள், நாம் விரும்பிப் பழகும் எவர்க்கும் ஏற்படுகின்ற இடர்களைகின்றவர்களே மகாதியாகி. பரபரப்பான உலகில் இது அதிகமாகவே தேவைப்படுகிறது. இந்த பண்பு சற்று அதிகமாகக் குறைந்து விட்டதால்தான் இன்று மன அழுத்தங்கள் அதிகமாகி விட்டது. பின்விளைவுகளும் மோசமாகி விட்டது. இந்த நிலை சரிபட வேண்டுமாயின் பரஸ்பர உண்மையான அன்புடன் உரையாடல் தேவைப்படுகிறது.

அவ்வாறான உரையாடலை தொடர்ந்து பிறருக்காக செய்பவரே மகாதியாகி என்பது அம்பலவாணக் கவிராயர் அவர்களின் தீர்க்க தரிசன வாழ்த்தும் விருப்பமும் ஆகும்.
புறம் சொல்பவர்களின் பேச்சைக் கேளாது தீர்க்கமான திடத்துடன் இருப்பவர்கள் மகா மேரு போன்றவர்கள் என்கிறார். “மலை மாதிரி அசையாம இருக்கனும்” என்னும் சித்தாந்தம் மனிதனுக்குத் தேவைப்படுகிறது. பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்கின்ற பழமொழி உண்டு. அவரவர் தகுதி அறிந்து மரியாதை செய்திடுக என்கிறார். அதாவது, தராதரம் அறிந்து மரியாதை செய்பவன் மகா உசிதன் என்கிறார். இவை அத்தனையும் தினமும் சதுரகிரி இறைவன் துணையை மனதில் நினைத்தால்தான் சாத்தியப்படும் என்கிறார்.

குணம் மாறுமோ?

எந்தப் பொருளுமே தனது இயல்பான குணத்திலிருந்து மாறிவிடுவதில்லை. அந்தந்த பொருளுக்கான குணங்கள் அதன் வேர்களிலேயே ஊன்றப்பட்டுவிடுகின்றன என்பதுதான் உண்மை. உதாரணத்துக்கு, தாய், தந்தை இருவருமே மிக நல்லவர்களாக இருப்பினும் குழந்தை மாறுபட்ட போக்கில் வளர்ந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் தனது தாய், தந்தை கருவிலே ஊன்றிய குணாதிசயம் காலப்போக்கில் வெளிப்பட்டே தீரும். எடுத்துக் காட்டாக, சந்தனக் கட்டை சிறிதாக உருவம் கொண்டிருந்தாலும் அதன் மணத்திலிருந்து குறைந்தது இல்லை. பாலின் சுவை, சுடர் விடும் நவரத்தின மணிகளின் ஒளி, தங்கத்தின் மினுமினுப்பும் மதிப்பும், சூரிய ஒளிக்கதிர்களின் குணம் என்று எதுவும் மாறுவதில்லை. கற்றறிந்த பெரியோர்களின் மகிமையை அறிவிலும் மதிப்பிலும் குறைந்தோர் உணராவிடினும், உலகில் அவர்களின் புகழ் மங்கிவிடாது என்கிறார் பாடல் அழகுணர்வுடன் இனிக்கிறது.

குறைவுற்றுங் குணம் கெடாமை

தறிபட்ட சந்தனக் கட்டை பழுதாயினும்
சார்மணம் பழுதாகுமோ?
தக்கால் சுவறிடக் காச்சினும் அது கொண்ட
சாரமதுரம் குறையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந்தாலும்
அதன் நீள் குணம் மழுங்கி விடுமோ?
நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும்
தங்கத்தின் நிறை மாற்றுக் குறையுமோ?
கறைபட்ட பைம் புயல் மறைத்தாலும் அது
கொண்டு கதிர்மதி கனம் போகுமோ?
கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகில
ரேனும்காசினி தனில் போகுமோ?


அவரவரை மாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள இவர் பாடல் உதவும் என்பதில் மாற்றமில்லை அன்பர்களே!

உயர்வு சிறக்குமா? தாழ்வு சிறக்குமா?

உயர்ந்த ஒன்றைப் பெற முயற்சி செய்து தோற்றாலும் அது மேன்மையைத்தான் தரும். ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடும் மனிதன் அதற்கான பிரயத்தனங்களால் தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்வதும் உலகப் பொது விஷயங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அமைதி தேடுகிறான். அந்த அமைதியையும் தன் அகத்திற்குள் தேடுகிறான். பெரிய ஞானியாகவில்லை ஆயினும் மற்றவர்கள் முன்னிலையில் அவன் மீதான மதிப்பு உயரவே செய்கிறது.

மதம் கொண்ட யானையின் மீது ஏறுகின்ற முயற்சியில் கீழே விழுந்தாலும் அது அழகும் மேன்மையும் கொண்டதே. போரிலே ஈடுபடும்போது தோற்றாலும், உடலில் காயங்கள் ஏற்பட்டாலோ அது அவமானம் ஆகிவிடாது. தருமங்களைச் செய்து வாழ்கின்றவர்கள் செல்வம் இழந்து வறியவர் ஆனாலும் அது ஒன்றும் அவமானம் தராது. மேன்மை நிலையில் இருப்போர் வெகுமானம். அவமானம் என்று எதனையும் தனித் தனியே பார்க்க வேண்டியதில்லை. உயர்வும் தாழ்வும் குணம் எனும் குன்றில் நிற்போருக்கு என்றுதான் என்பது அம்பலவாணக் கவிராயரின் வாக்கு.

