SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவதரித்தார் வல்லாள கணபதி!

2022-05-06@ 16:11:12

நாம் அன்றாடம் வணங்கும் விநாயகருக்குப் பல பெயர்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். அவைகளுள் ஒன்றான வல்லாள கணபதி எனும் பெயர் அவருக்கு வந்து சேர்ந்த நிகழ்வு மிகவும் சுவையானதாகும். சிந்து தேசத்தில் வாழ்ந்து வந்த கல்யாணன் மற்றும் இந்துமதி தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு வல்லாளன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அவன் பெற்றோர்கள்.

சிறுவயதிலிருந்தே விநாயகப் பெருமானிடம் அளவற்ற பக்திகொண்டிருந்தான் வல்லாளன். அந்தப் பக்தியே அவனைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, பின் விநாயகராலேயே ஆட்கொள்ளப்படுவான் என்று அவனுக்கும், அவன் பெற்றோருக்கும் தெரியவில்லை. அனுதினமும், வல்லாளன் அதிகாலையிலேயே தன் தோழர்களைக் அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் அடர்ந்த தோப்பிற்குச் செல்வான். அங்கே ஒரு கல்லை எடுத்து வைத்துக்கொண்டு, அக்கல்லை விநாயகப் பெருமானாகக் கருதி அதற்குப் பூஜைகள் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவன் கட்டளைப்படி, அவனது தோழர்கள் ஆளுக்கொரு பணியினைச் செய்வார்கள். ஒருவன் மலர்களைக் கொய்து வருவான், ஒருவன் அங்கே விளைந்திருக்கும் சுவையான பழங்களையெல்லாம் பறித்து வருவான். மற்றொருவன் நிவேதனமாகப் பறித்த பழங்களையெல்லாம் கொண்டு பஞ்சாமிர்தம் செய்வான். அடுத்தவன், சந்தனக்கட்டையைக் கொண்டு சந்தனம் அரைத்துக் கொடுப்பான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்ய, வல்லாளன் அந்தக் கல்லை நீரால் நன்கு கழுவி, சந்தனம், குங்குமம் எல்லாம் இட்டு பயபக்தியுடன் பூஜை செய்வான். அந்த விநாயகப் பெருமானே கல்லில் எழுந்தருளியிருப்பதை எண்ணி! உண்மையான பக்திக்கு எந்தப் பொருளும் கடவுள் தானே! அது வெறும் கல்லானால் தான் என்ன?
பூஜைகள் எல்லாம் செய்து முடித்தபின் சிறிது நேரம் அந்தத் தோப்பிலேயே விளையாடிவிட்டு வீடு திரும்புவான்! கூடவே அவன் தோழர்களும் சென்று விடுவார்கள்!

அன்றும் அதிகாலையே தன் தோழர்களுடன் தோப்பிற்கு வந்த வல்லாளன், தான் தினமும் பூஜை செய்யும் கல்லை எடுத்து வைத்து பூஜை செய்யத் துவங்கினான். வழக்கம் போல் அவனுடைய நண்பர்களுக்கும் பல வேலைகள் தரப்பட்டன. அவனின் தோழர்களால், அன்று விசேஷமாக விநாயகராக வணங்கும் அந்தக் கல்லுக்கு மேலே அழகான ஒரு பூப்பந்தலும் போடப்பட்டது. பூஜையில், ஆழ்ந்து போன வல்லாளன் நேரம் போவது தெரியாமல், கதிரவன் மேற்கே மறைவதையும் உணராமல், தன் பூஜையினைத் தொடர்ந்துகொண்டிருந்தான். மற்ற சிறுவர்கள், வேறோர் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். காலையிலிருந்தே எல்லோரும் பட்டினியாகவே இருந்தார்கள். வல்லாளன் தான் செய்யும் பூஜையின் மும்முரத்திலும், அவன்
நண்பர்கள் விளையாட்டிலும்!

இரவு தொடங்கப் போவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தது. ஊரிலிருந்த வல்லாளன் நண்பர்களின் பெற்றோர் மிகவும் கவலைகொண்டனர். தங்கள் பிள்ளை
களைக் காணாமல் அவர்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு வல்லாளனின் தந்தையான கல்யாணனின் இல்லம் வந்து, “ உன் பிள்ளை, தான் கெடுவதோடு மட்டுமல்லாது, எங்கள் பிள்ளைகளையும் சேர்த்தல்லவா கெடுக்கிறான்! அவர்களைக் காலையில் அழைத்துக் கொண்டு விளையாடப் போனான் வல்லாளன். ஆனால், நேரம் ஆயிற்றுப் பார்! இன்னும் ஒருவன்கூட வீடு திரும்பவில்லை! நீ உன் பிள்ளையைக் கண்டித்துவை. இல்லாவிடில் நாங்கள் எல்லோரும் அரசனிடம் முறையிட்டு, உங்கள் குடும்பத்தை ஊரை விட்டே விலக்கி வைத்து விடுவோம். இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்!” எனக் கடுமையாக வல்லாளனின் தந்தையிடம் எச்சரிக்கை செய்துவிட்டுத் திரும்பினர்.

