SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இராமானுசன் பொன்னடி

2022-05-07@ 12:50:45

7.5.2022 - சனிக்கிழமை - முதலியாண்டான் திருநட்சத்திரம்

இராமானுஜருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், மிக முக்கியமான சீடர்கள் சிலர் உண்டு. அதில் ஒருவர்தான் தாசரதி என்று அழைக்கப்படும் முதலியாண்டான். இவர் இராமானுசரின் மருமகன் ஆவார். இராமானுஜரின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர். அவர் எதைச் சொன்னாலும் உடனடியாக செய்து முடிப்பவர். கிபி 1027 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (இராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

இவருக்கு “இராமானுசன் பொன்னடி” என்றும் “எதிராச பாதுகா” என்றும் “ராமானுஜர் திரிதண்டம்” என்றும் “ஆண்டான்” என்றும் பல பெயர்கள் உண்டு. இராமானுஜருக்கும் இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு. இதற்கு உதார ணமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இராமானுஜர் துறவறம் பூண்டபோது எல்லாவற்றையும் துறந்ததாகச் சங்கல்பம் செய்தார். ஆனால் ஒன்றை மட்டும் அவர் துறக்கவில்லை. ஆம், முதலியாண்டானை  அவர் துறக்கவில்லை. சாஸ்திரம், அருளிச்செயல், ரகசிய நூல்களின் சாரம் என சகல விஷயங்களையும் இராமானுஜரிடமே பயின்றார்.

இராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து வைணவப் பணிகளுக்காக திருவரங்கம் சென்ற பொழுது முதலியாண்டான் கூரத்தாழ்வாரோடு  இணைந்து சென்றார்.
அங்கே அவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தார். இராமானுஜரின் கட்டளைப்படி முதலியாண்டான், ரங்க ஆலய நிர்வாகத்தின்  முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு  
திறம்படச் செய்தார். இராமானுஜரின் குரு பெரிய நம்பிகள். அவருடைய திருமகள் அத்துழாய். அத்துழாய்க்கு திருமணமான பொழுது அக்காலத்தில் திருமணம் செய்து தரும் பெண்ணை, புகுந்த வீட்டுக்கு அனுப்பும் பொழுது, துணைக்கு ஒரு பணிப்பெண்ணை சீதனமாக அனுப்பும் பழக்கம் உண்டு. அப்படி சீதனமாக அனுப்பும் பணிப்பெண்ணுக்கு “சீதன வெள்ளாட்டி” என்று பெயர். பரம ஏழையான பெரிய நம்பியால், தன் பெண்ணுக்கு ஒரு பணிப் பெண்ணை துணைக்கு அனுப்ப முடியவில்லை.

அதனால் அத்துழாய் தன் மாமியாரிடம் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானாள். இதைத் தாங்க முடியாமல் ஒருமுறை, தன் தந்தை பெரிய நம்பிகளிடம், தன் குறையைச் சொல்ல, பெரிய நம்பிகள், ‘‘அம்மா இது குறித்து நான் என்ன செய்யமுடியும்? நீ இராமானுஜரிடம் சொல்” என்று சொல்ல, தன் குருவாகிய பெரிய நம்பிகளின் பெண்ணிடம் மிகுந்த வாஞ்சையுள்ள இராமானுஜர், இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்காக, தன் அருகில் இருந்த மிகப்பெரிய வித்வானாகிய முதலியாண்டானை சீதன வெள்ளாட்டியாக அனுப்பிவைத்தார்.