உயர்வு அன்றித் தாழ்வும் சிறக்கும் இடம்
நகமேவு மதகரியால் ஏறினும் தவறினும்
நாளும் அதுவோர் அழகதாம்.
சரீரத்திலோ ரூனமான எதுவாகிலும்
சமர் செய்து வரில் அழகதாம்.
தருதாழ்வு வாழ்வு வெகு தருமங்களைச்
செய்து சாரிலோ பேரழகாம்
வெகு மான மாகிலும் அவமான மாகிலும்
மேன்மை யோர் செய்யில் அழகாம்.


என்று பாடலைச் சொல்லி அகத்தில் இருந்து நல்ல தவம் செய்வோருக்கும் அய்யனே அறப்பளீச்சுரனே இந்த மாதிரியான குணாதிசயங்கள் எங்களுக்கு வேண்டும் என்பதே அவர் வேண்டுதல் ஆகும். ஒரு மனிதனின் உயர்வு தாழ்வும் எப்போது சிறக்கும் எனில் எவர் நெஞ்சில் இறைவன் அருள் பாலிக்கின்றானோ அப்போது இவை சாத்தியமே!

ஆன்மிகம் காட்டும் தலைமுழுக்கு நாள்

தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்தல் கங்கா ஸ்நானத்திற்கு ஒப்பானது. மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதற்கான ஆரம்பப் புள்ளி இதுவாகும். அம்பலவாணக் கவிராயர் எந்த நாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது உகந்தது என்று சொல்கின்றார். ஆன்மிக பதிவுக்கும் தலைக்குளித்தலுக்கும் என்ன சம்பந்தம்? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சா? இது எதற்கு என்று சற்று சிறிய தயக்கம் வரத்தான் செய்யும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைதல் எளிதாகும். உடல் நல்லவிதமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் புத்தி தீர்க்கமாகும். வளர்பிறை நாட்களில் எண்ணெய் தேய்த்து குளித்தல் உத்தமம். அவ்வாறு எனில் மாதம் ஒரு முறை எண்ணெய் முழுக்குத் தேவைப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் முழுக்கு ஆகாது. அழகு போகும். திங்கள்கிழமை மிகுந்த பொருள்கள் சேரும். செவ்வாய்க் குளியல் துன்பம் வரும். புதன் குளியல் அறிவு மிகும். வியாழன் அறிவு போகும். வெள்ளிக்கிழமை எண்ணெய்க் குளியல் பொருள் சேதாரம் ஆகும். சனிக்கிழமைக் குளியல்தான் நீண்ட ஆயுளும், செல்வமும் தரும்.

அடுத்த கேள்வி, தீபாவளி அல்லது வேறு விசேஷ தினங்கள் எண்ணெய்க் குளியல் அவசியம் ஏற்படும். ஆனால், அதற்குப் பரிகாரம் உண்டா? நிச்சயம் உண்டு என்கிறார் அம்பலவாணர். ஞாயிற்றுக்கிழமை எனில் எண்ணெய்க்குள் அலரிமலரை அல்லது அரளி மலர் போட்டுப் பின் தேய்த்துக் குளித்தல் பரிகாரமாகும். செவ்வாய்க்கு சிறிது செம்மண் இட்டுப் பின் எண்ணெய்த் தேய்த்தல் பரிகாரம். வியாழனுக்கு, அறுகம்புல்லை எண்ணெய்க்குள் இட்டுப் பின் தேய்த்தல். வெள்ளிக் கிழமைக்கு வறட்டிப் பொடி இட்டுப் பின் தேய்த்தல் என்று சொல்கின்றார். இந்தப் பாடல் வேறு தளத்தை நமக்குச் சுட்டுகிறது.

முழுக்கு நாள்

வரும் ஆதி வாரத் தலைக் கெண்ணெய்
ஆகாது வடிவமிகும் அழகு போகும்
வளர் திங்களுக்கு அதிக பொருள் சேரும்
அங்காரவாரத் தனக்கு இடர் வரும்.
திருமேவு புதன் மிகு புத்தி வந்திடும்
செம்பொனுக்கு உயரறிவு போம்.
தேடிய பொருட் சேதமாம் வெள்ளி, சனி
எண்ணெய் செல்வம் உண்டாம் ஆயுளுண்
டாம். பரிகாரம் உளதாம் ஆதிவாரம் தனக்கு
அலரி பௌமனுக்கான செழுமண்
பச்சறுகு பொன்னவற்காம் எருத்தூள் ஒளிப்
பார்க்க வற்காகும் எனவே
அரிதா அறிந்த பேரெண்ணெய் சேர்த்தே
முழுக்காடுவீர்.


எண்ணெய்க் குளியலுக்கான வழிமுறைகளை நூதனமாகவே சொல்லி இருக்கிறார் அம்பலவாணர். இந்த விதிமுறைகளை கடைபிடிக்கும் பொழுது, நிச்சயமாக ஏதோ ஒரு உள்மாற்றமும், புறமாற்றமும் ஆவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

தொகுப்பு: மகேஸ்வரி சற்குரு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்