நடப்பதும், நடக்கப்போவதும் எல்லாமே அந்த வேழ முகத்தோனின் செயல்தானே! ஆத்திரத்துடன் வல்லாளன் இருக்கும் இடத்திற்கு வந்தான் அவனின் தந்தை! தோப்பில் கல்லை வைத்துப் பூஜை செய்து கொண்டிருந்த வல்லாளனைப் பின்புறமாக வந்து எட்டி உதைத்தார். அவன் பூஜை செய்த கல்லையும் எடுத்து வீசி எறிந்தார். அருகில் இருந்த பெரிய தடியை எடுத்து பாலகன் என்றும் பாராமல், ஆத்திரம் தீர அடித்துத் துவைத்துவிட்டார். உதிரம் வழிந்து கொண்டிருந்த தன் மகன் மேல் மேலும் ஆத்திரம் கொண்டு அங்கே இருக்கும் பெரிய மரம் ஒன்றில் கட்டிப் போட்டுவிட்டு, “இனிமேல் வீட்டுப் பக்கமே வராதே!” என்று கூறி சென்றுவிட்டார் கல்யாண். வல்லாளன் தன் பூஜை தடைப்பட்டதற்குப் பெரிதும் வருந்தினான்.

தூரத்தில், பரிதாபமாகக் கிடக்கும் அந்தக் கல்லையே சிறிது நேரம் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். பின் ஆத்திரம் கொண்டான். “என்னை இவ்வளவு கொடுமைப்படுத்திய பாவி குருடாகி, செவிடாகி, தொழுநோய் பிடித்து அலையட்டும்!” எனச் சபித்தான். இத்தகைய கொடுமைகளை செய்தவர் தன் தந்தையே என்பதை மறந்து போனான். இதற்கிடையில், மற்ற சிறுவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். மரத்தில் கட்டப்பட்டிருந்த வல்லாளன் கண்ணீர் பெருக்கினான். மிகுந்த வேதனையுடன், விநாயகப் பெருமானைத் தியானித்துத் தன் உயிரை விடவும் துணிந்தான்.

உண்மையான பக்தி செலுத்திய பாலகனைக் கை விடுவாரா விநாயகப் பெருமான்? மயக்கமாக கட்டப்பட்டிருந்த வல்லாளன் முன் ஒர் அந்தணச் சிறுவனாக தோன்றினார். வல்லாளனைத் தொட்டு எழுப்பி, மயக்கம் தெளியச்செய்தார்! தொட்டது அந்தப் பரம்பொருள் அல்லவா! சிறுவனின் மயக்கம் தெளிந்தது. அடிபட்ட காயங்களும் மறைந்து போயின! உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்த உதிரமும் நின்றுபோனது. மரத்தோடு கட்டப்பட்டிருந்த கட்டுகளும் அவிழ்ந்துபோயின! தனக்கு முன்நின்று கொண்டிருப்பது, தான் அன்றாடம் வணங்கும் விநாயகப் பெருமானே என்று உணர்ந்து கொண்டான் வல்லாளன். “இறைவா! இனி நீரே எனக்குச் சகலமும்! அகில உலகமும் நீரே! என் தாய் தந்தையரும் நீரே!” எனக் கீழே விழுந்து வணங்கினான்.

 “என் அருமை வல்லாளா! என் அடியவரைத் துன்புறுத்துதல் என்னையே துன்புறுத்துவதற்குச் சமம். அவர்கள் இப்பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவியிலும் நரக வேதனையை அடைவர்!
இங்கு நீ பூஜித்த இடம் ஓர் ஆலயமாக மாறும். இங்கே, நான் உன் பெயரை முன்பாகக் கொண்டு ``வல்லாள கணபதி’’ எனும் பெயருடன், என்னைத் தேடிவரும் பக்தர்
களின் துயரங்களை துடைத்து அருள் செய்வேன். என்னைத் தொழும் சமயம், அவர்கள் உன் பக்தியையும் உணர்வார்கள். எனக்கு வேண்டியது அதுவே! இனி வரும் காலம் உன் புகழ் பேசும். உனக்கு என் பூரண ஆசிகள்! வாழும் காலம்வரை மக்களுக்கு நன்மை செய். எல்லோரையும் உண்மையான பக்திக்கு ஆளாக்கு! இறுதியில் என்னை வந்து அடைவாயாக!” எனக் கூறி, மறைந்தான் அந்தணச் சிறுவன் - இல்லை, வல்லாள கண்பதி.

இதுதான் வேழ முகத்தோனின் மற்றொரு பெயர் வரக் காரணமான தெய்வீக நிகழ்வு! இப்படியாகத் தோன்றிய வல்லாள கணபதியைச் சரணடைந்துவிட்டால், பின்பு வாழ்வில் ஏது துன்பமும், துயரமும்!!

பி.ராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்