SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோகம் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும்!

2022-05-10@ 14:27:36

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 23 (பகவத் கீதை உரை)

ஆரோக்யமான மனம், ஆரோக்கியமாக ஆன்மாவை வளர்க்கும். எது மன ஆரோக்யம்? நிர்ச்சலமனான நிலைதான். ஒரு ஞானியின் மனம் எப்போதுமே ஆரோக்யமாகவே இருக்கும். இத்தருணத்தில், அர்ஜுனன் இப்படிப்பட்ட மனதுடையவனாகத் திகழ வேண்டும்.  தானி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பரஹவசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்திதா (2:61)  ‘‘புலன்கள் தூண்டிவிடும் இச்சைகளை ஞானியானவன் பொருட்படுத்துவதில்லை. அதாவது அவன் புலன்களை அடக்கி எளிதாக அவற்றை வெற்றிகொள்கிறான். அதே சமயம் அவன் என்னைத்தான் கதியாக நினைக்கிறான். இதனாலேயே அவனுடைய அறிவு -ஞானம் நிலை பெறுகிறது’’ஒரு விஷயத்தை விட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தால், அதை அறவே விட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

ஆனால் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவதோ, சில நாட்கள் கழித்து விட்டுவிடுவதாக யோசிப்பதோ எந்தப் பலனையும் தராது. போதைப்பொருள் பயன்படுத்துபவர் அதன் தீய விளைவுகளை அனுபவித்து உணர்ந்து, அவ்வாறு பயன்படுத்துவதை, அப்படி உணரும் அந்தக் கணத்திலேயே துறந்துவிட வேண்டும். மாறாக, சிறிது, சிறிதாகவோ, சில நாட்கள் கழித்தோ விட்டுவிடுவதாகச் சொல்லிக்கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. ‘உடனே விட்டுவிட்டால் உடலுக்குப் பெரிய பாதிப்பு நேரும்' என்ற பொய்யான சமாதானத்தையும் சொல்லிக்கொள்ளக் கூடாது.

அதே சமயம், ‘மது அருந்தும் வழக்கம் உள்ள ஒருவன், தான் மது அருந்தாத நேரத்தில், தன் கண்ணெதிரே இன்னொருத்தன் மது அருந்தி சீரழிவதைக் கண்ட பிறகும் தன்னைத் திருத்திக்கொள்ளாதிருக்கிறானே' என்று வருந்துகிறார் திருவள்ளுவர்: கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு தனக்கும் இப்படிப்பட்ட இழிநிலை வருமே என்று அவனைப் பார்க்கும் இவன் கொஞ்சமாவது சிந்தித்தாலும், இவனுக்கு அப்பழக்கத்தை விட்டுவிடும் மனநிலை உண்டாகிவிடுமே என்று ஏங்குகிறார் திருவள்ளுவர். பொதுவாகவே, ‘நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம், ராத்திரிக்குத் தூங்க வேணும், ஊத்திக்கறேன் கொஞ்சம்' என்ற மனோநிலைதான் பெரும்பாலான குடிகாரர்களுக்கு அமைந்து விடுகிறது.

‘இன்றைக்கு ஒருநாள் மட்டும்' என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே தம்மை அவர்கள் முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள். ஏனென்றால், விட முடியாத அளவுக்கு அந்தப் பழக்கம் அவர்கள் மனதில் ஊறிப்போய்விட்டதால்தான். எப்போதெல்லாம் அந்தப் பழக்கத்தை மறுக்கும் நல்ல எண்ணம் உதிக்கிறதோ, அப்போதெல்லாம் அந்தப் பழக்கத்தின் கவர்ச்சி அம்சங்கள் ஒருவனை மயக்கி, அந்த நல்ல எண்ணத்தை அப்படியே சுட்டுப் பொசுக்கி விடுகின்றன.

