SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவே அருள்வாய்!

2022-05-10@ 10:16:12

ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களை தருபவர் குரு. எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர். ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் ஏற்படும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது.

குரு இருக்கும் இடத்தை வைத்து ஒரு  ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும் என்பதால், இவர் ‘புத்திர காரகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணத்திற்கு அதிபதி என்பதால் ‘தன காரகன்’ என்றும் போற்றப்படுகிறார். குருவிற்கு ‘ஜீவன காரகன்’ என்ற பெயரும் உண்டு. இம்மாதம் 13ம் தேதி குருபெயர்ச்சி என்பதால், அவரை வணங்கவேண்டிய தலங்களைப் பற்றி தெரிந்து கொண்டு பலன் அடையலாம்.

அயப்பாக்கம்: சென்னை அயப்பாக்கத்தில் உள்ள குருஸ்தலம், வட குருஸ்தலம் என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அங்கே அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திதான். 16 அடி உயர மூர்த்தியாக இவர் இங்கு காட்சியளிக்கிறார். குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பதால் இவரை வணங்கி கல்விச் செல்வத்தினை பெறலாம்.

அகரம் கோவிந்தவாடி : காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். 6 அடி உயரத்தில் அமைந்துள்ள அற்புத சிலையின் கண்கள் அமைப்பு புதிரானது. அந்த விழிகள் எவரையும் காணாதது போலவும் இருக்கும் அதேசமயம் எல்லோரையும் காண்பது போலவும் இருக்கும்.

சிறந்த குரு பரிகாரத் தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.காஞ்சிபுரம் யோக தட்சிணாமூர்த்தி: பெரிய காஞ்சிபுரம் ரயில்வே காலனியில் உள்ளது யோக தட்சிணாமூர்த்தி ஆலயம். குருவின் பல அம்சங்களில் ஒன்று யோகநிலை. சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த பின்னர், அவர்கள் யோக நிலையை அடைந்து செயலாற்ற அருள்புரிந்து விடை கொடுத்து அனுப்பும் அற்புத வடிவே யோகநிலை எனப்படும். அத்தகைய அமைப்பில் விளங்கும் தட்சிணாமூர்த்தியை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

குச்சனூர் வடகுரு பகவான்: தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜ தோரணையில் அருள்கிறார். இந்த ராஜயோக தட்சிணாமூர்த்தி சின்முத்திரையோடு காட்சியளிக்கிறார். சாந்தம் பொங்கும் திருமுகம் கொண்டவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

பட்டமங்கலம் : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது பட்டமங்கலம். இக்கோயிலில் 2000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் மிகவும் பிரசித்தி பெற்றது. அருகிலுள்ள அட்டமாசித்தி தீர்த்தத்தில் நீராடி ஆலமரத்தை வலம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை, புத்ரபாக்கியத் தடைகள் உடனடியாக நீங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

சுருட்டப்பள்ளி : ஆந்திர மாநில எல்லையில் உள்ளது சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். பாற்கடல் கடையும்போது வெளியான ஆலகால விஷத்தை உண்ட ஈசன் சற்றே மயங்கிய நிலையில் உமையின் மடியில் படுத்த வண்ணம் காட்சி தரும் இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாய் அருள்கிறார். இல்லறத்தில் ஏற்படக்கூடிய பிணக்குகளை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்தும் தயாபரன் இவர்.   

தக்கோலம் : வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்து, வலது கை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன் கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் திருவுருவை இங்கே தரிசிக்கலாம்.

தாராசுரம் : கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குரு தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தென்முகக் கடவுள் அருள்கிறார். கல்வி, கலைகளில் தேர்ச்சி பெற இவரை வணங்கலாம். வேதபுரி : தேனி மற்றும் மதுரை வழியில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள அரண்மனைப் புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. சென்றால் வேதபுரியை அடையலாம். இங்கு பிரஜா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

தென்குடித்திட்டை : தஞ்சாவூர் மற்றும் திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டையில் தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் ராஜகுருவாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் தனி சந்நதியில் கொலு வீற்றிருக்கிறார்.

தேப்பெருமாநல்லூர் : கும்பகோணத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இங்கு அருளும் குருபகவானின் பெயர் அன்னதான தட்சிணாமூர்த்தி!  

திருஇலம்பையங்கோட்டூர் : பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர். ரம்பை முதலான தேவகன்னிகைகள் ஈசனை பூஜித்த தலம். இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

திருவொற்றியூர் : சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன் தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் வீற்றிருக்கும் அவருக்கு ஆலமரம் குடை பிடிப்பது போல் அமைந்துள்ளது.

ஆலங்குடி : கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சாலையில் 17வது கிலோமீட்டரில் உள்ளது ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் இருக்கும். ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தியின் உற்சவர் திருமேனியை இங்கு தரிசிக்கலாம். குருவித்துறை : குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம். மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு பேருந்து வழியாக செல்லலாம். குருவின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தேரில் காட்சியளித்ததால் சித்திர ரத வல்லப பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.  

திருவையாறு :
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி வலது மேல் கையில் கபாலமும், கீழ் கையில் சின்முத்திரையும், இடதுகரத்தில் சூலமும், கீழ் இடக்கையில் சிவஞான போதத்துடனும் திருவடியின் கீழ் ஆமையுடன் சுரகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

திருவலிதாயம் (பாடி) :
சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில், புலித்தோல் தரித்து ‘வ்யாக்யான தட்சிணாமூர்த்தி’ வடிவத்தில் காட்சியளிக்கிறார். ஏரையூர் : தட்சிணாமூர்த்தி என்றாலே கல்லால மரமும், அதனடியில் ஸனத் சகோதரர்கள் அமர்ந்திருக்க ஈசன் தட்சிணாமூர்த்தியாக அவர்களுக்கு மௌன உபதேசம் செய்யும் காட்சிதான் நினைவுக்கு வரும். ஏரையூர் திருத்தலத்தில் ஸ்தித தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் இவர் தரிசனம் தருகிறார்.

திருநெடுங்களம் : வியாழக்கிழமைகளில் திருநெடுங்களத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட அவர்களின் தடைகள் அனைத்தும்  தவிடு பொடியாவதாக ஐதீகம். திருப்புனவாசல் : இடது கரத்தை நாகப்பாம்பு அணி செய்கிறது. கால்களோ அசுரனை மிதித்தபடி தன் வெற்றியை பறைசாற்றுகின்றன. கம்பீரமான தோற்றம். ‘அவநம்பிக்கை, பொறாமை, கோபம் போன்ற துர்குணங்களை நசுக்குவதுபோல, கால்களால் அசுரனை மிதித்த வண்ணம் காட்சி  தருகிறார் இந்த தட்சிணாமூர்த்தி.

மகி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்