இராமானுஜர் எதைச் சொன்னாலும் அதை உடனடியாக கேள்வி கேட்காமல் நிறைவேற்றும் ஆச்சாரிய பக்தி மிக்க முதலியாண்டான், ஒரு முணுமுணுப்பும் இல்லாமல், அத்துழாய்  புகுந்த வீட்டில் பணிகள் செய்தார். வீடு துடைப்பது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது முதலிய சகல காரியங்களையும் எந்தவித வித்யா கர்வமுமின்றிச் செய்தார்.ஆரம்பத்தில் முதலியாண்டான் பெருமையை அறியாமல் அவரிடம் கடுமையாக வேலை வாங்கிய அத்துழாய் புகுந்த வீட்டுக்காரர்கள் ஒரு கட்டத்தில், ஒரு மகானை இப்படி வேலை வாங்குவது மிகப்பெரிய பாவத்தைக் கொண்டுவந்து விட்டுவிடும் என்று மேன்மையை அறிந்து மன்னிப்புக் கேட்டார்கள், தங்கள் குற்றத்தை உணர்ந்து ஆண்டானைப் பணி செய்வதை நிறுத்தச் சொன்னர்கள்.

பிறகு அத்துழாயை அன்போடும் பரிவோடும்  நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து ஆண்டான் எவ்வளவு உயர்ந்தவர் என்றும், ஆசார்யனின்  சொல்லுக்கு மறுபேச்சு பேசாமல் கட்டுப்பட்டவர் என்றும் நாம் தெரிந்துகொள்ள முடியும். வித்தை இருந்தால் விநயம் இருக்காது என்பார்கள். ஆனால் வித்தையும் அடக்கமும் ஒரே இடத்தில் இருந்தது என்று சொன்னால்  அது முதலியாண்டானிடம் இருந்தது. முதலியாண்டனின் திருக்குமாரராகிய கந்தாடை ஆண்டான் எம்பெருமானாரின் அனுமதிபெற்று, எம்பெருமானாரின் வடிவம் ஒன்றை உருவாக்கினார். எம்பெருமானாரும் இந்த விக்ரஹத்தை மிகவும் உகந்து கட்டி அணைத்து தம் பேரருளை அதில் பாய்ச்சினார்.

எம்பெருமானாரின் அவதார தலத்தில்  (பெரும்புதூர்) தைப் பூசம் (இன்றும் இந்த நாள் குரு புஷ்யம் என்று பெரும்புதூரில் கொண்டாடப்படுகிறது) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விக்ரஹம் “தாம் உகந்த திருமேனி” என்று ப்ரஸித்தமாக அறியப்படுகிறது. தமிழ்மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் முதலியாண்டான். இதனை விளக்கும் நிகழ்ச்சி ஒன்று திருவாய்மொழியின் வியாக்கியான ஈட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.ஒருமுறை ரங்கத்தில் ஜயந்தி புறப்பாடு நடக்கும் வேளையில் வங்கிப்புரத்து நம்பி என்பவர் அங்கு கூடி இருந்த இடைப் பெண்கள்  கூட்டத்தில் சேர்ந்து  நம்பெருமாளை வழிபட்டார். அவர் ஏதோ அந்தப் பெண்களிடம் சொல்வதை கவனித்த முதலி யாண்டான், விழா முடிந்தவுடன் வங்கிபுரநம்பியிடம் கேட்டார்.

“நீங்கள் அந்த பக்தி மிக்க பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போது ஏதோ சொன்னீர்களே,என்ன சொன்னீர்கள்?”. வங்கி புரத்து நம்பியும் “விஜயஸ்வ” என்று கூறினேன் என்றார்.
அதற்கு ஆண்டான், “நீங்கள் அந்த எளியபெண்கள் கூட்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு புரியாத கடினமான ஸமஸ்க்ருத மொழியில் சொல்லாமல், அவர்கள் சொந்த மொழியில் பெருமாளை வாழ்த்தி, பெருமைப்படுத்தி இருக்கலாமே. அவர்களிடம் போய் ஏன் உங்கள் சமஸ்கிருத அறிவைக் காட்டவேண்டும்?” என்றார். இப்படி பலவகையிலும் சிறப்புமிக்க முதலியாண்டானின் அவதார நன்னாள் இன்று. வைணவ ஆலயங்களிலும் வைணவ அடியார்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். முதலியாண்டானின் தனியன் இது.பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயாதஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்