உடல்நலம் சீரழிவது மட்டுமல்லாமல், தன் பெயரும், குடும்பப் பெருமையும் நிலைகுலைந்து போவதை அவர்கள் உணரத் தலைப்படுவதில்லை. அந்த தற்காலிக சுகம், உலகை மறந்த மயக்கம், தன்னிலை மறந்த போதை எல்லாமே, மறுக்கும் குணத்தைத் துளிர்விடச் செய்யாமல் தடுக்கும் கருமை நிழல்களாக மாறிவிடுகின்றன. மனதில் வேரூன்றிவிட்ட அந்தப் பழக்கம், அடிக்கடி துளிர்க்கவும், கிளைகள் விடவும், அந்தத் தற்காலிக அம்சங்கள்தான் காரணமாகின்றன. அதாவது அந்த தற்காலிகம்,தினம் தினம் நிகழ வேண்டும் என்றும், நாளாவட்டத்தில் அதுவே நிரந்தரமாகிவிட வேண்டும் என்றும் மனம் ஏங்குகிறது. இதனால் தீயப் பழக்கத்தின் இலைகளையும், கிளைகளையும் கொய்ய முயற்சிப்பதைவிட, அதன் ஆணிவேரை மனதிலிருந்து பிடுங்கி எறிய வேண்டியது முக்கியமாகிறது.

ஆகவே, தீயொழுக்கச் சிறையிலிருந்து தான் விடுதலையாக வேண்டும் என்று ஒருவன் கருதுவானானால், அவன் பகவானை நினைக்க வேண்டும். பகவான் மீதான எண்ணத்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். பக்தி வளர வளர தீய எண்ணங்கள் ஒடுங்கும். அனைத்துப் புலன்களும் இறைச் சேவை செய்யவே என்ற சிந்தனை மலர்ந்தால், தீயொழுக்கம் தானே கரைந்து போய்விடும். ஆனால் பக்தியா, போதையா என்ற தராசுத் தட்டில் ஒருவன் எதற்கு அதிக எடை சேர்க்கிறானோ, அந்த உணர்வுதான் அவனுக்குள் மேலோங்கும். இப்படிப் பார்க்கும்போது ஒரு ஞானி, இறைவனருளை நாடித்தான் காத்திருப்பான்.

தனக்குப் பரந்தாமனை விட்டால் வேறு யாரும் நாதியில்லை, கதியில்லை என்று அவன் இறைச்சேவையில் உறுதியாக நிற்கிறான். ஆகவே அவனை புலன் நுகர்ச்சிகள் வெற்றிகொள்ள முடியாது. இனி அவன் நிலைகுலைய மாட்டான். யாராலும் அவனை துர்மார்க்கத்துக்கு இழுக்க முடியாது. ஏனென்றால், அவனுக்குள் பகவான் குடிகொண்டு விடுகிறார். அவர், யுத்த நேரத்தில் அர்ஜுனனின் தேரை இழுக்கும் குதிரைகளை எப்படித் தன் இடது கைப்பிடிக்குள் பற்றிக்கொண்ட லகான்களால் கட்டுப்படுத்துகிறாரோ, எப்படி வலது கையில் ஏந்தியிருக்கும் சாட்டையைச் சொடுக்கி அந்த குதிரைகளின் வேகத்தை நேர் செய்கிறாரோ, அதேபோல ஞானியின் புலன்களையும் தன் வசப்படுத்தி, அவனுடைய மனதை நிலைப்படுத்தி, அவனுக்குப் பெருத்த ஆறுதலை அளிக்கிறார். ஆகவே இறை நுகர்தலே பிற நுகர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்துகிறது என்பதை அவன் நன்கு உணர்ந்திருக்கிறான்.

த்யாயதோ விஷயான்பும்ஸ: ஸங்கஸ்தேஷுபஜாயதே ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ பிஜாயதே (2:62)‘‘ஏதேனும் ஒரு விஷயத்தை நினைப்பதால் அவற்றை அடைய வேண்டும் என்ற பற்றுதல் உண்டாகிறது. இந்தப் பற்றுதலே ஆசையாகப் பரிமாணம் கொள்கிறது. இந்த வேட்கையின் வளர்ச்சி, குறிப்பிட்ட விஷயம் தனக்குக் குறைவாகக் கிடைத்தாலோ, அல்லது கிடைக்காமலேயே போனாலோ, சினம் என்ற இன்னொரு துர்க்குணமாக முளைக்கிறது. அதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய எண்ணமே, அதை அடைய வேண்டும் என்ற பற்றுதலே, தன்னை மட்டுமல்லாமல், பிற அனைவரையும் பாதிக்கும் கோபமாக, குரோதமாக மாறுகிறது.’’

ஏமாற்றம், கடுங்கோபத்தை உருவாக்கும் என்பது சராசரி மனித இயல்பு. எந்த விஷயத்தைக் குறித்தும் பற்றுதல் எண்ணம் தோன்றுமானால், அது ஆசையாக வளர்ந்து அதைத் தான் சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற வேட்கையாக வளர்கிறது. அவ்வாறு அடிப்படையில் பற்றுகொள்ள தான் தகுதியானவன்தானா என்று எண்ணிப் பார்க்கவும் மனம் மறுக்கிறது. குறிப்பிட்ட விஷயத்தில் மோகம் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும். ஆனால், அதைப்பற்றி சிந்தித்து விட்டேன், அதை அடைவதுதான் குறிக்கோள் என்று வீம்பாக முயற்சிக்கும்போது ஏமாற்றம் விளையுமானால், அதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் போகிறது. அதனால் அற்பமான பற்றில் தொடங்கும் உணர்வு, ஆசையாக வளர்ந்து அதுவே கோபமாக, குரோதமாக நிலைபெற்று விடுகிறது.

ஒரு பொருளின் மீதான பற்றானது, யார் அவ்வாறு பற்று வைக்கிறாரோ அவரை மட்டுமல்லாமல், அவரைச் சார்ந்த பிறரையும் பாதிக்கக் கூடிய அளவுக்குக் கொடியது. ஆசைப்பட்டது கிடைத்துவிட்டால் சரி. தாமதமானால் அல்லது கிடைக்காமலேயே போய்விட்டால், அந்தப் பற்றுதல்தான் எவ்வளவு எளிதில் சந்தேகமாக, சினமாக, விரோதமாகக் காட்டுத் தீபோல வளர்கிறது! தகுதியின் அடிப்படையில் ஆசைப்படுவதானாலும், அது கிட்டாதாயின் வெட்டென மறக்கும் பண்பையும் கூடவே வளர்த்துக்கொள்ள முடியுமானால், பற்றுதல் பல்வேறு தீய பரிமாணங்களாக அடுத்தடுத்து வளராது.

க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்திநாசோ புத்திநாசாத்ப்ரணயச்யதி (2:63)‘‘ஒரு விஷயம் மீதான பற்றுதல் சினமாக திசை மாறும்போது அந்த சினம் மனக்குழப்பத்துக்கு வழி வகுக்கிறது. குழம்பிய மனம் தடுமாற்றம் அடைகிறது. என்ன செய்வது என்பது தெரியாமல் தறிகெட்டு அலைகிறது. இதனால் அறிவு நாசமடைகிறது. புத்தி பழுதடைந்தால் உடனே அவனே அழிந்து போய்விடுகிறான்.’’தண்ணீர் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதைச் சுட வைக்கிறோம் - மென்மையாக, நிர்ச்சலனமாக இருந்த மனதில் பற்றுதலைப் பற்ற வைப்பது போல. ‘தண்‘ணென்று இருந்த நீர், பற்றுதலாகிய நெருப்பு தீண்டியதும் வெம்மையாக ஆரம்பிக்கிறது.

தீ அந்த வெம்மையை மேலும், மேலும் அதிகரிக்க, அந்த நீர் கொதிநீராக மாறுகிறது. இப்படி கொதிக்கும் நீரில் குமிழ்கள் தோன்றித் தோன்றி உடைகின்றன. பாத்திரத்தின் அடியிலிருந்து மேலே கிளம்பிவரும் கொப்புளங்கள் சிறிய அளவிலோ, பெரிதாகவோ உருமாறி மேல் பரப்பிற்கு வந்து அவையும் குதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சில விநாடிகளிலேயே அவை வெடித்து ஆவியாகி மறைகின்றன. அப்படி கொதித்துக் கொப்பளிக்கும் நீரில் நம்மால் முகம் பார்க்க முடியுமா? அப்படியே பார்த்தாலும், மேலெழும்பும் நீராவி நம் முகத்தைப் புண்ணாக்கி விடாதா? அப்படியும் தொடர்ந்து பார்த்தாலும் அந்தக் கொதிநிலையில் நம் முகம்தான் தெளிவாக பிம்பிக்கப்படுமா? சிதிலமடைந்து பிரதிபலிக்கும் நம் முகம் நமக்கே பயத்தைத் தராதா?

இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம் என்ன? தண்மையான நல்ல நீரை வெப்பமாக்கிக் கொதிக்க விட்டதுதான். மீண்டும் அந்தக் கொதிநீர் எப்போது ஆறும், எப்போது தெளிவாகும், எப்போது நம் முகத்தைச் சரியாக பிரதிபலிக்கும்? இதற்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?  இதுபோலதான் மனமும். தெளிவாக இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை. தனக்கும், பிற யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதுவே ஆசை கொண்டு, கோபம் கொண்டு, விரோதம் பூண்டு கொதிக்க ஆரம்பித்து விட்டால் அதற்கு பலியாவது தனி மனிதர் மட்டுமல்ல, அவருடன் சம்பந்தப்படாத பிறரும்தான்!

காக்கை வேப்பம்பழத்தை அப்படியே விழுங்குகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு செரிக்கப்படாத வேப்பங்கொட்டை அதன் எச்சமாக வெளியேற்றப்படுகிறது. பறந்துகொண்டே இவ்வாறு எச்சமிடும் அந்த காக்கை அந்த எச்சம் எங்கே விழுகிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதன் நோக்கம் எச்சம் வெளியேற்றப்பட வேண்டும், அவ்வளவுதான். அந்த வேப்பங்கொட்டை எச்சம் ஒரு பெரிய பாறையின் சிறிய பிளவுக்குள் போய் விழுகிறது. மிகவும் கடினமான, உறுதியான பெரிய பாறை அது. யாராலும் அசைக்கக் கூட முடியாது. அந்தப் பாறைப் பிளவில் விழும் கொட்டை அங்கிருக்கும் ஈரப்பசையாலோ அல்லது பெய்யும் மழை நீராலோ முளை விடுகிறது. அந்த முளை மெல்ல தண்டாக வளர்கிறது.

தண்டு மேலும் மேலும் பருத்தும் உயர்ந்தும் வளர்ச்சி காண்கிறது. அதன் வேர் பல கிளைகள் விட்டு அந்தப் பாறைக்குள்ளேயே அதன் பலவீனமான பகுதிகளுக்குள் ஊடுருவுகிறது. அப்படிக் கொஞ்சம், கொஞ்சமாகப் பரவும் வேரும், மேலே பருத்து வளரும் தண்டும் அந்தப் பாறையையே விரிசலுடன் அசைக்கின்றன. ஒரு கட்டத்தில் அந்த விரிசல் பெரிதாகி, பாறை பிளந்துபோகிறது. பாறை பிளவுக்குள் விழுந்ததென்னவோ சிறு வித்துதான். ஆனால் அதுதான் எத்தனை பெரிய பாறையைத் துண்டாடிவிட்டது! அதேபோல மனசில் ஒரு சிறு கீறலாகத்தான் பற்று என்ற மின்னல் தோன்றும். ஆனால் அது மிகப் பெரிய இடியாகி மனதையே சுக்கு நூறாக்கிவிடும்.

ஆகவே, எண்ணமே வாழ்க்கை. நல்லெண்ணத்தால் நல்வாழ்க்கை; தீய எண்ணத்தால் தீய வாழ்க்கை. நல்லெண்ணம் நம்மை மட்டுமல்லாது பிற அனைவருக்கும் நன்மை செய்யவல்லது; ஆனால் தீய எண்ணம் ஆரம்பத்தில் பிறரை வருத்துவதோடு, இறுதியில் நம்மையும் எரித்துவிடக்கூடியது. எந்த விஷயத்திலும் நாம் காட்டும் ஈடுபாடு ஆக்கபூர்வமானதா என்பதை யோசிக்க வேண்டும். நமக்கு சம்பந்தமில்லாத, நம்மால் சரிசெய்ய முடியாத விஷயத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடுவதுதான் நமக்கு நல்லது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HOTDOGGG111

  ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்